முதலாளித்துவ யுகம் மனிதனை அவன் உற்பத்தி செய்யும் பொருட்களில் இருந்தும் அவன் வாழும் சமூகத்திலிருந்தும் அந்நியப்படுத்துகிறது என்று கூறினார் மாமேதை மார்க்ஸ். அந்தக் கருத்தை பிரதிபலிக்கும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ள படமே பிரியதர்சனின் காஞ்சிவரம்.

இக்கதையில் ஒரு பட்டு நெசவாளனால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களோடு கூட அந்நெசவாளனுக்கு ஒரு தொடர்பும் இருப்பதில்லை; பலரும் பகட்டாக உடுத்துவதற்காகப் பட்டாடைகள் நெய்யும் அந்நெசவாளிகள் நேர்த்தியாகத் தாங்கள் நெய்த பட்டாடைகளைப் பார்க்கக் கூடப் பல காத தூரம் நடக்க வேண்டியுள்ளது என்ற அவலநிலை தெளிவாக்கப் பட்டுள்ளது. இக்கதையின் பின்புலம் வெள்ளையர் ஆட்சியின் இறுதி காலம். அது படம் பிடிக்கும் சமூகம், காஞ்சிவரம் பட்டு நெசவாளிகளின் வாழ்க்கை.

சுப்ரமணியபுரம் திரைப்படம் அப்படம் எடுக்கப்பட்ட 80-களில் மதுரை இருந்த நிலைக்கு எவ்வாறு நம்மைக் கொண்டு சென்றதோ அதைப்போலவே விடுதலைக்கு முன்பு காஞ்சிவரமும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களும் பேருந்துகள், போலீஸ்இலாகா உட்பட அனைத்துமே தத்ரூபமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.

பட்டு நெசவாளர்கள் பட்டு நூல் விநியோகிக்கும் உரிமையாளர்களிடம் அனுபவித்த சுரண்டலும் ஒடுக்கு முறையும் கண்முன் கலைநுணுக்கத்துடன் நிறுத்தப்படுகிறது. நெசவாளர்களை ஒடுக்க, அடித்துத்துன்புறுத்த அடியாள் பட்டாளம் பட்டாலை அதிபர்களால் பராமரிக்கப்பட்டவிதம், பட்டாலை அதிபர்களின் செல்வச் செழிப்பிற்காக உழைத்துக் கொடுத்த நெசவாளிகள் தேய்ந்து போன ஓடாய்த்திரிகையில் இந்த அடியாட்கள் மட்டும் எவ்வாறு கொழுத்த கன்றுகள் போல் திரிந்தார்கள் போன்றவை அனைத்தும் நெஞ்சக் கொதிப்பினை ஏற்படுத்தும் விதத்தில் சித்தரிக்கப்படுகிறது.

தனது முதலாளி மகளின் திருமணத்திற்காக தான் நெய்து கொடுத்த பட்டுசேலையை அதாவது தனக்கு முதலாளியிடமிருந்து மட்டுமல்ல வெள்ளை அதிகாரியிடம் இருந்தும் பாராட்டு பெற்றுத்தந்த அந்த பட்டுச் சேலையை தன் மனைவியிடம் காட்டுவதற்காக முதலாளியின் வீடு வரை அவளை கூட்டிச் செல்லும் அவலநிலை எவ்வாறு நெசவாளிகளைப் பொறுத்தவரையில் ஒரு இயல்பான விசயமாக இருந்தது என்பதை சித்தரித்துள்ள விதம் பார்ப்பவர்களை நெகிழவைக்கிறது.

ஒரு நல்ல திரைப்படத்தின் தகுதியும் அதுதானே. படத்தில் வரும் சோகமான சம்பவங்களில் சம்பந்தப்பட்டுள்ள வேதனையை உணர்ந்து அவர்களே அழுது அங்கலாய்த்தால் அது பார்ப்பவர் மனதில் ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது; மிதமிஞ்சிய கஷ்டத்தில் இருக்கும் படத்தின் கதாநாயகன் வேதனை தலைக்குமேல் போய்விட்டநிலையில் தனது வருத்தத்தை விரக்தி கலந்த ஒரு சிரிப்பின் மூலம் வெளிப்படுத்தினால் அதை பார்ப்பவர்கள் அழுவர். பார்ப்பவர்களை படம் பார்ப்பதோடன்றி அதில் ஈடுபடுத்தவும் வேண்டும். அத்தகையதே ஒரு நல்ல திரைப்படம் இப்படம் பல இடங்களில் அதனைச் செவ்வனே செய்துள்ளது.

