மூன்றாவது அணியில் இடம் பெற்றிருந்த இடதுசாரி கட்சிகளில் குறிப்பாக சி.பி.ஐ(எம்) கட்சி ஏற்கனவே வைத்திருந்த இடங்களில் பல இடங்களை இழக்கநேரும் என்பது அனைவருக்கும் தோன்றிய ஒன்றே. இருந்தபோதிலும் வலுவான அமைப்பினைக் கொண்டுள்ள அக்கட்சி மேற்கு வங்கத்தில் இத்தனை பெரிய தோல்வியைச் சந்திக்க நேரும் என்பது பலரும் எதிர்பார்க்காத ஒன்றாகும். 1977-க்கு பின் அக்கட்சி சந்தித்துள்ள மிகப்பெரிய தோல்வியாகும் இது.

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இடைவெளி ஏதுமின்றி தொடர்ச்சியாக மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருந்த அக்கட்சி அதை வைத்தே தான் ஒரு அசைக்க முடியாத சக்தி என்ற இறுமாப்புடன் இருந்தது. தற்போது அது சந்தித்துள்ள தோல்விக்கான காரணங்கள் என்ன என்பதை அது மாநில மட்டங்களில் ஆய்வு செய்து வருகிறது.

அக்கட்சி எவ்வளவு தூரம் கம்யூனிசப் பாதையில் இருந்து விலகிப் போயுள்ளது என்பதைத் தேர்தல் தோல்விகளை அது பார்க்கும் பார்வையின் போக்கே புலப்படுத்துகிறது. சிறிதளவுகூட வர்க்கப் போராட்டப் பார்வையை அக்கட்சி கொண்டிருக்கவில்லை என்பதையே தேர்தல் தோல்வி குறித்து அக்கட்சி செய்த ஆய்வுகளின் முடிவுகள் புலப்படுத்துகின்றன. அதாவது மேற்கு வங்கத்தில் முஸ்லீம் மக்களின் வாக்குகள் அக்கட்சியை விட்டு விலகிப் போயுள்ளதும், கேரளாவில் மதானியின் மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் அது கொண்டிருந்த உறவின் காரணமாக இந்து மற்றும் கிறிஸ்தவ வாக்காளர்கள் அக்கட்சிக்கு வாக்களிக்காமல் போனதுமே அதன் தோல்விக்கான காரணங்களாக அக் கட்சியால் முன் வைக்கப்படுகின்றன.

இத்தகைய முடிவுகளுக்கே அக்கட்சி வரமுடிந்ததாக இருக்கிறது என்றால் அது சரியான படிப்பினைகளை எடுத்துக் கொண்டு ஒரு கம்யூனிஸ்ட் கட்சியாக இல்லாவிடினும் ஒரு இடதுசாரிக் கட்சியாகக்கூட இருக்க இயலாமல் போயுள்ளது என்பதே இதன் மூலம் வெளிப்படுகிறது.

தோல்விக்கான இரண்டு அடிப்படைக் காரணங்கள்

இக்கட்சியின் தோல்விக்கு உண்மையான காரணங்களை ஆய்ந்து பார்த்தோமானால் இரண்டுவித முடிவுகளுக்கே வர முடியும். ஒன்று பொதுவாக நாடு முழுவதும் அக்கட்சியின் மீது மக்களுக்கிருந்த எதிர்பார்ப்பும் அக்கட்சியின் நம்பகத்தன்மையும் சிதறுண்டு போயிருப்பது. இரண்டாவது மேற்கு வங்கத்தில் நந்திகிராம், சிங்கூர் நிகழ்வுகளுக்குப்பின் அது நடத்த நினைத்த சித்து விளையாட்டுகள் செல்லுபடியாகாமல் போனது. இந்த இரு வித முடிவுகளுக்கே வரமுடியும்.

