‘‘அச்சடிக்கப்பட்ட புத்தகங்களின் கருப்பு வரிகளில் உறைந்து கிடப்பவை வெற்று வார்த்தைகளல்ல... ஆயிரமாண்டு காலம் மனித சமூகம் உழைத்துச் சேகரித்த அறிவு !”

நூலிழைகள் பின்னிப் பிணையும் பின்னலாடை நகரத்தின் புத்தக விற்பனை நிலையமான பின்னல் புத்தகாலயத்தின் பொறுப்பாளர் தி.மு.ராசாமணி.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் ஒன்பது ஆண்டுகள் கோவை மாவட்டச் செயலாளராக இருந்தவர். 15 ஆண்டுகள் மாநிலக்குழு உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். எழுத்தாளராகவும், புத்தக பதிப்பாளராகவும் இருந்து வருகிறார். 36 ஆண்டுகளாக வாசிப்பும், விற்பனையுமாக புத்தகங்களோடு வாழ்க்கை நடத்தி வரும் தி.மு.ராசாமணி, மிக எளிமையாக தனது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

சந்திப்பு : ச. நந்தகோபால்

நீங்கள் வாசிக்கத் துவங்கியது எப்போது?

ஏழு வயதில் நான் கேட்ட ராமாயண, மகாபாரதக் கதைகள் தான் எனக்குள்   நிகழ்ந்த முதல் பதிவு. பள்ளியில் படிக்கும்போது ஒரு பாட்டுப் போட்டியில் முதல் பரிசு பெற்றேன். அதற்கு பாரதி படமும், பாரதியார் கவிதை நூலும் பரிசாகக் கிடைத்தது. அப்போது எனக்கு எட்டு வயது. நான் முதலில் வாசித்தது, அந்தக் கவிதைகளைத்தான். அடுத்தது, என் அண்ணன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடல்களை நன்றாகப் பாடுவார். -அவர் மூலம் கல்யாண சுந்தரத்தின்  படல் புத்தகம் எனது ஒன்பது வயதில் அறிமுகமானது.

1968-ம் வருடம் நான் 6-ஆம் வகுப்புப் பரிட்சையில் பெயிலாகி விட்டேன். அதனால் ஏற்பட்ட பயத்தின் காரணமாக, பக்கத்திலிருந்த திருப்பூர் இரண்டாவது கிளை நூலகத்திற்குச் சென்று நூல்களைப் படிக்கத் துவங்கினேன். வாசிப்பு அனுபவம் என்னை ஈர்த்தது. அதன் பின் நூலகத்திற்கு காலை எட்டு மணிக்கே சென்று பள்ளி துவங்குவதற்கு முன்பும், மீண்டும் பள்ளி விட்டபிறகு மாலை நான்கு மணியிலிருந்து எட்டு மணி வரையும் தொடர்ந்து புத்தக வாசிப்பில் ஈடுபட்டேன். எனது பன்னிரண்டு வயதில் அந்நூலக உறுப்பினராகவும் ஆனேன்.

கதை, கவிதை, பிறகு படிப்படியாக நாவல்கள், வரலாறுகள் என எனது வாசிப்பு தீவிரம் அடைந்தது. இதனைப் பார்த்த நண்பர்கள், எனக்கு ‘‘லைப்ரரி’’ என்றே பெயர் வைத்து விட்டனர். அப்போது, கல்கண்டு வார இதழில் வந்துகொண்டிருந்த சின்னச் சின்னச் செய்திகள் என்னை ஈர்த்தன. அதிலும், தமிழ்வாணனின் துப்பறியும் கதைகளின் மேல் ஈர்ப்பு ஏற்பட்டது. தமிழ்வாணன் நூல்களின் மீதுகொண்ட மோகத்தால் அவரது பெயரிலேயே  நூலகம் ஒன்றை வீட்டில் ஏற்படுத்தினேன்.

