எனது 95 ஆம் ஆண்டு பிறந்த நாள் துவக்கத்துக்கு வழமைபோல் ஆண்டு மலரில் ஒரு கட்டுரை எழுத வேண்டி இருக்கிறது. அதை முன்னிட்டு இக்கட்டுரை எழுதுகிறேன். அப்படி எழுதப்படும் இக்கட்டுரை என்னால் ஆண்டு மலர்களுக்கு எழுதப்படும் கட்டுரைகளில் இதுவே கடைசியான கட்டுரையாக இருந்தாலும் இருக்கலாம். ஏன் இப்படி எழுதுகிறேன் என்றால், அடுத்த ஆண்டுமலர் எழுதப் படவேண்டிய காலத்தில் நான் இருப்போனோ இல்லையோ என்கிற பிரச்சினை மாத்திரமல்லாமல், எழுதும்படியான வாய்ப்பு இருக்குமோ இருக்காதோ என்பதே முக்கிய காரியமாகும்.

ஏனெனில், இன்னும் நாம் இருப்பது போலவே அதாவது, இந்திய ஆட்சி என்பதற்குள் பிரஜையாகவும், சமுதாயத்தில் நாலாஞ்சாதி (சூத்திர மகனாகவும்) சட்டப்படி, சாஸ்திரப்படி பார்ப்பானின் தாசிமகன் என்னும் பெயருடன், நமது தாய்மார்கள் பார்ப்பானின் தாசிகளாகவும் இருக்கும் தன்மையாலேயே இருப்போமோ என்கின்ற கருத்தைக் கொண்டே இப்படி எழுதுகிறேன்.

இந்திய அரசியல் சட்டப்படி நாம் இந்திய ஆட்சியில் பிரஜையாய் இருக்கும் வரை இந்துவாய், அதாவது, கிருஸ்தவனாகவோ, முஸ்லிமாகவோ நாம் மதம் மாற்றிக் கொள்ளாதவரை, நாம் நமது பண்டார சன்னதிகள் உட்பட பவுத்தனுக்கும் - ஜெயினனுக்கும் சமானமாக இருக்கும் படியாக இருந்தாலும், பகுத்தறிவுவாதியாக இருந்தாலும், வேறு எந்தப் பெயரில் வாழ்ந்துவருபவனாக இருந்தாலும் சூத்திரனாகத்தான் - பார்ப்பானின் தாசிமகனாகத் தான் இருந்தாக வேண்டும்.

இதுதான் இன்றைய இந்திய அரசியல் சட்டமாகும். இந்தச் சட்டத்தைத் திருத்தவோ, மாற்றவோ நம் மக்களுக்கு ஒரு நாளும் சக்தியோ, உரிமையோ ஏற்படும் என்று கருதவே முடியாத நிலையில் இருக்கிறோம். அது மாத்திரமல்லாமல், இந்திய ஆட்சியில் இருந்து தமிழ்நாட்டை விலக்கிக் கொள்ள முயற்சி செய்தே ஆக வேண்டிய ஒரு கட்டாயமான - நிர்பந்தமான நிலையில் இருக்கிறோம். இந்த முயற்சியில் நாம் இந்திய ஆட்சியிலிருந்து விலகிக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படுமா என்பதுபற்றி நமக்கு முடிவு செய்து கொள்ள முடியாமல் இருந்தாலும், இம்முயற்சியில் நாம் பலர் சிறையில் இருக்க நேரிடலாம் என்கிறதாலேயேதான் இந்தப்படி எழுதுகிறேன்.

நமக்கு இன்றைய இந்திய ஆட்சியில் அரசியல் பிரச்சினை எப்படி இருந்தாலும், சமுதாயப் பிரச்சினையில் நாம் இன்று இருக்கும் இழிதன்மையில் இருந்து, அதாவது சூத்திரனாக, தாசிமகனாக நம் தாய்மார்கள் தாசிகளாக சட்டப்படி, சாஸ்திரப் படி இருக்கும் நிலைமையை மாற்றிக்கொள்ள முயற்சிக்காமல் நாம் இருக்க முடியுமா?

இந்தியாவில் நாம் இருக்கும் வரை இந்துவாகத்தானே இருந்து ஆகவேண்டும். இந்து என்றாலே முஸ்லிம், கிறிஸ்தவம் தவிர மற்ற யாவருமே சூத்திரர், தாசிமக்கள்தான் என்று இருப்பதால் ஏதாவது முயற்சி செய்துதான் ஆக வேண்டும்.

நம் மக்கள் எளிதில் மதம் மாறமாட்டார்கள். மதம் மாறுவதை இழிவாய்க் கருதுபவர்களாவார்கள்.

ஆதலால், நாம் உடனடியாக விடுதலை, அதாவது இந்தியக் கூட்டாட்சியிலிருந்து விலகி, சுதந்திரத் தமிழ்நாட்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டாக வேண்டியவர்களாக இருக்கிறோம். இம்முயற்சிக்கு இன்றைய தி.மு.க. ஆட்சி இணங்கும் என்று கருத முடியாது. ஏனெனில், தி.மு.க. ஆட்சி விரும்புவதெல்லாம் இந்தியக் கூட்டாட்சி ஆதிக்கத்திற்கு உள்பட்ட மாகாண சுயாட்சிதான் அது விரும்புகிறது.

