''Scoop! - Inside Stories From Partition To The Present'' Kuldip Nayar, Harper Collins Publishers India Ltd

குல்தீப் நய்யாருக்குக் கிடைத்த வாய்ப்பு இந்தியாவில் வேறு எந்தப் பத்திரிகையாளருக்குமே கிடைத்திருக்க முடியாது என்ற எண்ணத்தை இந்தப் புத்தகம் ஏற்படுத்துகிறது. ஆனால் இத்தனை வாய்ப்புகளும் வெறும் பத்திகளாக மட்டும் மாறி ஒரு முழுமையான வாசிப்பு அனுபவத்தைத் தராமல் விட்டுவிட்டதே என்ற வருத்தமும் கூடவே ஏற்படுகிறது.

குல்தீப் நய்யார் மூத்த பத்திரிகையாளர். சுதந்திரத்துக்குப் பிறகான இந்திய வரலாற்றில் நடந்த பல முக்கியமான விஷயங்களை அருகில் இருந்து பார்த்திருக்கிறார்; ஏன் அவரே அனுபவித்திருக்கிறார்.

தேசப் பிரிவினையின்போது இவரே பாகிஸ்தானிலிருந்து அகதியாக இந்தியா வந்துள்ளார். மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது பத்திரிகையாளராக சம்பவம் நடந்த இடத்துக்கே சென்று உடனே செய்தி எழுதியிருக்கிறார். தாஷ்கெண்டில் லால் பகதூர் சாஸ்திரி இறந்தபோது அங்கே இருந்திருக்கிறார். இந்திரா காந்தியின் எமெர்ஜென்சி காலத்தில் அதற்கு எதிராக இருந்ததால், சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்தியாவின் முக்கியமான ஆங்கிலப் பத்திரிகைகளில் எடிட்டராக இருந்துள்ளார். பிரிட்டனுக்கான இந்தியாவின் தூதராக இருந்துள்ளார். இவர் நேருக்கு நேர் சந்தித்துப் பேசாத இந்தியத் தலைவர்களே இல்லை எனலாம்.

அத்துடன் ஆங்கிலத்தில் நன்கு எழுதும் கலை வாய்த்துள்ளது. உழைப்பு உள்ளது. தகவல்கள் தெரியும்! ஆனால்?

ஸ்கூப் என்ற இந்தப் புத்தகம், செய்தியை மற்ற எல்லோருக்கும் முந்தித்தரும் ஒரு விஷயத்தை மட்டுமே பார்க்கிறது. ஸ்கூப் என்ற சொல்லுக்கே அதுதான் பொருள். ஒரு செய்தியாளர் அதைத்தான் வாழ்க்கையில் முக்கியமான விஷயமாகப் பார்க்கலாம். ஆனால் முன்னதாக ஒரு செய்தியைச் சொல்லிவிட்டால் போதுமா? செய்தியை முழுக்கப் புரிந்துகொள்வது முக்கியமல்லவா? இந்திய வரலாற்றை இவ்வளவு நெருங்கி, கவனமாகப் பார்த்த குல்தீப் நய்யார், இந்தியாவின் வரலாற்றை அல்லவா எழுதியிருக்கவேண்டும்? இன்று ராமச்சந்திர குஹா எழுதி, உலகம் முழுவதும் அதிகப் பாராட்டைப் பெற்றிருக்கும் "இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு' என்னும் புத்தகத்தைப் போன்ற சுவாரசியமான, உலகமே பாராட்டக்கூடிய ஒரு புத்தகத்தை குல்தீப் நய்யார் எழுதத் தவறிவிட்டாரே என்ற வருத்தம்தான் நமக்கு ஏற்படுகிறது.

குல்தீப் நய்யார் நமக்குத் தருவது நாம் பெரும்பாலும் அறிந்த தகவல்களே. அவை நடந்த காலத்தில் குல்தீப் நய்யார் அவற்றை முதன்முதலாக வெளிக்கொண்டு வந்திருக்கக்கூடும். அல்லது அவை தொடர்பாக, யாருக்கும் தெரியாத, இவருக்கு மட்டுமே தெரிந்த சில மேலதிகத் தகவல்கள் இருக்கக்கூடும். ஆனாலும் இந்தப் புத்தகத்தில் காணப்படும் பெரும்பாலான கட்டுரைகளில் முழுமை போதவில்லை. மொத்தம் 35 கட்டுரைகள் உள்ளன இந்தப் புத்தகத்தில். அவையும் இந்திய வரலாற்றில் முழுவதுமாக விரவிக் கிடக்கவில்லை.

குற்றம் குறை சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள். ஒரு ஆதங்கம்தான். ஏனெனில் படிக்கும் ஒவ்வொரு பக்கத்திலும் குல்தீப் நய்யாரின் திறமை பளிச் என்றே வெளிப்படுகிறது. எளிமையான மொழி. அழகான எழுத்து.

