இலங்கையின் இன விடுதலைப் போராட்டம், உலகெங்கும் வாழும் தமிழர்களிடையே புதிய எழுச்சியைத் தோற்றுவித்துள்ளது. எல்லாவித அடக்குமுறைகளுக்கும் ஒடுக்கு முறைகளுக்கும் எதிராக, தங்களுக்குள் ஒன்றுபட்டு எதிலும் வெற்றி காணுகிற போர்க் குணம் எழும்பத் தொடங்கியுள்ளது. 

அப்படித்தான் மலேசியாவில் திரு. கலைவாணர் மாற்று செயல் அணி என்ற அமைப்பின் மூலம் தமிழர்களை ஒன்றுபடுத்தி, உரிமைகளை வென்றெடுக்கிற போராட்டங்களை நடத்தி வருகிறார். சிந்தனைத் தெளிவும், செயல் துடிப்பும், உலகளாவிய சமூக அரசியல் மாற்றங்களை அவதானித்து அதற்கேற்ப வழிமுறைகளை வகுத்துக் கொள்கிற திறனும் இவரது சிறப்பம்சங்கள். 

அண்மையில் தமிழகம் வந்த அவரிடம் மண்மொழிக்காக நேர் கண்டோம். அவை இதோ... 

நேர்கண்டவர் - பவா சமத்துவன் 

* மலேசிய தேசிய கட்டமைப்புக்குள் வாழும் தேசிய இனங்கள் எவை... எவை?

மலேசிய தேசிய கட்டமைப்புக்குள் வாழும் தேசிய இனங்கள் மூன்று. அவை மலாய் 50 சதவீதம், சீனர் 40 சதவீதம், இந்தியர் 10 சதவீதம். இந்தியர்களில் தமிழர்கள்தான் அதிகம். 

* பல்வேறு தேசிய இனங்களுக்கான சம உரிமையும் சம வாய்ப்பும் மலேசியாவில் எவ்விதம் உள்ளது?

பல்வேறு தேசிய இனங்களுக்கும் சம உரிமையும் சம வாய்ப்பும் வழங்கப் படுவது போல, ஒரு வெளித்தோற்றம் இருந்தாலும், இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் அவ்விதம் நடத்தப்படுவதில்லை. எடுத்துக் காட்டாக, மலேசியாவில் அண்மை ஆண்டுகளாக தமிழ்வழிப் பள்ளிக் கூடங்கள் குறைக்கப்படுகின்றன. அரசு மற்றும் பொதுத் துறைகளில் தமிழர்கள் வேலைவாய்ப்பு பெறுவது அவ்வளவு எளிதாக இல்லை. 

* மலேசியத் தமிழர்கள் என்பவர்கள் யார்.?

பலரும் நினைப்பதைப் போல தமிழர்கள் இங்கு பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் அல்ல. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே இங்கு குடியேறி வாழ்ந்தவர்கள். குறிப்பாக நாட்டுக் கோட்டை செட்டியார்கள். இவர்கள் பிரிட்டிஷாருக்கே கடன் கொடுத்தது மட்டுமல்ல, இந்த நாட்டு வங்கிகளும் அவர் களிடம் கடன் பெற்றிருக்கிறார்கள். 

பின்னர் மலேசியக் காடுகளில் இரப்பர் பயிரிட வெள்ளையர்களால், வலுக் கட்டாயமாகவும், ஏமாற்றியும் கொண்டு வரப்பட்ட தமிழர்கள். உரிமைகள் மறுக்கப் பட்டு, எந்த அடிப்படை வசதியும் இன்றி மலேசியக் காடுகளில் செத்து மடிந்த தமிழர்களின் கதை கேட்டால், நெஞ்சம் வெடித்துவிடும். பிறகு அண்மை ஆண்டுகளாக தொழில் - வணிகம் செய்ய மலேசியா வரும் தமிழர்கள் என மலேசியத் தமிழர்கள் பலவகைப் பட்டுள்ளனர். 

* ‘இண்ட்ராப்போன்ற அமைப்புகளின் கோரிக்கைகள் என்ன? மத சுதந்திரந்தான் அவர்களின் அடிப்படை கோரிக்கையா..?

இண்ட்ராப் இந்த நாட்டில் இன்னும் கூட ஒரு அமைப்பாக பதிவு செய்யப்படவில்லை. கோவில் உடைப்பை எதிர்த்தும், மதம் சார்ந்த நம்பிக்கைகளில் செயலாற்றும் சுதந்திரமும் இவர்களது போராட்டத்தின் அடிப்படை. இதனால் தமிழர்களுக்கு பயனேதும் இல்லை. அவர்கள் இந்த நாட்டில் நிலையான வாழ்வாதாரத் திற்காகவும், சம உரிமைக்காகவும் போராடுகிறார்கள். 

* உங்கள் அமைப்பின் நோக்கம், செயற்பாடுகளைப் பற்றிக் கூறுங்கள். 

மாற்று செயல் அணி என்ற எங்கள் அமைப்பு 1999 பிப்ரவரி 22இல் தொடங்கப்பட்டது. தமிழர்களை ஒரு குடையின் கீழ் ஒன்றிணைத்து உரிமைகளை வென்றெடுப்பதுதான் இதன் நோக்கம். 