1967, 68 காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சி தோற்கடிக் கப்பட்டு, திமுக ஆட்சியைப் பிடித்தது. அப்போது சி.பா. ஆதித்தனார், ஒரு ரூபாய் விலையில் ராணிமுத்து மாத இதழைத் துவக்கினார். இதற்கு முன்னால் நிறைய புத்தகங்கள் வந்து கொண்டிருந்தன. அவை விலை அதிகம். அதை என்னால் வாங்க முடியாது. எனவே, மிகக் குறைந்த விலையில் கிடைத்த ராணிமுத்து இதழில் வரும் அனைத்துக் கதைகளையும் வாங்கிப் படித்து விடுவேன். வீட்டு நூலகத்தில் வைத்து, பக்கத்து வீடுகளுக்கும் படிக்கக் கொடுத்து வந்தேன்.

எந்த வகையான புத்தகங்கள் உங்களை ஈர்த்தன? ஏன்?

எனது பதினாறாம் வயதில், பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு, வேலைக்கு போக ஆரம்பித்தேன். அச்சமயத்தில் தெய்வசிகாமணி அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அவர் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர். எனது வாசிப்பு ஆர்வத்தைக்கண்ட அவர், ‘‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’’யை வாசிக்கக் கொடுத்தார். அதுதான் நான் முதலில் வாசித்த கம்யூனிஸப் புத்தகம்.

‘‘இதுகாறும் ஏடறிந்த வரலாறு முழுவதும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே ஆகும்...’’ எனத் தொடங்கும் அதன் முதல் வரியே  இளம் தொழிலாளியான என்னை மிகவும் ஈர்த்தது. எனக்குள் ஒரு பிரமிப்பை ஏற்படுத்தியது. அடுத்து, லெனின் வாழ்க்கை பற்றிய நூலும், மக்சீம் கார்க்கியின் ‘‘தாய்’’ நாவலும் என்னை மிகவும் பாதித்தன. பிறருக்குப் பயனுள்ளதாக வாழ்வதே வாழ்க்கையின் உண்மையான அர்த்தம் என்பதை அந்நாவல் எனக்குள் விதைத்தது.

1973-ல், எனது நண்பர்கள் 20 பேரோடு இணைந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி படிப்பகம் தொடங்கி, அதன் துணைச் செயலாளராக செயல்பட்டேன். அதற்குள் காரல்மார்க்கு நினைவு நூலகம் அமைத்தேன். என்னிடம் இருந்ததும் சேர்த்து, 500-க்கும் மேற்பட்ட நூல்கள் அதில் இருந்தன. அத்துடன் தாமரை இலக்கிய மாதஇதழ் 100 வாங்கி விற்பனை செய்ய துவங்கினேன்.

தென்னம்பாளையம் அருகிலுள்ள காட்டுவளவில் தி.சா.குப்புசாமி, எஸ்கார்ட் மணி, ஏ.ஜீவானந்தம், நாராயணன் போன்றவர்கள் சோஷலிஸ்ட் வாலிபர் முன்னணி அமைத்து, இயங்கி வந்தனர். அவர்கள் செம்மலர் இலக்கிய மாதஇதழை எனக்கு அறிமுகப்படுத்தினர். புத்தக வாசிப்பிலும் என்னைவிடப் பலபடிகள் முன்னணியில் இருந்தனர். அவர்களாகவே முன்வந்து அரசியல், சமூக கருத்துகளில் தொடர்ச்சியாக விவாதம் நடத்தினர். ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரமல்ல... இரவுபகலாக விவாதிப்போம்.

அந்த சமயத்தில், மத்தியில் இந்திராகாந்தி அரசால் எமர்ஜென்சி அறிவிக்கப் பட்டது. இதனை ஆதரித்துப் பொதுக்கூட்டம் நடத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  முடிவு செய்தது. அதில் எனக்கு உடன்பாடில்லை. அதே பகுதியில், வெண்மணி நினைவு தினப் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தோழர் கே.எஸ்.கருப்பசாமியின் அற்புதமான பேச்சைக் கேட்க நேர்ந்தது.

தொடர்ச்சியான அரசியல் விவாதங்களும், எனது வாசிப்பு அனுபவமும் நான் இருந்த அரசியல் இயக்கத்தில் தொடரமுடியாத நிலையை ஏற்படுத்தியது. முறைப்படி ராஜினாமா செய்துவிட்டு, சோஷலிஸ்ட் வாலிபர் முன்னணியில் சேர்ந்தேன்.

