பாபாசாகேப் அம்பத்கர் திரைப்படத்தை இந்திய அரசு நிறுவனமான தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் (NFDC) 2000ஆம் ஆண்டில் தயாரித்தது. இந்தப் படத்தில் அம்பேத்கராக மம்மூட்டியும், அம்பேத்கரின் மனைவி ரமாபாயாக சோனாலி குல்கர்னியும், மகாத்மா காந்தியாக மோகன் கோகுலேவும் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கான திரைக்கதையை தயாபவார், அருண்சாது சூனியேல், தாராபோர் வாலா ஆகியோர் எழுதி, மதன் ரத்தனா பார்க்கி தயாரிக்க, ஜாபர் பட்டேல் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் சிறந்த நடிகர் உள்ளிட்ட 6 தேசிய விருதுகளைப் பெற்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக பெட்டியில் முடங்கிக்கிடந்த இத்திரைப்படத்தை தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிடுவதற்கு பல்வேறு தடைகள் இருந்து வந்தன.

கடந்த 2006ம் ஆண்டு பொறுப்பேற்ற திமுக அரசு அம்பேத்கர் திரைப்படத்தை வெளியிட அதன் விளம்பர செலவுகளுக்காக 10லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கியது. அதன் பிறகு திரைப்படத்தை வெளியிடுவதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த சூழ்நிலையில் வழக்கறிஞர் சத்தியசந்திரன் உயர்நீதி மன்றத்துக்கு இந்த பிரச்சனையைக் கொண்டு சென்றார். இது குறித்து தீர்ப்பளித்த நீதிபதிகள், கடுமையான விமர்சனங்களை முன்வைத்து படத்தை வெளியிடாமால் இருந்ததற்கு கண்டனத்தையும் தெரிவித்து, வரும் டிசம்பர் 3ம் தேதி படத்தை வெளியிட வேண்டும் என்று உத்தரவு இட்டனர். நீதிமன்ற தலையீட்டுக்குப் பிறகு NFDC தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்துடன் இணைந்து வரும் டிசம்பர் 3ம் தேதி தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட இத்திரைப்படத்தை வெளியிடுகிறது. இதற்காக 5 பிரிண்டுகள் போடப்பட்டுள்ளன. மேலும் Cube தொழில் நுட்ப வசதி கொண்ட அரங்குகளில் திரையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அம்பேத்கர் என்றாலே தலித் மக்களின் தலைவர் மட்டுமே என்று சொல்லும் அளவுக்கு பெரும்பாலான மக்களின் பொதுப் புத்தியில் ஒரு உருவகம் உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையில் அம்பேத்கர் யார்? அவர் அரசியல், சமூக தளங்களில் சந்தித்த பிரச்சனைகள் என்ன? என்பதை இத்திரைப்படம் மிகத் தத்ரூபமாக யதார்த்தமாக எடுத்துரைக்கிறது. அதன் காட்சி அமைப்புகளும், ஒளிப்பதிவு யுக்திகளும், மம்மூட்டியின் நேர்த்தியான நடிப்பும் நம்மை அம்பேத்கர் காலத்திற்கே கூட்டிச் செல்கிறது.

சமூக நீதியைப் போற்றி அதை செம்மைபடுத்தி வழங்கிட அச்சாரம் இட்ட தலைவர்களில் அம்பேத்கரின் பங்களிப்பை யாராலும் மறுக்கவும், மறக்கவும் இயலாது என்பதை நிரூபிக்கும் பதிவாக வெளிவந்துள்ளது இத்திரைப்படம். தமுஎகசவும், NFDCயும் இணைந்து வெளியிடும் இத்திரைப்படத்திற்கு மக்கள் அளிக்கும் ஆதரவைப் பொறுத்தே இது போன்று முற்போக்கான படைப்புகள் வெளிவருவது அதிகமான எண்ணிக்கையில்இருக்கும். நாம் அனைவரும் குடும்பத்தோடு பயணித்து இத்திரைப்படத்தைக் காண வேண்டும்.