பொதுவாக மக்களுக்கு அக்கட்சியின் மீதிருந்த ஓரளவிலான அபிமானத்திற்கு காரணம் அது ஏழை எளியவர்களின் நலன்களுக்காக இருக்கக்கூடிய ஒரு கட்சி என்று மக்கள் மனதிலிருந்த அபிப்பிராயம் ஆகும். குறிப்பாக அக்கட்சி ஆட்சியில் இருந்திராத மாநில மக்களிடம் அப்படிப்பட்டதொரு அபிமானம் பெரிய அளவில் இருந்தது. ஆனால் அந்த அபிமானமே அக்கட்சி பல மாநிலங்களில் பெரிய வெற்றிகளைப் பெறுவதற்கு உதவவில்லை. மாறாக பிற கட்சிகளோடு அக்கட்சி கூட்டு சேர்ந்து போட்டியிடும் வேளைகளில் அந்த அபிமானம் ஓரளவு கை கொடுத்தது.

அது ஏழை எளிய மக்களின் நலனுக்கான கட்சி என்று மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்த எண்ணப்போக்கு, அது தன்கைவசம் இருந்த தொழிற்சங்கங்கள் மூலமாக முதலாளிகளை எதிர்த்து நடத்திய போராட்டங்களின் விளைவாக ஏற்பட்டதே ஆகும். ஆனால் அதன் அடிப்படை அரசியல் வழி பிரதிபலித்த சமரசப் போக்கின் காரணமாக படிப்படியாக அது தீவிர தொழிற்சங்கப் போராட்டங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கைவிட்டுவிட்டது.

ஆட்சிக்கு வந்தபின் மாறிவிட்ட அணுகுமுறை

இரண்டு மாநிலங்களில் அது வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும் சூழ்நிலை உருவான பின்னர் அதன் அணுகுமுறையே மற்ற அரசியல் கட்சிகளின் பாணியில் செயல்பட்டு அரசியல் அதிகாரத்தை அடைவது என்றாகிவிட்டது. இந்த மனநிலைக்கு ஒத்த விதத்தில் பல அடிப்படை கம்யூனிஸ்ட் உணர்வு இல்லாதவர்கள் அக்கட்சியில் சேரவும், செயல்படவும் அதன் தலைமைப் பொறுப்புகளுக்கே வரவும் முடிந்த ஒரு சீரழிந்த சூழ்நிலை அக்கட்சியில் ஏற்பட்டது. முக்கால் பங்கு அக்கட்சியில் இருந்த சீர்திருத்தவாத சிந்தனை இப்போக்கின் காரணமாக முழுமையானதொரு சீர்திருத்தவாதக் கட்சியாக அதனை மாற்றிவிட்டது.

தனது அடையாளத்தைத் தக்க வைக்க கையிலெடுத்த அமெரிக்க எதிர்ப்பு

அதன் விளைவாகவே உலகமயம் தோன்றிய பின் அதனுடைய வாதங்களும் கருத்துக்களும் பாதிக்கப்படும் இந்திய முதலாளிகள் குறித்தவையாக மாறிவிட்டன. இருந்தாலும் தனது சிவப்பு முகத்திரையைத் தக்க வைப்பதற்காக அது அனைவரும் அறிந்த கம்யூனிஸ ரீதியிலான நடவடிக்கைகள் எனக் கருதப்படும் சில நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது. அத்தகையதொரு நடவடிக்கைதான் இந்திய- அமெரிக்க அணு ஒப்பந்தத்தை ஒட்டி அது எடுத்த நடவடிக்கையாகும்.

வெளிப்படையாகவே இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தமும் இந்தியாவின் தற்போதைய சர்வதேச அணுகுமுறையும் இக் காலக்கட்டத்தில் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளை ஒருங்கிணைத்த ஒரு புதிய ஏகாதிபத்திய அதிகார மையத்திற்கு வழிவகுக்கிறது. அதனால் உலகின் பல சிறு நாடுகளுக்கு, குறிப்பாக இந்தியத்துணைக் கண்டத்தை சுற்றியுள்ள நாடுகளுக்கு ஒரு வகையான மறைமுக அச்சுறுத்தல் தோன்றியுள்ளது.

