சிங்கள அரசு செய்து வரும் இனப் படுகொலையைக் கண்டிக்கத் தவறியதுடன், சிங்கள அரசிற்கு ஆதரவாக, போர்த் தளவாடங்கள், போர் உத்திகள், தொழில் நுட்ப உதவியுடன் போர் வீரர்களையும் இலங்கைக்கு இந்தியா அனுப்பியதாக வந்த செய்திகளைத் தொடர்ந்து இந்தியாவின் கொள்கை பற்றி எண்ணற்ற கேள்விகள் எழுந்தன.

இதுபற்றி முதிர்ந்த அரசியல் சிந்தனையாளரும் இந்திய நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினருமான இரா. செழியன் எழுதினார்.

“சென்ற மாத இறுதியில் (மார்ச் 2009) இலங்கையின் வன்னிப் பகுதியில் 200 இந்திய வீரர்கள் இறந்து விட்டதாக இலங்கைப் பத்திரிகைகள் தெரிவித்தன. செய்தியை வெளியிட்ட இலங்கா நியூஸ் பேப்பர்ஸ் என்ற செய்தி நிறுவனம் அவர்களை எல்.டி.டி.இ. படையினர் கொன்று விட்டனர் என்றும், இறந்த இந்தியப் படையினரின் உடல்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டதாகவும் அதற்கான ஒளிப் படத்தையும் வெளியிட்டிருக்கிறது. மற்றொரு இலங்கைப் பத்திரிகையில், இலங்கையில் காயமடைந்த இந்தியப் படை வீரர்கள் கேரளத்தில் உள்ள மருத்துவ மனைகளில் சேர்க்கப்பட்டிருப்பதாக அறிவித்தது.

இந்தச் செய்திகள் எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை. இந்திய அரசு இலங்கையின் வன்னிப் பகுதிக்கு இந்தியப் போர் படையினரை அனுப்பியது உண்மையா? இலங்கை செய்தித்தாள்கள் வெளியிட்ட படத்துக்கும், இலங்கை போர் நிலைமைக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை என்று கூறப்படுமா? இலங்கை பத்திரிகைகள் வெளியிட்ட செய்திக்கு இந்திய அரசு தரப்பில் ஒரு விளக்கம் தருவது நல்லது.”

இதற்கு முன்னதாக வந்த பல செய்திகளில் இலங்கைப் போர் படைக்கு முற்போக்கான பல போர்த் தளவாடங்களை இந்திய அரசு தருவதாகவும், இலங்கை படை வீரர்களுக்கு இந்தியப் போர்படை வல்லுநர்கள் தனிப்பட்ட பயிற்சிகள் அளிப்பதாகவும் செய்திகள் வந்தன. இது குறித்து எதிர்க் கட்சிகளின் தலை வர்கள் கண்டனம் தெரிவித்தபோது, அதை இந்திய அரசு சார்பில் அமைச்சர்கள் அல்லது அதிகாரிகள் யாரும் இதுவரை மறுக்கவில்லை.

இதே கட்டுரையில் இரா. செழியன் 1987 இந்தியா இலங்கை உடன்பாடே மாபெரும் தவறு. அதே போன்ற தவறுகளை இந்தியா மீண்டும் மீண்டும் செய்து வருகிறது என்கிறார்.

“இராஜீவ் காந்தி அரசு செய்த தவற்றை சோனியா காந்தியின் தலைமையில் உள்ள காங்கிரஸ் கட்சியும் இப்பொழுது செய்து வருகிறது. நேரடி யாகவும் மறைமுகமாகவும் இந்தியா தரும் போர் படைத் தளவாடங்களை யும் பயிற்சி முகாம்களையும் வைத்து, இலங்கை அரசு போர் என்ற பெயரில் இனப் படுகொலையை வேக வேகமாக நடத்தி வருகிறது.

