“நாணயம் நடுநிலை வகிக்கவில்லை” என்று புகழ்பெற்ற பொருளியல் அறிஞர் ஜான் மேனார்டு கீன்ஸ் 1933இல் கூறினார். சந்தையில் பொருள்களின் மதிப்பை அல்லது விலையைக் குறிப்படும் ஊடகமாக மட்டும் செயல்பட்டு வந்த பணம் ஊடகம் என்ற நிலையிலிருந்து மாறி பொருளியல் ஆதிக்கம் செய்யத் தொடங்கியதையே கீன்ஸ் இவ்வாறு குறிப்படுகிறார்.

 கீன்சுக்குப் பிறகான கடந்த 75 ஆண்டுகளில் பணத்தின் ஆதிக்கம் உச்ச நிலைக்குப் போய்விட்டது. உற்பத்தித் துறையின் மீது நிதி மூலதனம் கொடுங்கோன்மை செலுத்துகிறது. நுகர்வுப் பொருள் களை உற்பத்தி செய்பவர்களை விட நிதி முதலாளிகளே பொருளியல் ஆதிக்கத்தில் முதன்மை பெற்றுவிட்டனர்.

 இதன் அடுத்த கட்ட விளைவாக உலகப் பொருளியல் துறையில் இன்று “நாணயப் போர்” நடக்கிறது. இதில் வெற்றி பெறுவதற்காகப் புகையைக் கையில் பிடிப்பது போல் வல்லரசுகளின் ஆட்சியாளர்கள் பல்வேறு முயற்சிகளில் முண்டி யடித்துக் கொண்டிருக்கின்றனர்.

 சீன அரசு தமது நாட்டு யுவான் நாணயத்தின் மதிப்பைச் செயற்கையாக 25 விழுக்காடு குறைத்துவிட்டது. தனது நாட்டின் நாணய மதிப்பைத் தானே முன்வந்து குறைப்பதா என்ற கேள்வி பலருக்கு எழுந்திடும். இதைப் புரிந்து கொள்ள நாணய மதிப்பின் வரலாற்றை ஒரு சில வரிகளில் பார்ப்பது தேவையானது.

 பண்டமாற்று நடைபெற்ற பழைய காலத்தில் பணம் அல்லது நாணயம் என்ற ஒன்று இல்லை. உற்பத்தி விரிவடைந்து வணிகம் என்பது தனித்த ஒரு பொருளியல் செயல்பாடாக வளர்ந்த காலத்தில் தான் இந்தப் பண்டப் பரிமாற்றத்தை எளிதாக்கப் “பணம்” என்ற ஒன்று முளைத்தது.

 இது ஒரு ஊடகமாகச் செயல்பட முக்கியமாக இரண்டு கூறுகள் தேவைப்பட்டன. ஒன்று, அது ஒரு அரசின் ஏற்பை (அங்கீ காரத்தை) பெற்றிருக்க வேண்டும். இரண்டாவதாக, இதுவே வரம்புக்குட்பட்டு தற்காலிகமாக ஒரு பண்டமாகச் செயல்படும் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

 தொடக்க காலத்தில் உலோக நாணயங்கள் இவ்வாறு செயல் பட்டன. இந்நாணயத்தில் பொதிந்துள்ள உலோகத்தின் மதிப்பும் இதற்கு ஈடாக மாற்றிக் கொள்ளப் படும் உற்பத்திப் பொருளின் மதிப்பும் ஏறத்தாழ சமமாக இருந்தன. ஒரு நாணயம் ஒரு குறிப்பட்ட அரசின் ஆட்சிப் பரப்பிற்குள்ளேயே செல்லத் தக்கதாகப் புழக்கத்தில் இருக்கும்.

 தொடக்கத்தில் நாடுகளுக்கிடையில் நடைபெற்ற கடல் கடந்த வணிகம் கூட பண்டமாற்றாகவே இருந்தது. ஆயினும் இவ்வாறான வெளி வணிகம் விரிவடைந்தபோது நாடுகளுக்கிடையில் செயல்படும் ஒரு பொது நாணய மதிப்பு தேவைப்பட்டது. அவ்வாறான மதிப்பு ஊடகமாகத் தங்கம் செயல்பட்டது.