அதில் சேர்ந்தவுடன் ‘‘மனித குல வரலாறு” பற்றி ஆசிரியர் திரு. எஸ்.எஸ்.விஜயகுமார் நடத்திய வகுப்பில் கலந்து கொண்டேன். முதல் வகுப்பே 12 மணி நேரம் நடந்தது. அது புதிய புத்தகங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள  உதவியாக இருந்தது. தொடர்ந்து, அவரது வகுப்புகள் பலவற்றில் பங்கேற்றேன். அவை, எனது புத்தக வாசிப்பை மேலும் ஊக்கப்படுத்தின. நான் படித்த நூல்கள் அத்தனையும் சமூக மாற்றத்திற்கான போராட்ட நூல்கள் ஆகும். அவை, உயர்ந்தபட்ச மனித நேயமே கம்யூனிசம் என்பதை எனக்கு உணர்த்தின.

புத்தக விற்பனையாளராக தாங்கள் மாறியது எப்போது? அதன் அனுபவம் என்ன?

நான் படித்த புத்தகங்களில் உள்ள விசயங்களை கிரகித்துக் கொள்வேன்.  தினசரி வேலை முடிந்தபிறகு, என்னைச் சந்திக்கும் தோழர்களிடம் கதைபோல சொல்வேன். அந்தச் சந்திப்புகள் பெரும்பாலும் இரவு நேரங்களில் நடக்கும். அதைக் கேட்க நிறையபேர் வந்தார்கள். சிலசமயம் 50 பேர் வரைகூட இருக்கும். அப்போதுதான், ‘படிப்பதும், பேசுவதும் மட்டுமே போதாது; அதனைப் பரப்பவும் வேண்டும்’ என்ற  யோசனை எழுந்தது.

இந்த நிலையில் எனக்கு வேலை கொடுக்க எந்தக் கம்பெனி முதலாளியும் தயாராக இல்லை. அதனால், வீட்டில் பிரச்சனை ஏற்பட்டது. நான் வீட்டை விட்டு வெளியேறி, கட்சி அலுவலகத்தில் தங்கினேன். அங்கிருக்கும் புத்தகங்களைப் படித்துக் கொண்டே இருப்பேன். நண்பர்களின் ஆலோசனைப்படி நான், தீக்கதிர் பத்திரிகை விநியோகமும், சிறு பிரசுரங்களை வாங்கி விற்கும் பணியையும் செய்யலாம் என முடிவானது.  இதன்படி, முதலில் 52 தீக்கதிரும், நூறு செம்மலரும் விற்கத் துவங்கினேன். அதன்மூலம் கிடைத்த வருவாய் வீட்டுப் பிரச்சனையைத் தீர்த்தது. அன்று முதல் புத்தக விற்பனை என் வாழ்க்கையோடு இணைந்தது.     கட்சியின் சார்பாக சிறு, சிறு தெருமுனைக் கூட்டங்கள் நிறைய நடக்கும். தோழர் கே.எஸ்.கே அக்கூட்டங்களில் பேசுவதற்கு சைக்கிளில் போவார். நானும் சைக்கிளில் அவருக்கு முன்பாகக்  கூட்டம் நடக்கும் இடத்திற்குப் போய்விடுவேன். ஒரு ஜோல்னா பையில் புத்தகங்களை எடுத்துச் சென்று, அக்கூட்டங்களில் விற்பனை செய்வேன். கே.எஸ்.கே அங்கு வந்தவுடன் கூட்டம் தொடங்கும். அங்கு விற்பனையை முடித்துக் கொண்டு, அடுத்த கூட்டத்திற்குச் செல்வேன்.

திருப்பூர் பழைய பஸ்நிலையத்திலும், காலேஜ்ரோடு டிப்டாப் ஓட்டல் பகுதியிலும் நின்று கொண்டு, ஒரு நாளில் நூறு புத்தகங்களுக்கும் மேல்கூட விற்பனை செய்வேன். அதில் என்பது சதம் சமூகப் போராட்ட நூல்களும், இருபது சதம் மருத்துவ, சமையல் மற்றும் பல்துறை நூல்களும் இருக்கும். விடாமுயற்சியுடன் இப்பணியைத் தொடர்ந்து செய்து வந்தேன். பலரும் என்னை  அதிசயமாகப் பார்த்தனர். ஆனாலும், ஒருவர் கூட இப்பணியைத் செய்ய முன்வரவில்லை என்பது எனக்கு சற்று வருத்தம்தான்.