விடுதலைப் போராட்ட காலத்தில் கம்யூனிஸ்டுகளின் செயல்முறை எவ்வாறு இருந்தது என்பதையும் படம் நன்கு பிரதிபலித்துள்ளது. ஒரு எழுத்தாளரைப்போல் ஊருக்குள் நுழைந்து தொழிலாளர்களில் புரிதல் உள்ள ஒரு பகுதியினரை தேர்ந்தெடுத்து அவர்களை தயார் செய்து பிற தொழிலாளர்களை அணிதிரட்டுவதற்கு தெரு நாடகம் போன்ற கலை வடிவத்தைத் தேர்ந்தெடுத்து அதன்மூலம் அவர்கள் ஆட்பட்டுள்ள சுரண்டலின் அவலத்தை நேர்த்தியாக அவர்களுக்கு உணர்த்தி இச்சுரண்டல் சாஸ்வதமானது இதிலிருந்து மீளவே முடியாது என்ற விதத்தில் அவர்கள் மனதில் ஆழப் பதிக்கப்பட்டிருந்த பதிவுகளை அகற்றி நாம் ஒருங்கிணைந்தால் இந்த நிலைமையையும் மாற்ற முடியும்-குறைந்த பட்சம் உடனடியாக தங்களது சம்பளம் மற்றும் வேலை சூழ்நிலைகளிலாவது மாற்றத்தினை கொண்டுவர முடியும் என்று அவர்களை உணர வைப்பது சுருங்க கூறி நேர்த்தியாக விசயத்தை விளங்க வைக்கிறது. இதனை வடிவமைத்துள்ள இயக்குநரின் திறமையையும் நன்கு வெளிப்படுத்துகிறது.

ஆனால் அதில் உள்ள ஒரே குறை தெரு நாடகத்தில் முதலாளியை வெட்டிக் கொலை செய்வது போன்ற முடிவினைக் காட்டியிருப்பதாகும். அது கம்யூனிஸ்டுகளைப் பற்றி ஒரு தவறான சித்திரத்தை ஏற்படுத்துகிறது. கம்யூனிஸ்ட் என்பவன் சமூக மேம்பாட்டிற்காக அடிப்படையில் தன் உயிரைக் கொடுக்க தயாராய் இருப்பவனே தவிர உயிர்களை எடுப்பதில் ஆர்வம் உள்ளவன் அல்ல. வன்முறை அனைத்து சமயங்களிலும் அவன் மேல் திணிக்கப்படுகிறதே அன்றி அவனாகவே சுயவிருப்பின் அடிப்படையில் அவன் அதை கையிலெடுப்பதில்லை.

இப்படத்தின் சூழ்நிலையில் எழுத்தாளர் என்ற பெயரில் வரும் கம்யூனிஸ்டின் வழிகாட்டுதலில் மிகப் பெரும்பாலான தொழிலாளர்களை திரட்டுவதில் முன்னணித் தோழர்கள் வெற்றி பெற்றுவிடுகின்றனர் அந்நிலையில் முதலாளியைக் கொலை செய்வது போன்ற ஒரு தீர்வினை இப்பிரச்னையில் காட்டியிருக்க வேண்டியதில்லை. ஏனெனில் ஒன்று திரண்டுள்ள தொழிலாளர் சக்தியே-அதன் மூலமாக அவர்களால் மேற்கொள்ளப்பட முடியும் பல அமைப்பு ரீதியான நடவடிக்கைகளே படத்தில் காட்டப்படுவது போன்ற முதலாளிகளின் தாக்குதல்களை சமாளிக்கப் போதுமானவை.

தமிழ்த் திரைப்படங்களை மிக அதிகம் பார்த்துப் பார்த்து ஆண் பெண் இருபாலரின் பாலுணர்வு ரீதியான காதலே இவ்வுலகின் மிகப்பெரிய விசயம் என்ற எண்ணம் மனதில் ஆழப்பதிந்துள்ள ரசிகர்களுக்கு ஒரு வேறுபட்ட நாயகனும் நாயகியும் இப்படத்தில் காட்டப்படுகின்றனர். எப்போதும் தனியாகவே சந்தித்து பேசிக்கொள்ளாத, டூயட் பாடிக் கொள்ளாத மலரும் மணமும் போன்ற ஒரு யதார்த்தமான காதல் காணக் கிடைத்திருக்கிறது.