 காகிதப் பணம் வந்த போது அது தங்கத்தின் மதிப்பால் அளக்கப்பட்டது. எனவே ஒரு நாட்டில் இருக்கும் தங்கக் கையிருப்பை அடிப்படையாக வைத்தே நாணயம் அச்சடிக்கப் பட்டது. அதாவது ஒரு நாட்டின் தங்கக் கையிருப்பு என்பது அந்நாட்டின் நாணய மதிப்பைத் தீர்மானித்தது.

 அரசின் பற்றாக்குறை வரவு செலவுக்கு இது வரம்பு கட்டியது. ஊதாரிச் செலவுகள், போருக்கான பற்றாக் குறை பட்ஜெட் ஆகியவற்றிற்கு வரம்பு கட்டப் பட்டன.

 முதல் உலகப் போர் இந்த நாணய மதிப்பின் வரம்பை வல்லரசுகளுக்கு உணர்த்திற்று. போர் செலவீனங்களை ஈடுகட்ட விருப்பம் போல் பணம் அச்சடித்துக் கொள்ள முடியவில்லை. முதல் உலகப் போரில் வெற்றி பெற்ற அமெரிக்க, பிரித்தானிய வல்லரசுகள் இதில் 1922 ஆம் ஆண்டு ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்தன. இதன்படி உலக நாணய மதிப்பைத் தீர்மானிக்கிற காரணியாகத் தங்கம் மட்டுமின்றி அமெரிக்க பணமான டாலரும் பிரிட்டனின் பணமான பவுண்டும் இருக்கலாம் என்று அறிவித்தன.

 இவற்றின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட நாடுகள் உலகின் கணிசமான பகுதியாக இருந்ததால் அந்தந்த நாடுகளில் நாணய கையிருப்பாக தங்கத்தோடு டாலரும், பவுண்டும் சேர்ந்து கொண்டன.

 இரண்டாவது உலகப் போரின் முடிவில் பிரித்தானிய ஏகாதிபத்தியம் வலுவிழந்தது. நாணயச் சந்தையிலும் பிரிட்டனின் பவுண்டு மதிப்பிழந்தது. இனி தங்கமும் அமெரிக்க டாலரும் மட்டும்தான் உலக வணிகத்தின் பொது நாணயம் என்று அமெரிக்க வல்லரசு 1944 ஆம் ஆண்டு அறிவித்தது.

 இரண்டாவது உலகப் போரைக் காட்டிலும் அதிகம் பொருள் இழப்பும் உயிரிழப்பும் ஏற்பட்ட போராக வியட்நாம் போர் திகழ்ந்தது. வியட்நாம் மீதான தனது ஆதிக்கப் போரில் அமெரிக்க வல்லரசு பெரும் நிதிப் பற்றாக் குறையைச் சந்தித்தது. இதிலிருந்து மீள்வதற்காக அமெரிக்கக் குடியரசுத் தலைவர் நிக்சன் 1971 ஆகஸ்ட் 15ல் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். “இனி தனது வணிகத்தில் அமெரிக்க அரசு தங்க மதிப்பைக் கணக்கில் கொள்ளாது. அமெரிக்காவோடு வணிகம் செய்யும் நாடுகள் டாலர் மதிப்பை மட்டுமே பொது மதிப்பாகக் கொள்ள வேண்டும்” என்றார்.

 அமெரிக்க மூலதனம், தொழில் நுட்பம், வெளிவணிகம், அரசியல் செல்வாக்கு ஆகியவற்றில் உலகின் பெரும்பாலான நாடுகள் சிக்கியிருந்ததால் 1971க்குப் பிறகு உலகப் பொது நாணயமாக அமெரிக்க டாலரே ஆதிக்கம் பெற்றது. அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவைப் பொறுத்தே உலக நாட்டு நாணயங்களின் மதிப்புகளும் அமைந்தன.

