தமிழகத்திற்கு மகாத்மா காந்தி 26 முறை வந்துள்ளார் என்றால் நம்பமுடிகிறதா? 1896 அக்டோபரில் துவங்கி கடைசியாக 1946-ஆம் ஆண்டு ஜனவரி வரை, காந்தி வருகை தந்துள்ளார். கவின் நிறைந்த காந்திஜியின் வாழ்க்கையில் தமிழகம் எத்தனையோ முதன்மைகளை அடைந்திருக்கிறது. தமிழகத்தில் மகாத்மா காந்தி செல்லாத பகுதியே இல்லை என்று சொல்லலாம்.

‘‘தமிழ்நாட்டில் காந்தி’’ என்ற தலைப்பில் வர்த்தமானன் பதிப்பகம் ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளது. 1027 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தில் அவருடைய தமிழகச் சுற்றுப் பயணம் குறித்து அப்புத்தகத்தின் ஆசிரியர் ஆர். ராமசாமி மிகவும் சிறப்பாகக் கொடுத்துள்ளார்.

முன்னதாக பூனா உண்ணா நோன்பு முடிந்து, டாக்டர் அம்பேத்கருடன், உடன்பாடு ஏற்பட்டபின். இந்து மதத்தின் சாதி இந்துக்களின் முயற்சியையும். பிரதானமாகக் கொண்டு அரிஜனங்களின் முன்னேற்றத்திற்கு வழி காணுவதிலும் தீண்டாமையை ஒழிப்பதிலும் ஆலயப் பிரவேசம் செய்வதிலும் காந்திஜி முக்கிய கவனம் செலுத்தினார். இதன் விளைவாக அனைத்திந்திய அரிஜன சேவா சங்கத்தை அவர் நிறுவினார். டி.எஸ்.எஸ். ராஜன் அவர்களைத் தலைவராகக் கொண்டு “தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு சங்கம்” துவங்கப்பட்டது. இதன் பெயர் அடுத்த ஆண்டில் அரிஜன சேவா சங்கம் என மாறியது. காந்திஜியின் தொடர் பிரச்சாரத்தின் விளைவாக, அநேக இடங்களில் அரிஜனங்கள் ஜாதி இந்துக்களின் கிணறுகளில் தண்ணீர் எடுக்க அனுமதிக்கப்பட்டார்கள். சில சிறிய கோவில்களும்கூட அரிஜனங்களுக்காகத் திறந்து விடப்பட்டன.

ஒத்துழையாமை. சட்ட மறுப்பு. உப்பு சத்தியாக்கிரகம் ஆகிய போராட்டங்களினால் தமிழகம் புடம்போட்டு எடுக்கப்பட்ட பொற்காலம் அது. மக்கள் காங்கிரசின் பின் திரண்டு கொண்டிருந்த காலம். ஏகாதிபத்திய எதிர்ப்பு வேகமாக வளர்ந்துகொண்டிருந்த நேரம். ஆகையால் சனாதனிகள் தலை கீழாக நின்று செய்த முயற்சிகள் எல்லாம் தவிடுபொடியாயின. எங்கு சென்றாலும் காந்தியைக் காணவும், அவரை வரவேற்கவும் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் திரண்டது.

மக்களின் ஆதரவைக் கண்டு காந்திஜி மிகவும் மகிழ்ச்சியடைந்தார். ஒரு சீர்திருத்தத்தைத் தமிழகம் ஏற்றுக்கொண்டுவிட்டது என்றால், இந்தியாவே விரைவில் அதனை ஏற்றுக்கொள்ளும் என்பதில் அவருக்கு தளர்வில்லாத நம்பிக்கை இருந்தது. காந்தியின் கருத்துகளை வழக்கமாக எதிர்த்துவந்த “மெயில்” போன்ற ஏடுகள் கூட, காந்தியின் இந்த நடவடிக்கைகளை வரவேற்றன.

