பார்ப்பனர்கள் கைவிடாத ‘திராவிட’ பட்டம்

 ‘திராவிடர்’, ‘திராவிடலு’ என்ற பெயர்களுடன் பார்ப்பன சமூகங்கள் இன்றும் தென்னிந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அது மட்டுமின்றி பல பார்ப்பனர்கள் தங்கள் பெயரொட்டாக ‘திராவிட்’ என்ற சொல்லை இன்னமும் பயன்படுத்தி வருகின்றனர். கிரிக்கெட் வீரர் ராகுல் திராவிட் மத்திய பிரதேசத்தின் இந்தூரில் பிறந்தவர். அவர் மகாராஷ்டிர தேஷாஸ்த்த பார்ப்பனப் பிரிவைச் சேர்ந்தவர்; பெங்களூரில் வளர்ந்தவர். அவருடைய தந்தைவழி முன்னோர்கள் தஞ்சாவூர் ஐயர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். (Jaishankar, Vedam Rahul Dravid, A Biography, USB Publisher, 2004).

 அவரே ஒரு நேர்காணலில், தம் முன்னோர்கள் கும்பகோணம் ஐயர் வகுப்பினர் என்றும் அதனால் ‘திராவிட்’ என்ற பெயரொட்டைக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டதாக அறிகிறோம்.

 இணையதளத்தில் ஓர் உணர்வாளர் இவ்வாறு குறைபடுகிறார்:

“தமிழ்ப் பத்திரிக்கைகளில் தமிழ்நாட்டிலிருந்து குடிபோன ராகுல் திராவிடின் பெயரை ஏன் ‘ட்ராவிட்’ (அ) ‘டிராவிட்’ என்று எழுதுகிறார்கள்? திராவிட் என்பது பூர்வீகமான திராவிட/தமிழ் அந்தணர் பெயர் அல்லவா? ராகுல் திராவிட் என்றல்லவா இருக்க வேண்டும். இதைப் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவிக்க வேண்டுகிறேன்” (http://groups.google.com/group/mintamil/msg/168+43ab769ffbba)

 ‘திராவிட்’ என்ற சொல் குறித்தும், ‘திராவிடர்’ என்ற சொல் குறித்தும் 1914-இல் தமிழ் மக்களின் வரலாற்றை எழுதிய ஆ. ஸ்ரீனிவாச ஐயங்கார் என்ன கூறுகிறார் என்பதைக் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும். பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் 1916இல் தான் தொடங்கியது என்பதையும், திராவிட இயக்கமாக மலர்ந்து திராவிடக் கருத்தியலை மக்களிடம் அதன் பின்னரே அது கொண்டு சேர்த்தது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 1914- அளவில் தமிழ்ச் சமூகத்தில் ஒவ்வொரு சமூகமும் எவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டன என்பதை ஸ்ரீனிவாச ஐயங்கார் கூறுகிறார்.

 திராவிடர்கள் என்போர் யார் என்ற கேள்வியோடு தம் நூலைத் தொடங்கும் அவர் ‘திராவிடம்’ என்பதை விளக்குகிறார்.

 “திராவிடம் என்ற சொல் பரவலாகத் தமிழுக்கு இணையாகப் பயன்படுத்தப்படுகிறது... சமஸ்கிருதப் பண்டிதர்கள் கூறுகிறபடி ‘திராவிடம்’ என்பது தென்னிந்தியாவின் ஒரு நிலப்பகுதி மகாபாரதத்தின் அடிப்படையில் சப்தகல்பருமா  இவ்வாறு வரையறுக்கிறது. திராவிடம் என்னும் நாடு இந்தியாவின் கிழக்குக் கடற்கரை வழியாக திருப்பதி (சென்னை அருகே) முதல் குமரிமுனை வரை ஒரு 60 மைல் தூரம் உட்பகுதியையும் சேர்த்துக் குறிக்கும்.