மாகாணசுயாட்சி என்றால், அரசியலிதான் ஏதோ சில மாறுதல்களைச் செய்து கொள்ள முடியுமே தவிர, சமுதாயத் துறையில் அரசியல் சட்டத்திற்கு விரோதமாக ஒரு காரியமும் செய்ய முடியாது.

இந்திய அரசியல் சட்டத்தில் சமுதாய (மத) சம்பந்தமான காரியங்களைப் பற்றி பழைய மனுதர்ம நிலையை மிகமிகப் பலப்படுத்திக் கொண்டபடி இருக்கிறது. உதாரணமாகச் சொல்ல வேண்டுமானால், கர்ப்பக் கிரகத்திற்குள் சூத்திரன், அதாவது பண்டார சன்னதி உட்பட இந்து என்ற தலைப்பில் வரும் எவருமே, பார்ப்பான் தவிர்த்து எவருமே செல்ல முடியாதென்று உயர்நீதி (சுப்ரீம்) மன்றத் தீர்ப்பு இருப்பதினாலும், இன்னும் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கென்று போகும் யாருமே தீண்டத்தகாதவர்கள் போல் வாயில்படிக்கு வெளியில் தான் எட்டி நிற்க வேண்டும் என்றால், மற்றபடி எதில் நாம் மாறுதலைக் காண முடியும்?

இன்று அமுலில் இருக்கும் “இந்து லா’’ என்னும் சட்டத்திலும், பல உயர்நீதிமன்றங்களின் தீர்ப்பிலும், பார்ப்பனரல்லாத இந்து மக்கள் என்பவர்களை மிக மிக இழிவாகக் கூறி நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்து என்னும் சொல்லுக்கு சட்டத்தில் கொடுத்திருக்கும் விளக்கம் என்னவென்றால், “கிருஸ்தவர்கள்- முஸ்லிம்கள் தவிர்த்த இந்தியாவில் உள்ள மக்கள் அனைவருமே இந்துக்கள் ஆவார்கள்’’. இதன்படி நாத்திகன், பகுத்தறிவுவாதி, பரதேசி முதலிய சகலரும் இந்துக்கள் ஆகி சூத்திரர், பார்ப்பானின் தாசிமகன் என்று ஆகி விடுகிறார்கள்.

நான் முதலில், நான் இந்து அல்ல என்று சொல்லிவிட்டால் இழிவு நீங்கிவிடும் என்றுதான் கருதினேன். பிறகு சட்டங்களைப் பார்க்க ஆரம்பித்த பிறகு கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் தவிர்த்த, இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் இந்துக்கள்- இந்துக்கள் என்றால் சூத்திரர்கள், வேசி மக்கள் என்று பல இடங்களில் காணப்படுகின்றன. ஆதலாயே தீவிர முயற்சி எடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

இன்று நம் நாட்டில் இந்துக்கள் எல்லோருமே அரசியலில்தான் முக்கிய கவனம் இருக்கிறது. அன்றியும், நாட்டுப் பிரிவினை என்றால், எல்லா மக்களுமே பயப்படுகிறார்கள். காரணம், பதவி கிடைக்காதே என்கிற காரணம் மாத்திரமல்லாமல், சிறைக்குச் செல்ல வேண்டுமே என்றும் பயப்படுகிறார்கள். 50 வருஷ காலமாகச் சுயமரியாதை இயக்கம் சாதித்தது என்ன என்று பார்த்தால், சிறிது படிப்பு - பல பதவி உத்தியோகம் பெற நேர்ந்ததோடு, அரசியலில் பார்ப்பனர் கொட்டத்தை நல்ல அளவுக்கு அடக்கிற்று என்பதல்லாமல் சமுதாயத் துறையில் உள்ள அடிப்படை இழிவு நல்ல அளவுக்குப் பலம் பெற்று விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

எனவே, நாம் சட்டத்தைப் பற்றிப் பயப்படாமலும், பதவி கிடைக்காதே என்று கவலைப் படாமலும் சுதந்திரத் தமிழ்நாடு பெற ஒவ்வொருவரும் முடிவு செய்துகொண்டு முன் வர வேண்டியது ஒவ்வொரு தமிழனுக்கும் அவசியமான காரியம் என்பதைப் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

“சுதந்திரத் தமிழ்நாடு - எனது இலட்சியம்’’ என்ற சொற்களை ஒவ்வொருவரும் இலட்சியச் சொல்லாகக் கொள்ளவேண்டும் என்று விரும்புகிறேன். பதினாயிரக் கணக்கில் பாட்ஜுக்கு ஆர்டர் கொடுத்துத் தயார் செய்து மக்களுக்கு வினியோகிக்க ஆசைப்படுகிறேன். பொதுமக்களுக்கும் இதுவே இலட்சியச் சொல்லாக (கூப்பாடாக) இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். பொதுமக்களே! இளைஞர்களே! பள்ளி, கல்லூரி மாணவர்களே! மாணவிகளே! உறுதி கொள்ளுங்கள்! உறுதி கொள்ளுங்கள்! உறுதி கொள்ளுங்கள்!

(பெரியார் 95ஆவது பிறந்த நாள் விழாமலர்- 17.9.1973)

குறிப்பு: பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள், ஆனைமுத்து தொகுப்பு, பக்கம்: 1980 – 81