1933, 34ஆம் ஆண்டுகளில் அவருடைய தமிழகப் பயணம் அரிஜன யாத்திரை என்ற தலைப்பில் மிகவும் சிறப்பாக தொகுத்து கொடுக்கப் பட்டுள்ளது. இந்த இரண்டு ஆண்டுகளிலும் அவர் மேற்கொண்ட பயணம். “தமிழக அரிஜன சுற்றுப் பயணம்”என்று அழைக்கப்பட்டது. அந்தக் காலத்தில் அவர் தன்னை ஒரு சிறைக் கைதியாகவே பாவித்துக் கொண்டார். ஆகையால் அந்தச் சுற்றுப் பயணத்தில் அரசியல் விவகாரங்கள் பற்றிய பேச்சில் அவர் ஈடுபடவில்லை.

1933 டிசம்பர் 20ஆம் தேதி காந்தி மூன்று நாட்கள் சென்னை மாநகருக்குள்ளே மக்களைச் சந்தித்தார். தீண்டாமை ஒழிப்பு என்னும் ஒரே சிந்தனையுடன் அவர் பயணத்தை மேற்கொண்டிருந்ததால். சனாதனிகள் தங்களுடைய முழு மூச்சையும் கொண்டு அவரைக் கடுமையாக எதிர்த்தார்கள்.

சென்னை நகரத்தில் மக்கள் ஜாதி வித்தியாசம் இன்றி. எல்லா இனப் பெண்களும் இதனை ஆதரித்தார்கள். இது உண்மையில் மிகவும் பாராட்டப்பட வேண்டிய விஷயமாகும். “தாய்மார்கள் சங்கம்”என்ற ஒன்று இருந்தது. அது ஜாதி இந்துக்களுடன் அரிஜனங்களையும் அரவணைத்துக் கொள்ளும் அமைப்பாக மாறியது. அதில் வைதீக பிராமணப் பெண்கள் உறுப்பினர்களாக இருந்தார்கள். இந்தக் கூட்டங்களில் பேசிய காந்திஜி. அரிஜனங்கள் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ள மூன்று வழி முறைகளைக் கூறினார். (1) அரிஜனங்கள் உடம்பை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், (2) செத்த மிருகங்களின் மாமிசத்தையும் மாட்டு மாமிசத்தையும் உண்ணக் கூடாது. (3) குடிப் பழக்கத்தையும் விட்டுவிட வேண்டும்.

இவைகளை ஆண்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் பெண்கள் கவனத்திக் கொள்ள வேண்டும் என்றும் காந்தி கூடுதலாகச் சொன்னார். சென்னையில் மிட்லண்ட் தியேட்டர் அருகே, மாணவர்கள் அளித்த பெரும் திரளான வரவேற்பில் கலந்துகொண்டு, அவர்களிடம் “வெறும் பேச்சில் முழுகிவிடாமல். செயலிலும் ஈடுபடுங்கள், தீண்டாமை ஒழிப்புப் பணியில் ஈடுபடுங்கள்”என்று கேட்டுக் கொண்டார். அந்தக் கூட்டத்தில் அவர் மேலும் பேசுகிறபோது. “தீண்டாமை ஒழிப்பை எதிர்க்கும் வைதீகர்கள். சாஸ்திரங்களின் உண்மைக் கருத்தை உணர்ந்தவர்கள் அல்லர். பொது மக்களின் சார்பாகப் பேசவும் அவர்களுக்கு உரிமை கிடையாது” என்று அழுத்தமாகக் கூறினார். சென்னை நகரத்தில் அன்றிருந்த அத்தனை சேரிகளுக்கும் அவர் சென்றார். அவர் பின்னால் ஒரு பேருந்தில் ஏராளமான தொண்டர்களும் ஏறிச் சென்றார்கள்.

மைலாப்பூர் அருகேயுள்ள பல்லாக்கு மணியம், பூந்தோட்டம், தேனாம்பேட்டை, கண்ணப்பர் வாசகசாலை, செம்பியம், வரதராஜபுரம் என்கிற நரியங்காடு, ஜார்ஜ்டவுன், பெரியமேடு, அருந்தவபுரம் என்று பெயர்ப்பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. இதில் மிகவும் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய அம்சம், மகாத்மா காந்தி செல்லும் இடங்களில் எல்லாம், அனைத்துப் பகுதி மக்களிடமும் அரிஜன சேவைக்காக அவர் பணம் வசூல் செய்ததுதான்.