இலங்கைத் தமிழர்கள் அனாதை களாக ஆதரவற்றவர்களாக இன அழிப்புப் போரில் சிக்கி ஆயிரக் கணக் கில் செத்து மடியும் கால கட்டத்தில் இந்திய அர விடுக்கும் எச்சரிக்கை களும், வெளியுறவு அமைச்சர் தரும் நீண்ட அறிக்கைகளும் ஏட்டளவில் இருக்கின்றனவே தவிர, இலங்கை அரசின் மும்முரமான நடவடிக்கை களை உடனடியாக நிறுத்துவதாக இல்லை. நிலையான போர் நிறுத்தமும், அரசியல் பூர்வமான ஏற்பாடும்தான் இலங்கை சிக்கலுக்கு அமைதியான முடிவைத் தரமுடியும்.

கடந்த ஐந்தாண்டு காலத்தில் இலங்கைச் சிக்கலுக்கு ஒரு முடிவைத் தர இந்திய அரசால் முடியவில்லை. செயலற்ற அரசாக அது இருக்கலாம். அல்லது செயல்படும் வலிவு அதற்கு இருந்தும் ஈழத் தமிழர் சிக்கலில் அது பயன்படுத்தப்படவில்லை என்று ஆகி விடும். மேற்கு வங்கத்தில் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு ஆபத்து ஏற்பட்ட நேரத்தில் இந்தியா காட்டிய அக்கறையும் வலிவான செயல்பாடும் இப்பொழுது இலங்கைத் தமிழர் சிக்கலில் காணப்படவில்லை.

இலங்கை விஷயத்தில் இந்தியா வின் நிலைப்பாட்டிற்கு எதிராக, இரா. செழியனைப் போன்றே பல அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரி வித்தனர். ஆனால் காங்கிரஸ் அரசு இவை எதையும் கருத்தில் எடுத்துக் கொள்ளவேயில்லை.

இலங்கைக்கு ஆதரவான இந்தியாவின் போக்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாமல், மனச் சாட்சியுள்ள ஒரு சில அதிகார வர்க்கத்தையும் நியாயங்களை பேச வைத்தது. அவர்களில் ஒருவர் ராஜிவ் டோக்ரா. இந்திய வெளியுறவுப் பணியில் அதிகாரியாகவும் பல்வேறு நாடுகளில் இந்திய அரசின் தூதுவராகவும் பணியாற்றிய டோக்ரா வின் கேள்விகள் மனச் சாட்சியுள்ள எவரையும¢ உலுக்கக் கூடியது.

“உலகம் தட்டையாகவும் இல்லை, இணைக்கப்பட்டதாகவும் இல்லை. தட்டைத் தன்மை என்ற ஒன்று இருக்குமானால் அது அதன் மனச்சாட்சியில் தான் இருக்க வேண்டும். ஏனெனில் மாபெரும் மனிதப் பெருந் துன்பம் சுற்றி நிகழ்ந்து கொண்டிருக்கும்போது, செத்துப் போன ஆன்மா மட்டுமே பாதிக்கப் படாமல் இருக்கும். உலகம் உண்மை யிலேயே இணைக்கப்பட்டதாக இருக்கும் எனில், இந்த பயங்கரம் குறித்த செய்தி உலகில் எங்காவது எதிர்ப்பைத் தூண்டியிருக்கும். உல கின் 24 மணி நேர செய்தி ஊடகங் களில் ஒரு சிறு பகுதியாவது இலங்கை யில் என்ன நடக்கிறது என்பது குறித்து சிறிய அளவாவது செய்தி வெளி யிட்டிருக்கும்.

