பழிவாங்கும் அரசியல், தமிழினப் பகை அரசியல் ஆகிய இரண்டும் இணைந்து தமிழ்நாட்டில் சனநாயக உரிமைகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கருணாநிதியின் டெசோ மாநாட்டுக்கு விதிக்கப்பட்ட தடை இதன் ஒரு வெளிப்பாடு.

இந்திய அரசின் விருப்பமும், தி.மு.கவின் கூட்டணி பேர உத்தியும் இதற்கு உள்ளீடாக செயல்பட்டது என்பதும் தொடக்கத்தில் இருந்தே தெரிந்த ஒன்றுதான்.

“இலங்கைத் தமிழர் பிரச்சினைத் தீர்வதற்கு தனித் தமிழீழம்தான் தீர்வு. தமிழீழம் விரைவில் அமைய தமிழர்கள் வாழும் பகுதிகளில் ஐ.நா மன்றம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதற்கு இந்திய அரசு எல்லாவித முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். வெகு விரைவில் தனித் தமிழீழத்தை உருவாக்குவதற்கு டெசோ மாநாடு பயன்பட வேண்டும்.” என இந்த மாநாட்டு அறிவிப்பு நேரத்தில் முழங்கிய கலைஞர் கருணாநிதி, உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் சந்தித்துச் சென்றவுடன் எல்லாவற்றையும் கைவிட்டார். ஈழத்தமிழர்களின் உடனடித் துயர்துடைப்புப் பணிகளை வலியுறுத்தியே அவர்களின் கண்ணீர் துடைக்கும் மாநாடாக மட்டுமே ஆகஸ்டு 12 மாநாடு நடைபெறும் என அறிவித்தார்.

இந்தியாவின் ஆதரவோடு ஐ.நா நிறைவேற்றிய தீர்மானத்தை வலியுறுத்துவதற்கே இம்மாநாடு என அடுத்து கீழிறங்கினார்.

2009 மே முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பிறகு ஈழத்தமிழர் துயர் துடைக்க மக்கள் இயக்கம் எதையும் நடத்தாத கலைஞர் கருணாநிதி இப்போது திடீரென்று டெசோவுக்கு புதிய அவதாரம் கொடுத்ததும் மாநாடு நடத்துவதும் ஏன்? 2009-இல் அவர் முதலமைச்சராக இருந்தார். நடுவண் அரசு அவர் துணையோடு நடந்தது. அப்போது போர் நிறுத்தம் கொண்டுவர முழுமனதோடு உறுதியாக எந்த முடிவும் எடுக்காமல், அத்திசையில் உருப்படியான செயல்பாடு எதுவும் செய்யாமல் ஒப்புக்கு நாடகமாடிக் கொண்டிருந்தார்.

அவரின் மறைமுக ஒத்துழைப்போடு அல்லது மௌனமான ஆதரவோடு ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர்கள் இந்திய - சிங்கள ஆட்சியாளர்களால் 2009ல் இனப்படுகொலைச் செய்யப்பட்டனர். அப்போது மனித சங்கலி, சட்டமன்றத்தில் ‘ஐயகோ’ தீர்மானம், மூன்று மணிநேர உண்ணாப்போராட்டம், எம்.பிக்கள் பதவி விலகல் என நாடகங்களை அரங்கேற்றியவர்தான் கருணாநிதி.

கருணாநிதியின் தமிழினத் துரோகத்தையும், போர் நிறுத்தக் கோரிக்கை நாடகத்தையும் தமிழ்நாட்டு இன உணர்வாளர்கள் நன்கு கண்டு கொண்டனர். ஈழத்தமிழர்களும் சரியாக அவரை அடையாளம் கண்டு கொண்டனர். உலகெங்கும் வாழும் தமிழர்களிடமும் தமிழ்நாட்டு இன உணர்வாளர்களிடமும் அவர் அயன்மை பட்டுப்போனார். இந்த கறையைத் துடைப்பதற்கான முயற்சிதான் டெசோ நாடகம்.

ஆனால் ஒன்றுமில்லாத இந்த மாநாட்டைக் கூட பொறுத்துக் கொள்ளாத செயலலிதா கடைசி நேரத்தில் தடைச் செய்தார். இதன்மூலம் செயலலிதாவின் அசல் முகம் வெளிப்பட்டுள்ளது. ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக சட்டப்பேரவையில் அவர் போட்ட தீர்மானம் தமிழின உணர்வாளர்களைக் கொண்ட வாக்கு வங்கியை வசப்படுத்துவதற்கான உத்தியே என்று புரிந்து கொள்ள முடிகிறது.