இந்தியப் பிரிவினை நாயகர்களான ஜின்னா, மௌண்ட்பேட்டன், ராட்கிளிஃப் ஆகியோர் பற்றி மிகக் குறைவான சொற்களில் மிக அழகான ஒரு சித்திரத்தை உருவாக்குகிறார். ஆனால் இவரது கட்டுரைகளிலிருந்து நேருவைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள முடிவதில்லை. லால் பகதூர் சாஸ்திரியிடம் நேரடியாக வேலை செய்த காரணத்தால் சாஸ்திரியைப் பற்றி அவர் எழுப்பும் சித்திரத்தின் மூலம் அவரைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ள முடிகிறது. மீண்டும் இந்திரா காந்தி பற்றி வரும்போது வேண்டிய தெளிவு கிடைப்பதில்லை.

சிண்டிகேட் பற்றி குல்தீப் நய்யார் ஒரு புதினம் போன்ற புத்தகத்தை எழுதியுள்ளார். எனவே அந்தத் துறையில் இவர் ஒரு மாஸ்டர் என்று சொல்லலாம். ஆனால் இந்தப் புத்தகத்தில் காணக் கிடைக்கும் கட்டுரையில் காமராஜ் பற்றியும் நிஜலிங்கப்பா பற்றியும் நமக்கு அதிகம் கிடைப்பதில்லை. எமெர்ஜென்சியில் ஜெயிலில் இருந்த ஒருவர் ஜெயப்பிரகாஷ் நாராயண் பற்றியும் எமெர்ஜென்சி கொடுமைகள் பற்றியும் அதிகம் சொல்வார் என்று ஆர்வத்துடன் படித்தால், ஏமாற்றமே மிஞ்சுகிறது. அவற்றைப் பற்றியெல்லாம் எழுதாமல் இருக்க இவர் கையை யார் கட்டிப்போட்டது?

பாகிஸ்தான் அணு குண்டின் தந்தை அப்துல் காதிர் கானைப் பேட்டி எடுக்கும்போது, அவரைப் புகழ்ந்து பேசி அவர் வாயிலிருந்தே பாகிஸ்தான் அணு குண்டு வைத்துள்ளதைக் கண்டுபிடிப்பது, ஜியாஉல்ஹக்கிடம் பேசும்போது, அவர் எப்படியும் ஜுல்ஃபிகார் அலி புட்டோவைத் தூக்கில் போட்டுவிடுவார் என்பதைத் தெரிந்துகொள்வது, ஜெயவர்த்தனேவுடன் பேசும்போது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள உறவு எவ்வளவு மோசமாக உள்ளது என்பதைத் தெரிந்துகொள்வது என்று பல சுவாரசியமான விஷயங்கள் புத்தகத்தில் உள்ளன.

ஒரு பத்திரிகையாளர் எப்படி சாமர்த்தியமாக நடந்துகொள்ளவேண்டும் என்பதை நய்யாரின் கட்டுரைகளிலிருந்து புரிந்துகொள்ளலாம். வளரும் பத்திரிகையாளர்கள் தெரிந்துகொள்ள இந்தப் புத்தகத்தில் எத்தனையோ விஷயங்கள் உள்ளன.

முதலில் எது மக்கள் எதிர்பார்க்கும், விரும்பும் விஷயம் என்பதைப் புரிந்துகொள்வது. அடுத்து அந்தத் தகவலை எப்படி தோண்டித் துருவிப் பெறுவது என்பது. அடுத்து அவற்றை எப்படி கதையாக வெளிக்கொணர்வது என்பது. அப்படி வெளியாகும் செய்தி பல அரசியல்வாதிகளுக்கு சிரமத்தைக் கொடுத்தாலும், அவர்களுடன் தொடர்ந்து நல்லுறவை வைத்திருப்பது.

இதில் குல்தீப் நய்யார் தலைசிறந்து விளங்கியிருக்கிறார் என்பது இந்தப் புத்தகத்திலிருந்து நன்கு தெரிகிறது.

இந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்க 2 மணி நேரம் கூட எடுக்காது. கையில் எடுத்தால், ஒரே மடக்கில் படித்து முடித்துவிடலாம்.

தமிழ் நாட்டைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர்களும் தங்கள் அனுபவங்களை இதே போல், இத்துடன் மேலும் வளமாக எழுதவேண்டும். தேவை சமகாலத்தைப் பற்றிய நிறைய வரலாற்றுப் புத்தகங்கள்.

(இந்தப் புத்தகம் தமிழாக்கத்திலும் கிடைக்கிறது. மதுரை பிரஸ் வெளியிட்டுள்ளது.)