மத்தியானம் மூனாம் பிரீடு முடிஞ்சு நாலாம் பிரீடு ஆரம்பிச்சிருச்சு. கருப்புக்கு வகுப்புல ஒக்கார முடியல. சுப்பையா வாத்தியாரு வரலாறு பாடம் நடத்திக்கிட்டு இருந்தாரு. இவனுக்கு இன்னக்கி ஊருல ரஜினி படம் போடப் போறாங்ககிறத நெனக்க, நெனக்க, அடிவயித்துல ஒரு சந்தோஷம் கௌம்பி மறஞ்சிச்சு. துக்கையாத்தா கோயிலு பொங்க முடிஞ்சு ஒரு வாரமாச்சு. கரகாட்டம், வில்லடின்னு ரெண்டுநாளு போச்சு, மூனா நாத்தும், நாளாநாத்தும் டி.ராசேந்தரு படமும், கார்த்திக்கி படமும் பெறவு விஜயகாந்து படமும் போட்டாங்க. சனியம்புடிச்ச மோடாரம் போட்டுக்கிட்டு ரெண்டுநாளா படம் போடவிடமாட்டேங்குது. மொதநாளு மோடாரம் போட்டு ரெண்டு தூத்த விழவும் ரீல் பெட்டிக்காரன வரவேண்டாம்னு சொல்லி விட்டுட்டாங்க. ரெண்டா நாத்து ரீல் பெட்டி வந்து மோடம் போட்ருக்கின்னு திருப்பி போச்சொல்லிட்டாங்க. இன்னிக்கி படம்னு காலேல மைக்ல சொன்னாங்க. அதக் கேட்டுக்கிட்டே வந்தவந்தான் பள்ளிக் கொடத்துல இருப்பு கொள்ளல.

டை...டை...டை...டைன்னு மணியடிக்கிற சத்தம் கேட்டதுதான் தாமசம் சுப்பையா வாத்தியாரு வகுப்புக்குள்ள தள்ளிவிட்டுட்டு புள்ளைக வெளிய ஓடியாந்திருச்சுக. ஓடியாந்து சைக்கிளு பெடல்ல டக்கட்டி போட்டவன் அண்ணாந்து பாத்ததும் அப்பிடியே பிரேக்கப்பிடிச்சு நின்னுட்டான். கெழக்காம மோடாரம் போட்டிருந்திச்சு. தெக்காம இருந்து மண்வாசனை அடிக்கவும் படத்த மறந்து ஸ்...ன்னு மூச்சிழுத்தான். அடுத்த நொடியே அடி வவுத்துல புளியக்கரைக்க ஆரம்பிச்சிருச்சு. அய்யய்யோ இன்னக்கிம் தூத்த வந்து கெடுக்கப் போவுதுன்னு நெனச்சிக்கிட்டே வந்தான். ஊருக்கிட்ட வரவும்...

“ஆடி மாச காத்தடிக்க, வாடி கொஞ்சம் சேத்தனக்க”ன்னு பாட்டுச் சத்தம் கேக்கவுமே சைக்கிள வேமா மிதிக்க ஆரம்பிச்சான். ஊருக்குள்ள நொழையும் போதே ரேடியோ ரூம்ல படிச்சிக்கிட்டிருந்த ரேடியோச்செட்டை ஆசையா பாத்துக் கிட்டே நொழஞ்சான். வீட்டுக்குள்ள அவுக அய்யா காப்பி குடிச்சிக்கிட்டு இருந்தாரு அவரப் பாத்ததும் சந்தோஷமெல்லாம் சுப்புன்னு வழிஞ்சுபோச்சு.

என்னடா பள்ளிக்கொடம் விட்டுட்டாங்களா?

விட்டுட்டாங்கய்யா

காப்பி போட்ருக்கா. குடிச்சிட்டு ஒக்காந்து படி.

வெளிய ஓடிராதன்னு வெளியே போயிட்டாரு.

சமையல் கட்டுக்கு ஓடியாந்தான்.

எமா, அய்யாவுக்கு நைட் வேலதாம்மா?

ஆமா, ஏ ஒனக்கு படம் பாக்கப் போனுமா?

ஏமா, ஏமா, அய்யாகிட்ட சொல்லாதமா...

அப்பனா காப்பியக் குடிச்சிட்டு செத்தநேரம் போய் படி போ.