இன்னும் சுருங்கச் சொன்னால், இலங்கையின் சின்னச் சிறு பகுதியில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது குறித்து கவனம் செலுத்தி யிருக்கவேண்டும். கொடுஞ் செயல் களைச் செய்து முன்னேறிக் கொண்டி ருக்கும் அந்தப் பகுதி நாளுக்கு நாள் சுருங்கிக் கொண்டிருக்கிறது. சுருங்கிக் கொண்டிருக்கும் அந்தச் சிறிய நிலப் பகுதியில்தான், ஒரு காலத்தில் தன் னாட்சி குறித்த தமிழ் இளைஞர்களின் நம்பிக்கை சுடர் விட்டுக் கொண் டிருந்தது.

இப்போது அந்தப் பகுதியில் வயதான ஆண்களும் பெண்களும் புதிதாக பிறந்த குழந்தைகளும்தான் இருக்கிறார்கள். இளைஞர்கள் அழிந்து விட்டனர். தங்களின் தாயகக் கனவை தங்களுடன் வேறு உலகத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். தெய்வங் களுடன் தொடர்பு கொள்வதுகூட அவர்களுக்கு எளிதாக இருக்கலாம். ஆனால் இந்த உலகத்தில் உள்ள கடவுள்கள் கேளாக் காதினராகவும், பேசாத வாயினராகவும் தான் இருக்கின்றனர்.”

தமிழகத்திற்கு வெளியே தமிழரல்லாத ஒருவர், ஈழத் தமிழர் படும் கொடுமையைத் துயரம் ததும்ப எழுதும்போது நமக்கு நெஞ்சு வெடிக்கிறது. அவரே உலகின் ‘போலிஸ்காரனாக’ தன்னைக் கருதிக் கொள்ளும் அமெரிக்காவின் போக்கு குறித்தும் அதில் ஆய்கிறார்.

“உலகின் தலைவிதியைத் தீர் மானிக்கும் நடுவர்போல அன்றாடம் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்கவோ பாகிஸ்தானை சரிக் கட்டுவதில்தான் மும்முரமாக இருக் கிறது. சாதாரணமாக எங்கே யாவது மனித உரிமைகள் மீறப் படுவதாக உறுதியற்ற செய்தி வந்தால் கூட வலுவான கண்டனங்கள் தெரிவிக்கப் படும். அமெரிக்க ஊடகங்கள் வெகு விரைவாக செயல்படும். உண்மை யான, கற்பனையான, மனித உரிமை மீறல் செய்திகளை அச்சில் ஏற்று வதற்காக டன் கணக்கில் செய்தித்தாள் காகிதம் அர்ப்பணிக்கப்படும். பிறகு குற்றம் சாட்டப்பட்ட தரப்பு, அமெரிக்காவின் ஆணைப் படியான ஏற்பாட்டுக்கு அடிபணியும் வரையில் பன்னாட்டு அரங்குகளுக்கோ மற்ற வற்றிற்கோ இழுத்து வரப்படும். ஒரே யரு உயிர் போயிருந்தால்கூட ஒரேயரு மனித உரிமை மீறல் நிகழ்ந் திருந்தால்கூட இவை எல்லாம் நடக்கும்.

ஆனால் இலங்கையில் நாள் தோறும் நடைபெறும் அடக்கு முறைகள் குறித்து எதையுமே பார்க் காதது போல எதையுமே கேட்காதது போல அமெரிக்கா ஏன் நடிக்கிறது? இவ்வளவு நாட்களாக அமைதியாக இருக்கும்படி அதைத் தூண்டியது எது?

அமெரிக்காவின் போலித் தனத்தைத் தோலுரித்து காட்டும் தூதர், அடுத்து ஐ.நா.வின் செயலற்ற தனத்தையும் சாடுகிறார்.