கம்யூனிஸ்டுகளின் சர்வதேச வாதத்திற்கு உகந்த வகையில் இந்தக் கட்சி அணு ஒப்பந்தமும், இந்திய அரசின் தற்போதைய அணுகுமுறையும் பல சிறு நாடுகளுக்கு முன் ஒரு அச்சுறுத்தலை நிறுத்தியுள்ளது என்பதை முதன்மைப்படுத்தி இந்த ஒப்பந்தத்தை எதிர்த்திருந்தால் அது கோட்பாடு ரீதியானதாகவும் அக்கட்சியின் செல்வாக்கை அதிகரிக்கக் கூடியதாகவும் இருந்திருக்கும். ஆனால் இக்கட்சி, அந்த ஒப்பந்தம் இந்திய நலன்களுக்கு விரோதமானது அது அமெரிக்க முதலாளிகளுக்கு பல வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரக்கூடியது என்ற அடிப்படையிலேயே அதனை எதிர்த்தது.

இந்திய நலன் என இக்கட்சி கூறுவது இந்திய முதலாளிகளின் நலனையே

மேலும் இந்த ஒப்பந்தத்தினால் இந்தியாவின் இறையாண்மையே பறிபோகும் என்றும் அது கூறியது. இந்திய நலனுக்கு விரோதமானது என்று அது கூறியது இந்திய முதலாளிகளின் நலன்களை மனதிற்கொண்டேயாகும். அதாவது, விடுதலைபெற்ற காலத்தில் இந்திய முதலாளிகள் இருந்த நிலையிலேயே இன்றும் இருப்பதாகப் பாவித்துக் கொண்டு ஒரு தேங்கிப்போன மனநிலையோடு அக்கட்சியினர் முன்வைத்த கருத்தே இது.

உலகமயத்தினால் பல சிறுதொழில்கள் நசிந்திருந்தாலும் அதனால் பல புது வாய்ப்புகள் இந்திய முதலாளிகளுக்கு ஏற்படவே செய்தன. ஒட்டுமொத்தத்தில் பொருளாதார ரீதியாக இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளின் தனியார் முதலாளிகளும் சீனாவின் அரசு முதலாளித்துவமும் உலகமயத்தினால் அடைந்த பலன்கள் அவை எதிர்கொண்ட பாதிப்புகளைக் காட்டிலும் அதிகமானதாகும்.

மக்களைப் பொறுத்தவரை அவர்கள் அத்தனை அரசியல் நுண்ணறிவு படைத்தவர்களாக இல்லாத போதிலும் அவர்களுக்கு இருந்த பொது அறிவைக் கொண்டே அவர்கள் சி.பி.ஐ(எம்) -ன் கருத்துக்களைப் புறக்கணித்தனர்.

நெருக்கடியின் சுமைகளை தொழிலாளர் மேலேற்றி தங்களை காத்துக் கொள்ளும் முதலாளிகள்

உலகமயத்தின் விளைவாக நலிவடைந்த சிறு தொழில்களை நடத்தி வந்த முதலாளிகள் அவர்களது தொழில்களில் ஏற்பட்ட பாதிப்புகள் அனைத்தையும் அங்கு வேலை செய்த தொழிலாளர்களின் தலை மீதே சுமத்தினர். அதன் காரணமாக பெரும் பாதிப்பிற்கு ஆளானது தொழிலாளர்களே ஆவர். ஆனால் சி.பி.ஐ(எம்) கட்சி பாதிக்கப்பட்ட முதலாளிகளின் நலனையே உயர்த்திப்பிடித்தது.