தமிழ் நோட்ஸைத் தூக்கிட்டு வேமா மெத்துக்கு ஓடுனான். தமிழ்ப்பாடம் ஒன்னு தான் அவனுக்கும் புடிக்கும். பாட்டும், கதையுமா இருக்கறதால சும்மா அதித்தே படிச்சிக்கிட்டே இருப்பான். அதனால ரெண்டு வருஷமா ஆறாப்புல படிச்சிக் கிட்டிருக்கான். லேசா எந்திச்சுப் பாத்தான். சூரியன் எருத்து மலைக்கிப் பின்னால கொஞ்சங்கொஞ்சமா மறைஞ்சுக்கிட்டு இருந்திச்சு. இருட்டுன பெறவுதான் பொட்டலுகளை கெட்ட ஆரம்பிக்கும். படம் ஒம்போது மணிக்கினா ஏழு மணிக்கே சாக்க விரிச்சு எடங்காத்துப் போட்ருவாங்க. கடல மிட்டாயி கம்பெனிச்சீட்டு ஒரு பக்கம் நடக்கும். சில பேருக படம் போட்ட ஒடனே பூத்தூவி ஆராத்தி எடுக்க பேப்பரு பெறக்க அலையுங்க. சின்ன புள்ளைக குதியாளும் போட்டுக்கிட்டு திரியுங்க. இருட்ட ஆரம்பிச்சிருச்சு கருப்பு பொட்டலையே பாத்துக்கிட்ருந்தான். திடீர்ன்னு பாட்டு நின்னுருச்சு.

பூ...ப்பூன்னு மைக்கில ஊதினான் கூலு. அலோ மைக் செஸ்டிங்... ஒன்.டூ.த்ரி...

“இதுவரை உங்கள் மத்தியில் தெள்ளத்தெளிவாக இன்னிசை மழை வாரி, வாரி வழங்கிக் கொண்டிருப்பது எங்களது அருள் சவுண்ட் சர்வீஸ் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். எங்களிடம் வானத்தில் மின்னும் பல நட்சத்திரப் போடுகளைக் கொண்டும் ஓம், ஸ்டார், குத்து விளக்கு மற்றும் பல வண்ண வண்ண டிசைன் போடுகளைக் கொண்டும், கரண்ட் உள்ள இடங்களிலும், கரண்ட் அற்ற இடங்களிலும் பேட்டரி மூலமாகவும், ஜெனரேட்டர் மூலமாகவும் ஒலி அண்ட் ஒளி அமைத்து தருகிறோம்.”

“புதுமனை புகுவிழாவா? காது குத்தா? கல்யாணமா? நாடுவீர் எங்கள் அருள் சவுண்ட் சர்வீஸ். பூக்களில் சிறந்தது ரோஜா. மலர்களில் சிறந்தது மல்லிகை. கட்டடங்களில் சிறந்தது தாஜ்மகால். குளிக்கச் சிறந்தது குற்றாலம். பார்க்கச் சிறந்தது பாபநாசம். அதுபோல் கேட்கச் சிறந்தது எங்கள் அருள் சவுண்ட் சர்வீஸ் இசைப் பாடல்கள். இதுவரை கேட்டு ரசித்த கலையுள்ளம் படைத்த ரசிகப் பெருமக்களுக்கு வணக்கம். அடுத்து எங்கள் இசைத் தட்டின் முழக்கம். ஆரம்பம் ஆரம்பம் ஆ...ரம்பம்”னு சைசா சொன்னான் கூல்ச்சாமி.

டே... கூலு படம் பேர மைக்ல சொல்றான்னு பக்கத்தில ஒருத்தே நோண்டுனான்.

இன்று இரவு சரியாக ஒன்பது மணியளவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த மாப்பிள்ளை என்ற திரைப்படமும், பணக்காரன் என்ற இரு திரைப்படங்களும் காண்பிக்க இருப்பதால், ஊர்ப் பொதுமக்கள் அனைவரும் திரளாக வந்து படத்தைக் கண்டுகளிக்குமாறு உங்கள் பொற்பாதம் தொட்டு கேட்டுக் கொள்கிறோம்.

சைக்கிள வெளிய எடுக்கிற சத்தங்கேட்டுச்சு. மெத்துல இருந்து குனிஞ்சு வாசலப்பாத்தான்.

ஏல கருப்பு...