இது தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கிடையே பள்ளிச் சிறுவர்களாய் இருந்த காலந்தொட்டு இருந்த நட்பு ஆழமாக வேரூன்றி வாலிபப்பருவத்தில் ஆண் மகன் இராணுவவீரன் என்ற அரசு வேலையில் சென்றபின் தன் தாய் தந்தையருக்கு எழுதும் கடிதம் மூலம் வெளிப்படுத்தும் நடைமுறைக் காதல்.

தன் மகள் அவளது இளம்பருவ நண்பனான சக தொழிலாளியின் மகனிடம் மனதை பறிகொடுத்திருக்கிறாள் என்பதை அவன் இராணுவப் பணியில் சேர செல்லும் போது அவள் சிந்தும் சில கண்ணீர் துளிகள் மூலம் அறிந்து கொள்ளும் தந்தை; நான் மாப்பிள்ளை பையனின் தந்தை என்ற பிகு இல்லாத பையனின் தந்தை; நான் பெண்ணை கொடுக்கப் போகிறவன், எனவே சற்று பணிந்துதான் போக வேண்டும் என்ற எண்ணமில்லாத பெண்ணின் தந்தை; இருவரும் இயல்பாக ஒருவரை ஒருவர் ஆரத் தழுவிக் கொண்டு ஒருவருக்கொருவர் தெரிவிக்கும் திருமணத்திற்கான சம்மதம் இவை நிலவவேண்டிய தொழிலாளிவர்க்க கலாச்சாரத்தின் அற்புதமான வெளிப்பாடுகள்.

காவல்துறை ஆளும் வர்க்கங்களின் ஏவல் துறையே என்பதை படம் தெளிவாக விளக்கியுள்ளது. சட்ட விரோதம் என்று வர்ணிக்கக்கூடிய எந்த ஒரு காரியத்தையும் செய்யாதிருந்த நிலையிலும் கூட எழுத்தாளராக அக்கிராமத்தில் வந்து தங்கும் கம்யூனிஸ்டை சுட்டுத் தள்ளுவது; அவரது முதன்மை சீடரை சிறையில் அடைத்து அடித்து நொறுக்கி நான்கு பேர் தலைச்சுமையாக அள்ளிக்கொண்டு வருவது போன்ற காட்சிகள் தெளிவுபடுத்துகின்றன. ஒரு சிந்தாந்தத்தை கொண்டிருப்பதே, அதனை பிறரிடம் பிரச்சாரம் செய்து அணி திரட்டுவதே ஒருவரை சுட்டுக் கொள்ளும் அளவிற்கு கொடுங்குற்றம் என்று நடைமுறையில் கருதும் போக்கு முதலாளித்துவ சட்ட நீதி நெறிமுறைகளின் போலித்தனத்தையும் வர்க்க சார்பினையும் செவ்வனே வெளிப்படுத்துகிறது.

பட்டு நெசவாளியின் குடும்பத்தில் ஒருவன் இறந்தால் குறைந்தபட்சம் ஒரு பட்டு நூலையாவது இறந்தவரின் உடலில் கட்டிச் சிதையிலிடவேண்டும். அவர்களால் அனுதினமும் வேலை செய்யும் ஒரு பொருளினை அந்த அளவிற்கே அவர்கள் நுகரமுடியும். ஆனால் கதையின் நாயகனுக்கோ ஒரு பேராசை. அவன் திருமணம் செய்து அழைத்து வரும் மணமகள் பட்டு உடுத்தி வரவேண்டும் என்று விரும்புகிறான். அது நிறைவேறவில்லை.

தன் மகளுக்கு பேர் வைக்கும் வேளை அவள் காதில் அவளுக்கு தான் என்ன சேர்த்து வைக்கப் போகிறேன் என்பதைக் கூறும் வகையில் அவன் சொல்வதும் அதேதான். அதாவது பட்டுடுத்தி அவளை மணமகள் ஆக்குவேன் என்று கூறுகிறான். அன்று நிலவிய நிலவரப்படி அதுவும் நிறைவேற்றப்படவே முடியாத ஆசையே. அதனை அவன் மனைவி உட்பட அனைவரும் ஆதங்கத்துடன் உணர்கிறார்கள். இருந்தாலும் அவன் அதனைச் செய்தே தீருவதென்பதில் மிகவும் பிடிவாதமாக இருக்கிறான்.