(M.Srinivasa Aiyangar, Tamil Studies (1914), AES Third Repaint, New Delhi, 2001, pp. 1-2)

 “அறிஞர் வில்சன் மற்றும் சர் மோனியர் - வில்லியம்ஸ் இந்தச் சொல்லுக்கு மூன்று பொருள் விளக்கங்களைத் தருகின்றனர். 1. தமிழ் மொழி பேசப்படும் நாடு. 2. அந்த நாட்டில் வாழும் ஒருவர் 3. பஞ்ச திராவிடர் என்று அழைக்கப்படும் ஒரு பார்ப்பன குடிவழி வகுப்பினர். முதல் பொருள் விளக்கத்தை மேற்கத்திய அறிஞர் களும் இந்தியப் பண்டிட்களும் ஏற்பதில் ஒத்துப் போகின்றனர். இரண்டாவது பொருளைப் பொறுத்த வரை கருத்து வேறுபாடுகள் நிலவு கின்றன. திராவிடர் என்ற பெயர் அந்த நாட்டில் வாழும் அத்தனை மக்களையும் குறிக்கப் பயன்படுத்தப் பட்டதா அல்லது ஒரு குறிப்பிட்ட சாதி அல்லது குடியினருக்கு மட்டுமே பயன்படுத்தப் பட்டதா என்பது தீர்மானிக்கப்பட வேண்டும். தமிழ்பேசும் பார்ப்பனர் அல்லாதார்  தங்களை எப்போதுமே தமிழர் என்றே அழைத்து வந்திருக்கின்றனர், தங்களைத் ‘திராவிடர்’ என்று ஒரு போதும் அழைத்துக் கொண்டதில்லை. தங்களை ‘மகாஜனம்’ அல்லது மகா மனிதர்கள் என்று தங்களை அழைத்து வந்திருக்கும் தமிழ் பார்ப்பனர்கள் முன்பும், இப்போதும் கூட இந்தியாவின் பிற பார்ப்பனர்களுக்கு, ‘திராவிடர்கள்’ என்றே அறியப் படுகின்றனர்.

பெரிய சமஸ்கிருத அறிஞரும் சமய சீர்திருத்தவாதியுமான சங்கராச்சாரியார் (கி.பி. 820), தமிழ்ப் புலவரும் ஒரு பார்ப்பன சைவக் குரவருமான திருஞான சம்பந்தரை ‘திராவிட சிசு’(திராவிடக் குழந்தை) என்று அழைக்கிறார். பம்பாய் பெருமாகாணத்தில் குடியமர்ந்துள்ள ஒரு தமிழ் பேசும் பார்ப்பனன் ‘திராவிட்’ என்று அழைக்கப்படுகிறான். அவனுடைய பெயருடன் பெயரொட்டாக சிந்தாமண் திராவிட், நடேச திராவிட் என்பது போன்று சேர்க்கப் படுகின்றன. ஆனால் தமிழ் பேசும் பார்ப்பனர் அல்லாதார் அவர்களுடைய சாதிகளாலேயே அறியப் படுகின்றனர் - முதலியார், பிள்ளை, இது போல.

 வடக்கேயுள்ள தெலுங்கர்கள் தமிழ் பார்ப்பனர்களை ‘திராவிடலு’ அல்லது ‘திராவிடர்’ என்று அழைக்கும் போது, பார்ப்பனர் அல்லாத தமிழர்களை ‘சூத்திரலு’ அல்லது ‘தக்ணாதி சூத்திரலு’ என்று அழைக்கின்றனர். ‘திராவிடர்’ என்ற பெயர்ப் பயன்பாடு இனவியல் பயன்பாட்டுக் கோணத்தில், நடைமுறையில், தமிழ் பேசும் பார்ப்பனர்கள் என்ற ஒரு வகுப்பாருக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டது. (M.Srinivasa Aiyangar, pp. 2-3)

 தமிழ் மாவட்டங்களில் திராவிட இயக்கம் தொடங்கி முழு வீச்சாகச் செயல்பட்டு திராவிட இன உணர்வைப் பரப்பத் தொடங்கும் கால கட்டத்திற்கு முன்பாகவே, அன்றைய சென்னை மாகாணத்தில், தென்னிந்தியாவில் நிலவிய நிலையை - இருந்த சமூக இருப்பை அப்படியே ஸ்ரீனீவாச ஐயங்கார் பதிவு செய்திருக்கிறார். தமிழர் வரலாற்றைப் பேச, V. கனகசபை பிள்ளை நூலான ‘1800 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள்’ (ஆங்கிலம் - 1904) என்ற நூலைத் தவிர வேறு வெளிவந்திராத கால கட்டத்தில் எழுதப்பட்ட நூல் அது. அன்றையச் சமூக இருப்பை அப்படியே ஆவணப்படுத்தியிருக்கும் ஸ்ரீனிவாச ஐயங்கார் தமிழ் இலக்கியம், இனவியல், கல்வெட்டியல் கற்றவர். இந்தப் பதிவை ஒரு ‘திராவிடரின்’ வாக்குமூலமாகக் கூடக் கொள்ளலாம். 