என்னய்யான்னு நோட்ஸோட கீழ மடமடன்னு ஓடியாந்தான். படங்கிடம் பாக்க போவாதடா பேசாம சாப்புட்டு படு. காலேல பள்ளிக் கொடத்துக்கு போவனுமில... தலையக் கீழ போட்டுக்கிட்டே நின்னான். என்னடா...ன்னு ஒரு அரட்டுப் போட்டுட்டு கௌம்புனாரு. அவரு அங்கிட்டு நகரவும் பின்னால அம்மாவப் பாத்து சிரிச்சிக்கிட்டே திரும்புனான்.

ம்...நீ எனக்கெல்லா அடங்குவியான்னுட்டு உள்ள போனா. பின்னாலே குதிச்சிக்கிட்டு ஓடி இடுப்ப சொரண்டிக்கிட்டே

ஏமா, ஏமா ஒரு ஒத்தருவா குடும்மா....

எதுக்குடா?

அஞ்சீசா பிஸ்கத்து வாங்க.

இவனுக்கு படம் பாக்கும்போது சின்னத் தூக்குச் சட்டி நெறைய கடுங்காப்பி இருக்கனும். பிஸ்கட்ட கவட்டுக்குள்ள வச்சுக்கிட்டு தின்னுக்கிட்டு குடிச்சுக்கிட்டே படம் பாக்கனும்.

ஏங்கிட்ட இல்ல. அம்மிகிட்டப் போயி வாங்கிக்க போ. ‘போத்தா’ன்னு கோவிச்சுக்கிட்டே ஓடுனான். சீனிக்கெழவி வெத்தல இடிச்சுக்கிட்டு இருந்தா. ஏமி, ஒரு ஒத்த ரூவா குடும்மி பிஸ்கத்து வாங்க. ஏல கருப்பு இங்க வாடான்னு கையப்புடிச்சு ஒக்கார வச்சுக்கிட்டு முந்தில முடிஞ்சிருந்த ஒத்தருவாய எடுத்துக் குடுத்தா.

ஏல கருப்பு என்னடா படம் போடுறாங்க?

ரஜினிகாந்து படம் போடுறாங்கமி.

ரசினிகாந்தி படமாடா?

ஆமாமி வெறும் பைட்டா இருக்கும்மி.

ஆத்தத்தோன்னு பேரன் ஓடுவதையே பாத்தா.

குருசாமி வீட்ல அரசல பெட்டிக்குள்ள இருந்த ரூவாய தூக்கிட்டுப் போயி குடிச்சிட்டு தள்ளமாடிக்கிட்டே பொட்டலுக்கு வந்தான். வரும்போதே டே, மாப்ள அரக்கோட்ரு தாண்ட அடிப்போ. ஆனா புல் கரச்சல் பண்ணுவம்டா. “அரக்கோட்ரு புல் கரச்சல்” என்னடா சொல்ற நீ. ஆமா மாப்ள படம் போட்ருவாங்க நீ போயி சாப்புட்டு படு மாப்ள.

ஏ, போடா வெண்ண. சாப்பிட்டு படுக்கச் சொல்றியாக்கும். படம் போட்ருவாங் களாக்கும் நீ பாத்துருவியாக்கும்... சேத்தாளிக நாலஞ்சு பேரோட வேதக் கோயிலுக்கு பின்னால போனான். இவரு தான் விஜயகாந்து ரசிகர் மன்றத் தலைவரு. இங்க பார்ரா. அன்னக்கி நம்ம தலைவரோட படம் போட்டப்ப இவங்கெ கரச்சல் பண்ணு னாங்கடா. அதேமாரி இன்னக்கி அவெங்க சாவடில தாண்டா கரண்டு இழுத்திருக் காங்க. படம் ஓட்ன ஒடனே வயர அத்து விட்டு கரச்சல் பண்ணூவம்டா. இத இருட்டுக்குள்ள வேதக்கோயிலு கோட்டச்சொவருல ஒன்னுக்கிருந்து கிட்ருந்த சொரட்ட கேட்டுட்டுப் போயி ரஜினி ரசிகர் மன்றத் தலைவரு தண்ணி வண்டி பாண்டிகிட்ட சொல்லிட்டான். முன்னால விஜயகாந்து படம் போட்டப்ப ஊனிருந்த கம்ப புடுங்கிட்டு போயிட்டதால எங்கிட்டு இருந்தோ தெரகெட்ட கம்பு தூக்கிட்டுப் போனாங்க. கம்புக்குப் பின்னாலயே கருப்பு ஓடுனான். குழி தோண்ட மண்ண அள்ளி வெளிய போட்டு ஒத்தாச பண்ணிக் கிட்ருந்தான். ஆளுக பூரா சாக்குகள கொண்டாந்து விரிச்சு ஒக்காந்திருக்கிறத பாத்ததும் திடுத்திடுன்னு வீட்டுக்கு ஓடுனான்.