“அமெரிக்காவின் இந்த அக்கறை யற்ற போக்குதான் ஐ.நா.வின் செயலின்மைக்கும் காரணமாகும். அமெரிக்கா சைகை காட்டுமானால் ஐ.நா. கிளர்ந்தெழுந்து செயல்படும் என்பது உண்மைதான். அந்த ஒப்புதல் கிடைத்த உடனே உலக ஆட்சிப்பணி அதிகாரிகள் மிகுந்த வேகத்துடன் செயல்படுவார்கள். அவர்கள் அதிகம் சாதிக்க முடியாவிட்டாலும் கூட, குற்றம் இழைக்கப்பட்ட நாட்டுக்கு சென்று விடுவார்கள். தொடர்ந்து அவர்கள் அங்கு சென்றுவருவது குறைந்தது உலகின் செய்தியையாவது அந்த நாட்டிற்குத் தெரிவிக்கும்.

உலகின் இந்த உயர்நிலை கவனமும் அதைத் தொடர்ந்து ஊடகங் களின் பார்வையும் தடுப்புக் கேடய மாக மாறி குற்றம் இழைப்பவர்களைத் தடுத்து நிறுத்துவதற்கும், மனித உரிமை மீறல்களின் தீவிரத்தை ஓரளவிற்கு குறைப்பதற்கும் உதவியிருக்கும்.

ஆனால், இலங்கையைப் பொறுத்தவரையில் இவை எதுவுமே நடக்கவில்லை. அக்கறையற்ற இந்த போக்குதான் இலங்கை அரசை துணிச்சல் அடைய வைத்திருக்கிறது.”

இனப் படுகொலைக்கு எதிராக, எதிர்வினை ஏதும் அற்றாத அமெரிக்கா மீதும், செயலற்ற ஐ.நா. அவை மீதும் உரத்த கேள்விகள் எழுப்பும் தூதர் அடுத்து கேட்பது தான் உலகின் மன சாட்சியை அறை வதாகும்.

“இலங்கையில் உள்ள அப்பாவித் தமிழர்கள் தங்களைத் தாங்களே காத்துக் கொள்ளும்படி கைவிடப்பட் டனர். தொடர்ச்சியான குண்டு வீச்சுத் தாக்குதல்கள், மருத்துவ வசதிகள் இல்லாத நிலை, சுகாதாரமற்ற வாழ்க்கை நிலைமைகள், நாள்தோறும் பலர் மடிவது என்பதே அங்கு நெறி முறையாகிவிட்டது. மனித உரிமை மீறல்களை உலகம் வகைப்படுத்து வதிலும் சாதி முறை இருக்கிறதோ என்று வியப்படைந்தால் அது சரிதான். இல்லாவிடில் போஸ்னியா, கொசவா தொடர்பாக போர்க்கால நடவடிக்கை போன்ற செயல்பாட்டுக்கு உலகம் கிளர்ந்தெழுந்தது ஏன்? செர்பியாவை பணிய வைப்பதற்காக அதன்மீது குண்டு வீசியது ஏன்?

தமிழர்களின் இரத்தத்தை விடவும் வெள்ளையர்களின் இரத்தம் மதிப்பில் உயர்ந்ததோ? பின்னர் ஏன் உதவி கோரும் இலங்கைத் தமிழர்களின் கூக்குரல் உலக சமுதாயத்தின் காதுகளில் விழவில்லை.

இறுதியாக, அரக்கத்தனமான போரில் நமது இரத்த உறவுகள் சாவது கண்டும் இந்தியா இரக்கமற்று இருப்பது ஏன் என கேள்வி எழுப்புகிறார் தூதர் டோக்ரா. “இதில் இந்தியாவின் நிலை என்ன? நமக்கு பொறுப்பு இல்லையா? புவியியல், வரலாறு, இனம், மொழி, மதம். பண்பாடு என அவர்களுடன் நமக் குள்ள தொடர்புகளும் அதைத்தானே வலியுறுத்துகின்றன.

நாம் நேர்மையானவர்களாக இருந்தால், அரசினுடைய நெருக்குதல் இலங்கையில் பயனளிக்கத் தொடங்கி விட்டது என்பது உண்மையாக இருந்தால், இதைச் செய்வதற்கு இவ் வளவு காலம் அது ஏன் காத்திருந்தது? என்று இந்திய அரசிடம் நாம் கேள்வி எழுப்பவேண்டும்.