 ‘பஞ்ச திராவிடர்’ என்ற சொற்கோவையின் முக்கியத் துவத்தையும் ஸ்ரீனிவாச ஐயங்கார் விளக்குகிறார். தமிழ் பேசும் பார்ப்பனர்கள் ஒரு சமூக - சமய சடங்குமுறைகளை இந்தோ ஆரிய மக்களின் வரலாற்றின் தொடக்க காலத்தில் உருவாக்கினர். அந்த சமூகத்தின் குறிப்பிடத்தக்கக் கூறாக அந்த சடங்குமுறைகளே ஆயின. தமிழ் பார்ப்பனர்கள் ஒரு தனி சடங்குமுறையை பெற்றிருந்தார்கள்; அவர்களுடைய சமூக நெறிமுறைகள் வடநாட்டு பார்ப்பனர்களிடமிருந்து மாறுபட்டவை; அவர்களுடைய சட்டங்கள் மாறுபாடானவை. இந்த நெறிமுறைகளும் சட்டங்களும் ‘திராவிட சம்பிரதாய’என்று அறியப் பட்டன. பின்னர் ஆந்திரம், கர்னாடகம், மகாராட்டிரம், கூர்ஜரம் (குஜராத்) ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பார்ப்பன சமூகங்கள் இதே திராவிட சம்பிரதாயங்களை மேற்கொண்டன. ஆகவேதான் சமஸ்கிருதக் கிளை மொழிகளான மராத்தி, குஜராத்தி பேசும் பார்ப்பனர்களையும், சமஸ் கிருதப் பிறப்புத் தொடர்பற்றக் கிளை மொழிகளான  தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளைப் பேசும் பார்ப்பனர்களையும் ஒன்றாகச் சேர்த்து (பஞ்ச திராவிடர்) என்று அழைக்கப் படுகின்றனர் (மேலது பக். 3-4).

 பஞ்ச திராவிடரில் மலை யாள பார்ப்பனர்கள் சேர்க்கப் படாமைக்கும் காரணம், “பஞ்ச கௌட - பஞ்ச திராவிட’ பிரிவுகள் மலையாள மொழி தோன்றுவதற்கு (13-ம் நூற்றாண்டு) வெகுகாலத்திற்கு முன்பே உருவானவை.

 திராவிடர் என்று பார்ப்பனர்களை அடையாளப்படுத்தும்போது குழப்பம் தவிர்க்கும் வகையில் மேலும் விளக்கத்தை அளிக்கிறார்:

 “The Dravidas proper were the Tamil speaking Brahmans. The use of the name for
other Brahman Communities is an instance of extension of its meaning and application. The Term was extended to all Brahmans observing the Dravidacharams, or Dravidasampradaya” (Ibid., p. 4).

 ‘திராவிடர்கள் என்றாலே தமிழ் பேசும் பார்ப்பனர்கள்தாம். அந்தப் பெயரை பிற பார்ப்பனச் சமூகங்களுக்குப் பயன்படுத்துவது என்பது அதன் பொருளையும் பயன்பாட்டையும் (மற்ற பார்ப்பன சமூகங்களுக்கும்) நீட்டிக்கும் ஒரு நிகழ்வு தான். திராவிட ஆச்சாரங்கள், திராவிட சம்பிரதாயங்கள் ஆகிய வற்றைப் பின்பற்றும் ஏனைய பார்ப்பனர்களுக்கும் இந்தப் பெயர் (திராவிடர்) நீட்டிக்கப்பட்டது என்று ஸ்ரீனிவாச ஐயங்கார் குறிப்பிடுகிறார்.

