விருதுநகர் மாவட்ட பொதுத்தொழிலாளர் கூட்டமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் சிவகாசி சேர்மன்சாமி கல்யாண மண்டபத்தில் 15.11.2009 அன்று நடைபெற்றது. பல உதிரித் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களைத் தொழிற்சங்க வட்டத்திற்குள் கொண்டு வருவதற்காகத் தொழிற்சங்கம் ஒன்றினைப் பதிவுசெய்யும் முயற்சி கடந்த பல ஆண்டுகளாகவே உழைக்கும் மக்கள் போரட்டக் கமிட்டித் தோழர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்தது. பல்வேறு தொழிலாளர் துறையினரின் முன்நிபந்தனைகளை நிறைவு செய்தபின்பு அச்சங்கத்திற்கு பதிவு கிட்டியது. உடனேயே எவ்விதத் தாமதமும் இன்றி உழைக்கும் வர்க்கப் பணியினைக் கையிலெடுக்கும் முகமாக இந்த முதல் பொதுக்குழுக் கூட்டம் உரிய தயாரிப்புகளுடன் நடத்தப்பட்டது.

சகோதர அமைப்புகளின் பங்கேற்பு

கூட்டத்தில் பொதுத்தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் தவிர இவ்வட்டார உழைக்கும் வர்க்கப் பணியில் நீண்டகாலமாகத் தங்களை ஈடுபத்திக் கொண்டிருந்த பழைய தோழர்கள் பலரும் உணர்வுப் பெருக்குடன் வந்து கலந்து கொண்டனர். அவர்கள் தவிர அரசு ஊழியர் அமைப்புகளின் சார்பாகவும் பொதுத்துறை ஊழியர்களின் சார்பாகவும் முக்கியத் தோழர்கள் சிலரும் பங்கெடுத்து வாழ்த்துரை வழங்கினர். அரசு அமைத்துள்ள பல்வேறு வாரியங்களில் இன்னும் உறுப்பினராகச் சேர்க்கப்படாதிருக்கும் இவ்வட்டார உடல் உழைப்பு சார்ந்த தொழில்களில் ஈடுபடும் பலரையும் உறுப்பினர் ஆக்குவதற்காகவும் ஏற்கனவே பதிவு செய்து கொண்டுள்ள பல்வேறு தரப்புப் பாடுபடும் மக்களின் பதிவுகளைப் புதுப்பித்து அவர்கள் பெறவேண்டிய பலன்களை பெறுவதில் முட்டுக்கட்டை எதுவும் இல்லாமல் செய்வதை முக்கிய நோக்காகக் கொண்டும் செயல்பட உறுதிபூண்டிருக்கும் இவ்வமைப்பின் முதல் கூட்டத்தில் உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டியின் மாநில அமைப்பாளர் தோழர். வரதராஜ், பட்டாசுத் தொழிலாளரின் முக்கியத் தலைவர் தோழர். தங்கராஜ், காமராஜர் மாவட்ட அச்சகத் தொழிலாளர் அமைப்பின் செயலாளர் தோழர். செல்வராஜ், மாற்றுக் கருத்து இதழின் பதிப்பாசிரியரும் அமைப்பின் சட்ட ஆலோசகருமான தோழர்.த.சிவக்குமார் கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொதுமேடையின் மாநில அமைப்பாளர் தோழர்.ஆனந்தன் ஆகியோரும் அரசு ஊழியர் தரப்பிலிருந்து தோழர். சத்தியமூர்த்தி, பொதுத்துறை ஊழியர் அமைப்பின் பிரதிநிதி தோழர். ஜெயக்குமார் ஆகியோரும் கருத்துரையும் வாழ்த்துரையும் வழங்கினர்.

உரையாற்றிய தோழர்களின் ஆதங்கம்

பெரும்பாலான தோழர்கள் தங்களது உரைகளில் தற்போதுள்ள அரசு, பொதுத்துறை மற்றும் உற்பத்தித்துறை சார்ந்த தொழிற்சங்கங்கள் எவ்வாறு அரசியல் இலக்கு எதுவும் இல்லாதவையாக நடைமுறைப் பிரச்னைகளை மட்டும் அணுகுகிறோம் என்ற பெயரில் சந்தர்ப்பவாதப் போக்கில் செயல்படுபவையாக மாறிவிட்டன என்பதையும் நாம் உருவாக்கியுள்ள இந்த அமைப்பு அதிலிருந்து முழுமையாக மாறுபட்டதாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினர்.

