methane 350மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரியில் வரலாற்றுத் துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவரும், தமிழ்நாட்டின் தலைச்சிறந்த தமிழ்த்தேசிய சிந்தனை யாளரும், மக்களை ஈர்க்கும் வகையில் பேசக்கூடிய வல்லமை பெற்றவருமான பேராசிரியர் த. செயராமன் அவர்கள். பணி ஓய்வுக்குப் பிறகு, “மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்”பின் தலைமை ஒருங்கிணைப் பாளராக, போராட்டக் களப்பணிகளிலும், கருத்துப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

காவிரிப்படுகையில் மீத்தேன் எரிவாயு எடுத்து, காவிரிப்படுகையை பாலை நிலமாக்கிட இந்திய அரசு எண்ணுகிறது. காவிரிப்படுகை மக்கள் 83 இலட்சம் பேரை அகதிகளாக்க இந்திய அரசு துடிக்கிறது. காவிரிப்படுகைக்கு இந்திய அரசால் நேர்ந்துள்ள இத்துயரங்களை பதிவு செய்ததோடு மட்டுமின்றி, இனி வரக்கூடிய பேராபத்துகளையும் பட்டியலிட்டு நம் நெஞ்சம் பதைபதைக்கும் வகையில் எழுதப்பட்ட நூலே “மீத்தேன் அகதிகள்” நூலாகும்.

ஆனால், “மீத்தேன் அகதிகள்” நூலைப் படிக்கும் போது நாம் ஏன் இருக்கிறோம்? எதற்காக வாழ் கிறோம், இப்படியே மன உளைச்சலுடன்தான் வாழப் போகின்றோமா, இனி என்ன செய்யப் போகிறோம்? என்று ஏராளமான வினாக்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

அறிவார்ந்த புள்ளி விவரங்களுடன், தேவையான இடங்களில் - உள்ளத்தைத் தொடும் வகையில் உணர்ச்சி கரமாக எழுதப்பட்டுள்ள நூல், “மீத்தேன் அகதிகள்’’. கூடு இழந்த குருவியின் புலம்பல் போல தமிழ் இனத்தின் மீதும், காவிரிப்படுகையின் மீதும் பேராசிரியர் கொண்டுள்ள அக்கறை இந்நூலில் வெளிப்படுகிறது.

சிப்பி வயிற்றில் முத்து! இது சிப்பிக்குப் பெருமை! ஆனால், சிப்பியின் இறப்புக்கும் இதுவே காரணம்! முத்துக்களைப் பெறும் நோக்கில் சிப்பிகள் பிளக்கப் படுவதைப் போல தமிழ்நாட்டின் நிலங்கள் பிளக்கப் படுகின்றன. கனிமங்கள் சூறையாடப் படுகின்றன. வளமான வண்டல் மண் நிலம் விளையாப் பாலையாக மாறிக் கொண்டிருக்கிறது என்று சொல்லிவிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கிடைக்கிற கனிமங்களை பட்டியலிட்டிருப்பதைப் படிக்கும்போது, திகைப்பு ஏற்படுகிறது.

காவிரிப் படுகையில் சற்றொப்ப 32 ஆண்டுகளுக்கு மீத்தேன் எடுப்பதும், பின்னர் 100 ஆண்டுகளுக்கு நிலக்கரி எடுப்பதும்தான் இந்திய அரசின் முழுத் திட்டம் என்பதை தக்க சான்றுகளுடன் இந்நூல் அம்பலப்படுத்துகிறது.

நிலக்கரி, மீத்தேன், வண்டல் பாறை (ஷேல்) மீத்தேன் ஆகியவை குறித்தும், மீத்தேன் எடுக்கப் பயன் படுத்தப்படும் நீரியல் விரிசல் முறை குறித்தும் எளிமையாக இந்நூலில் விளக்கியுள்ளார்.