பல்லாயிரம் கோடிக்கணக்கான ரூபாய் அளவிலான தொழிலாளருக்கு சேரவேண்டிய பி.எப்., கிராஜிவிட்டி தொகைகளை பஞ்சாலை முதலாளிகள் செலுத்தாமல் தொழிலாளரை தெருவிற்குத் தள்ளியதை எதிர்த்து சி.பி.ஐ(எம்) கட்சி ஒரு துரும்பைக்கூட அசைக்கவில்லை. டாலர் மதிப்பின் வீழ்ச்சியால் வருவாய் சிறிது குறைந்த பஞ்சாலை முதலாளிகளுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை மத்திய அரசு நிதி ஒதுக்கீடுகள் மூலம் வாரி வழங்கியது. அதை எதிர்த்தோ, தொழிலாளர்களின் பாலான அரசின் பாராமுகப் போக்கை அதனுடன் ஒப்பிட்டோ சி.பி.ஐ(எம்) கட்சி ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போக்கு ஏழை எளியவர் உழைப்பாளரின் ஆதரவு சக்தி என்ற அக்கட்சியின் கருத்துருவினை சிறிது சிறிதாக மாற்றியது.

மின்சாரப் பற்றாக்குறை, அதன் விளைவான மின்வெட்டு போன்றவற்றால் பல பாதிப்புகளுக்கு ஆளாகியிருந்த சாதாரண மக்களைப் பொறுத்தவரையில் மின் உற்பத்தியை அதிகப்படுத்துவது என்ற நோக்கில் செய்து கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்ட இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தத்தின் மீது பெரும் எதிர்ப்பு எதுவும் இல்லை.

இந்தியாவின் இறையாண்மை பறிபோவதாக அக்கட்சி முன்வைத்த கருத்து வலிந்து கூறப்பட்ட ஒரு கருத்தாக இருந்ததே தவிர மக்கள் மனதிலிருந்த எண்ணப் போக்கைப் பிரதிபலிப்பதாக அது இருக்கவில்லை. மேலும் இந்திய இறையாண்மைக்குப் பங்கம் என்ற சி.பி.ஐ(எம்) கட்சியின் வாதத்தை அதனால் தர்க்கபூர்வமாக நிறுவ முடியவில்லை. ஏனெனில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட கையோடு பிரான்சு போன்ற நாடுகளை இந்தியா அணு எரிபொருள் தேவைக்காக அணுகத் தொடங்கியது, இவ்விசயத்தில் இந்தியா அமெரிக்காவை மட்டும் சார்ந்திருக்கவில்லை. அது அணு வியாபாரத்தில் உலகில் பல நாடுகளுடன் சுதந்திரமான வர்த்தகத்தில் ஈடுபடும் உரிமையை இழந்துவிடவில்லை என்பதையே அது கோடிட்டுக் காட்டியது.

கம்யூனிஸ்ட் அரசியலின் மையக் கருத்தான வர்க்கப் போராட்டம், எந்த வகைப் பிசிறும் இல்லாத உழைக்கும் மக்கள் ஆதரவுப் போக்கு போன்றவற்றை கைவிட்டுவிட்டு அமெரிக்க எதிர்ப்பு என்ற ஒன்றை மட்டும் தங்களது இடதுசாரி மற்றும் கம்யூனிச முகத்தோற்றத்திற்கு ஆதாரமாக சி.பி.ஐ(எம்) கட்சி வைக்க முற்பட்டது. அது சாதாரண மக்களிடம் அறவே எடுபடவில்லை.

சிங்கூர் நந்திகிராம் தோற்றுவித்த அதிர்ச்சி அலைகள்

இவை அனைத்தையும் தாண்டி மிக முக்கியமாக மேற்கு வங்கத்தில் நந்திகிராமில் அது முதலாளிகளுக்கு சலுகை விலையில் வழங்குவதற்காக நிலங்களை கையகப்படுத்த முனைந்த போக்கு கிராமப்புற மக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சி அலைகளைத் தோற்றுவித்தது.