அடிப்படை அரசியல் வழித் தவறே சீரழிவிற்குக் காரணம்

இறுதியில் சிறப்புரையாற்றிய தோழர். ஆனந்தன் தனது உரையில் பின்வரும் கருத்துக்களை முன்வைத்தார். தோழர்கள் முன்வைத்த விதத்தில் அரசு, பொதுத்துறை மற்றும் உற்பத்தித்துறை சார்ந்த தொழிற்சங்கங்கள் இன்றிருப்பதுபோல் அத்தனை சந்தர்ப்பவாதப் போக்கு வாய்ந்தவையாக அவை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருக்கவில்லை. பல அப்பழுக்கற்ற தலைவர்களைக் கொண்டவையாகவே அவை இருந்தன. அப்படியிருந்தும் அவை இன்று இந்த சீரழிந்த நிலையில் இருப்பதற்கான காரணம் என்ன? அக்காரணம் அந்த அமைப்புகளை வழிநடத்திய அடிப்படை அரசியல் வழி தவறானதாக இருந்தது தான். விடுதலை பெற்றபின் இந்திய அரசின் அதிகாரத்திற்கு வந்த முதலாளி வர்க்கத்தை அவை தமது முக்கிய எதிரியாகக் கருதத் தவறிவிட்டன. விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருந்த காலத்தில் இந்த அமைப்புகளை வழிநடத்திய கட்சிகள் ஏகாதிபத்திய முதலாளித்துவ நிறுவனங்களுக்கு எதிராக மட்டுமே பெரும்பாலும் தங்களது போராட்டக் கூர்முனையை திருப்ப வேண்டும்; நமது சுதேசி முதலாளிகள் நடத்தும் தொழிற்சாலைகளில் அத்தனை உக்கிரமான போராட்டங்கள் நடத்தப்படக் கூடாது என்ற எந்திரகதியிலான நிலைபாட்டினை தாங்கள் நடத்துவது அடிப்படையில் முழுக்க முழுக்க அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்த போராட்டமே என்ற கோணத்திலிருந்து எடுத்தன. அதன் பின்னர் விடுதலை பெற்றபின்னரும் கூட பலகாலம் இந்தியா இன்னும் விடுதலை பெறவில்லை என்ற கண்ணோட்டத்தையே கூறி தனது சுரண்டல் ஆட்சியை நிறுவி மக்களை முழுவீச்சுடன் சுரண்டத் தொடங்கியிருந்த சுதேசி முதலாளி வர்க்கத்தை மூடுதிரைபோட்டு மறைத்தன. இந்தியா விடுதலை பெற்ற ஒரு நாடு என்ற கருத்து ஐக்கிய நாடுகள் சபையில் சோவியத் பிரதிநிதியால் முன்வைக்கப்பட்டதற்குப் பின்பே நமக்குக் கிடைத்தது விடுதலைதான் என்பதை ஏற்றுக் கொண்டனர். அதன் பின்னரும் கூட இந்தியா ஒரு அரைக்காலனி, அரை நிலப்பிரபுத்துவ நாடு என்ற கண்ணோட்டத்தைக் கொண்டு அச்சூழ்நிலையில் நாம் நடத்தவேண்டிய சமுதாய மாற்றப் போரில் தேசிய முதலாளிகள் நேச சக்திகள் என்ற கண்ணோட்டத்தைக் கொண்டிருந்தனர். இந்தப் பார்வையின் காரணமாக தனியார் முதலாளித்துவம் கோலோச்சிய உற்பத்தித் துறைகளில் அங்கிருக்கும் தொழிலாளரின் வற்புறுத்தலே அவர்கள் அமைப்பை ஏற்படுத்துவதற்கு ஆதாரமாக இருந்தது. அதனால் அவை சீர்திருத்தவாதத் தொழிற்சங்கங்களாகச் செயல்படத் தொடங்கின. முதலாளித்துவத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவிபுரிய அரசுத்துறையில் உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை முதலாளித்துவ லாபநோக்கோடு அவை நடத்தப்பட்ட போதும் அவற்றை சோசலிசத்தின் கூறுகள் என்று இந்த அமைப்புகள் பார்த்தன. இந்தப் பார்வையிலிருந்த அடிப்படைக் கோளாறே இச்சங்கங்களை வழிநடத்திய கட்சிகள் தேர்தல் அரசியலில் சமுதாய மாற்றக் கண்ணோட்டத்தைத் தூக்கியயறிந்துவிட்டு நடைபயிலத் துவங்கிய வேளையில் முழுக்க முழுக்கத் தொழிற்சங்கங்கள் இன்று இருக்கும் சீரழிந்த நிலைக்கு ஆளாக்கியது.