இராயப்பேட்டை ஒய். எம். சி.ஏ திடலில் ஏற்கெனவே பல மாநாடுகள் பொதுக்கூட்டங்கள் நடந்துள்ளன. இப்போதுதான் புதிதாக நடப்பது போல் தமிழக அரசு, அருகில் மருத்துவனை இருக்கிறது என்று போலிக் காரணம் கூறி கடைசி நேரத்தில் மாநாட்டுக்குத் தடை விதித்தது.

தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களும் மாநாட்டில் கூட்டத்தோடு கூட்டமாக கலந்துக் கொள்ளும் ஆபத்து உண்டு என்ற மேலும் ஒரு காரணத்தையும் காவல்துறை கடிதம் கூறியுள்ளது.

 கடந்த காலங்களில் தி.மு.க. ஆட்சியும், அ.இ.அ.தி.மு.க. ஆட்சியும் ஈழத்தமிழர் உரிமை தொடர்பான மாநாடுகள் கூட்டங்கள் பலவற்றுக்கு தடைப்போட்டதுண்டு. அப்போதெல்லாம் உயர்நீதிமன்றத்தை அணுகி அத்தடைகள் முறியடிக்கப்பட்டன. இப்போதும் உயர் நீதிமன்றம் செயலலிதா அரசு விதித்தத் தடையை நீக்கி மாநாடு நடத்த அனுமதி வழங்கியுள்ளது. அதே ஒய்.எம்.சி.ஏ திடலில் மாநாடு நடந்து முடிந்துள்ளது.

அடிப்படையில் செயலலிதா ஈழத்தமிழருக்கு எதிரானவர் என்பதும், பழிவாங்கும் அரசியலில் ஊறிப்போனவர் என்பதும் டெசோ மாநாட்டுத் தடையின் மூலம் மீண்டும் வெளிப்படுகிறது.

இம்மாநாடு குறித்து இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் எழுப்பிய எதிர்ப்பு எதிர்காலத்தில் தமிழினம் சந்திக்க வேண்டிய மிகக்கொடுமையான ஒடுக்குமுறையின் ஒரு முன்னறிவிப்பாகும்.

டெசோவின் ஆகஸ்டு 12 மாநாடு “ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாடு” ஆகும். Eelam Tamil’s Rights Protection Conference என ஆங்கிலத்தில் இம்மாநாடு குறிக்கப்பட்டது. இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் ஈழம் (Eelam) என்ற சொல் மாநாட்டின் தலைப்பில் இருப்பதால் வெளிநாட்டுப் பேராளர்களுக்கு கடவுச்சீட்டு (விசா) வழங்கமுடியாது என்றும், ஈழம் என்ற சொல்லை நீக்கினால்தான் அனுமதிக்கமுடியும் என்றும் நிபந்தனை விதித்தது. தமிழினப் பகைப்போக்கில் இந்திய அரசின் அடுத்தக்கட்ட நகர்வு ஆகும் இது.

அதன் பிறகு “மாநாட்டுக் குழுவினர் அளித்த விளக்கத்தை ஏற்று மாநாட்டுத் தலைப்பில் ஈழம் என்ற சொல்லுக்கு எழுப்பிய எதிர்ப்பை விலக்கிக் கொள்கிறோம்” என 11.08.2012 அன்று மறு கடிதம் அனுப்பியது உள்துறை.

ஈழம் என்பது பழந்தமிழ்ச் சொல் என்பதுதான் கருணாநிதி தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கமாகும்.இந்த விளக்கத்தைதான் இந்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. நட்பு நாட்டின் இறையாண்மைக்கோ, பிரதேச ஒருமைப்பாட்டிற்கோ ஊறு விளைவிக்கும் எந்தத் தீர்மானமும், அறிவிப்பும் இம்மாநாட்டில் இடம்பெறக் கூடாது என்ற நிபந்தனையையும் விதித்தது.

‘ஈழம்’ பழந்தமிழ்ச் சொல் என்பதைவிட இன்றைக்கு அது அழுத்தமான அரசியல் பொருளுடைய சொல் என்பதே முதன்மையானது. ஈழத்தமிழர்களின் தனி அரசுரிமையை உள்ளீடாகக் கொண்டு இச்சொல் கூடுதல் பொருள் பெற்று உள்ளது. உள்துறையின் கடிதம் இதைப் பேசவேக் கூடாது என நிபந்தனை விதிக்கிறது.