சிங்கூரில் தனது ஏகபோக முதலாளி டாடா ஆதரவு நிலையினை நியாயப்படுத்துவதற்காக அது முன் வைத்த சொத்தை வாதங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுப் போயின. மக்கள் இயக்கங்கள் சந்தித்துக் கொண்டிருந்த பல பின்னடைவுகளுக்கு மத்தியில் சிங்கூர் இயக்கம் ஒரு பெரும் வெற்றியினைக் கண்டது. டாடா மூட்டையைக் கட்டிக் கொண்டு குஜராத் மாநிலத்திற்கு ஓட நேர்ந்தது.

தொழில்மயத்தை எதிர்த்த போராட்டம் அது என்றும், வேலைவாய்ப்புகளை உருவாக்க மேற்குவங்க அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிரானவையே எதிர்க்கட்சிகளின் போராட்டம் என்றும் சி.பி.ஐ(எம்) முன் வைத்த வாதங்கள் நகர்ப்புற மக்களாலும் புறக்கணிக்கப்பட்டன.

எடுபடாமற் போன வாதங்கள்

நகர்ப்புறங்களில் படித்து வேலையில்லாத இளைஞர்களைத் தங்கள் பக்கம் இழுக்க சி.பி.ஐ(எம்) கட்சி மேற்கொண்ட முயற்சியும் பலனளிக்கவில்லை. பிற முதலாளித்துவக் கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களைப் போலவே அசலும் நகலும் அந்த மாநிலத்திலும் அரசு செயல்பட்டது, இது இக்கட்சியினர் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடிந்த மாறுபட்டவர்கள் அல்ல என்ற எண்ணத்தை அப்பட்டமாக மக்கள் மத்தியில் பதியச் செய்தது.

பொது விநியோக முறையில் நடந்த பல முறைகேடுகள் மக்கள் இயக்கங்களின் மூலமாக வெளிக்கொணரப்பட்டதும், ஒரு பணக்காரப் பெண்ணை நேசித்தான் என்ற குற்றத்திற்காக ஒரு வாலிபனை அப்பணக்காரக் குடும்பம் கொலை செய்ததையும் அதனைத் தற்கொலை என்று காட்ட அம்மாநிலத்தின் மேல்மட்ட போலீஸ் அதிகாரி ஒருவரே உடந்தையாக இருந்ததும் நிர்வாகம் எந்த லட்சணத்தில் அங்கு இருந்தது என்பதைத் தோலுரித்துக்காட்டியது.

தனது ஆய்வுகளின் மூலமாக முஸ்லீம்களின் வாக்குகள் தங்களிடம் இருந்து விலகிப் போயுள்ளன என்று சி.பி.ஐ(எம்) கட்சி தற்போது முடிவு செய்தள்ளதற்கான காரணம் எந்த அடிப்படையும் இல்லாதது என்பதையே நிலவும் வெளிப்படையான நிலை குறித்த பாரபட்சமற்ற ஆய்வுகள் புலப்படுத்துகின்றன.

மக்களைப் பொருளாதார ரீதியில் தரம் பிரிக்காது மத ரீதியில் தரம் பிரித்து முஸ்லீம்களின் வாக்குகள் நம்மை விட்டு நகர்ந்து விட்டன என்று சி.பி.ஐ.(எம்) கட்சி குறிப்பிடுவது மத உணர்வுள்ள முஸ்லீம் மக்கள் பகுதியை மனதிற்கொண்டேயாகும். ஆனால் உண்மையில் மத ரீதியாக, நாசூக்காக மத உணர்வினைத் தூண்டி முஸ்லீம் மக்கட் பகுதியினரை தங்கள் பக்கம் வைத்திருக்கவே அனைத்துவகை கோட்பாடற்ற செயல்களிலும் சி.பி.ஐ(எம்) கட்சி ஈடுபட்டது.