சரியான அடிப்படை அரசியல் வழியைப் பிசிறின்றிப் பிடித்து நிற்பதன் அவசியம்

எனவே நமது தொழிற்சங்கம் இத்தகைய சீரழிவிற்கு ஆட்பட்டுவிடக் கூடாது என்று நாம் விரும்பினால் நம்மை வழிநடத்தும் அடிப்படை அரசியல் வழியையும் குறிக்கோளையும் எந்தவகைப் பிசிறும் இல்லாத விதத்தில் தற்போது ஆட்சியிலிருக்கும் இந்திய தேசிய முதலாளி வர்க்கத்தை எதிர்த்ததாக வைத்திருக்க வேண்டும். தொழிலாளிகளின் பாதிப்புகளுக்கே முன்னுரிமை தரவேண்டுமே தவிர அவர்களை பாதிப்பிற்கு ஆளாக்கும் முதலாளிகள் பெரிய முதலாளிகளா அல்லது சிறிய முதலாளிகளா என்று பார்க்கும் அவசியமற்ற வேலையில் ஈடுபடக் கூடாது. சிறிய முதலாளிகள் பெரிய முதலாளிகளால் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் அவர்களை எதிர்த்துப் போராடித் தங்களது நலன்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது சிறிய முதலாளிகளின் வேலை; அது நமது வேலையல்ல.

இயக்கப் போக்கிற்கு சமரசப்பேச்சு மெக்கானிஸம் அடித்த சாவுமணி

அடுத்ததாக இயக்கப் பாதையினை உறுதியாக இடைவிடாமல் பின்பற்ற வேண்டும். ஸ்தாபன ரீதியாக ஒருங்குதிரட்டப்பட்ட தொழிற்சங்கங்கள் இயக்கப் பாதையைவிட்டு ஒதுங்கிவிட்டதற்கு ஒருகாரணம் அற்றில் தற்போது நடைமுறைப் படுத்தப்பட்டுவரும் சமரசப் பேச்சுவார்த்தை மெக்கானிஸம் ஆகும். உதிரிப் பிரச்னைகளின் தீர்வுக்கு மட்டுமே வழிவகுக்கும் அந்த மெக்கானிஸம் அந்நிறுவனங்களின் நிர்வாகங்களின் மேல் பொய்யான நம்பிக்கையினை ஏற்படுத்தி இயக்கப் போக்கிற்குச் சாவுமணியடித்துவிட்டது.

இலவசத் திட்டங்களின் சுருங்கிவரும் வாழ்நாள்

நிவாரணத்திட்டங்களால் மதிமயங்கி நிற்கும் மக்கள் இயக்கப் பாதைக்கு எப்படி வரப்போகிறார்கள் என்பது இன்று ஒரு அவநம்பிக்கையூட்டும் கேள்வியாக நம்முன் எழுந்து நிற்கிறது. உலகமயம் இன்று பலரும் கூறுவதைப் போல் வளர்முக நாடுகளுக்கு எதிரான அம்சங் களை மட்டுமே கொண்டிருக்கவில்லை. அது இந்தியா போன்ற நாடுகளில் கிடைக்கும் மலிவான உழைப்புத் திறனைப் பயன் படுத்த அந்நிய முதலீடுகளை காந்தம் போல் கவர்ந்திழுக்கவும் செய்துள்ளது. அந்நிறுவனங்கள் கொள்ளையடித்துப் பொருள் குவிக்க மத்திய, மாநில அரசுகள் பேருதவி செய் கின்றன. ஆனால் அதே வேளையில் அந்நிறு வனங்களின் மூலமாகக் கிடைக்கும் வரி வருமானத்தைக் கொண்டே அரசுகள் இந்த இலவசத் திட்டங்களை அமல்படுத்துகின்றன.

