இந்தியாவின் வரலாற்றுச் சுவடிகளில் வங்கத்தின் தாக்கம் நீண்டு நெடிய ஒன்றாகவே விளங்குகிறது. கலாசாரத்திற்கு ராஜாராம் மோகன்ராய், ஆன்மிகத்திற்கு ராமகிருஷ்ணர், விவேகானந்தர், விடுதலைப்போருக்கு பிபின் சந்திரபால், சமூக சேவைக்கு அன்னை தெரசா, திரைப்பட மறுமலர்ச்சிக்கு சத்யஜித்ரே, கல்விக்கும் கவிதைக்கும், இலக்கியத்திற்கும் மகாகவி தாகூர் என்ற வரிசையில் உழைக்கும் மக்களின் உரிமைக்குரலை எதிரொலித்த வங்கச் சிங்கம்தான் தோழர் ஜோதிபாசு.

கிட்டத்தட்ட 25 ஆண்டுக் காலம் அவரது அண்மை கிடைக்கப் பெற்றவனாக நான் இருந்தேன். இக்காலப்பகுதியில் பல முக்கியமான தருணங்களில் அவரது அருகிலிருந்து வரலாற்றுச் சம்பவங்களை நேருக்கு நேர் காணும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. எண்ணற்ற சம்பவங்கள்..... எழுதவோ ஏராளம் உண்டு. ஒரு சிலவற்றை மட்டும் உங்கள் முன் வைக்கிறேன்.

1984 அக்டோபர் 30 காலை 9 மணி. மதுரை மேலமாசி வீதியில் கட்சி ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்தில் பேசி விட்டு, தோழர் பாசு தூத்துக்குடி நோக்கி பயணமாகிற்£ர். நான் மதுரையில் வேறொரு வேலைக்காக தங்கி விட்டேன்.

அப்போது தான் பிரதமர் இந்திரா காந்தியை அவரது காவலர்கள் சுட்டு விட்டதாக தகவல் வருகிறது. மதுரையில் காங்கிரஸ்காரர்களின் வெறியாட்டம் துவங்கியது போலவே கல்கத்தாவிலும் பரவியதாக உள்துறை செயலாளர் உடனடியாக தோழர் பாசுவிடம் தகவல் தெரிவிக்கச் சொல்கிறார். கல்கத்தா மாநகரில் 6 காவல் நிலையப் பகுதிகளில் நிலைமை மிக மோசமாக இருந்தது. ஒயர்லெஸில் தோழர் பாசுவை தொடர்பு கொண்டு விவரம் சொன்னேன். உடனடியாக கிழக்கு எல்லைப்பகுதி ராணுவப் (Eastern Frontier Rifles) பிரிவைக் கொண்டு கொடி அணிவகுப்பு (Flag March) நடத்துமாறு  உத்தரவிடுகிறார்.

அன்றிலிருந்து நவம்பர் 3 ஆம்தேதி கல்கத்தாவில் நடைபெற்ற அமைதிப்பேரணி வரை ஒரே ஒரு சீக்கியர் கூட இக்கலவரத்தால் பாதிக்கப்படவில்லை என்பதே வரலாறு. அதே நேரத்தில் தலைநகர் தில்லியிலும் இதர பெரு நகரங்களிலும் எத்தனை ஆயிரம் சீக்கியர்களின் குடும்பங்கள் சீரழிந்தன என்பதையும் 25 ஆண்டு கால வரலாறு எடுத்துரைக்கத்தான் செய்கிறது.

அதே போன்று 1992 டிசம்பர் 6 இல் பாபர் மசூதி உடைத்து நொறுக்கப்பட்டு மதவெறி சக்திகள் கோரத் தாண்டவம் ஆடிய நேரத்திலும் கணிசமான அளவில் சிறுபான்மையினர் வசிக்கும் கல்கத்தா நகரம் எந்தவித சலசலப்புமின்றி இருந்ததும் தோழர் ஜோதிபாசுவின் ஆளுமைத்திறனை நிரூபிப்பதாக அமைந்தது. அந்நாட்களில் ராணுவ துணைப் பிரிவுகளின் விழிப்புணர்வுக்கும் மாநில அமைச்சர்களின் குடியிருப்பு வாரியான வருகைக்கும் பின்னே தோழர் ஜோதிபாசு இருந்தார் என்பதை நேரடியாக கண்ட சாட்சி நான்.

அவர் முதல்வர் பொறுப்பிலிருந்து விலகி கட்சிக்கு வழிகாட்டி வந்த நேரத்திலும் கூட அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இடதுசாரி இயக்கம் தமிழ் நாட்டில் ஓங்கியிருந்த நாட்களை நினைவு கூர்வதுண்டு. தமிழ் நாட்டில் அவரது காலடித் தடம் படாத முக்கிய நகரங்களே இல்லை எனும் அளவிற்கு தமிழ் நாட்டு மக்களை பொதுக் கூட்டங்களின் வாயிலாக அவர் சந்தித்திருந்தார்.

அவரது ‘சுயசரிதையை’ தமிழில்  மொழி பெயர்க்க வேண்டும். என்று 1992 இல் அவர் வெளிப்படுத்திய ‘அவா’வை 2008 இல் தான் என்னால் நிறைவேற்ற முடிந்தது. எனினும் அம் மாபெரும் மனிதரின் வரலாற்றுப் பக்கங்களில் ஓர் அடிக்குறிப்பாக இணைய எனக்கு கிடைத்த வாய்ப்பு என் வாழ்நாளில் மிகவும் மகிழ்ச்சிகரமான தொரு தருணமே ஆகும்.

55 ஆண்டுகால பொதுவாழ்வில் ஒரு சிறுதும் களங்கமின்றி தூய்மையானதொரு பாதையை மேற்கொண்ட தோழர் ஜோதி பாசுவின் புகழ் இம் மண்ணுலகம் வாழுமட்டும் நீடிக்கும் என்பதில் ஐயமேதுமில்லை.

- வீ.பா.கணேசன்