நந்திகிராம் இயக்கத்தில் ஒரு முஸ்லீம் அமைப்பு இருப்பதை வைத்து கல்கத்தா போன்ற இடங்களில் இருக்கும் முஸ்லீம் மக்களும் தம்மைவிட்டுச் சென்றுவிடக்கூடாது என்பதற்காக கல்கத்தாவில் சி.பி.ஐ(எம்) கட்சியே வங்கதேச எழுத்தாளரும் முஸ்லீம் மதகுருமார்களின் எதிர்ப்பிற்கு ஆளானவருமான தஸ்லீமா நஸ்ரினுக்கு எதிராக, அவரை கல்கத்தாவை விட்டு வெளியேற்றக் கோரி ஒரு போராட்டத்தைத் தூண்டிவிட்டது.

அப்போராட்டத்தின் போது பொதுச் சொத்துக்கள் பலவற்றிற்கு பெரிதும் சேதம் விளைவிக்கப்பட்டது.  எனவே மதரீதியில் முஸ்லீம்கள் சி.பி.ஐ(எம்)-ற்கு எதிராக சென்றிருப்பதற்கு வாய்ப்பே இல்லை. அவ்வாறு பிறப்பால் முகமதியர்களாக இருந்த மக்களின் வாக்குகள் சி.பி.ஐ(எம்) -ஐ விட்டு ஒதுங்கியுள்ளன என்பதைப் புள்ளிவிபரங்கள் புலப்படுத்தினால் அது வெளிக்கொணர்வது அங்கு தோன்றியுள்ள ஒரு ஆரோக்கியமான அரசியல் போக்கையே ஆகும். அதாவது மேற்குவங்க அரசின் மக்கள் விரோத ஆட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களோடு, அவர்களின் பங்கும் பகுதியுமாகவே மத வேறுபாடுகளை தூக்கி எறிந்துவிட்டு முஸ்லீம் மக்கள் இணைந்திருகிறார்கள் என்பதையே அப்போக்கு படம்பிடித்துக் காட்டுகிறது.

நாடு முழுவதுமே சி.பி.ஐ(எம்) கட்சி இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தத்தைக் காரணமாக வைத்து மத்திய அரசுக்கு அது அளித்து வந்த வெளியிலிருந்தான ஆதரவை வாபஸ் பெற்றதும், அவ்விசயத்தில் பி.ஜே.பி. கட்சியுடன் நாடாளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஒரே நிலை எடுத்துச் செயல்பட்டதும் சாதாரண மக்களால் ஒரு நம்பிக்கைத் துரோகம் என்றே பார்க்கப்பட்டன. இதையே தேர்தல் முடிவுகள் தெளிவுபடுத்துகின்றன.

உழைக்கும் வர்க்கப் பிரச்னை எதையும் முன் வைத்து ஆதரவை வாபஸ் பெறவில்லை

காங்கிரஸ் அரசிற்கான ஆதரவை உழைக்கும் மக்கள் பிரச்னை எதையாவது முன் வைத்து சி.பி.ஐ(எம்) கட்சி வாபஸ் பெற்றிருந்தால் அந்நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவு நிச்சயம் இருக்கவே செய்திருக்கும். இவ்விசயத்தில் சி.பி.ஐ(எம்) கட்சியின் பொதுச் செயலாளர் பிரதிபலித்த உழைக்கும் வர்க்க அரசியல்வாதிகளின் அடிப்படைத் தன்மைகளுக்கு ஒத்துவராத ஒருவகை அதிகாரவர்க்கப் போக்கு நிச்சயமாக பரந்துபட்ட மக்கட்பகுதியிடம் ஒரு வகை எரிச்சலையே ஏற்படுத்தியது. இதையே தேர்தல் முடிவுகள் தெளிவு படுத்துகின்றன.