ஆயிரக் கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்படுகிற, முடமாக்கப் படுகிற, கைம்பெண்கள் ஆக்கப்படு கிற, ஆதரவற்றவர்களாக ஆக்கப்படுகிற வரையில் அது ஏன் காத்திருக்க வேண்டும்? எதையும் செய்வதற்கு மனமற்ற அக்கறையற்ற கொள்கையை இந்தியா பின்பற்றி வந்திருக்கிறது என்பதுதான் உண்மை.

இந்திய அரசின் ‘இரட்டை வேடத்தை’ இதைவிடவும் ஒருவர் சிறப்பாக வெளிப்படுத்த முடியாது.

இந்திய ஆட்சிப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற எம்.ஜி.தேவ சகாயம் 2009 ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் எழுதிய கட்டுரையன்றில் இலங்கையில் நடைபெற்று வரும் மனிதப் பேரவலத்தைச் சுட்டிக்காட்டி, இதைத் தடுக்கத் தவறிய இந்திய அரசின் ‘கொள்கை வகுப்பாளர்’ பற்றி பல கேள்விகளை எழுப்புகிறார்.

“இலங்கை நெருக்கடி பயங்கரமான நிலைமையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பது தெளிவு. வன்னிக் காடுகளில் சிக்கியுள்ள சிறிய எண்ணிக்கையிலான போராளிகளையும், 2.5 இலட்சத்திற்கும் அதிகமான அப்பாவி மக்களையும் படுகொலை செய்வதற்காக இலங்கை ஆயுதப் படைகள் திரட்டப்படுவதைப் பார்க்கும்போது அங்கு பயங்கரமான அளவிற்கு மனிதப் பேரழிவு ஏற்படலாம் என்பதையே எல்லா அறிகுறிகளும் காட்டுகின்றன.

இதை மெய்ப்பிக்கும் வகையில் முல்லைத் தீவு மாவட்டத்தில் இலங்கைப் படையினர் நடத்திய தாக்குதலில் கடந்த 100 நாட்களில் (2009 சன., பிப்.-மார்ச்) 4800 தமிழர்கள் படுகொலை செய்யப்பட் டுள்ளனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள் ளனர். இந்த மக்கள் படுகொலையில், அணுகுண்டைப் போல, பெரும் வெப்பத்தையும் அழுத்தத்தையும் வெளிப்படுத்தக் கூடிய அனல் குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதை இலங்கை அரசும் மறுக்கவில்லை. அத்தகைய ஒரு தாக்குதலில் மட்டும் 520க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். ஏதோ வெற்றிக் கோப்பைகளை வென்றது போல அந்த நிழற்படங்களை இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் அதனுடைய இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

அடுத்து, பாதுகாப்பு வளையப் பகுதி என்று சிங்கள அரசால் அறிவிக்கப்பட்ட இடங்களே கொலைக் களங்களாக மாறிப்போன கொடுமையைக் கூறுகிறார்.

“இலங்கையில் நடைபெற்று வரும் மோதலின் விளைவாக நூற்றுக் கணக்கான குழந்தைகள் கொல்லப் பட்டுள்ளனர். பலர் காயம் அடைந் துள்ளனர். உணவு, தண்ணீர், மருந்துகள் இல்லாத காரணத்தால் ஆயிரக் கணக்கான பேர் ஆபத்தில் சிக்கியுள்ளனர் என்று அண்மையில் யுனிசெப் செயல் இயக்குநர் ஆன்.எம். வெனிமன் கூறியுள்ளார்.