பட்டுச்சேலை வாங்குவதற்காக தான் சிறுகச் சிறுகச் சேமித்து வைத்தப் பணத்தை மனைவிக்கு காட்டி அவளது அவநம்பிக்கையைப் போக்க முயல்கிறான். ஆனால் தங்கையின் வாழ்க்கைக்காக அவன் சேமித்தப் பணத்தை மைத்துனனிடம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

அதன் பின்னரும் அவனது அந்த ஆசை அவனைத் தீவிரமாக பற்றியிருப்பதால் பட்டுநூலை திருடத் தொடங்குகிறான். பட்டு நூலை வேறெங்குவைத்து கொண்டு வந்தாலும் கண்டுபிடித்து விடுவார்கள் என்று அவன் வாயில் உதக்கி வெளியில் தெரியாமல் திருடிச் சேர்த்து அதை வீட்டில் இருக்கும் தறியில் இரவில் நெய்து இறக்கும் தருவாயில் உள்ள தன் மனைவியிடம் தான் தன் பெண்ணுக்குப் பேர்வைக்கும் போது கூறியவாக்கை நிறைவேற்றுவதில் எத்தனை உறுதியாக இருக்கிறேன் என்பதைக் காட்டுகிறான். கடைசியில் தன் மகளுக்கு திருமணம் பேசி நிச்சயிக்கும் சூழ்நிலையில் மாப்பிள்ளை வீட்டார் பெண்ணுக்கு என்ன செய்யப் போகிறாய் என்று கேட்கையிலும் பட்டுடுத்தி அனுப்புவேன் என்று கூறுகிறான்.

வாக்குறுதியை நிறைவேற்ற இன்னும் பட்டுநூல் திருடவேண்டியுள்ளதால் போராட்ட காலகட்டத்தில் மிதவாத நிலை எடுக்கிறான். வேலை நிறுத்தத்தில் இருக்கும் தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு திரும்ப வழிவகுக்கிறான். அந்நிலையில் அவனுக்கு சம்பந்தியாகவுள்ள- கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறாமல் வேலைக்கு செல்வதில்லை என்ற உறுதியான தீவிரவாத நிலை எடுத்த-சக தொழிலாளியுடன் ஏற்படும் சச்சரவில் அவன் செய்யும் திருட்டு வெளிப்பட்டு அடித்து உதைக்கப்பட்டு கைதாகிறான்; இத்துயரம் அவனது மகளின் தற்கொலை முயற்சியில் சென்று முடிகிறது.

பேச்சு மூச்சற்று இருக்கும் அவளைப் பார்க்கப் பரோலில் வந்த அவனுக்கு தான் மீண்டும் சிறை சென்றபின் அவனது மகளை யார் பார்ப்பார்கள் என்ற கேள்வி எழுகிறது. திருடனின் மகள் என்ற பெயர் வரும் என்ற சாக்கில் தன் மைத்துனனும் அவளைப் பார்க்க தயாராக இல்லாத சூழ்நிலையை அறிந்துகொண்டு அவன் அவளை விசம் கொடுத்துக் கொல்கிறான். அவன் அத்தனைப் பாடுபட்டு பலகாலம் நெய்த பட்டுத்துணி அவளது உடம்பை முழுமையாக போர்த்தக்கூட போதுமானதாக இல்லை. கதை இத்துடன் நிறைவுபெறுகிறது.

மற்ற அரசியல் தத்துவங்களைப் போல் அல்லாது கம்யூனிஸம் வெறும் அரசியல். பொருளாதாரம் அல்லது சமூகம் குறித்த தத்துவம் மட்டுமல்ல. அது ஒரு வாழ்க்கைத் தத்துவம். உண்மையிலேயே கம்யூனிஸ சித்தாந்தத்தின் அரவணைப்பின் கீழ் ஒருவன் வந்த பின் அவனது வாழ்க்கைக் கண்ணோட்டத்தில் பெரிய மாற்றம் என்பது ஏற்பட வேண்டும்.

அது ஏற்படாத கம்யூனிஸ்டுகளின் புரிதல் ஆழமானதல்ல 'அறிவு ஜீவிகளைப் பொறுத்தவரை அது சாத்தியம். சாதாரண தொழிலாளர்களைப் பொறுத்தவரை அது சாத்தியமா' என்ற கேள்வி எழுலாம். ஆனால் தொழிலாளி வர்க்கம் அதனை வாழ்க்கைத் தத்துவமாக ஏற்றுக் கொள்வதில் அதற்கு மிகப்பெரும் சிரமம் இருப்பதில்லை. ஏனெனில் பலரையும் ஆட்டிபடைக்கும் குட்டி முதலாளித்துவ குணங்கள் தொழிலாளி வர்க்க வாழ்க்கை முறையில் இயல்பாகவே இருப்பதில்லை.

