முதல்வர் கலைஞரின் தாராள உள்ளம் மறுபடியும் வெளிப்பட்டிருக்கிறது. ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட. அன்னாடங்காச்சிகளின் அவலத்தை நன்றாக உணர்ந்தவரல்லவா அவர்! ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப்பிறகு தன்னுடைய இல்லத்தை இலவச மருத்துவமனையாக்கிட இசைவளித்த முதல்வரை தமிழ்நாடு நன்றியுடன் நினைவில் கொள்ளும். தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான இலவச மருத்துவமனைகளின் பட்டியலில் இன்னுமொரு மருத்துவமனை இணையப்போகிறது என்பது இனிப்பான செய்தியே!

 முதல்வரின் இந்த அறிவிப்பு சரியான நேரத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசும் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனமும் கைகோர்த்து செயல்படுத்தும் “உயிர்காக்கும் உயர்சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத்திட்ட” துவக்கவிழாவில் இந்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்டது முற்றிலும் பொருத்தமானது. ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு செலுத்தவேண்டிய பிரீமியத்தொகையை அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரிய உறுப்பினர்கள் சார்பில் அரசே செலுத்திவிடும் என்பது உழைத்துப்பிழைக்கும் நலவாரிய உறுப்பினர்களின் வயிற்றில் பால் வார்க்கும் செய்தி. கலைஞர் காப்பீட்டுத்திட்டத்தின்மூலம் இதயநோய், சிறுநீரக கோளாறு, இரைப்பை-குடல் நோய்கள், மூளை, நரம்பு மண்டலம் தொடர்பான நோய்கள் உட்பட்ட 51 வகையான நோய்களுக்கு இந்த எளிய மக்கள் சிகிச்சை பெறமுடியும். அரசு மருத்துவமனைகளின் கட்டண வார்டுகளில் மட்டுமன்றி தமிழகத்தின் பிரபலமான தனியார் மருத்துவமனைகளிலும்கூட இந்த அன்னாடங்காச்சிகள் சிகிச்சை எடுத்துக்கொள்ளமுடியும். சிகிச்சைக்கான செலவுத்தொகையை இன்சூரன்ஸ் நிறுவனமே ஏற்கும். இதுவரை ஏழை எளிய மக்களால் வாய்பிளந்து அண்ணாந்துபார்க்க மட்டுமே முடிந்த தனியார் மருத்துவமனைகளுக்குள் காலடிஎடுத்து வைக்கவும், ஒரு லட்சம் ரூபாய் செலவாகிறவரையில் அங்கேயே தங்கி சிகிச்சை பெற்றுக்கொள்ளவும் வழிவகை செய்த முதல்வர் இருக்கும் திசைநோக்கி இந்த 26 நல வாரிய உறுப்பினர்களின் குடும்பங்களும் நன்றி தெரிவிப்பார்கள் என்பதில் கொஞ்சம்கூட சந்தேகம் இல்லை.

குறைவற்ற இந்த திட்டத்தில் குறைகாண்பது சரியல்ல என்றாலும் காப்பீட்டுத்திட்டத்தின்கீழ் சிகிச்சைபெறத்தகுதியான 51 நோய்களின் பட்டியலில் ‘மது அடிமைகள்’ மறக்கப்பட்டிருக்கிறர்கள்; அவர்களுக்கு மறுவாழ்வு மறுக்கப்பட்டிருக்கிறது.  ‘அனைத்து நோய்களின் தாய்’ என்பதால் ‘மதுஅடிமை’களுக்கு மறுவாழ்வு அளிக்கும் சிகிச்சை இந்தப்பட்டியலில் முதலிடம் பெறவேண்டும். இருப்போர்க்கும் இல்லாதோர்க்கும் இலவசங்களை அள்ளிவீச போதுமான நிதியை வீசியெறியும் இந்த ‘மது அடிமை’ களை மறப்பது எந்தவிதத்திலும் நியாயமில்லை.

1983ல் வெறும் 139 கோடியாக இருந்த மது வருமானம் இப்போது பத்தாயிரம் கோடியை தாண்டி நிற்கிறது. எந்தவித சிரமமும் இல்லாமல் அள்ளிக்குவிக்கும் இந்தப்பணத்தை என்ன செய்யலாம், எதிலெல்லாம் வாரி இறைக்கலாம், ஓட்டு வங்கியை தக்கவைக்துக்கொள்ள இந்தப்பணத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்கிற சிந்தனையில் இருந்து சற்றே விலகி உடலுழைப்புத்தொழிலாளர்களின் உடல்பிணி போக்கிடவும், ஏழை எளிய மக்களின் இருண்ட வாழ்வில் ஒளியேற்றிடவும்  தீட்டப்பட்ட மருத்துவக்காப்பீட்டுத் திட்டம் இது என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை. எல்லோருக்கும் தரமான இலவசக்கல்வி கொடுப்பது எப்படி சாத்தியமில்லாமல் போனதோ அதைப்போலவே எல்லோருக்கும் தரமான இலவச மருத்துவ வசதியைக்கொடுக்கவும் இந்த அரசால் இயலாது என்பதும் இதனால் தெளிவாகிப்போயிருக்கிறது. மக்களுக்கு தரமான இலவச மருத்துவசேவையை அளிக்கும் பொறுப்பை இன்சூரன்ஸ் கம்பெனி போன்ற  தனியாரிடம் தள்ளிவிட்டிருப்பதாக கருத இடமுண்டு என்றாலும், “ஏதோ இதாவது கிடைத்ததே!” என்று சாமானியர்களின் மனம் சமாதானமடைந்திருக்கிறது.