 சமஸ்கிருத அகராதி அடிப்படையில் இழிநிலை அடைந்த, சாதிக்குப் புறந்தள்ளப் பட்ட சத்திரியன் ‘திராவிடன்’ என்று இராபர்ட் கால்டுவெல் மேற்கொள் காட்டுவதை கேள்விக்கு உட்படுத்த வேண்டிய ஒன்று என்று(பக்கம்-5) கூறுகிறார். திராவிட சாதிகள் மற்றும் குடியினங்கள் பற்றி இங்கே மனு தரும் செய்திகளை அப்படியே உண்மை என்று ஏற்க முடியாது என்றும், சாதிகளின் தோற்றம் பற்றிய, இந்திய சமூகவியலாளர் களுக்கு அறிமுகமானக் கட்டுக் கதைகளுள் அதுவும் ஒன்று என்றும் கூறுகிறார். இராபர்ட் கால்டுவெல் தென்னிந்திய மக்கள் அனை வரையும் ‘திராவிடர்’ என்று அழைப்பது தவறு என்றும் ஏற்கவியலாதது என்றும் ஸ்ரீனிவாச ஐயங்கார் கருத்தறிவிக்கிறார்.

திராவிடம் என்ற புதிர்

 தென்னிந்திய மக்களைக் குறிக்கத் திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத்தும் போக்கு எவ்விதம் தொடங்கியது என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். அது இனவியல் ஆய்வுக்குத் துணை செய்யக் கூடியதாகும். தென்னிந்தியாவை ‘திராவிடம்’ என்று குறிப்பிடும் போக்கின் வளர்ச்சியை வரலாற்று ரீதியாக விளக்க முடியும். ஆனால், ‘திராவிடம்’ என்ற சொல்லுக்கு பொருள் விளக்கம் தர இயலாது.

 தமிழ் அல்லது தமிழம் என்ற சொல்லே வடமொழியாளர் களின் வாயில் ‘திராவிடம்’ என்று திரிந்தது. அந்தத் திராவிடம்(தமிழ்) பேசப்பட்டப் பகுதி திராவிடம் என்பது தவிர ஏற்கத்தக்க விளக்கம் அறிஞர்களால் இன்றுவரை முன் வைக்கப்படவில்லை.

 திராவிடம் என்ற சொல்லை விளக்கக் கோணல் பார்வைகள் இதற்கு முன்னரே முன் வைக்கப் பட்டிருக்கின்றன.

 “த்ரமிளம்’ எனும் சொல்லின் சிதைவே தமிழாகும். அது ‘த்ரு’ எனும் வடமொழி வினைப்பகுதியினடிப்படையில் தோன்றியது என்று சுப்பிரமணிய தீட்சிதர் ‘தமிழ்ப் பிரயோக விவேகம்’ எனும் நூலிற் கூறினார். ‘த்ரு’ என்பதற்குத் துரத்தப்பட்டவர் என்பது பொருள்”

 என்ற செய்தியை மறுத்து ரைக்கும் நோக்கில் க.தமிழ்மல்லன் தெரிவிக்கிறார்.

(ச. தமிழ்மல்லன், தேவநேயப் பாவாணரின் மொழியியல் வரலாற்றுக் கொள்கை, மெய் யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம், 2001, பக். 23)

 சுப்பிரமணிய தீட்சிதர் போன்றோர் தமிழர்கள் வடக்கே குடியேறியவர்கள் என்றும், தமிழ் வடமொழியிலிருந்து தோன்றியது என்றும், வடக்கேயிருந்து துரத்தப் பட்டு தெற்கு நோக்கி ஓடி வந்தவர்கள் தமிழர் என்றும் ஒரு பிழையாக இழிவு செய்யும் கருத்தோட்டத்தைக் கொண்டி ருந்தனர். திராவிடம் என்பது இரண்டும் சொற்களை உள்ளடக்கிய கூட்டுச் சொல்லாக இருக்கலாம் என்றும், ‘dra’ என்ற சொல்லுக்கு ஓடுதல் (run) என்றும், ‘vidvidvvi’ என்ற சொல்லுக்கு ஒரு இடம் என்றும், திராவிடம் என்றால் ஓரினம் மற்றோர் வலிமையான இனத்தி டமிருந்து விலகிச் சென்றடைந்த இடம் என்று பொருள்படும் என்று ஆ.ஸ்ரீனிவாச ஐயங்கார் கருத்துரைக்கிறார். (M.Srinivasa Aiyangar, Tamil Studies (1914) AES Third Reprint 2001, New Delhi, p.6))

