மண்ணை அல்ல நீ முத்தமிட்டது
மயான பூமியின் மரண வாணிக!
அது நீயாகவே உனக்குப்
போட்டுக் கொண்ட வாய்க்கரிசி 

அங்கே 

புதையுண்டு கிடக்கும் கண்ணிவெடி
அறுபட்டுக் கிடக்கும் தொப்பூழ்க்கொடி
நீறுபூத்துக் கிடக்கும் சாம்பற்கனல்

அதுநீ
அடித்த செல்களின் குறுந் துகள்
வீசிய வேதிநச்சின் அணு
விதைத்த வித்துக்களின் வினை

உம் வெறிக்கிரையான
எங்கட சிசுவின் குறி
எம்பெண்டிரின் தூமை
அதுஒன்றும்
‘வயாஉறு மகளிர் வேட்டுணி னல்லது
பகைகள் உண்ணா அருமண்’ அன்று  

ஆசியதாதாவின் கைப்பாவையாய்
நீ ஆடிமுடிந்த நாடகத்தின்
முன்னிபந்தனையாய்
உன்னால்
அடகு வைக்கப்பட்ட
இறையாண்மையின் அடிமைமுறி

உலகமயமாக்கலின்
உள்ளுர் முகமையாய்
பன்னாட்டு ஏகாதிபத்தியங்களுக்கும்
தென்னாசிய நுழைவாயிலாய்
நீ விரித்து வைத்த நடைபாவாடை

நாளைய நட்சத்திரப் போருக்கான
இன்றைய ஒத்திகைக் களமாய்
வல்லரசுகளின் போர்ப்பொருளாதாரம்
சூறையாடிய நரவேட்டையில்  

உட்குமுறும் லாவாக் குழம்பு
உக்கிரகித்தே தகித்துக் கிடக்கும்
எரிமலை முகடு 

இப்போதைக்கு மௌனித்திருக்கலாம்
புலிகளின் துவக்கெலாம் என்றாலும்
துவக்குளின் மௌனம் என்பது
மௌனத்தின் துவக்கம் ஆகாது 

மயான அமைதியின் யுககர்ப்பமாய்
தமிழீழத்தைச் சூல்கொண்டு நிற்கும்
வன்னி மண்ணின் மணிவயிறு அதன்
‘வயாஉறு மசக்கை’ உம் சாம்பல்