“நிலத்துக்கு அடியில் 10,000 அடி ஆழம் வரை குழாயைச் செலுத்தி, பின்பு பக்கவாட்டில் குழாய்களை மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு அனைத்துத் திசைகளிலும் செலுத்தித் துளையிட்டு, பின் அவற்றின் வழியாக 13,25,000 லிட்டர் நீர் மற்றும் 9,000 டன் மணலுடன் அபாயகரமான 634 வகை வேதிப் பொருட்கள் கலந்த பிடெக்ஸ் (ஙிஜிமீஜ்) எனும் வேதிக்கலவையை மிக அதிக அழுத்தத்தில் உள்ளே செலுத்தி, நிலக்கரி அல்லது வண்டல் மண் பாறையை நொறுக்கி, எரிவாயுவை விடுவித்து, கலவை நீருடன் உறிஞ்சி வெளியே கொண்டு வந்து, எரிவாயுவைப் பிரித்தெடுத்துக் கொண்டு, கழிவு நீரை நிலத்தில் பட்டுவிடாமல் கதிரவன் ஒளியில் ஆவியாகும் வகையில் குட்டையை அமைத்து, அதில் விட்டுவிடுவது என்பதுதான் நீரியல் விரிசல்முறை!” (பக்கம் 22).

இதில் பயன்படுத்தப்படும், பன்சீன், டொலுயீன், ஈத்தைல் பென்சீன், சைலின்ஸ் கலந்த கலவையே பிடெக்ஸ். இவை அனைத்தும் அபாயகரமான வேதிப்பொருட்கள்.

2013 அக்டோபர் 14-லில் இந்திய அரசு ஷேல் மீத்தேன் எடுக்க இருக்கும் தன் கொள்கை முடிவை அறிவித்தது. ஓ.என்.ஜி.சி., ஆயில் இந்தியா, அம்பானியின் ரிலையன்சு உள்ளிட்ட நிறுவனங்கள் காவிரிப் படுகையை காவு வாங்கத் துடிக்கின்றன.

காவிரிப்படுகையில் மீத்தேன் எடுக்கப்பட்டால், சற்றொப்ப 83 இலட்சம் பேர் அகதிகளாக இடம் பெயர்ந்துதான் செல்ல வேண்டும் என இந்நூல் எச்சரிக்கிறது. மீத்தேன் திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டால், வெளியேறும் மக்ளை பேராசிரியர் த. செயராமன், “மீத்தேன் அகதிகள்” என்கிறார். தமிழர் தாயகத்தை இழந்துவிட்டால், எந்த திசையில் செல்வது எந்த மாநிலம் தமிழர்களுக்கு பாதுகாப்பானது, தமிழினத்திற்கான பாதிப்புகளை சங்கிலித் தொடர் போல பட்டியலிடுகிறார் (பக்கம் 169).

“ஆற்று நீருக்கும் நிலைத்த வாழ்க்கைக்கும் தொடர்புண்டு. வாழ்க்கைக்கும் ஒரு பண்பாட்டின் மலர்ச்சிக்கும் தொடர்புண்டு. ஓர் இனம், தன் தாயகத்தில் நிலைத்து வாழும்போது மட்டுமே. தன் இன அடையாளத்தையும் மொழியையும் பேண முடியம். தன் தாயகத்தைவிட்டு வெளியேறும்போது, தன் பண்பாட்டை இழக்கும், மொழி காணாமல் போகும். இன அடையாளம் மறைந்து போகும்” என்று தாயகத்தைக் காக்க வேண்டிய பணியை வலியுறுத்துகிற பேராசிரியர், அகதிகளாக வாழக்கூடிய மக்களின் துயரமான வாழ்வை “அண்டை நாடு அடுத்தவர் வீடு” என்ற தலைப்பில் பதிவு செய்திருக்கிறார்.

ஈழத்தமிழ் மக்களின் வாழ்வை மட்டுமின்றி, பல்வேறு தேசிய இனங்களின் அவலத்தை படம் பிடித்துக் காட்டுகிறார். உலகத்தையே குலுக்கிய மூன்று அகவைக் குழந்தை அய்லான் குர்தி படத்துடன் உள்ள செய்தி கண்ணீரை வரவழைக்கிறது!