இதைத்தான் வேறு வார்த்தைகளில் ஏழைகளைப் பொறுத்த வரை அவன் எதையும் பொருட்படுத்துவதில்லை. பணக்காரர்கள் தங்கள் பணத்தால் எதையும் தூக்கி எறிந்துவிடுவர். நடுத்தர மக்கள் தான் இவ்விரண்டையும் செய்ய முடியாமல் தவிப்பவர்கள் என அனுபவசாலிகள் உலக வழக்காகக் கூறுவர். இந்நிலையில் ஒரு கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அரவணைப்பின் கீழ் வந்துவிட்ட நிலையிலும் கூட அவ்வியக்கத்தின் முன்னணி ஊழியர்களாக ஆகிவிட்ட வேளையிலும் மணமகளுக்கு சீர்தனமாக கதாநாயகன் என்ன செய்யப்போகிறான் என்று கேட்கும் நிலையில்தான் கதாநாயகனின் சகதோழனாகிய சம்பந்தியாகப்போகும் தொழிலாளி இருக்கிறான் என்பதும் அதனை எப்படியேனும் செய்துவிடவேண்டும் என்ற அடிப்படையில் கதாநாயகன் இருந்து அதற்காக நூல்திருடும் தனது போக்கை தொடர்கிறான் என்பதும் உணர்வு பூர்வமாக படத்தைப் பார்ப்பவர்களுக்கு ஒரு நெருடலாக உள்ளது. கம்யூனிசம் அவர்களது குணாம்ச ரீதியான அகவாழ்வில் வேதனை தரும்விதத்தில் ஒரு பங்கினையும் ஆற்றவில்லை என்பதையே அது கோடிட்டுக் காட்டுகிறது.

'இது சமகாலத்துக் கதையல்ல; வெள்ளையன் ஆட்சி செய்த காலத்துக் கதை; மேலும் சில உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு தீட்டப்பட்ட சித்திரமே இது. எனவே இது போன்ற எதிர்பார்ப்புகளை எவ்வாறு இந்த விசயத்தில் நாம் கொண்டிருக்க முடியும்' என்ற கேள்வி எழுப்பப்படலாம்.

ஒரு கதை எந்தக் காலத்தில் நடந்ததாகக் கூறப்பட்டாலும் தற்காலத்து யதார்த்தங்களோடு பொருத்தமுடையதாக அது அதிகளவு இருந்தால் மட்டுமே தற்கால ரசிகர்களால் பார்க்கவும், ரசிக்கவும் முடிந்ததாக இருக்கும். மேலும் உண்மை நிகழ்வுகளை அப்படியே முன்வைப்பது சமூக நிகழ்வுகளின் முன்பு கண்ணாடியை வைத்துக் காட்டுவது போல நயமற்றதாக ஆகிவிடும். அதனால் தான் மணிரத்னத்தின் 'இருவர்' திரைப்படமும் அது பிரதிபலித்த அரசியல் காலகட்டத்தில் உண்மையில் நடந்த சில அபத்தமான நிகழ்வுகளின் குறுக்கீடு இல்லாதிருந்தால், கதை இவ்வாறு தான் முடிந்திருக்கும் என்ற மாதிரித் தன்மையை படம்பிடித்தது.

அதைப்போல் கம்யூனிஸத்தை ஒரு வாழ்க்கைத் தத்துவம் என இயக்குனர் பார்த்திருந்தால் இத்தகைய ஜீரணிக்கமுடியாத, சமூக ஆர்வலர்களுக்கு உற்சாகம் தராத முடிவினை கதையில் கொண்டு வந்திருக்கமாட்டார்.

ஒரு வகையில் அன்று முதல் இன்றுவரை இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் நிலவும் மிக அடிப்படையான கோளாறும் இதுதான். அது வாழ்க்கைத் தத்துவமாக கடைப்பிடிக்கப்படாமல் இருந்ததன் காரணமாகவே எத்தனையோ தியாகங்களை இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் என்ற பெயரில் அறியப்பட்டவர்கள் செய்திருந்தும் இன்று கோட்பாடற்று, சமூதாய மாற்றம் எனும் இலக்கினை இழந்து முதலாளித்துவக் கட்சிகளுடன் ஒரே குட்டையில் ஊறும் மட்டைகளாக ஆகும் நிலைக்கு அக்கட்சிகள் தரம் தாழ்ந்து போயுள்ளன.