மேற்கு வங்கத்தில் மட்டுமின்றி கேரளாவிலும் அக்கட்சி பெரும் தோல்வியினைத் தழுவியுள்ளது. கேரள அரசியல் சூழ்நிலையில் ஒரு முறை வெற்றி பெற்ற அரசியல் கூட்டணி அடுத்த முறை வெற்றிபெறுவதில்லை; வெற்றியும், தோல்வியும் இவ்விரு கூட்டணிகளுக்கிடையில் தேர்தலுக்குத் தேர்தல் மாறிமாறி வரும் தன்மை கொண்டவையே; அந்த அடிப்படையில்தான் தற்போதைய இடது முன்னணியின் தோல்வியும் அமைந்துள்ளது என்ற ஊடகங்களின் வாதமும் அந்த வாதத்தின் அரவணைப்பில் குளிர்காயும் சி.பி.ஐ(எம்) கட்சியின் போக்கும் யதார்த்தத்தின் அப்பட்டமான பிரதிபலிப்பல்ல.

கோட்பாடுகளை கிலோ என்ன விலை என்று கேட்கும் கேரள சி.பி.ஐ.(எம்)

அக்கட்சிக்குள் மறைக்கமுடியாமல் வெளிவந்து கொண்டிருக்கும் கட்சியின் மாநில செயலாளர், முதல்வர் இருவருக்கும் இடையிலான பூசலும் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ள 'லவ்லின்' என்ற வெளிநாட்டு நிறுவனத்திற்கு இடம் வழங்கியதில் செய்யப்பட்டுள்ள ஊழலும், மதானியுடன் கூச்சநாச்சமின்றி உறவு வைத்து வகுப்புவாத அமைப்புகளையும் வாக்கிற்காக பயன்படுத்தும் சி.பி.ஐ.(எம்) கட்சியின் கோட்பாடற்ற போக்கும் மதவேறுபாடுகள் கடந்து மக்கள் மத்தியில் பெரிதும் அம்பலப்பட்டுப் போயுள்ளன.

இதனால் அக்கட்சி ஆரம்ப காலத்தில் கொண்டிருந்த கருத்துருவிலிருந்து பல காத தூரம் விலகி ஒரு தலைகீழான மாற்றத்தை அதாவது தேர்தல் வெற்றிக்காக எதையும் செய்யத் தயங்காத கோட்பாடற்ற ஒரு அமைப்பு என்ற கருத்துருவை ஏற்படுத்தும் மாற்றத்தை அது தற்போது அடைந்துள்ளது. அக்கட்சியின் மீதான மக்களின் பரந்துபட்ட அதிருப்திக்கு இதுவே மூல காரணமாகும்.

இது தவிர தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் அக்கட்சி தோல்வியினைத் தழுவியுள்ளது. தமிழ்நாட்டில் அக்கட்சியின் தற்போதைய நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பெல்லார்மின் அவர்கள் வைப்புத் தொகையினை இழக்கும் வகையிலான ஒரு பெரும் தோல்வியைத் தழுவியுள்ளார்.

ஆந்திராவில் அமெரிக்க அணு ஒப்பந்தத்திற்கு எதிராக பிரகாஷ்கரத் அவர்களே யாத்திரைகள் பல மேற்கொண்டு அணிவகுப்புகள் நடத்திய போதிலும் அங்கு சி.பி.ஐ(எம்), சி.பி.ஐ ஆகிய இரு கட்சிகளுமே பெரும் தோல்வியை தழுவியுள்ளன. தேர்தல் வெற்றிக்காக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசத்துடனோ, சந்தர்ப்பவாதத்தின் நிலைக்களனாக விளங்கும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியுடனோ கூட்டுசேரத் தயங்காது கோட்பாடற்று உறவு வைத்துக் கொண்ட அக்கட்சி அதற்கான அறுவடையினைச் செய்து தோல்வியினை தழுவியுள்ளது.

