கோவை இளம் பிஞ்சுகள் ஐந்தாம் வகுப்பு படித்த முஸ்கன் இரண்டாம் வகுப்பு படித்த ரித்திக் ஆகிய இருவரையும் கடத்திக் கொலை செய்த இரட்டைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மோகன்ராஜ், மனோகர் இருவரில் மோகன்ராஜை காவல்துறை மோதல் கொலையில் தீர்த்துக் கட்டிய செய்தி நினைவு கூரத்தக்கது.

நியாய உணர்வுள்ள பலரும் சராசரிப் புரிதலில் ‘இப்படிப்பட்ட இரக்கமற்ற கொடூரர்களைக் காவல் துறை மோதல் கொலையில் போட் டுத் தள்ளியது சரிதான்’ என்பது போல இம்மோதல் கொலைக்கு ஆதர வான நிலையையே கொண்டுள்ளனர்.

இம்மோதல் கொலையைக் கண்டித்தும் நியாயம் கோரியும் மனித உரிமை ஆர்வம் கொண்ட வழக்கறி ஞர்கள் கோவையில் போராட்டம் நடத்தியபோது, மேற்படி சராசரி புரிதல் கொண்ட நியாய உணர்வுள்ள பொதுமக்கள் அவர்களிடம் சச்சர வுக்கும் சென்றுள்ளனர்.

இந்நிலையில் இப்படிப்பட்ட சராசரிப் புரிதல் கொண்ட நியாய உணர்வுள்ள பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கிய செய்தி.

நடந்த சம்பவம் மிகக் கொடூர மானதுதான். சம்பவத்தில் ஈடுபட்ட வர்களும் அத்தருணத்தில் மிகக் கொடூரமாகவே செயல்பட்டுள்ளனர். ஆகவே முறைப்படி விசாரணை நடத்தி அவர்களுக்குத் தண்டனை வழங்கினால், மரண தண்டனையே வேண்டாம் என்பவர்கள் கூட அரிதி லும் அரிதான ஒரு வழக்காக இதைக் கருதி சம்பந்தப்பட்டவர்களுக்கு மரண தண்டனையே வழங்கினாலும் கூட அதை எதிர்க்க மாட்டார்கள் என நம்பலாம்.

ஆனால் இந்தத் தண்டனையை நீதிமன்றம்தான் வழங்க வேண்டுமே யல்லாது காவல்துறை வழங்கக் கூடாது. மேலோட்டமான புரிதலில் இந்த அதிகாரத்தைக் காவல் துறைக்கு வழங்குவதோ அல்லது காவல் துறை யின் மோதல் கொலை நடவடிக்கை களை ஆதரிப்பதோ அதற்கு அங்கீ காரம் வழங்குவதோ விபரீதமான விளைவு களையே ஏற்படுத்தும்.

கிரிமினல் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர் களை இப்படி மோதல் கொலைகளில் போட்டுத் தள்ளி அதற்கு அங்கீகாரம் பெற்று வரும் காவல் துறை நாளை யாரை வேண்டு மானாலும் போட்டுத் தள்ளி அதற்கு நியாயம் கற்பிக்கும் நிலையை ஏற்படுத்தி விடும்.

நியாயமாக மனித உரிமைக் காகப் போராடும் போராளிகள், காவல் துறையின் சட்ட விரோத நடவடிக்கைகளை, அத்துமீறல்களை எதிர்ப்பவர்கள் போன்றவர்களை எல்லாம் குறிவைத்து தனக்குப் பிடிக்காதவர்களையெல்லாம் இப்படிப் போட்டுத் தள்ளி அதை நியாயப் படுத்த வாய்ப்பாகிவிடும்.

ஏற்கெனவே ராணுவத்தில், துணை ராணுவப் படையில் தங்கள் பதவி உயர்வுக்காக, அப்பாவி இளை ஞர்களைப் போட்டுத் தள்ளி அவர்கள் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று சித்தரிக்கும் போக்கு இருக் கிறது. இதேபோல் காவல்துறையும், தனக்கு வேண்டாதவர்களைப் போட்டுத் தள்ளி அவர்கள் கிரிமினல் கள் என்று பழி சுமத்தும் போக்கும் தொடர்கிறது.

இந்நிலையில், ஒரு நபர் தீவிரவாதியோ, பயங்கரவாதியோ, கிரிமினலோ எவரானாலும், அவர் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு, குற்றச் சாட்டுகள் மெய்ப்பிக்கப்பட்ட பிறகுதான், எந்த தண்டனையும் வழங்க வேண்டுமேயல்லாது, காவல் துறை அதன் போக்கிற்கு எந்த தண்ட னையையும் வழங்கவோ, நடவடிக் கையும் மேற்கொள்ள அனுமதிக் கக்கூடாது என்பதில் பொதுமக்கள் விழிப்புணர்வுடனும் எச்சரிக்கையுடனும் இருக்கவேண்டும்.