 இப்பொழுது உலக மயத்தையொட்டி உற்பத்தித் துறையை விட நிதி மூலதனம் கொடுங் கோலோச்சத் தொடங்கியதால் டாலர் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் உற்பத்தித் துறை சார்ந்த நாடுகளைக் கடுமையாகப் பாதித்தன. 2008இல் அமெரிக்க நிதியரசர்களின் வீழ்ச்சியும் டாலர் மதிப்பின் சரிவும் உற்பத்தித் துறை சார்ந்த நாடுகளை நிலை குலைய வைத்தன.

 இச்சிக்கலிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கும் தனது பொருளியல் மேல்நிலையை வலுப் படுத்துவதற்கும் சீனா இப்போது நாணயப் போரை தொடங்கி விட்டது. சீன அரசு டாலருக்கு நிகரான தனது யுவான் நாணய மதிப்பை 25% குறைத்து விட்டதால் அமெரிக்கச் சந்தையில் சீனப் பொருள்கள் விலை மலிவாக இறங்கத் தொடங்கி விட்டன. ஏற்கெனவே நிதி நெருக்கடியில் தள்ளாடிக் கொண்டிருக்கிற அமெரிக்க உற்பத்தித் துறை, தனது சொந்த நாட்டுச் சந்தையை இழந்து வருகிறது. அமெரிக்காவில் மட்டு மின்றி ஐரோப்பியச் சந்தையிலும் சீனப் பொருள்களின் ஆதிக்கம் பரவி வருகிறது.

 ஏற்கெனவே கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பல்லாயிரம் கோடி அரசுப் பணத்தை அள்ளிக் கொடுத்து நொறுங்கி வரும் தொழில் நிறுவனங்களைத் தூக்கி நிறுத்த வல்லரசுகள் பெரும் முயற்சி செய்கின்றன. இது அடுத்து வேறு ஒரு நோயாகப் படிநிலை அடைந்துள்ளது. அதுதான் கடன் சுமை.

 எடுத்துக்காட்டாக அமெரிக்க வல்லரசின் இன்றைய வெளிக்கடன் 14 இலட்சம் கோடி டாலர் ஆகும். அந்நாட்டின் மொத்த உற்பத்தியும் 14 இலட்சம் கோடி டாலர்தான். அதாவது அமெரிக்கா தனது தலை மூழ்கும் கடனில் உள்ளது. இது போல் ஜப்பானின் வெளிக்கடன் 167% எஈக ஆகும். அதாவது ஜப்பான் கடனில் மூழ்கி வெகு நாட்கள் ஆகிவிட்டன. பிரான்ஸ் கடன் அளவு 86%. இங்கிலாந்து 53%. ஜெர்மனி 72%. இத்தாலி 115% இவ்வாறு கிட்டத்தட்ட எல்லா மேற்கத்திய வல்லரசுகளும் கடனில் சிக்கியுள்ளன.

 இதனைச் சரி செய்வதற்கு இந்நாட்டு அரசுகள் செலவினக் குறைப்பு என்ற பெயரால் மக்கள் மீது ஒரு பொருளியல் தாக்குதலை நடத்துகின்றன. பிரான்சு அரசு பெருமளவு வேலை வாய்ப்பை வெட்டியுள்ளது. அந்நாட்டு அரசுப் பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது 2 ஆண்டுகள் உயர்த்தப் பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்குப் பிறகே அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க முடியும் என்பதால் இந்த ஏற்பாடாம். பிரான்சு அரசின் இம்முடிவை எதிர்த்து பிரஞ்சு தேசமே போர்க் கோலம் பூண்டுள்ளது.

 பிரிட்டன், ஜெர்மனி, போர்ச்சுகல், இத்தாலி போன்ற அனைத்து நாடுகளிலும் இலட்சக் கணக்கில் வேலை இழப்பு, மருத்துவக் காப்பீடு மறுப்பு, குழந்தை நல நிதி வெட்டு, ஓய்வூதியம் தள்ளிவைப்பு போன்ற பல பிரச்சினைகளில் மக்கள் சிக்க வைக்கப்பட்டுள்ளனர். அந்நாடுகள் எல்லாவற்றிலும் தொழிலாளர், மாணவர், உழவர் போராட்டங்கள் வெடித்துள்ளன.