கூடுதல் இடங்கள் பெறுவதை மனதில்கொண்டே அது உருவாக்கிய எந்த ஒன்றுபட்ட இயக்கப் பின்னணியும் இல்லாத மூன்றாவது அணியின் பொய்த்தோற்றமும் மக்களால் மிகச் சரியாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதையே தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.

ஒட்டுமொத்தத்தில் உழைக்கும் வர்க்க அரசியலைக் கைவிட்டு தேசிய முதலாளிவர்க்க ஆதரவு நிலை எடுத்து, உழைக்கும் மக்கள் விவசாயிகள் இயக்கங்களை உள்ளிருந்து முடக்கும் - அடக்குமுறை கொண்டு நசுக்கும் சக்தியாகவும், நாடாளுமன்ற அரசியல் இலாபத்திற்காக கோட்பாடுகளைத் தானம் செய்வதாகவும், தனது நாடாளுமன்ற அரசியல் செயல்பாடுகள் மற்றும் தாங்கள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் கடைபிடிக்கும் சொல்லுக்கும் செயலுக்கும் ஒத்துவராத போக்குகள் மூலம் ஒரு மாறுபட்ட அரசியல் கட்சி என்று தான் கொண்டிருந்த முகத்தோற்றத்தை இழந்து நிற்பதாகவும் அம்பலப்பட்டுள்ளமையே தற்போது சி.பி.ஐ(எம்) கட்சியும் அது தலைமை தாங்கும் இடது முன்னணியும் எதிர்கொண்டுள்ள தோல்விக்கான காரணங்களாகும்.

தோல்வியிலிருந்து உரிய உழைக்கும் வர்க்கப் படிப்பினை எடுக்கும் நிலையில் சி.பி.ஐ.(எம்) இல்லை

இப்போது ஏற்பட்டுள்ள இந்தத் தோல்வி அளவு ரீதியானது என்று மட்டும் பார்க்கப்பட முடியாததாகும். இது பல அடிப்படைத்தன்மைகளைக் கொண்டதுமாகும். ஆனால் இதிலிருந்து உண்மையான படிப்பினைகள் எடுத்து தன்னை மீண்டும் ஒரு உழைக்கும் வர்க்க கட்சியாக உயர்த்திக் கொள்ளும் உள்ளடக்கத்தை சி.பி.ஐ(எம்) கட்சி மிகப்பெருமளவு இழந்துவிட்டது. எனவே நாம் செய்துள்ள இந்த ஆய்விலிருந்தான படிப்பினைகளை அக்கட்சியைக் காட்டிலும் உழைக்கும் வர்க்கக் கட்சியாக உருவாக உளப்பூர்வமாக விரும்பும் உண்மையான உழைக்கும் வர்க்க, கம்யூனிச அமைப்புகளே எடுத்துக் கொள்ள முடியும். அப்படிப்பினைகளை மனதிற்பதித்து உழைக்கும் வர்க்க இயக்கத்தை அவையே கட்டியமைக்க முடியும் இதுவே இன்றுள்ள நிலையாகும்.

அப்படிப்பட்ட அமைப்புகளின் வளர்ச்சியினை சி.பி.ஐ(எம்) போன்ற கட்சிகளை இப்போதும் கம்யூனிச லட்சியத்திற்காக நிற்கும் பெரிய கட்சிகள் என்ற கருத்து மற்றும் எண்ணத்தின் அடிப்படையில் நம்பிக்கொண்டு இருக்கும் நல்லெண்ணம் கொண்டோரும் அவற்றில் இணைந்து வலுப்படுத்த முன்வரவேண்டும். ஏனெனில் கம்யூனிச லட்சியத்தில் இருந்து பல காத தூரம் விலகிப் போய்விட்ட அக்கட்சியில் தொடர்ந்து செயல்பட்டால் அவர்கள் தற்போது கொண்டுள்ள ஓரளவு லட்சிய வேட்கையும் கூடப் படிப்படியாக மங்கி மறையும் சூழ்நிலை உருவாகிவிடும்.