ஏமி, சாக்கு குடும்மி படம் போடப்போறாங்க...

கதவுக்கு பின்னால கெடக்கு. ஏல என்னையு கூட்டிட்டுப் போடா...

தூமவுள்ளிக்கி காது கேக்கான்னுபாரு....

கூல்ச்சாமி மைக்ல அலற ஆரம்பிச்சான். “இதோ ரீல் பெட்டி வந்துவிட்டதால் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த மாப்பிள்ளை, பணக்காரன் என்ற இரு மாபெரும் திரைப்படங்கள் காண்பிக்க அனைவரும் வந்து படத்தைக் கண்டுகளிக்குமாறு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்.

வானத்தில் மின்னுவது பல ஸ்டார். ஆனால் என்றும் மின்னுவது ஒரே ஸ்டார்.

அதுதான் எங்கள் சூப்பர் ஸ்டார் ...ர்...ர்...ர்...

“பனமரத்துல வவ்வாலா... ரஜினிக்கு சவாலா”ன்னு பயலுக கோரசா சொன்னாங்க. குருசாமி தூரத்தில இருந்து மொறச்சிக்கிட்டே இருந்தான். கம்புல தெரயக் கெட்ட ஆரம்பிச்சாங்க. இன்னும் கொஞ்ச நேரத்தில ரஜினிகாந்து படம் பாக்கப் போறோங்கிற நெனப்பே அடிவயித்த கலக்கிற மாரி இருந்திச்சு. சொட்டுன்னு தோள் பட்டையில மழ விழுந்திச்சு. அண்ணாந்து பாத்தா கரு கருன்னு மேகம் தண்ணியா நிக்கிது. போச்சு இன்னைக்கும் மழவந்து படம் போட விடாதுன்னு மேகத்த வெறுப்பா வஞ்சிக்கிட்டே பாத்தான். டவுசர் பைக்குள்ள இருந்த பிஸ்கெட்ட தடவிக்கிட்டே வீட்டுக்கு ஓடியாந்தான்.

ஏமா, கடுங்காப்பி போட்டியாம்மா? ஏல, படம் போடட்டும்டா. தெரயக் கெட்டிட்டாங்கம்மா சீக்கிர காப்பி போடுமான்னு அழுவாத கொறயாச் சொன்னான்.

ஏமா, ஒரு கால்ரூவா குடும்மா. எம்புட்டுக்கு தாண்டா வாங்கித்திப்ப கடுகு டப்பாக்குள்ள கெடக்கு எடுத்துக்கோ.

பொட்டல்ல ஒரு ஓரத்தில முனியாண்டி கடலமுட்டாயி கம்பெனிச்சீட்ட பரபரப்பா நடத்திக்கிட்டு இருந்தான்.

வா,சார் வா,சார் வா,சார் வா,சார். கால்ருவா கெட்டுனா ஒரு ரூவா கல்லமுட்டாய் பாக்கெட்டு சார். தொழில்ன்னு வந்திட்டா சொந்தக்காரங்களா இருந்தாலும் சார் போட்டுத்தான கூப்புடுவான்.

பன்னெண்டு ஒத்தருவா கடலமுட்டாய் பாக்கெட்டு வாங்குவியான். பன்னெண்டு சீரெட்டு அட்டைய எடுத்து அதுல ஒன்னு, ரெண்டுன்னு நம்பரு எழுதிப் போடுவான். பன்னெண்டு பேருகிட்ட கால்ரூவா வாங்கிக் கிட்டு சீரெட்டு அட்டையக் குடுத்துருவான். டப்பாவ குலுக்கிப் போடுவான். பன்னெண்டு நம்பருல யாருகாச்சும் விழுந்திட்டா அவங்களுக்கு ஒத்தரூவா கல்ல முட்டாயி. இவனுக்கு ரெண்டுரூவா லாவம். இது இல்லாம பதிமூணா நம்பரு விழுந்திட்டா. அந்த கல்லமுட்டாயும், மூன்ரூவாயும் கம்பெனிக்கு.