 இதுதவிர, திராவிடம் என்ற சொல் நீர் என்று பொருள்படும் ‘திரவம்’ என்ற வடமொழிச் சொல்லிலிருந்து பிறந்தது என்ற கருத்தைச் சிலர் முன்வைக்கின்றனர். திராவிடம் என்ற சொல்லே சமஸ்கிருதச் சொல்லாக இருப்பதால் இத்தகைய விளக்கத்தை வடமொழிச் சார்பாளர்களால் முன்வைக்க இயலுகிறது. திராவிடம் என்ற சொல் ‘திரவம்’ அல்லது கடல் தென்னிந்தியவைச் சூழ்ந்திருப்பதால் உருவானது என்று சிலர் கருத்துரைக்கின்றனர். (http://en.wikipedia.org/wiki/dravidianpeoples

 அறிஞர் பெருமக்கள் என அறியப்பட்டவர்களும் ‘திராவிடம்’ என்ற சொல்லுக்குத் தக்க பொருள் சொல்ல இயலாமையால் தடுமாறு வதைக் காணலாம். திராவிடம் என்னும் சொல் ‘திருவிடம்’ என்ற சொல்லின் வடமொழித் திரிபு என்ற பார்வையை பேராசிரியர் M.SSSSSSS.பூர்ணலிங்கம் பிள்ளை கொண்டிருக்கிறார்.

 “கோயில்களில் பூமியாக விளங்கிய ‘திருவிடம்’ என்பதன் திரிந்த வடிவமான ‘திராவிடம்’ என்ற பெயர் புவியியல் சார்ந்த காரணங் களால், வந்தேறிகளால் தமிழகத் திற்குப் பெயரிடப்பட்டது. சில கீழ்த்திசை அறிஞர்கள் ஆசையோடு கற்பனை செய்திருப்பது போல தமிழ் அல்லது தமிழன் என்ற சொல்லுக்கு (திராவிடம் என்ற சொல்லுடன்) எவ்விதத் தொடர்பும் கிடையாது. (M.S.Purnalingam pillai, Tamil India, Kazhagam, MAdras, 968, p.6)

 அலைகள் சூழ்ந்த பகுதியில் தென்னிந்தியா அமைந்திருப்பதைக் கணக்கில் கொண்டு, ஹீராசு பாதிரியார், ‘திரைமிலர்’ (கடலின் குழந்தைகள்) என்ற சொல், ‘திரமிலர்’ என்றும் பின்னர் அச்சொல் ‘திராவிடர்’ என்றும் மாறியதாகக் கூறுவார். (தமிழ்நாடு வரலாறு: தொல். பழங்காலம், தமிழக அரசு வெளியீடு, சென்னை, 1975, பக்கம் 62)

 தமிழம் என்பதன் திரிபே திராவிடம் என்பது தேவநேயப் பாவாணரின் பார்வை. ஒரு திரிந்த வடிவத்திற்குப் பொருள் தேட முடியாது. திராவிடம் என்ற சொல்லுக்குப் பொருள் காண முடியாமைக்குக் காரணம் இதுவே. தமிழ் என்ற சொல்லிலிருந்தே திராவிடம் என்ற சொல் வந்தது என்பதை பாஷம் போன்ற வரலாற்றறிஞர்களும், கமில் ஸ்வெலபில் போன்ற மொழியியலாளர்களும் விரித்துரைத் துள்ளனர்.

 பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுவில் தென்னிந்திய மொழிகளைப் பற்றிய ஆய்வில் இறங்கிய கால்டுவெல் பாதிரியார் தமிழ்மொழியின் சிறப்புகளைப் பதிவு செய்தார். ஆனால், தென்னிந்திய மொழிகளைத் திராவிடம் என்ற ஒரு சொல்லால் குறித்தார். திராவிடத்திலிருந்து தமிழ் பிறந்தது என்றார். தென்னிந்திய மொழி பேசுபவர்களைத் திராவிடர்கள் என்றார்.

 கால்டுவெல் பாதிரியாரின் தமிழறிவின் ஆழத்தையும் ஆய்வின் நேர்மையையும் ஐயப்பட முடியாது. ஆனால், ஆய்வில் சறுக்கல்கள் இருந்தன. அவற்றுக்குக் காரணங்கள் இருந்தன. முன் வைக்கப்பட்ட தவறான முடிவுகளால் சில நன்மைகளும் விளைந்தன. கூடவே இனவியல் பார்வையில் கோளாறுகளும் எழுந்தன.

(வரும்)