பெண்கள் தங்களது தங்க வளையல்களைக் கொடுக்கலாமே என்று அவர் கேட்டவுன் அனைத்துப் பெண்களும் தாங்கள் அணிந்திருந்த தங்க வளையல்களைக் கழட்டிக் கொடுத்தார்கள்.

ரெங்கையா நாயுடு என்பவர் ஒரு வைர மோதிரத்தை அளித்தார். ஆக பணம், தங்க வளையல்கள், வைர மோதிரங்கள் - இவைகள் எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டார். அவ்வாறு பெறும் போது “சீக்கிரம்”, “சீக்கிரம்” என்று சொல்லி வாங்கிக் கொண்டார். ரெங்கையா நாயுடு வைர மோதிரம் கொடுத்தபிறகு, அவருடைய சிறிய பெண், மகாத்மா காந்தியிடம் தன்னுடைய தங்க வளையல்களைக் கழட்டிக் கொடுத்தார். உடனே காந்தி, “உன்னுடைய தங்க சங்கிலியையும் தருவாயா?”என்று காந்தி கேட்டு அதனையும் பெற்றுக் கொண்டார். இவ்வாறு பெற்ற அத்தனை நகைகளையும் அங்கேயே ஏலத்தில் விட்டு அவற்றைப் பணமாகவும் மாற்றிக் கொண்டார்.

காந்திஜி பணம் வசூலிக்கும்போது, “உங்களைச் சுரண்ட வந்திருக்கிறேன்” என்று சொல்லியே எல்லோரிடமும் பணம் கேட்பார். உங்களிடம் இருப்பதை எல்லாம் என்னிடம் கொடுத்து விடுங்கள். இது அரிஜன சங்கத்திற்காகத்தான் என்று சொல்லி வாங்கிச் செல்வார்.

காந்திஜி இவ்வாறு தங்க நகைகளை எல்லாம் ஏலம் விடுவதைப்பற்றிக் கண்டித்து ஒரு பத்திரிகை கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. இதற்கு மறுப்பு அளிக்கும் வகையில் காந்திஜி, டிசம்பர் 22ஆம் தேதிய “அரிஜன்” ஏட்டில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்: “உண்மையில் எனது கூட்டங்களுக்கு வரும் சகோதரிகள் தங்களுடைய நகைகள் எல்லாவற்றையும் கழட்டிக் கொடுப்பதையே நான் விரும்புவேன். 80 சதவீத மக்கள் பட்டினியால் வாடும் இந்த நாட்டில் சிலர் நகைகளை அணிந்து செல்வது கண்ணை உறுத்துகிறது. அது இந்த நாட்டிற்கு ஒரு நட்டமும் ஆகாது. நகைகளில் பெருமளவிற்கு மூலதனம் முடங்கிக் கிடக்கிறது என்பதுதான் பொருள். ஆகையால், பெண்கள் தங்களுடைய நகைகளைக் கழட்டிக் கொடுத்து விடுவது சமுதாயத்திற்கு நிச்சயமாக நன்மையே தரும். அவ்வாறு என்னிடம் கழட்டிக் கொடுப்பவர்களும் மகிழ்ச்சியுடனேயே கொடுக்கிறார்கள். அவைகளுக்குப் பதிலாக வேறு நகைகள் போட்டுக்கொள்ளக் கூடாது என்ற நிபந்தனைகளின் பெயரிலேயே நான் இந்த நகைகளை வாங்குகிறேன். மேலும் நான் பொருள்களை எல்லாம் ஏலம் விடும்போது அவைகளை வாங்குகிறவர்கள் என்னை மனநிறைவு அடையச் செய்வதற்காக மட்டும் அவைகளுக்கு மிக அதிகமான விலை கொடுத்துவிடுவது இல்லை. ஒரு மனிதன் மனமுவந்து ஒரு பொருளுக்குக் கொடுப்பதுதான் அதன் விலை” என்று காந்திஜி பதில் அளித்தார்.