கருப்பு கால்ரூவா கெட்டுனான். அவெ சீட்ல இருந்த ஆறா நம்பரே விழுந்ததும் ஹேய்யின்னு கல்லமுட்டாய தூக்கிட்டு ஓடுனான். இன்னக்கி ரெண்டு படத்தையும் கடுங்காப்பி, கல்லமுட்டாயி, பிஸ்கட்டு மூனையும் தின்னுக்கிட்டே படம் பாக்கனும்னு தவ்விக்கிட்டே தெரக்கிட்ட ஓடியாந்தான். மேச மேல ரீல் பெட்டிய வச்சு வெளிச்சம் தெரயில முழுசா நல்லா விழுவுதான்னு பாத்துக்கிட்டு இருந்தாங்க. கல்ல முட்டாய் பாக்கெட்ட டவுசர் பைக்குள்ள திணிச்சுக்கிட்டே ஓடுனான்.

ஏமா, நீ வாமா. படம் போட்டுட்டாங்கம்மா

நா வல்லடா காப்பிய எடுத்துக்கிட்டு அம்மியக் கூட்டிட்டுப்போ. காப்பித் தூக்கிக்கிட்டு வாசல்ல ஒக்காந்திருந்த கெழவிய இழுத்துக்கிட்டு ஓடுனான்.

வேமா வாமி படம் போட்டுட்டாங்கம்மி

ஏல, ஓடாதடா ஏ, பையபுள்ள பையப் போடா

இவெ எடங்காத்துப் போட்ருந்த சாக்கில நாலஞ்சு பொடுசுக ஒக்காந்திருச்சுக. தூமச்சீல புள்ளகளா எந்திச்சு போறீங்களா என்னவேனும்னு சீனிக்கெழவி அரட்டுப் போடவும் கூட்டத்தில விழுந்து ஓடிப் போனாங்க. அம்மிக்குப் பக்கத்தில ஒக்காந்து கவட்டுக்குள்ள கடுங்காப்பியையும், பிஸ்கத்து, கல்லமுட்டாயையும் வச்சுக்கிட்டான். எழுத்துப் போட்ட ஒடனே காப்பிய ஒரு மொடுக்கு குடிக்க ஆரம்பிக்கனும்னு நெனச்சான். மூக்குலையும், தொடையிலையும், தண்ணி விழுந்திச்சு. பக்கத்தில இருந்த கெழடு ஒக்காவுண்ட மழ பேஞ்சும் கெடுக்குதேன்னு ஆதங்கப்பட்டாரு. துக்கையாத்தா... படம் முடியந்தண்டியும் மழ பேயக்கூடாதுன்னு மனசுக்குள்ள வேண்டுனான். ரீல் பெட்டியிலிருந்து தெரயில விழுற வெளிச்சத்துக்கு நேர எம்பிக் குதிச்சு தெரயில விழுற தன்னோட நெழல் மேல தாள எறிஞ்சாங்க. குருசாமி சாவடில வயர அத்துவிட ஆள் அனுப்புனான். பாண்டி ஏற்கனவே சாவடில படுத்திருக்க ஆளை அனுப்பிட்டான். தெரயில கோடு கோடா விழுந்து ஒன்னு, ரெண்டுன்னு நம்பரு தெரயில விழவுமே விசிலு விய்யி, விய்யி, விய்யின்னு எறஞ்சிச்சு. தெரமுன்னாடி மொத ஆளா ஒக்காந்திருந்த பொடுசுக பேப்பர அள்ளி பறக்க விட்டுச்சுக குருசாமி தெரய ஒரு பார்வையும், சாவடிய ஒரு பார்வையுமா பாத்துகிட்டு இருந்தான். பாண்டி ரீல் பெட்டிக்கிட்ட ஒக்காந்துக்கிட்டு குருசாமிய வலவீசி தேடிக்கிட்ருந்தான்.

