தமிழர் கண்ணோட்டம் செய்தியாளர்
பிரிவு: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - டிசம்பர் 2009

இயக்குனர் சீமான் கனடாவில் நடந்த மாவீரர் நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார். நிகழ்ச்சி முடிந்த மறுநாள் காலை (26.10.09) 8 மணிக்கு கனடா காவல் துறையினர் சீமான் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்று விசாரணை செய்ய வேண்டும் என்று அழைத்துச் சென்றனர். காவல் நிலையம் சென்ற பிறகு சீமானைக் கைது செய்ததாக அறிவித்தனர்.

இச்செய்தி தமிழின உணர்வாளர்களிடையே மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியது. மாவீரர் நாள் கூட்டத்தில் சீமான் ஆற்றிய உரையில் குற்றம் கண்டுபிடித்த கனடா காவல்துறை, அவரை உடனடியாக கனடாவை விட்டு வெளியேற்றியது.

தமிழகத்திலிருந்து இதுவரை பல தமிழினத் தலைவர்கள் கனடா சென்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டு பேசியுள்ளனர். கனடா அரசு முதன்முறையாக இவ்வளவு கடுமையாக நடந்துகொண்டுள்ளது. கனடாவின் முன்னாள் பிரதமர் வன்னி வதை முகாம்களைப் பார்வையிட விரும்பியபோது அவருக்கு விசா வழங்க மறுத்தது சிங்கள அரசு. அப்போதெல்லாம் சிங்கள அரசின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வீசிய கனடா அரசு, தனது உண்மை முகத்தை சீமான் கைது வழியே காட்டியுள்ளது.

கனடா உள்ளிட்ட ஏகாதிபத்தியக் கூட்டு நாடுகள் சிங்கள - இந்திய கூட்டுச் சதியின் பங்குதாரர்களாக இருப்பதே இந்நிகழ்வின் பின்புலம். இந்நாடுகள் மனித உரிமை, போர்க் குற்றம், விசாரணை என்றெல்லாம் பேசுவது உலகில் உள்ள மனித உரிமைப் போராளிகளின் போராட்ட உணர்வுகளை மட்டுப்படுத்தவே ஆகும். மேலும், இந்நாடுகள் சிங்கள அரசுக்கெதிராகப் பேசி அவ்வரசை மிரட்டித் தங்கள் சுரண்டல் நலன்களுக்குப் பணிய வைக்கின்றன.

அடிப்படையில் கனடா உள்ளிட்ட ஏகாதிபத்தியக் கூட்டு நாடுகள் தமிழின தேசிய விடுதலைக்கு எதிராகவே செயல்படுகின்றன. கனடா அரசின் கருத்துரிமைக்கு எதிரான இந்த செயலுக்குத் தமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம் கடும் கண்டனங்களைத் தெரிவிக்கிறது.