இன்று முதலாளித்துவப் பொருளாதாரம் நெருக்கடிக்கு ஆட்பட்டுள்ள சூழ்நிலையில் மூலதனத்தின் வரவும் வருமானமும் குறையும் நிலையில் அரசு அறிவித்த பல்வேறு இலவசச் சலுகைத் திட்டங்கள் வெகுவிரைவில் திரும்பப் பெறப்படப் போகின்றன. அதன் விளைவே நியாயவிலைக் கடைகளில் சலுகை விலையில் வழங்கப்பட்டுவந்த பருப்பு போன்ற பொருள்கள் அவற்றின் இருப்பு இருக்கும் வரையில் மட்டுமே வழங்கப்படும் என்ற அரசின் அறிவிப்பும், ஒரு சமையல் எரிவாயு சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 30ரூபாய் மானியம் இனிமேல் வழங்கப்படாது என்று வந்துள்ள அறிவிப்பும் ஆகும்.

இளைய தலைமுறையினரைச் சமுதாயப் பணியில் ஈடுபடுத்துவோம்

எனவே உழைக்கும் மக்களின் வாழ்க்கையைத் தாங்கமுடியாத சுமை நிறைந்ததாக ஆக்கவல்ல பேரிடித் தாக்குதல்கள் அடுத்தடுத்து வரக் காத்திருக்கின்றன. அதனால் உழைக்கும் மக்கள் நிச்சயம் இயக்கப் பாதைக்குத் தள்ளப்படவே செய்வர். உழைக்கும் வர்க்க இயக்கத்தின் பழைய போர்க் குதிரைகளாக விளங்கிய தோழர்கள் தங்களுக்கு வயதாகி விட்டதால் இப்போது முன்னைப்போல் வேலை செய்ய முடியவில்லையே என்று சோர்வடையத் தேவையில்லை. அவர்களது பிள்ளைகளை சமுதாயப்பணிக் கல்வி புகட்டி அனுப்பத் தயாராகுங்கள். கலந்து கொண்டுள்ள தோழர்களும் முன்னணித் தோழர்கள் அனைத்தையும் பார்த்துக் கொள்வார்கள் என்ற மனநிலையைக் கைவிட்டு வாரிய உறுப்பினர் சேர்ப்பில், புதுப்பிப்பில் சிறுதொழிற் சாலைத் தொழிலாளரை ஒருங்கிணைப்பதில் தங்கள் பகுதிகளில் சிரத்தையயடுத்து தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அத்தகைய செயல்பாட்டின் மூலம் மட்டுமே நமது அமைப்பினை சீரழிவுப் பாதிப்புகளுக்கு ஆட்படாத அமைப்பாக பாதுகாத்திடவும் சரியான வழிநடத்துதலைச் செய்திடவும் முடியும் என்று கூறி தனது உரையினை நிறைவு செய்தார்.

உண்மையான இடதுசாரித் தொழிற்சங்கச் செயல்பாட்டுப் போக்கில் சிவகாசி வட்டாரத்தில் நிலவிவந்த கும்மிருட்டைக் கிழித்தெறிந்து ஒளிவெள்ளத்தைப் பாய்ச்சத் தோன்றியுள்ள சீரிய ஒளிவிளக்காக விளங்கப் போகும் இத்தொழிற்சங்கம் கலந்து கொண்ட தோழர்கள் மத்தியில் ஒரு புத்துணர்வையும் புதுநம்பிக்கையையும் ஏற்படுத்துவதாக அமைந்தது. கூட்டத்தில் கட்டடத் தொழிலாளரையும் அமைப்பில் உறுப்பினராக்க வழிவகுக்கும் உபவிதித் திருத்தமும் மற்றும் பல திருத்தங்களும் கொண்டு வரப்பட்டன.

- மாற்றுக்கருத்து ஆசிரியர் குழு