போரில் இன அழிப்பு நடத்தி முடித்த பிறகு இராசபட்சே கூறியதை மறந்துவிடக்கூடாது. “இனிமேல் தமிழர் என்று யாரும் இல்லை. எல்லோரும் இலங்கையர் தான் (Srilankans)” என்றான் இராசபட்சே. இந்திய அரசின் கடிதம் சிங்கள வெறியன் இராசபட்சேவின் அறிவிப்பைத்தான் செயல்படுத்துகிறது.

இதனை ஏற்றுக்கொண்டு மாநாடு நடத்துவது ஈழத்தமிழர் எதிர்காலத்திற்கே இடையூறை ஏற்படுத்திவிடும் மோசமான முன்னெடுத்துக்காட்டாக இது விளங்கும். நாளை இது தமிழகத்திற்கும் நீளும் அபாயம் உண்டு.

 ‘தமிழன்’ என்றோ , ‘தமிழ்த்தேசம்’ என்றோ பேசுவது கூட சட்டவிரோதமானது என இதே உள்துறை அமைச்சகம் நாளை கூறலாம்.

இப்படி நாம் கூறுவது அடிப்படையற்ற அச்சமன்று. இதற்கு முன்பே இதையொட்டிய நிகழ்வு நடந்திருக்கிறது.

அமைதிப் படை என்ற பெயரில் இந்தியப் படை ஈழத்தமிழர்களை இனப்படுகொலைச் செய்ததைக் கண்டித்து திரு.வைகோ பேசிய போது நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட நிகழ்வு அது. அன்றைக்கு தி.மு.க சார்பில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்த வைகோ இந்தியப் படை செய்த அட்டூழியங்களை ஆதாரங்களுடன் அடுக்கி ஆவேசமாக அந்த அவையில் பேசினார். பிரதமராக இருந்த இராசீவ் காந்தி கோபம் கொப்பளிக்க “இந்தியப் படையைக் கண்டித்துப் பேசும் நீங்கள் இந்தியர் தானா“ என்று கேட்டார்.

அதே சீற்றத்தோடு “நான் முதலில் தமிழன், பிறகுதான் இந்தியன்” என பதிலுரைத்தார் வைகோ.

நம்மைப் பொறுத்தவரை நாம் முதலிலும், முடிவிலும் தமிழர் என்பதே உண்மை.

ஆனால் நான் தமிழன் என வைகோ கூறியபோது காங்கிரசுக் கட்சி உறுப்பினர்கள் மட்டுமின்றி அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த வட இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் எழுந்து எதிர்ப்புக் குரல் எழுப்பினார்கள். தமிழன் என்று கூறுவதே பிரிவினைவாதம் என்றனர்.

 ‘ஈழம்’ என்பதை அதற்குறிய அரசியல் பொருளில் பயன்படுத்தக்கூடாது என்பதை ஏற்போமானால் நாளைக்கு தமிழன், தமிழ்நாடு என்பதை அதற்குறிய அரசியல் பொருளில் கூறுவதற்கே ஆபத்து ஏற்படும். தமிழன் என்ற அடையாளமே அழிக்கப்பட வேண்டும் என்ற இந்திய வல்லாட்சியின் தொலைநோக்குச் சதித்திட்டம் இதில் உள்ளது.

இந்திய, தமிழக அரசுகளின் டெசோ மாநாட்டுக்கு எதிரான ஆணைகள் தமிழினப் பகை பாசிச நடவடிக்கைகளாகும். இந்த ஆபத்தை தமிழின உணர்வாளர்களும், அனைத்து சனநாயக சக்திகளும் புரிந்து கொண்டு உறுதியாக எதிர்க்க வேண்டும்.

திமு.க. நடத்திய டெசோ மாநாடு நிறைவேற்றிய தீர்மானங்களை செயல்படுத்த தி.மு.க. தொடந்து செயல்படுமா? ஈழத் தமிழர்களுக்கு எந்த உரிமையும் கிடைக்கக் கூடாது என்பதில் இராசபட்சேவைப் போலவே மூர்க்கமாக உள்ள காங்கிரசு கூட்டணி அரசில் பதவி வகித்துக் கொண்டுள்ள தி.மு.க. அதிகாரத்தில் இல்லாத எதிர்க்கட்சி தீர்மானம் போடுவது போல் டெசோ மாநாட்டில் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.

டெசோ மாநாட்டுத் தீர்மானங்களை செயல்படுத்த தொடர் முயற்சிகளை தி.மு.க. எடுத்துக் கொள்ள வில்லை யெனில் இம்மாநாடு தமிழர்களை திசைத் திருப்ப இந்திய அரசின் அறிவுரைப்படி தி.மு.க. நடத்திய நாடகமாகவே புரிந்து கொள்ளப்படும்.