‘மதுவிலக்கு முட்டாள்தனம்’ என்றோரு வாதம் இருந்தது ஒரு காலத்தில். “ஏதோ ஓரிரு கயவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக  குடிப்பார்கள். அவர்களுக்காக ஏனையோர் குடிநீர், சாலை வசதிகளை இழக்கவேண்டுமா? கல்வியும் சுகாதாரமும் ஏனையோருக்கு மறுக்கப்படவேண்டுமா? நீர்ப்பாசனமும் மின்னுற்பத்தியும் சுணங்கிப்போகவேண்டுமா?” என்றெல்லாம் அந்த வாதம் நீண்டது. அந்த வாதத்திற்கு பகுத்தறிவுச்சாயமும் பூசப்பட்டது. “மதுவிலக்கினால் கிடைக்கும் வருமானம் தொழுநோயாளியின் கையில் உள்ள வெண்ணெய்க்குச் சமானம்” என்று கருதிய தலைவர்கள் வாழ்ந்த நாடு இது. “மதுவிலக்கை ரத்து செய்வதனால் கிடைக்கக்கூடிய வருவாய் என் மனக்கண் முன்னால் தோன்றியது. அதற்குப்பின்னர் அழுகின்ற தாய்மார்களின் உருவமும், குழந்தைகளின் கதறலும், மனிதன் தன்னுடைய அறிவை இழந்து காட்டுமிராண்டிபோல் திரியும் காட்சியும்தான் என்னுடைய மனக்கண்முன் தோன்றுகிறது. சிரிக்கின்ற தாய்மார்களின் முகமும், குதூகலம் நிறைந்த குடும்பங்களுமே நல்லாட்சிக்கு இலக்கணம்” என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்த தலைவர்கள் வாழ்ந்த காலம்கூட அதுதான்.

மதுக்கடை வருமானத்திற்கு மாற்றுவழிதேட மண்டையைக்குடைந்து விற்பனை வரியை கண்டுபிடித்தார் ஒரு தலைவர். இதற்கெல்லாம் மாறாக, ஆட்சிப்பொறுப்பேற்றதும் மதுக்கடைகளை திறக்க என்னவழி என்று வழிதேடிக்கொண்டிருந்தார் நம்முடைய கலைஞர் முதல்வர். ‘சுற்றிஎரியும் வனத்திடையே பற்றி எரியா கற்பூரமாக தமிழ்நாடு இருக்கக்கூடுமோ?’ ‘வேசியர் நடுவே பத்தினிப்பெண்டிர் கற்புடன் வாழ்தல் இயலுமோ?’ என்றெல்லாம் வாதங்களும் மறுமொழிகளும் நீண்டன. ‘அண்ணா வழி’ என்று சொல்லிக்கொண்டிருந்தால் வருவாய்க்கு என்னவழி? மாண்டுபோன அண்ணா மீண்டு வந்து வருவாய்க்கு வழி சொல்லப்போவதில்லை. குடியரசு “குடி”அரசாக மாறிப்போனாலும் பரவாயில்லை என்ற முடிவுடன் 1971ல் முதன்முதலாக கள்ளுக்கடைகள் திறக்கப்பட்டன. மது என்றால் என்ன என்றே தெரியாதவர்களும் அதன் சுவையறியத்தொடங்கினர். மதுவின் சுவையறியாத ஒரு தலைமுறைக்கு, மதுவகைகளில் எத்தனை உண்டோ அத்தனையும் அறிமுகமாயின. இப்போதோ மது என்னும் காட்டுவிலங்கு கட்டுத்தறியை அறுத்துக்கொண்டு இரவு பகல் பாராது நாடெங்கும் சுற்றித்திரிகிறது. இந்த விலங்கின் கால் பட்டு மிதியுண்டவர்கள் ஏராளம். இடம்பெயர்ந்துபோன மங்கல சூத்திரங்கள் எண்ணிக்கையிலடங்கா; பொலிவிழந்துபோன கட்டழகுக் காளையர் பல்லாயிரம்; பொறுப்பை மறந்துபோனதால் இல்லத்தோரின் வெறுப்பிற்கு ஆளான குடும்பத்தலைவர்கள் பல லட்சம்.  “ஏதோ ஒரு சில கயவர்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக குடிப்பார்கள்” என்கிற நிலைமாறி “ஏதோ ஒரு சில யோக்கியர்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக குடிக்காமல் இருப்பார்கள்” என்கிற நிலைதான் இன்றைய தமிழ்நாட்டில்.