காந்திஜியினுடைய இந்த முயற்சியால் ஈர்க்கப்பட்டவர்கள் - குறிப்பாக ஏ. வைத்தியநாத ஐயர், பி.கே. ராமாச்சாரி, பி. வரதராஜலு நாயுடு, ஈ.வெ.ரா. பெரியார், சோமசுந்தர பாரதி, எஸ். கிருஷ்ணசாமி பாரதி ஆகியோர் ஆலயப் பிரவேசத்தை ஆதரித்து, தீவிரமாக மேடை போட்டுப் பேசினார்கள்.

மதுரை, கும்பகோணம், காஞ்சிபுரம், ஸ்ரீரங்கம் ஆகிய நான்கு திருத்தலங்களில் உள்ள நகராட்சி வாக்காளர்களிடையே ஒரு வாக்கெடுப்பு நடந்தது. இந்த நான்கு இடங்களிலும் மக்கள் அரிஜனங்களின் ஆலயப் பிரவேசத்திற்கு ஆதரவாக இருக்கின்றனர் என்பதை அந்த வாக்கெடுப்பு மெய்ப்பித்தது. மதுரையில் வாக்களித்த 5,732 ஜாதி இந்துக்களில் 4,746 பேர் ஆலயப் பிரவேசத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்கள். மதுரை தேவஸ்தானத்திற்கு நடைபெற்ற தேர்தலில் ஒரு பெரிய போட்டியே இருந்தது. தேவஸ்தானத்தினுடைய நிர்வாகத்தைக் கைப்பற்றுவதற்காக நடைபெற்ற இந்தத் தேர்தலில் 1887 பேர் வாக்களித்தனர். இதில் 1498 வாக்குகள் ஆலயப் பிரவேசத்தை ஆதரித்த வேட்பாளர்களுக்கே கிடைத்தன. வெற்றி பெற்ற எழுவரில் அறுவர் ஆலயப் பிரவேசத்தை ஆதரித்தவர்கள். மாவட்ட வாரியாக அரிசன சேவையில் ஈடுபட்ட மற்றவர்களைக் கீழ்க்கண்டவாறு கூறலாம்.

முக்கியமானவர்கள் திருநெல்வேலி எஸ். கூத்தரமானார் பிள்ளை, சண்முகசுந்திரம் பிள்ளை, சி.வீரபாகு, வி. சுப்பையா, கோமதி, சங்கர தீட்சதர், எம்.எஸ். நாராயணன். இராமநாதபுரம் இராஜராம் பாண்டியன், சாத்தையா, ரா. குருசாமி, ஏ. ரெங்க அய்யங்கார், இலட்சுமிரதன் பாரதி. மதுரை சுந்தரேச அய்யர், இராமசாமி செட்டியார் (பெரியகுளம்), எஸ்.சி. பாலகிருஷ்ணன், பி. கக்கன், பி.ஏ. ராமசாமி செட்டியார், எஸ்.ஏ. ரெங்கசாமி செட்டியார், டாக்டர் டி.வி. சாமிநாத சாஸ்திரி, பி. சங்கிலியாப் பிள்ளை, பி. இரத்தினவேலுத்தேவர், டி.எம். நாராயணசாமி பிள்ளை, ஆர். கணபதி செட்டியார், பி. பொன்னம்பலக் கவுண்டர், தஞ்சாவூர் இராமலிங்கசாமி, டி.ஆர். வெங்கட்ராம ஐயர், கோயம்புத்தூர் டி.எஸ். இராமலிங்கம் செட்டியார், ஆர்.கே. சண்முகம் செட்டியார், ஸ்ரீகண்ட ஐயர், (கோபி) சீனிவாச ஐயர், வி. ராம ஐயங்கார், கோவிந்தசாமி நாயுடு, பி.எஸ்.ஜி. கங்கா நாயுடு, வி. அப்பாவு, சுவாமி குருபிரமானந்தா, சேலம் இராமச்சந்திர நாயுடு, கந்தசாமிப் பிள்ளை, எஸ்.பி. ஆதிகேசவலு செட்டியார், ஏ. ரெங்காச்சாரி ஐயர், தென்னாற்காடு இராஜரத்தின முதலியார், பி. தணிகாச்சலம், எம். தேவராஜன், எம். அருணாசலம், வடாற்காடு ஏ.வி. கங்காதர சாஸ்திரி, என். சோமசுந்தர ஐயர், செங்கற்பட்டு எம். பக்தவத்சலம், எம்.கே. ரெட்டி, டாக்டர் பி.எஸ். சீனிவாசன், டாக்டர் பி.ஆர். இரகுராமன் சென்னை கே.ஜி. சிவசாமி ஐயர், ஆர்.டி. கேசவலு, டாக்டர் சுப்பராயன், டி.ஆர். வெங்கட்ராம சாஸ்திரி, எம்.சி. ராஜா, ஆர். சீனிவாசன், நீலகிரி மாவட்டம் ஏ. கோவிந்தசாமி செட்டியார், ஜி. மகாதேவன், எம். கோவிந்தராஜுலு, ந.வி. முனுசாமிபிள்ளை மற்றும் சிலர் மகன்மால் ஜெயின், ஜே. நடராஜன், சந்திரசேகர் ஐயர், மருதாசலம், ஆர். வைத்தியலிங்கம் ஆகியோர்களை அன்றைய சூழ்நிலையில் செல்வாக்கு வாய்ந்த மேல்சாதி பிரமுகர்களை இந்தப்பணியில் மகாத்மா காந்தி ஈடுபடவைத்தார் என்பது வியப்பூட்டும் விஷயம்.

