ஈரோட்டில் 9.8.2010 திங்கள் கிழமை மாலை 6 மணிக்கு சூரம்பட்டி நால்ரோட்டில் ‘குடி அரசு’ நூல் அறிமுக விழா பொதுக் கூட் டம் மிகச் சிறப்பாக நடை பெற்றது. கூட் டத்திற்கு மாவட்ட தலைவர் நாத்திக சோதி தலைமை தாங்கினார். மாவட் டச் செயலாளர் இராம. இளங்கோவன் மற்றும் இரத்தினசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். குமரகுருபரன் வரவேற்புரையாற்றினார். கூட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் விநாயகமூர்த்தி, பெரியார் பெருந் தொண்டர் சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். 

பெரியார் பெருந்தொண்டர் ஈரோடு சுப்பையா பேசுகின்றபோது, “பெரியார் திராவிடர் கழகத்தினர் ‘தோழர்’ என்று ஒருவரையொருவர் விளித்துக் கொள்வதை பெருமையாகக் கூறினார்கள். அய்யா பெரியார் அவர்கள் தோழர்கள் என்றுதான் அழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதுபோலவே நீங்கள் இங்கே நடந்து கொள்வதும், அய்யாவின் கொள்கைகளை எடுத்துச் செல்வதிலும், மிகுந்த போர்க் குணத்துடன் கொள்கைகளுக்காக மட்டுமே அமைப்பு நடத்துவதைப் பார்க்கும்போது நான் மிகுந்த பெருமைப்படுகின்றேன். அய்யா அவர்களுக்கு பின்பு எங்கே இந்தக் கொள்கை? எப்படி நடக்குமோ! பரவுமோ! என எண்ணினேன். ஆனால், உங்களைப் பார்த்த பின்பு தான், நீங்கள் அமைப்பு துவங்கி நடத்துகின்ற முறையைப் பார்க்கின்ற போது உள்ளபடியே நான் மிகுந்த மகிழ்ச்சியடை கின்றேன்.

இந்த கொள்கைகளை அய்யாவிற்குப் பின்பு எடுத்துச் செல்வதற்கு ஒரு அற்புதமான இயக்கம் - கொள்கைகளுக்காக எந்தத் தியாகமும் செய்வதற்கு தயாரான இளைஞர்களாக நீங்கள் இருக்கின்றதைப் பார்க்கும்போது நான் மன நிம்மதி அடைகின்றேன்” என்று மேடையில் அமர்ந்திருந்த கழகத் தலைவர், கழகப் பொதுச்செயலாளர்கள் மூவரையும் பார்த்துக் கொண்டு குறிப்பிட்டுச் சென்னார். அய்யா அவர்களைச் சிறப்பிக்கும் வகையில் நமது கழக வெளியீடுகளை கழகத் தலைவர் பொதுச் செயலாளர்கள் மிகுந்த கரவொலிகளுக்கிடையே ஈரோடு சுப்பையா அவர்களுக்கு வழங்கினர்.  தொடர்ந்து கழகப் பொதுச் செயலாளர்கள் கோவை இராமகிருட்டிணன், விடுதலை இராசேந்திரன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினர்.

 நிகழ்ச்சியின்போது, பவானியைச் சார்ந்த துளசி, பாட்டாளி படிப்பகப் பொறுப்பாளர், குமாரப்பாளையம் சாமிநாதன்,காளிங்கராயன்பாளையம் நல்லசிவம், விடுதலை சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் விநாயகமூர்த்தி, கிரேசி மெட்ரிக்குலேசன் பள்ளிப் பொறுப்பாளர் ஆகியோர் ‘குடிஅரசு’ நூல்களை மேடையில் பெற்றுக் கொண்டனர். அத்துடன் கழகத்தின் சார்பில் வழக்கறிஞர்  ப.பா. மோகனை சிறப்பிக்கும் வகையில் அவருக்கும் ‘குடிஅரசு’ நூல் தொகுப்பு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. 

ஈரோட்டில் அய்யா பெரியார் “குடிஅரசு” ஏட்டை நடத்தும்போது அந்த அச்சகத்தில் வேலை பார்த்து கடைசி வரையில் அவருடன் இருந்த பெரியவர் பெட்டிக்கடை ரங்கசாமி அவர்களை ஈரோடு இரத்தினசாமி, நாத்திகசோதி, சிவா,அர்ச்சுனன் ஆகியோர் நேரில் சந்தித்து அவரைப் பாராட்டி சிறப்பு செய்து வந்தனர். 

பொதுக் கூட்ட மேடையில் புதிதாக 5 தோழர்கள், கழகத் தலைவர்,பொதுச் செயலாளர்கள் முன்னிலையில் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். கராத்தே சண்முகம் முயற்சியால் அந்தத் தோழர்கள் இயக்கத்திற்கு வந்து சேர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிவா நன்றி கூறினார். பொதுக் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற ஈரோடு இரத்தினசாமி, நாத்திக சோதி, அர்ச்சுனன், சிவா ஆகியோர் மிகவும் கடுமையாக உழைத்தனர்.                

செய்தி : இராம.இளங்கோவன்

Pin It