இப்போது மதுக்கடை வருவாயுடன் விற்பனை வரியும் சக்கைப்போடுபோட்டு அரசுக்கருவூலத்தை நிறைக்கின்றன. போதாக்குறைக்கு அண்மைக்கால காங்கிரஸ் மந்திரிகளின் கண்டுபிடிப்பால் சேவைவரி அறிமுகம் செய்யப்பட்டது. சேவைவரி வருமானத்திலும் தமிழக அரசுக்கு பங்கு உண்டு. அங்கிங்கெனாதபடி நீக்கமற நிறைந்திருக்கும் சேவைவரி, முதல்வரின் காப்பீட்டுத்திட்டத்திட்டத்திற்கு செலுத்தப்படும் பிரீமியத்திற்குக்கூட உண்டு என்றால் சேவை வரியின் செல்வாக்கை ஊகித்தறிந்துகொள்ளுங்கள். இந்தியாவின் அன்னாடங்காச்சிகள் அவர்களின் சராசரி ஆண்டுவருமானத்தைக்காட்டிலும் அதிகமான தொகையை சேவை வரியாக செலுத்துகிறார்கள். சேவை வரி வருமானத்தின் உபயத்தால் மத்திய அரசும் தன்பங்கிற்கு இலவசங்களை அள்ளித்தெளிக்க ஆரம்பித்திருக்கிறது. “நூறு நாள் வேலைத்திட்டம்” மிகச்சிறந்த உதாரணம். திட்டத்தின் பெயரை  “நூறு அரை நாள் வேலைத்திட்டம்” என்று பெயர்மாற்றம் செய்யவேண்டிய அளவிற்கு இந்தத்திட்டம் தமிழக கிராமங்களில் “வெற்றிநடை” போட்டுக்கொண்டிருக்கிறது. ஒரு வெளிநாட்டுக்காரனின் பார்வையில் “இந்தியாவில் கிராமவாசிகள் அனைவரும் மண்சுமக்க மட்டுமே லாயக்கானவர்கள்” என்கிற எண்ணத்தை விதைக்கும் திட்டம் இது.

தமிழக அரசின் வருவாய் இப்போது கரைபுரண்டோடுகிறது. ஆனால் காணும் நிலையென்ன? சாராயக்கடை வருமானம் பத்தாயிரம் கோடியைத்தாண்டியபோதும் மின்னுற்பத்தி மேம்பட்டதா? நீர்ப்பாசனவசதி மேம்பட்டதா? தரமான கல்வி இப்போது இலவசமாக இருக்கிறதா? அரசின் இலவச மருத்துவமனைகள் ஏழைகளை இருகரம் நீட்டி அழைக்கும் நிலையில் இருக்கின்றனவா? ‘இதெல்லாம் பார்ப்பனவாதம்’ என்று ஒதுக்கித்தள்ளும் ‘பகுத்தறிவுவாதம்’ தானே குரலெடுத்து நிற்கிறது!

தமிழ்நாட்டில் மதுவிற்கு இடமில்லை என்று போராடிய தலைவர்கள் பலருண்டு. அவர்களுக்கெல்லாம் வரலாற்றில் சிறப்பான இடமும் உண்டு. வீதியெங்கும் மதுக்கடைகள் திறப்பதற்கு பிள்ளையார் சுழி போட்ட நம்முடைய முதல்வருக்கும் வரலாற்றின் முதல் பக்கத்தில் இடமுண்டு. அவரை அடியொற்றிவந்த முதல்வர்களுக்கும் அங்கே  இடமுண்டு. இந்தியாவிலேயே சாதாரண மக்களிடையே ஒரு தெருவிற்குள் குடியிருக்கும் முதல்வர் என்கிற சிறப்பை நம்முடைய முதல்வர் பெற்றிருக்கிறார். இத்தனை வரலாற்றுச்சிறப்புமிக்க அவருடைய வீட்டை ஒரு சாதாரண இலவச மருத்துவமனையாகப் பார்க்கும் நிலை தமிழகத்திற்கு வேண்டாம்.  குடிப்பழக்கத்திற்கு ஆளாகி, அந்தப்பழக்கத்தில் இருந்து மீண்டுவரத்துடிக்கும் கோடானுகோடி மதுஅடிமைகளுக்கு மறுவாழ்வு இல்லமாகவும், எதிர்காலத்தில் திறக்கப்போகும் நூற்றுக்கணக்கான மறுவாழ்வு இல்லங்களுக்கு தலைமைச்செயலாகமாவும் அவரது இல்லம் அமைந்தால் அதைவிட பெரும் சிறப்பு அந்த இல்லத்திற்கு இருக்கப்போவதில்லை.

- மு.குருமூர்த்தி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

 

Pin It