நூல் விமர்சனம்: சுவரெங்கும் அலையும் கண்கள்

ஆசிரியர் : - தூரன் குணா 

 

வழக்கமாக, கவிதைத் தொகுப்புகளில் அணிந்துரையோ அல்லது கவிஞரின் முன்னுரையோ அத்தொகுப்பினுள் நுழைவதற்கு வாசகனை ஆற்றுப்படுத்தும். ஆனால், இவைகள் ஏதுமற்ற, தன்னைப் பற்றிய சிறுகுறிப்புகளுமற்று நேரடியாக கவிதைக்குள் வாசகனை இழுக்கும் துணிச்சல் கவிஞர் "தூரான் குணா"விற்கு "சுவரெங்கும் அசையும் கண்கள்" தொகுப்பில் வாய்த்திருக்கிறது. அதேபோல். தொகுப்பின் எந்தக் கவிதைகளுக்கும் தலைப்புகள் இல்லாமலிருப்பது கவிதை வாசிப்புக்கான ஆவலைத் தூண்டுகிறது. கணையாழி, தாமரை, புதுவிசை, புன்னகை, ஆனந்த விகடன் போன்ற இதழ்களில் பரவலாக அறியப்பட்ட இவர் பெங்களூரில் மென்பொருள் வல்லுநராக பணிபுரிகிறார். 

தொகுப்பில் 61 கவிதைகள் உள்ளன. முதல் கவிதையின் ஆச்சரியமூட்டும் படிமங்களும், சொற்களும் தொடர்ந்து கவிதைகளை வாசிக்கும் ஈர்ப்பை ஏற்படுத்தி விடுகிறது. ஒரு பறவையின் குரலாக... இந்த நீதிகளற்ற வாழ்வு மகத்துவத்தின் மீது அது எச்சமிட்டுப் போவதாக அவதானிக்கிறார். 

ஏறிப்போகுமதன் 

சிறகுகளின் கீழே 

புள்ளியென குறுகுது பார் 

பெருவானம்... என்ற இவ்வரிகளில் காணக் கிடைக்கிறது சிறந்த கவிதைத் தரிசனம். பக்கம் 10ல் உள்ள கவிதை, காணியைத் துறந்தவன் துயரம் சொல்கிறது. நம் வாழ்க்கைப் பாடுகளுக்கான ஓட்டம் எப்போதும் நகரங்களை நோக்கியே உள்ளது. கவிதையில் வாழ்பவனின் நினைவுகளில் செம்மண் பூத்துக்கிடக்க தவணைகளில் ஊர் வருகிறான். அவன் நினைவை... 

அரைப்பனை உயரத்தில் 

சிறு நிலவு கிடக்க 

கவியும் இருளில் 

கிறங்குகிறது கானகம் 

கட்டித்தாரை சொக்கப்பனையில் 

பூச்சிகளும் தெனேசும் 

விழுந்து பொரிய 

சூடுகண்டு சுகங் கொள்கின்றன 

ஆநிரைகள் 

கொக்குகள் வடக்கே போய்விட 

பூத்துக்குலுங்கி சாளை திரும்பும் 

நினைவில் காடுள்ளவன் 

நாளை பெருநகரத்தில் உங்களை உரசிக்கடப்பான்... என்கிறார் கவிஞர். இதில் "அரைப்பனை உயரத்தில் சிறு நிலவு கிடக்க/கவியும் இருளில்/கிறங்குகிறது கானகம்" என்பது இத்தொகுப்பின் சிறந்த படிமம். பெரிய கவிதைகளைப் போலவே சிறிய கவிதைகளில் சில சிறப்பாக உள்ளன. அவைகளில் 17ம் பக்கத்தில் உள்ள 

விசும்பவும் திராணியற்று 

சுருண்டு கிடக்கும் 

வாடகை சிசுவோடு 

கானல் மிதக்கும் சாலையில் 

கையேந்துகிறாள் ஒருத்தி 

யாரோ ஒருத்தியின் 

மார்க்காம்பில் விஷம் தேங்குகிறது... சமுதாயத்தின் மேல் மின்சாரம் பாய்ச்சும் கவிதை இது. நம் சமுதாயத்தின் ஆன்மா இவ்விஷத்தால் மயக்க மடைவது தவிர்க்க முடியாததாகிறது. அதைத் தவிர, தொகுப்பில் பேச்சு வழக்கில் எழுதப்பட்ட ஒரே கவிதையான 

எம்பதடி கெணத்த எட்டிப்பார்த்தா 

காஞ்ச கரும்பாற ................... 

.................................. 

.................................. எனத்தொடங்கி  

காயத கண்ணோட 

காஞ்ச வானம் பாக்கற 

காணியாளன் நெஞ்சுல 

உழுதுக்கிட்டு இருக்குது 

துருப்புடிச்ச ஏர்முனை... இந்த வரிகள் நம் நெஞ்சிலும் பதம் பார்க்கிறது. மரங்களை வெட்டி கட்டிடங்களை வளர்த்தும் சொரணையற்ற சமூகத்தோலை சற்றே கீறிப்பார்க்கிறது. பால்யத்தை கடக்காதவர்கள் நம்மில் யார்? அவரவர் பால்யத்தை, அவசர வாழ்வோட்டத்தில் பகிர்தலையும், புன்னகையும் புதைத்தது எலும்புக்கூடாய் தெரிகிறதாம் கவிஞருக்கு. உண்மைதான்! கவிஞன் கனவுகளின் பேராசைக்காரன். பக்கம் 30ல் உள்ள கவிதையில் காமத்திலும் காதலிலும் மேனியைப் பெருநிலமாய் உருவகித்து 

இருளெடுத்து வெட்கம் துடைக்கிறதாம் தாபம்... 