‘கொலைக் களத்தில்’ சிக்கியுள்ள அப்பாவி மக்களின் பாதுகாப்புக்காக, சில பாதுகாப்பு பகுதிகளை ஏற்படுத்தி இருப்பதாக இலங்கை அரசு அறிவித் துள்ளது. வருகின்ற அனைத்துச் செய்தி களையும் பாரக்கும்போது, இந்தப் பாதுகாப்பு பகுதிகளே கொலைக் களங்களாக மாறிவிட்டதாகத் தோன் றுகிறது.

மிகப் பயங்கரமான மிகக் கொடூர மான நெருக்கடியிலும் ஈழத் தமிழர்கள் துயருறும்போது இந்தியா அதை எப்படி கையாண்டிது என்பதை தோலுரிக்கிறார் தேவசகாயம்.

“இந்த சூழ்நிலையில் ‘வல்லரசு’ இந்தியாவின் நிலை மிகவும் பரிதாப கரமாக தோன்றுகிறது. அண்டை நாட்டில் நடைபெறும் இந்த நிகழ்வுகள் அனைத்தும் மிகவும் துன்பம் அளிக்கும் நிலையில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஒரு கொள்கை அறிவிப்பை வெளியிடுகிறார். “இரு தரப்பிற்கும் இணக்கம் செய்வது என்பதற்கே இடமில்லை. இணக்கம் செய்து வைக்குமாறு நாங்கள் கேட்டுக் கொள்ளப் படவில்லை. நமது நாட் டின் கொள்கை முற்றிலும் தெளி வானது. பாதுகாப்பு பகுதிக்குள் சிக்கி யுள்ள அப்பாவி மக்களின் பாது காப்பை உறுதி செய்வது மட்டுமே இப்போது இந்தியாவின் கவலை யாகும்.”

இந்தக் கொள்கை யாருடையது? நடுவண் அமைச்சரவையில் வகுக்கப் பட்ட ஒன்றா? அல்லது தில்லியில் உள்ள குறுகிய எண்ணம் கொண்ட அதிகாரிகள் சிலரின் விருப்பத்திற்கு ஏற்ப உருவாக்கப்பட்டதா? பாது காப்புப் பகுதியில் வாழ்க்கை மீண்டும் மீண்டும் செத்துக் கொண்டிருப்பது போல இருக்கும் நிலையில் அங்கு சிக்கியுள்ள அப்பாவி மக்களின் பாது காப்பை மாண்புமிகு வெளியுறவு அமைச்சர் எப்படி ‘உறுதிப்படுத்தப்’ போகிறார்? அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசும், படைகளும் நடத்தி வரும் இனவெறி, இனப் படுகொலை போருக்கு இந்திய அரசு உதவி செய்து வருகிறது என்ற கடுமையான குற்றச் சாட்டிற்கு விடை அளிக் காமல் அமைச்சர் அமைதியாக இருக் கிறார் என்பதுதான் மிகவும் மோசம்.

முடிவாக, இந்தியாவும் ஐ.நா.வும் கடைபிடிக்கும் இன்றைய போக்கு, எதிர் காலத்தில் எப்படி கருதப்படும் என எச்சரிக்கிறார் தேவசகாயம்.

“மனித குலத்தின் துன்பம், சிலர் செய்யும் கொடுஞ்செயல்களில் அடங்கியிருக்கவில்லை. மாறாக பெரும்பான்மையினர் அமைதியாக இருப் பதில் தான் அடங்கியிருக்கிறது எனப் பல ஆண்டுகளுக்கு முன்பு மார்ட்டின் லூதர்கிங் கூறினார். இந்த அமைதி எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியாவும் ஐ.நா. பாதுகாப்பு மன்றமும் கடைபிடிக்கும் இந்த அமைதி நீடிக்கக் கூடாது. காட்டாக, குற்றம் இழைத் தவர்கள் என்று நம்மை வரலாறு தீர்மானிக்கக் கூடாது.....