காந்திஜி, தமிழகத்தில் இரண்டாவது அரிஜனப் பயணத்தை 1934 ஜனவரியில் துவங்கினார். நாகர்கோவிலிலிருந்து அவர் பயணத்தைத் துவக்கினார். ஒரு பக்கம் மக்களுடைய ஆதரவும், இன்னொரு பக்கம் சனாதனிகளுடைய கடுமையான எதிர்ப்பும் இருந்தது. சனாதனிகள் சென்னையிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த “தி மெயில்”ஏட்டில் காந்திஜியின் பயணம் வசூல் செய்வதையும், சமய உரிமையில் குறுக்கிடுவதையும் கண்டித்து எழுதிக்கொண்டிருந்தனர்.

நாகர்கோவிலிலிருந்து 22.1.1934 அன்று புறப்பட்ட காந்திஜி, கன்னியாகுமரி. நாங்குனேரி, நெல்லை, தென்காசி, ஸ்ரீ வைகுண்டம், தூத்துக்குடி, ராஜபாளையம், விருதுநகர், திருமங்கலம், கள்ளிக்குடி, மதுரை, அமராவதி புதூர், காரைக்குடி, தேவக்கோட்டை, ராம்நகர், திருப்பத்தூர், மானாமதுரை, திண்டுக்கல், பழனி, குன்னூர், ஊட்டி, மேட்டுப்பாளையம், திருப்பூர், கோவை, பீளமேடு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, திண்டுக்கல், வத்தலக்குண்டு, பெரியகுளம், உத்தமபாளையம், கம்பம், போடி, உசிலம்பட்டி, சோழவந்தான், திருச்சி, மண்ணச்சநல்லூர், சமயபுரம், வரகநேரி, குளித்தலை, கரூர், கொடுமுடி, ஈரோடு, பவானி, திருச்செங்கோடு, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகை, காரைக்கால், தரங்கம்பாடி, மாயூரம், சீர்காழி, புதுச்சேரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் என்று பயணித்து, கடைசியாக 21.2.34 அன்று தன் பயணத்தை அரக்கோணத்தில் இரவு 10.30 மணிக்கு முடித்தார். மேலே குறிப்பிட்ட ஊர்கள் பிரதான ஊர்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

காந்திஜி சென்ற இடங்களில் எல்லாம் மக்கள், பணமும் நகைகளும் வாரி வாரி வழங்கினர். அவற்றிற்கான வரவு செலவுக் கணக்கையும் “தமிழ்நாட்டில் காந்தி” என்ற இந்தப் புத்தகத்தில் தொகுத்து அளித்துள்ளனர். இந்தப் பயணத்தில் பல்வேறு விஷயங்களைக் காந்திஜி விளக்கினார். தீண்டாமை ஒழிப்பிற்கான தடைகள் எங்கிருந்தாலும் அவற்றை அவர் கண்டித்துப் புறக்கணித்தார்.