முத்தங்களில் மிச்சமாகும் எச்சில் 

தசைகளின் சுவை கூட்டுகிறதாம்... நல்ல ரசனை, நல்ல கற்பனை. கவிஞன் எப்போதும் காதலின் குழந்தை. அவன் யாவற்றையும் நேசிக்கிறான். அதைப் போலவே பெண்மையும்.. அப்படியொரு கவிதை... 

உன் முலைப்பிளவுக்குள் 

முகம் பதித்து 

அழுகை தணிக்கத் துடிக்கும் 

குழந்தை நான் 

துளிக்காமம் தடுக்கிறது... எனக்குப் பிடித்த கவிதைகளில் இதுவும் ஒன்று.  

வாழ்க்கை எப்போதும் நிறைவுறாமைகளிளேயே நிறைவடைகிறது. அப்படி நிறைவடையும் கணத்தில் மனிதன் மகத்துவனாகிறான். அப்படி, போதாமைகளில் வாழ்க்கையை நடத்தும் நமக்காக ஒரு கவிதை 

முறியும் கிளைகளில் 

மல¢ர்ந்திருக்கும் பூக்கள் 

தேநீருக்கு காசில்லாத 

மழை நாள் 

முகம் பதிய வைத்துக்கொள்ளுமுன் 

கடந்துவிடும் பேரழகிகள் 

தாயற்ற சிசுவுக்கான 

இரவல் தாலாட்டு 

வாய்த்தும் 

நிறைவில்லா புணர்ச்சி 

போதாமைகளின் இடையில் 

புன்னகைக்கிறார் 

நம் கடவுள் 

மனிதன் எப்போது மகாத்மாவாகிறான்? சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடற்று இருக்கும்போது. ஆனால் உண்மையில் நாம் இருமுகங்களுடனேயே வாழ்கிறோம் என்பதை 

கீற்றுகளிடையே வௌவாலாய் 

சாத்தான் தொங்கும் 

................. 

................................. 

புகமுடியா புலத்திற்கு வெளியிலிருந்து 

இருவர் நிகழ்த்தும் நடனத்தை 

தலைகீழாய் தொங்கியவாறு 

வெறித்துக் கொண்டிருக்கிறார் கடவுள்... என கடவுள் நமக்கு அன்னியமாகிப் போனதை உணர்த்துகிறார். தவிர, 

சலனமற்ற கரும்பாறையாய் 

உறைந்திருந்த இவ்விரவில் 

விளிம்பிள் நுரைத்திருக்கும் 

மதுக்கோப்பைக்குள் 

மிதக்கும் கடலை 

ஓர் உன்னத துய்ப்பாளனாய் விழுங்குகிறேன்... 

விடியலில் மிச்சமிருந்தவை 

உதிரிசிறகுகளின் வெண்புன்னகைகள் மட்டுமே... என்பது போன்ற தனக்கே உரிய அறிய அனுபவத்தை காட்சிகளாக்கி இருப்பது சிறப்பு. 

நமது இல்லப் பெண்களுக்கு பால்யம் கரைவது தெரியாமலேயே முதுமை வந்துவிடுகிறது. அதை... வேலைகள் ஓய்ந்த இல்லத்தரசி தன் பழைய நாட்களுக்குள் செல்ல விரும்புகிறேன். அவள்...  

ஆதிகால பொம்மைகளை மீட்டெடுத்து 

கொஞ்சினாள்  

உதிர்ந்த தன் கன்னிமையின் 

சிறகுகளின் முகம் வருடிக் கொண்டாள் 

மெல்ல நிகழின் ஞாபகத்தில் 

மீண்டவள் 

அன்று கண்டாள் 

உடலின் முதல் நரையை... என எதார்த்த பெண் வாழ்வியலை சொற்களில் காட்சிப்படுத்தியிருப்பது சிறப்பு. 

இப்படி காட்சிகளும் படிமங்களும் தொகுப்பு முழுவதும் விரவிக் கிடந்தாலும், 17ம் பக்கத்தில் உள்ள "அபார்ட்மெண்ட்", 43ம் பக்கத்தில் உள்ள "விடிகாலை" போன்றவை பக்க நிரப்பிகளோ என்று எண்ணத் தோன்றுகிறது. இவைகளை நீக்கிவிட்டுப் பார்த்தால் குறிப்பிட்டத் தகுந்த தொகுப்பிது. "சந்தியா" பதிப்பகத்தின் அச்சமைப்பு நன்று. ஒற்றை வரியில் கூறுவதென்றால், கிராமம் துறந்து நகரம் சேர்ந்தவனின் உள்  மனப்பதிவினைத் தந்திருக்கும் "தூரன் குணா", இனிவரும் காலத்தில் இன்னும் அடர்வு மிகுந்த தொகுப்பினைத் தருவார் என்ற நம்பிக்கை ஏற்படுத்துகிறது.  

சுவரெங்கும் அலையும் கண்கள் /தூரன் குணா / விலை ரூ.35  

வெளியீடு : சந்தியா பதிப்பகம், ஃபிளாட் ஏ நியூடெக் வைபஸ்,  

57-53வது தெரு, அசோக் நகர், சென்னை - 83.