இந்த அம்சமே காஞ்சிவரம் படம்பார்த்து முடிக்கையில் ஒருவகையான கையாலாகாத அவலமனநிலையை பார்ப்பவர் மனதில் ஏற்படுத்துகிறது. ஒரு திரைப்படத்தில் எத்தனையோ சோக நிகழ்வுகள் வரலாம் ஆனால் அந்த சோக நிகழ்வுகள் சகப்புணர்வையும் கையாலாகாத நிலையையும் ஏற்படுத்துவையாக இருக்கக்கூடாது.

எல்லா கலை வடிவங்களுமே பல தரப்பட்ட சமூக மக்களின் அக - புற வாழ்க்கைகளில் நிலவும் சமூகத்தின் மையமான வேதனையை ஏதாவதொரு வகையில் பிரதிபலிப்பவையே. அதனால் தான் எந்த உயர்ந்த கலைப் படைப்பும் அது படைக்கப்பட்ட சமூகத்தின் மையமான வேதனை சார்ந்த சமூக அவலங்களின் மூலகாரணத்திற்கு எதிராக கோபத்தையும் துடிப்பையும் ஏற்படுத்துவதாகவே அமைகின்றது. அவ்விசயத்தில் மட்டும் இத்திரைப்படம் தோல்வியடைந்திருக்கிறது. அதற்கான காரணம் இப்படம் யதார்த்தவாதத்தை மட்டுமே பிரதிபலித்திருப்பதே.

அதாவது எல்லா கலை இலக்கியங்களுமே பிரச்சாரங்கள் தான். ஆனால் எல்லா பிரச்சாரங்களும் கலை இலக்கியங்கள் ஆகிவிடுவதில்லை என்ற கூற்றின் அடிப்படையில் இப்படமும் அது எத்தனையோ அற்புதமான விதங்களில் பட்டு நெசவாளிகளின் ஒரு கால வாழ்நிலையை, அக்காலகட்டத்தின் சமூகப் பின்னணியை, அதன் மையமான வேதனையை பிரதிபலித்திருந்தாலும் அது இறுதியில் ஏற்படுத்தும் சோர்வின் மூலமாக இச்சமூகம் என்றென்றும் இப்படியே இருந்து இது போன்ற சோகங்களை உருவாக்கக் கூடியதே என்பதைத் தழுவிய ஒரு பிரச்சாரத்தையே செய்வதாகப்படுகிறது.

பிரச்சாரம் என்ற வார்த்தை படைப்பாளிகளை பெரிதும் பாதிக்கக்கூடியது தான் ஒரு பிரச்சாரகன் என்று கூறிக்கொள்ள எந்தப் படைப்பாளியும் விரும்பமாட்டான். தனது படைப்புகள் ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒன்றுக்கு தனது புலனறிவிற்கு புலப்படாமல் ஒரு பிரச்சாரத்தையே செய்துகொண்டிருக்கிறது என்பதை அவன் ஒப்புக்கொள்ளமாட்டான். எவ்வாறு கூலியடிமைத்தனத்தில் இந்த அமைப்பில் இருக்கும் ஒருவன் தான் கூலியடிமை என்பதை ஒப்புக்கொள்ளத் தயங்குவானோ அதைப்போல.

படைப்பாளிகளை வெறும் யதார்த்த வாதம் மட்டும் வழிநடத்தினால் அதன் விளைவு எப்படிப்பட்ட படைப்பாக உருவாகுமோ அப்படிப்பட்ட படைப்பாக காஞ்சிவரம் வெளிவந்துள்ளது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் படைப்பாளிகளை வழிநடத்தவேண்டியது வெறும் யதார்த்தவாதத்திற்கு பதில் சமூக மாற்றத்திற்கு வழிவகுக்கவல்ல சோசலிச யதார்த்தவாதமே.

அந்த அடிப்படையில் படத்தின் இறுதியில் பிரதிபலிக்கப்படும் கையாலாகாத் தனமும் சோர்வும் ஏற்படாதவாறு சமூக மாற்றப் போரில் ஈடுபடத்தூண்டும் ஒரு உற்சாகத்தைத் தரவல்ல உயர்ந்த யதார்த்தவாதத்தை பிரதிபலித்திருக்குமானால் காஞ்சிவரம் ஒரு உன்னதமான படைப்பாக இருந்திருக்கும்.

தோழர் ஆனந்தன்