கருப்பு வானத்தையும், ரீல்பெட்டியையும், தெரயையும் மாறிமாறி பாத்துக்கிட்டே யிருந்தான். பாண்டி தாம் பொண்டாட்டி கிட்ட மவனக்கூட்டிட்டுப் போயி ஆராத்தி எடுன்னு கையக் காமிச்சான். தலைவரு பைக்ல வந்து சீரெட்டு குடிச்சமானக்கி மொவத்தக் காட்டுனதும் தட்டுல சூடத்தக் கொளுத்தி மவெ கையில குடுத்து ஆராத்தி எடுன்னு சொல்லி வச்சிருந்தான். இவெ எழவு காடேத்துக்கு நா ஒழச்சு ஊத்த வேண்டியிருக்கு. இது கெட்ட கேட்டுக்கு ரசினி படங்கேக்குதாக்கும், அவந்தே வந்து கஞ்சி ஊத்தப் போறானாக்கும்னு மொனங்கிக்கிட்டே மகன தெரக்கிட்ட கூட்டிட்டு போயி நின்னா. கருப்பு மூஞ்சியெல்லாம் பல்லா எளவட்டங்க போடுற தவ்வாளத்தப் பாத்துக் கிட்ருந்தான். ரஜினி பைக்ல சர்ருன்னு வந்து பொண்ணு மாப்பிள்ளைக்கி முன்னால சீரெட்ட பத்த வச்ச மானக்கி மொவத்த தூக்குனதும் தட்டுல சூடத்த பொருத்தி வச்சு ஏல போடா ஆராத்தி எடுடான்னு தள்ளி விட்டா. இவம்போயி ஆராத்தி எடுக்கவும் விசிலும்,கைத்தட்டலும், துண்டுப் பேப்பரும் பறந்திச்சு. தெரக்கி கீழ மொத ஆளா இருந்த பயகளுக்கு பொறுக்க முடியல.

ஏலே, செரட்ட இருந்தா பெறக்கிட்டு வாடா அவெ மட்டும் ஆராத்தி எடுக்கியா நம்மளு எடுப்போம்னு தெரக்கி பின்னால தெலாவி லேசா பிஞ்ச செரட்டைய எடுத்திட்டு வந்து துண்டு பேப்பருகளப் பூரா அதுல திணிச்சு பக்கத்தில இருந்த கெழடுகிட்ட தீப்பெட்டி வாங்கி பொருத்தி ஒருத்தே மாத்தி ஒருத்தே வாங்கி குதியாளம் போட்டுக்கிட்டு ஆராத்தி எடுத்தாங்க. கருப்புக்கு விசிலடிக்கத் தெரியல. கைதட்ட கூச்சப்பட்டுக்கிட்டு வாயில பிஸ்கெட்ட போட்டமானக்கி ‘ஆ’ன்னு பாத்துக்கிட்ருந்தான். பயலுக ஆடிக்கிட்டே ஆராத்தி எடுக்க பேப்பரு மளமளன்னு தீப்புடிக்க நெரிச்சு தள்ளி தெரமேல விட்டுட்டாங்க.. தெர பொசு பொசுன்னு எரிய ஆரம்பிச்சிச்சு. அம்புட்டு பயலுகளும் அய்யய்யோ அம்மான்னு ஓட ஆரம்பிச்சாங்க. பாம்புதே கூட்டத்துக்குள்ள வந்திருச்சோன்னு பொம்பள புள்ளைக, கெழடு கெட்டைக கே...மான்னு புழுதிய கௌப்பிக்கிட்டு ஓடிச்சுக. தெர வளைய வளையமா பொசுங்கவும் கடேசில ஒக்காந்திருந்த கெழடு ஏப்பா இப்பத்தானப்பா படம் போட்ட, அதுக்குள்ள ரீல் மாத்துறன்னு கேட்டாரு. தீ மளமளன்னு தெரயில புடிக்க ஆரம்பிச்சிருச்சு. குருசாமி முன்னால இருந்தவனோட முதுகில “ஙொத்தாலக்க” அப்படிப்போடுடான்னு ஓங்கி அடிச்சு கெக்ககெக்கன்னு சிரிச்சான். பாண்டிக்கு கிருக்கு புடிச்சமாரி வந்திருச்சு. ஏலே தீய அமந்துங்கிடான்னு கத்திக்கிட்டு இருந்தவன் குருசாமி சிரிச்சுக்கிட்டு இருக்குறதப் பாத்திட்டான்.

ஏலே ஙொத்தாலக்க அடிடா அவனன்னு குருசாமி மேல பாஞ்சான். ரெண்டு கூட்டமும் மல்லுக்கெட்ல எறங்கி அடிச்சு கரையேறிக்கிட்டு கெடந்தாங்க. ரஜினி மளமளன்னு எரிஞ்சிக்கிட்ருந்தாரு.

கூட்டம் கே...மான்னு கூடி வெலவி விட்டுக்கிட்டு இருந்தாங்க. சீனிக் கெழவி ஒரு கையில சாக்கையும், ஒரு கையில இவனையும் கடவுக்குள்ள கூடி இழுத்துக்கிட்டே ஓடுனா.

மோடாரம் கலஞ்சு வெள்ளி பூத்திருந்த வானத்தப் பாத்த மானக்கி கருப்பு அம்மி பின்னால ஓடுனான்.