சிரியா நாட்டின் கொம்பினி என்ற நகரிலிருந்து -_ போர் அழிவிவிருந்து தப்பிப்பதற்காக அப்துல்லா குர்தி, தன் மனைவி இரு மகன்கள் ஆகியோரை உள்ளடக்கிய தன் குடும்பத்துக்குப் புகலிடம் கேட்டு கனடாவிற்கு விண்ணப்பம் செய்திருந்தார். ஆனால் கனடா இவர்களை அகதிகளாக ஏற்க மறுத்துவிட்டது. 2015 செப்டம்பர் மாதம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, தன் குடும்பத்துடன் படகில் ஏறி ஐரோப்பா நோக்கிப் பயணம் செய்தார் அப்துல்லா குர்தி. அவருடைய இரண்டாவது மகன்தான் அயலான். மத்தியத் தரைக்கடலைக் கடக்கும்போது, படகு கவிழ்ந்து அப்துல்லா குர்தி தவிர அவருடைய குடும்பத்தவர்கள் இறந்து போனார்கள். கரை ஒதுங்கிய 3 அகவைக் குழந்தை அயலான் குர்தியின் உடல், உலக நாடுகளின் உள்ளத்தை உலுக்கியது. (பக்கம 113). இதன் விளைவாக, 60 ஆயிரம் அகதிகளை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுக் கொண்டது.

பேராசிரியரின் மேடைப் பேச்சு போலவே நகைச்சுவை, மனத்தைக் கவ்வும் எடுத்துக் காட்டுகள் நூல் முழுவதும் விரவிக் கிடக்கின்றன.

“கசாப்புக் கடையில் அறுத்துத் தொங்கவிடப்படும் ஆட்டுக் குட்டியாகத் தமிழகம். ஆட்டை அறுத்துக் காசு பார்க்கும் கசாப்புக் கடைக்காரனாக இந்திய அரசு. இறைச்சிக்காக, கால்களுக்காக, ஆட்டுத் தலைக்காக, ஆட்டு இரத்தத்துக்காக, ஆட்டுத் தோலுக்காகக் காத்திருக்கும் வாடிக்கையாளர்களாகப் பன்னாட்டு நிறுவனங்கள் - பார்வையாளர்களாக நம் அரசியல் கட்சித் தலைவர்கள் - பதறுபவர்களாக நாம்” (பக்கம் 13).

தான் வாழும் கூட்டை இழப்பது சிட்டுக் குருவிக்கு பெரும் இழப்பு; காட்டை வீடாகக் கொண்டு, கண்டவற்றை அறுத்துத் தின்று அதிகாரம் செய்யும் பருந்துக்கு, சிட்டுக்குருவியின் வீடு சிதைந்து போவதில், அதைச் சிதைப்பதில் என்ன வருத்தம் இருக்க முடியும்? (பக்கம் 173).

“இந்திய அரசின் இனப்பகையைத் தோலுரித்துக் காட்டுகிறார். இந்தியம் வஞ்சகமானது. இந்தியத்தை உடைத்துப் பாருங்கள். உள்ளே ஆரியம் இருக்கும். இது வேத, சமற்கிருத, பார்ப்பனிய மேலாண்மையை உள்ளடக்கியது. இந்திய அரசு என்பது உள்ளீட்டில் தமிழ் மொழிக்கும், தமிழர் அடையாளத்துக்கும் எதிரானது’’ (பக்கம் 173).

மீத்தேன் எதிர்ப்பு, ஐட்ரோ கார்பன் எதிர்ப்பு, காவிரி உரிமை மீட்பு ஆகிய போராட்டங்களில் ஈடுபடுவோர்க்கும், இவை பற்றி சிந்திப்போர்க்கும் மிகச்சிறந்த கருவி இந்நூல்!

நூல் கிடைக்குமிடம்:

புத்தகச் சோலை,

பெரியார் மாளிகை,

மஸ்தான் தெரு,

மயிலாடுதுறை _- 609 001.

விலை ரூ. 150.