1974ல் எனது பதினெட்டாவது வயதில் தொடங்கிய இந்த விற்பனைப் பணி, 1999 வரை 25 ஆண்டுகள் தொடர்ந்தது. மூட்டுத் தேய்மானம் காரணமாக மருத்துவரின் ஆலோசனைப்படி, சைக்கிள் ஓட்டுவதை நிறுத்த வேண்டி வந்தது.

அப்போது 250 தீக்கதிரும், 1,000 செம்மலரும் மற்றும் பிரசுரங்களும் விற்பனை செய்து வந்தேன். எனது விற்பனைப் பணிக்கு தற்காலிக ஒய்வு கொடுக்கப்பட்டது.

அடுத்து, இதில் ஒரு முன்னேற்றமாக, பொதுக்கூட்டம் நடக்கும் இடங்களில் புத்தகக்கடை வைத்து, விற்க ஆரம்பித்தேன். அது சரியாகப் போகவில்லை. பிறகு, காலேஜ்ரோடு டிப்டாப் அருகில் ஒரு பெட்டிக்கடை வைத்து, நிரந்தரப் புத்தகக் கடையாக மாற்றினேன்.

2000 ஆண்டு வாக்கில் மார்க்சிஸ்ட் கட்சியின் புதிய அலுவலகத்தின் ஒரு அறையில் புத்தகக்கடை அமைக்கப் பட்டது. அதனை பராமரிக்கும் பொறுப்பு என்னிடம் கொடுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 2002 ல் பின்னல் புத்தகாலயம் துவக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை எனக்கு மிக விருப்பமான புத்தகங்களின் மத்தியிலேயே வாழ்ந்து வருகிறேன்.

இந்தப் பணிக்கு உங்களின் உந்து சக்தியாகத் திகழ்ந்தவர்கள் பற்றி...

எனக்கு மிகச் சிறந்த ஆலோசகராக, மிகமிக பிரியமான புத்தக விரும்பியாகத் திகழ்பவர் தோழர் கே.தங்கவேல் ஆவார். ‘நேசன்’ என்ற பெயரில் அவர் கவிதை எழுதிவந்தது, பலரும் அறியாத ஒன்று. அவரின் கவிதா நேசமே அவரின் குழந்தைகளுக்கும் கூட கவிதா, கவிப்ரியா எனப் பெயர் வைக்கத் தூண்டியது. அவ்வப்போது வரும் பல புதிய புத்தகங்களைப் பற்றித் தகவல்கள் தெரிவிப்பதுடன், நான் எங்கு புத்தகக் கடை போட்டாலும், அங்கு வர நேர்ந்தால், நேராகப் புத்தகக் கடைக்கு வந்து விசாரித்துவிட்டுத்தான் மற்ற வேலைகளைக் கவனிப்பார். என்னோடு கடைபோட, புத்தகங்களைத் தலையில் சுமந்து வந்த தலைவர் அவர்.

அடுத்து, தோழர் கே.காமராஜ். ஆங்காங்கே சிறிய அளவில் புத்தகக் கடைகள் போடுவதை ஊக்குவித்து, அதன்  பரிணாம வளர்ச்சியாக திருப்பூரிலும், அவினாசி, உடுமலை, இருகூர் போன்ற பகுதிகளிலும் சிறிய அளவில் புத்தகக் காட்சி நடத்திட, திட்டமிட்டு செயலாற்றியவர்.

பின்னல் புத்தகாலயமாகத் துவக்கப்பட்டதே நல்ல நூல்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான். அதற்கேற்ப, ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி மூலம் அந்தப்பணியை மிகச்சிறப்பாகச் செய்யமுடியும் என வழிகாட்டியவர்கள் பி.ராமமூர்த்தி, அ.நிசார்அகமது, ஆர்.ஈஸ்வரன், எஸ். சுப்பிரமணி ஆகியோர். எந்தப் புதிய நூல்கள் வந்தாலும் உடனே அதைத் தேடிப் படிக்கும் பழக்கம் கொண்டவர்கள் இவர்கள்.