 சீன நாணயம் மதிப்பு குறைக்கப்பட்டு விட்டதால் அந்நாட்டில் விலையேற்றம் ஏற்பட்டு மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுபற்றி சீன அரசுக்குக் கவலை இல்லை. செங்கொடிச் சீன அரசு ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சி என்ற தாராள மயக் கழிசடைப் பாதைக்குப் போய் ஆண்டுகள் பல ஆகிவிட்டன.

 இந்தியாவில் ஏற்கெனவே பணவீக்கமும் விலையேற்றமும் கொடிகட்டிப் பறக்கின்றன. சேமிப்பை அதிகப்படுத்திப் பணப் புழக்கத்தைக் குறைப்பது என்ற பெயரால் வங்கி வட்டி விகிதத்தை மன்மோகன் சிங் அரசு 1% உயர்த்தியது. இது உள்நாட்டுச் சேமிப்பை அதிகரிப்பதற்குப் பதில் அமெரிக்காவின் வட்டி மூலதனம் வெள்ளமெனப் பாய வழிவகுத்தது. ஏனெனில் அமெரிக்காவில் ரூ100க்கு ஆண்டுக்கு 25 பைசா வட்டிதான் வழங்கப்படுகிறது.

 எந்த உற்பத்தியிலும் நேரடியாக ஈடுபடாத இந்த வட்டி மூலதனம் பல தீய விளைவுகளைத் தூண்டி விடுகிறது. பங்குச் சந்தை சூதாட்டத்தில் ஓரளவுக்கு மேல் இலாபகரமாக இந்த வட்டி மூலதனம் செயல்பட முடிய வில்லை. எனவே தங்கம், தானியம், பெட்ரோலியம் ஆகிய துறைகளில் இணைய வணிகத்திலும் (ஆன்லைன் வர்த்தகம்), மனை வணிகத்திலும் (ரியல் எஸ்டேட்) இந்த வட்டி மூலதனம் பாய்கிறது. இதனால் தங்கத்தின் விலையும் மனை நிலத்தின் விலையும் அச்சமூட்டும் அளவுக்குத் தாறுமாறாக உயர்ந் துள்ளது.

 தானிய விலை பெருமளவு உயர்ந்திருந்தாலும் விளைவித்த உழவர்களுக்கு அதனால் இலாபம் ஏதுமில்லை. கண்ணுக்குத் தெரியாத ஊக பேரப் பெரு வணிகர்களே கொள்ளை இலாபம் பெறுகிறார்கள். மனை விலையேற்றம் உழவர்களை நில விற்பனைக்குத் தூண்டுகிறது. பெரு நகரங்களில் மட்டும் மனை வணிகத்தில் இது நாள் வரை கோலோச்சி வந்த வடநாட்டு வெளிநாட்டு பெருநிறுவனங்கள் சிறு நகரங்களிலும் அவற்றை யொட்டிய கிராமங்களிலும் கால் பதித்து வருகின்றன. தமிழர் தாயகம் நம் கண்முன்னாலேயே அயலாரிடம் கை மாற்றப்பட்டு வருகிறது.

 பழையபடி தங்க நாணய மாற்றுதான் இப்போது தலை யெடுத்துள்ள நாணயப் போரை நிறுத்த உதவும். வெற்றுக் காகிதப் பணத்திலிருந்து தங்க நாணய மாற்றுக்குத் திரும்புவது போர்ப் பொருளாதாரத்தையும் ஊக வணிகத்தையும் கட்டுக்குள் கொண்டு வர உதவி செய்யும்.

 உழைக்கும் மக்களைப் பொறுத்த வரை எந்த அளவுக்கு பணப் பொருளாதாரத்திலிருந்து விலகுகிறார்களோ அந்த அளவுக்கு அவர்களது வாழ்க்கைத் தரத்தைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். இது பற்றியும், உலக நாணய மதிப்பிற்குப் பதில் உள்ளூர் நாணய மதிப்பைச் சார்ந்திருப்பது பெரும் தற்காப்பு என்பது குறித்தும் வேறு ஒருவாய்ப்பில் பார்க்கலாம்.