நேரடி செயல் நடவடிக்கைதான் எங்கள் அமைப்பின் சிறப்பம்சம். மலேசிய சிரம்பன் பகுதிகளில் பணி நீக்கம் செய்யப்பட்ட 109 இந்தியத் தொழிலாளர்களை மீண்டும் பணி அமர்த்தக் கோரி, நாங்கள் நடத்திய போராட்டம் குறிப்பிடத் தக்கது. எங்களது நேரடி களப் போராட்டங்களாலும், தொடர் நடவடிக்கைகளாலும், அந்நிர்வாகம் பணிந்தது. 

* மலேசியாவில் வேலை வேண்டி வரும் தமிழர்கள் படும் துயரம் பல இதழ்களில் பக்கம் பக்கமாக வருகிறதே. ஏன்?

இதற்கு பேராசைப் பிடித்த தமிழ்நாட்டு தரகர்களும் மலேசியாவில் செயல்படும் இந்தியத் தூதரகமும்தான் காரணம். பெரிய வேலை, உயர்ந்த சம்பளம் என்று ஆசை காட்டி அழைத்து வரப்படும் தமிழர்கள், இங்கு வந்ததும் நட்ட நடு வீதியில் விடப்படுகிறார்கள். உரிய நுழைவுச் சீட்டு, வேலை அனுமதிச் சீட்டு இல்லாமல் வெளி நாட்டினர் இருக்க இந்நாட்டுச் சட்டங்கள் அனுமதிப்ப தில்லை. அதனால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். 

இதை தடுப்பதற்கு இங்குள்ள இந்தியத் தூதரகமும் எந்த முயற்சியும் எடுப்பதில்லை. வேலை தேடி இங்கு வந்த அப் பாவிகள், எங்கள் நாட்டவர்தான் என்று ஒரு தற்காலிக அடையாளச் சான்று தந்தாலே போதும். அவர்கள் கைது செய்யப்பட முடியாது. ஆனால் இங்குள்ள தூதரகம் பொறுப் பற்று நடந்து கொள்கிறது. ஒரு சிறிய சான்று வேண்டி, அல்லது ஆவணம் வேண்டி அவர்கள் நாட் கணக்கில் - வாரக் கணக்கில் - மாதக் கணக்கில் அலைவது மாபெரும் கொடுமை. எந்த ஒரு நாட்டிலாவது தங்கள் நாட்டு குடிமக்கள் மீதே ஒரு நாட்டுத் தூதரகம் இப்படி நடந்து கொள்ளுமா? என வேதனைப் படத் தோன்றுகிறது. ஆனால் இங்கே இருக்கிற சிறிய, பின்தங்கிய நாடான பங்களாதேஷ் தூதரகத்தைச் சென்று பாருங்கள். தங்கள் நாட்டு குடிமக்களின் தேவையை - குறையை அவர்கள் தீர்த்து வைக்கிற பாங்கு வியப்பாய் இருக்கும். 

* இலங்கையில் நடைபெற்ற இறுதிக் கட்டப் போர் மலேசியாவில் எவ்வகையான கருத்தோட்டத்தை ஏற்படுத்தியது?

மனித குலம் காணாத மாபெரும் அவலம். உலகத்தின் கண்முன்னே நடைபெற்ற மாபெரும் மனித உரிமை மீறல். இதை எதிர்த்து மலேசியாவில் அடுத்தடுத்து ஆர்ப்பாட்டங் களும் போராட்டங்களும் நடத்தப்பட்டன. நானும் எனது மனைவியும் முதல் போராட்டத்திலேயே கைது செய்யப் பட்டோம். 

* மாவீரன் பிரபாகரனும் இறப்பு என்று வரும் செய்திகளுக்குப் பின்னால் ஈழ விடுதலைப் போராட்டத்தின் எதிர்காலம் என்னவாகும்?

மாவீரன் மறைந்தார் என்பதை இங்கு யாரும் நம்ப வில்லை. ஈழ விடுதலைக்கான அடுத்தக் கட்ட போர் உலகம் இதுவரை காணாத விடுதலைப் போராட்டமாக இருக்கும். 

* தமிழகப் பயணத்தின்போது, சில அகதி முகாம்களையும் பார்வையிட்டு திரும்பியுள்ளீர்கள். முகாம்களின் நிலைமை எப்படி இருக்கிறது?

வயிறு பற்றி எரிகிறது. கண்ட காட்சிகளால் நெஞ்சம் பதறுகிறது. மனிதர்களா நாம்... சொந்த சகோதரர்களை 25 ஆண்டுகளாக, ஆடு, மாடுகளைப் பட்டிகளில் அடைத்து வைப்பது போல, எந்த அடிப்படை வசதியுமின்றி அடைத்து வைத்துள்ளனர். மாபெரும் மனித உரிமை மீறல் இது. 

இவர்களது நிலைமையைப் பார்க்கும் போது, மலேசியா வில் பிச்சைக்காரர்களின் நிலைமை ஆயிரம் மடங்கு மேல். 

* இதைத் தவிர்க்கவும் ஈழத் தமிழர்கள் இங்கு சுதந்திரமாக உலா வரவும் உங்கள் அமைப்பு ஏதேனும் திட்டம் வைத்துள்ளதா..?

ஐ.நா. மன்றத்தால் அகதிகளுக்கான உரிமைகளும், அரசுகளுக்கான கடமைகளும் கூறப்பட்டுள்ளன. இதை அமல்படுத்தாமல், இந்த அரசுகளை தடுப்பது எது