விழிப்பு மாத இதழின் ஆசிரியர் நடராஜன் எனது வாழ்வில் மறக்க முடியாத மனிதர்களில் ஒருவர். அர்ப்பணிப்பு என்றால் என்ன என்பதை அவரிடமிருந்துதான் நான் கற்றுக் கொண்டேன். எடுத்த காரியத்தை முடிப்பதில் எந்தத் தடைகள் வந்தாலும் அதைத் தாண்டி வெற்றிகாணும் உறுதியை எனக்குள் ஏற்படுத்தியவர் அவரே.

எழுத்தாளர், பதிப்பாளர் என்ற முறையில் உங்கள் பங்களிப்பு பற்றி சொல்லுங்கள்?

திருப்பூரில் பதினெட்டு மாதங்கள் வெளிவந்த விழிப்பு மாத இதழின் முகவராக இருந்து 200 இதழ்கள் வரை விற்பனை செய்துள்ளேன். அதன் ஆசிரியர் குழுவிலும் இருந்துள்ளேன்.

1988-ல் நான் எழுத்தாளனாக மாறினேன். சிறுசிறு கதைகளை மாத இதழ்களில் எழுதிவந்தேன். 1992ல் எனது முதல் கவிதைத் தொகுதி ‘நெஞ்சோடு கொஞ்சம்’ வெளிவந்தது. அடுத்து கூட்டுப்படைப்பாக ‘மேற்கிலிருந்து உதயம்’ (சிறுகதைகள்), தனிப் படைப்புகளாக ‘போர்க்களத் தியாகிகள்’, ‘சீனா...சீனா...’, ‘புரட்சியாளர் சேகுவேரா’ ஆகிய சிறு நூல்களும், ‘பழனாத்தா’ (குறுநாவல்), ‘‘சங்கமம்” (நாவல்), ‘அஞ்சாநெஞ்சன் ஆஷர்மில் பழனிச்சாமி’, ‘போராட்டங்கள் வடித்தெடுத்த கம்யூனிஸ்ட்’, ‘புத்தகங்களின் வரலாறு’ ஆகிய வரலாற்று நூல்கள் என இதுவரை 10 நூல்கள் எழுதியுள்ளேன்.

எனது நட்சத்திரா பதிப்பகத்தின் மூலம் இளம் எழுத்தாளர்களின் முயற்சிகளை ஊக்குவித்துள்ளேன். கா.சு.வேலாயுதனின் ‘பொய்த்திரை’, தோழன் ராஜாவின் ‘பூப்பூக்கும் ஓசை’, பூபதியின் ‘வரிய விழுதுகள்’, எனது மகன் சிந்தனின் ‘நானாகவே’, ‘உளியின் குழந்தை’ மற்றும் குறும்பட முயற்சிக்கு வித்தாக சிந்தனின் ‘அடையாளம்’ ஆகியவற்றை வெளியிட்டுள்ளேன்.

தங்களின் அடுத்த முயற்சிகள் எவ்வாறு இருக்கிறது?

ஒரு தியாகியின் வாழ்வியல் நாவல் ‘‘ஆறாத்தீ’’ அச்சில் உள்ளது. ‘உழைப்பின் விலை’ என்ற ஒரு பிரசுரமும் எழுதி முடிக்கப்பட்டு, அச்சுக்குத் தயாராக உள்ளது.

இந்தப் பணிக்கு உங்கள் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு எப்படி இருக்கிறது?

மக்களுக்காக வாழ்வது என்ற எனது மனநிலைப்படியே எனக்கு தோழர் செம்மலர் துணைவியானார். அவர் ஒரு எழுத்தாளரும் கூட. சித்தார்த்தன், சிந்தன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

இருவருமே எங்களின் லட்சியம், மனப்பாங்கு ஆகியவற்றையே கொண்டுள்ளனர். நிர்மலா எங்கள் மருமகள். செவிலியராகப் பணிபுரியும் அவரும் எங்களைப் போலவே பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்டுள்ளார்.

‘‘புதிய ஞானமே இப்புவியை வளர்க்கும். அறிவின் தேக்கம் அதனை அசைவற்றுப் போகச் செய்துவிடும்”- என்கிற லெனினின் வார்த்தைகளையே தனது வாழ்வின் செய்தியாக முன்வைக்கிறார்.

- தி.மு.ராசாமணி