குற்றால நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக வந்த காந்திஜி அங்கு அரிஜனங்கள் செல்ல சனாதனிகள் மறுத்துவிட்டார்கள் என்று தெரிந்தவுடனே, நீர்வீழ்ச்சியில் நீராட அவர் மறுத்துவிட்டார். காந்தியிடம் மற்றவர்கள் இதுதொடர்பாகக் கேட்டபோது, “என்னுடைய அரிஜன சகோதரர்கள் மற்றவர்களைப் போன்று இந்த நீர்வீழ்ச்சியில் என்று நீராட அனுமதிக்கப்படுகிறார்களோ, அன்று நானும் நீராட முடியும்”என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார்.

குற்றாலத்தில் அவர் பேசுகையில், “தீண்டாமை என்னும் தொற்று நோய் ஒழிந்தால்தான் இந்து மதம் பிழைக்கும், இல்லையேல் அது ஒழிந்துபோய் விடும் என்பது உறுதி” என்று குறிப்பிட்டார்.

இது அவர் பயணத்தினுடைய நோக்கத்தின் ஒரு முக்கியமான விஷயமாகும். காந்திஜியினுடைய அரிஜன யாத்திரை, தமிழகத்தில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் இன்றைய நிலவரம் என்ன? தமிழகத்தில் ஏழாயிரத்திற்கு மேற்பட்ட கிராமங்களில் இரட்டை டம்ளர் முறை நீடிக்கின்றன, பல வடிவங்களில் தீண்டாமைக் கொடுமைகள் தொடர்கின்றன. தாழ்த்தப்பட்டவர்கள் ஆலயங்களுக்குள் செல்ல பல கிராமங்களில் இன்றும் மறுக்கப்படுகின்றனர்.

1930க்கு முன்னால் இருந்த நிலைமைக்குத் தமிழகம் இன்று சென்றுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. நாட்டின் பிற பகுதிகளிலும் இந்தக் கொடுமைகள் தொடர்கின்றன. எவ்வளவோ வன்கொடுமைச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், தீண்டாமைக் கொடுமைகள் தொடர்வது நாட்டின் மிகப்பெரிய அவலமாகும்.

காந்திஜியின் மனிதாபிமான நடவடிக்கைகள். அன்றைய சூழ்நிலையில் மக்களிடையே ஓரளவிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முடிந்தது என்பது உண்மைதான். இந்து மதத்தைப் பாதுகாக்க வேண்டுமென்பதே காந்தியினுடைய அடிப்படை அணுகுமுறையாகும். இந்த அணுகுமுறையின் அடிப்படையில்தான் அவர் பிரச்சனைகளை அணுகினார். எனவேதான் காந்திஜி எடுத்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை, தோல்வியடைந்துவிட்டன. சனாதனிகள் தாழ்த்தப்பட்டவர்களைத் தாழ்த்தப்பட்டவர்களாகவே வைத்திருப்பதில் வெற்றி பெற்றுவிட்டனர். காந்தியம் தோல்வியடைந்துவிட்டது. சமூக சீர்திருத்தமும் பிரச்சாரமும் நல்லது தான். உடன் சில பயன்களைத் தரும். சிலர் முன்னேற்றத்திற்கும் உதவும். நீண்டகாலப் பார்வையில் அது வந்த வேகத்தில் பின்னால் செல்வதைப் பார்க்க முடிந்தது.

இதர சீர்திருத்தவாதிகளைப் போலவே மகாத்மா காந்தியும் வர்க்கப் போராட்டத்தை ஏற்கவில்லை. விளைவு காந்தியத்தின் தோல்வி.

நிலப்பிரபுத்துவத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் சாய்க்காமல், நிலமில்லாத கிராமப்புற தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிலம் கொடுத்து, கல்வி கொடுத்து, வேலை கொடுத்து அவர்களை மனிதர்களாக்காமல், அரிஜனங்களைத் தீண்டாமைக் கொடுமையிலிருந்து விடுவித்திட முடியாது. இறுதி வெற்றி அடைவதற்கான பாதை வர்க்கப் போராட்டம், தத்துவார்த்த போராட்டமே!.

(தமிழ்நாட்டில் காந்தி, ஆர்.ராமசாமி, வெளியீடு: வர்த்தமானன் பதிப்பகம், பக்:1027)