உலகறிந்த சுற்றுச்சூழல் பாது காவலரும், ‘மனித உரிமை’க் காவல ருமான மேதா பட்கர், போர் உக்கிர மடைந்து வரும் சூழலில் (ஏப்ரல் 2009) இந்திய ஆட்சியாளர்களைக் கடுமை யாக எச்சரித்து ஓர் அறிக்கை வெளி யிட்டார்.

“ஆயிரக் கணக்கான தமிழ் மக்கள் அவர்களின் கண்ணியத்திற்கும் உரிமை களுக்கும் போரிட்டுக் கொண் டிருக்கும் பகுதியில் தாக்கப்பட்டு அடையாளம் தெரியாதபடி அழிக்கப் படும் ஆபத்தை எதிர்நோக்கி வரிசை யில் நின்று கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் மறந்து விட முடியாது.

இவை அனைத்தும் இதற்கு மேலானவையும் செய்திகளாக, காட்சி களாக, வெளிப்படைத் தன்மை அற்ற இலங்கை அரசையும் தாண்டி வருவது, இந்திய இராணுவத்தினுடைய இந்திய அரசினுடைய நியாயப்படுத்த முடி யாத பங்கினை அம்பலப்படுத்தி வருகின்றன என்பது நிச்சயம்.

ஜெயலலிதா மற்றும் கருணா நிதியின் உண்ணா விரதங்களாக இருந்தாலும் சரி, நமது பொறுப்புள்ள உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் அறிக்கையாக இருந்தாலும் சரி, ஒன்றுக்குப் பின் ஒன்றாக நடந்து வரும் நிகழ்வுகளும், இந்திய அரசியல் வாதிகள் விடுத்து வரும் அறிக்கைகளும் - தனது சொந்த மக்களுக்கு எதிராக, இலங்கை அரசு நடத்திவரும் போருக்கு இந்திய அரசு முழு அளவிலான ஆதரவு அளித்து வருவதாக, இலங்கை பாதுகாப்பு அமைச்சரே வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருப்பதும் இந்திய அரசினுடைய பொய்ப் பரப்புரையை வெளிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையே சுட்டிக் காட்டுகின்றன.

அனைத்து செய்தித் தொடர் பாளர்களும் முடிவெடுக்கும் அதி காரத்தை வைத்திருப்பவர்களும் இந்த மக்களவைத் தேர்தலில் மக்களை முட்டாளாக்கி விடமுடியும் என்றும், இரத்தக் கறை படிந்த காலடிச் சுவடுகளுடன் மீண்டும் அதிகாரத்தின் தாழ்வாரத்தில் நடக்க முடியும் என்றும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

கொலையாளியாக இருப்பது பற்றி, அதுவும் இந்திய மரபுவழி சமூகத்தினரையே கொல்லும் கொலையாளியாக இருப்பதுபற்றி நமது அரசு கவலைப்படவில்லை என்பதை நம்புவதும், ஏற்றுக் கொள்வதும் உண்மை யில் கடினமாக இருக்கிறது.

மனித குலத்திற்கும் நீதிக்கும் ஆதரவாக செயல்படாவிட்டால் ஜார்ஜ் புஷ்ஷ§க்கு நேர்ந்த கதிதான் உங்களுக்கும் ஏற்படும் என்று நமது அரசியல்வாதிகளுக்கு நாம் உணர்த்த வேண்டும். காலம் கடப்பதற்கு முன்பாக, நாம் குரல் கொடுக்க வில்லை என்றால் நமது எதிர்ப்பையும் நிலைப் பாட்டையும் எழுதவில்லை என்றால் நாம் நமது கடமையில் இருந்து தவறியவர்கள் ஆவோம்.”

புத்தனின் பூமி, காந்தியின் தேசம் கடமை தவறியது மட்டுமல்லாமல், ஒரு மாபெரும் மனிதப் படுகொலைக் கும் துணை போயிருக்கிறது. இதற்கு எதிர்கால வரலாறு என்ன சொல்லும்?

(போர் தொடரும்....)

- பவா.சமத்துவன்