நேர்மையான குடிமகனாக இருக்கக் கட்டாயம் வாக்களியுங்கள்என்றும் கட்டாயம் வாக்களிப்பது உங்கள் கடமைஎன்றும் தேர்தல் ஆணையம் திரும்பிய பக்கமெல்லாம் விளம்பரங்கள் செய்து வருகிறதே, வாக்களிப்பது சட்டப்படி கட்டாயமா?

கட்டாயம் வாக்களிப்பது கடமை என்றும், நேர்மையான குடிமகனாக இருக்க வாக்களிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் விளம்பரம் செய்வதும், மக்களை வற்புறுத்துவதும் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பான அத்து மீறலாகும். அரசமைப்புச் சட்ட உறுப்பு 19 வழங்கும் கருத்துரிமைக்கு எதிரானதாகும்.

வாக்களிப்பதும் வாக்களிக்காமல் இருப்பதும் ஒரு குடிமகனின் / குடிமகளின் விருப்பம் ஆகும். இதுதான் சனநாயகம்!

கட்சிகள் மற்றும் இயக்கங்களின் கொடிகள் பறக்கத் தடை விதிப்பது, தலைவர்களின் சிலைகளை மூடி வைப்பது போன்ற உரிமைப் பறிப்புகளில் தேர்தல் ஆணையம் ஈடுபடுகிறது.

ஊழல் பெருச்சாளிகளுக்கும், மக்களை வஞ்சிக்கும் கயவர்களுக்கும், இனத்துரோகிகளுக்கும், காலனியவாதி களுக்கும், கங்காணிகளுக்கும் வாக்களித்தே ஆக வேண்டும் என்று வற்புறுத்தத் தேர்தல் ஆணையத்திற்கு எந்த உரிமையும் கிடையாது.

தேர்தல் பெருச்சாளிகளுக்கும் தேர்தல் கங்காணி களுக்கும் வெளியே சமுதாயக் கேடுகளைக் களைந்திடும் தூய்மையான - நேர்மையான - மக்கள் எழுச்சி இயக்கம் உருவாகிவிடக் கூடாது என்ற உள்நோக்கத்தோடுதான் ஆட்சியாளர்களும், தேர்தல் ஆணையமும் இணைந்து கட்டாயம் வாக்களியுங்கள் என்று வற்புறுத்துகிறார்கள். இந்தக் கட்டாய வாக்குப்பதிவு பரப்புரை இந்தியா விலேயே காசுமீரிலும் தமிழ்நாட்டிலும்தான் மிகுதியாக நடைபெறுவதாகப் பார்வையாளர்கள் கூறுகிறார்கள். விழிப்புணர்வு பெற்றுவரும் தமிழர்கள் இதைக் கவனிக்க வேண்டும்.

பா.ச.க.வைச் சேர்ந்த எச். இராசா என்பவர், பாரத மாதாவுக்கு ஜே சொல்லாதவர்கள், வந்தே மாதரம் சொல்லாதவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று சொல்லுமளவுக்கு அவருக்குத் துணிச்சல் தந்தது எது?

ஏமாளித் தமிழர்களின் கடந்த காலத் தவறுகள்தாம் - எச். இராசா போன்ற ஆரிய - பார்ப்பன வந்தேறிகளுக்கு அவ்வாறான துணிவைத் தந்தது.

“சொல்” மிகக் கூர்மையான ஆயுதம் என்பதைத் தமிழர்களில் கணிசமானோர் உணராமல் போனார்கள். தமிழர் தாயகத்தில் குடியேறிய ஆரியப் பார்ப்பனர்கள் முதலில் தமிழர் தெய்வங்களின் பெயர்களை மாற்றினார்கள்.

சிவபெருமானை - ஷிவா என்றார்கள், திருமாலை -  விஷ்ணு என்றார்கள் ஏற்றுக் கொண்டோம்.

தீயாடியப்பரை - அக்னீசுவரர் என்றார்கள். அறம் வளர்த்த நாயகியை - தர்மசம்வர்த்தினி என்றார்கள் ஏற்றுக் கொண்டோம்.

மயிலாடுதுறை - மயூரம் என்றார்கள். முதுகுன்றத்தை - விருத்தாச்சலம் என்றார்கள் - ஏற்றுக் கொண்டோம்.

பின்னர், தமிழர்களைச் சூத்திரர்கள் என்றார்கள் - பஞ்சமர் என்றார்கள் - ஏற்றுக் கொண்டோம்.

ஆரியப் பார்ப்பனர்கள் தங்களை “சாமி” என்று சொல்லச் சொன்னார்கள், ஏற்றுக் கொண்டோம்.

பின்னர், இந்தியாவை - பாரதம் என்றார்கள் - ஏற்றுக் கொண்டோம். இப்போது, பாரத் மாதா கீ ஜே  - போடு இல்லையேல் தமிழ்நாட்டை விட்டு ஓடு என்கிறார்கள்.

பாரத் மாதா என்று உச்சரிப்பவன் தமிழன்னையை மறுக்கிறான் என்று பொருள்!

சொற்களில் அயல் மோகம் ஏற்பட்டால் - நாம் அடிமைகள் ஆகி விடுவோம் என்பதற்கு ஆரியப் பார்ப்பனியம் சமற்கிருதத்தைத் திணித்ததையும் நம்மவர்கள் அதை ஏற்று அடிமையானதையும் இனம் கண்டு திருந்தவேண்டும்.

“பாரத மாதா சொல்லாதே! - தமிழன்னையைக் கொல்லாதே!’’, “வந்தே மாதரம் சொல்லாதே -  வந்தேறிகள் அடிமை ஆகாதே!’’ என்று ஒவ்வொரு தமிழனும் தமிழச்சியும் முழங்க வேண்டும்.

அதேவேளை ஆங்கிலத்திற்கும் அடிமை ஆகாமல் விழிப்படைய வேண்டும்.

அம்மா - மம்மி ஆகி வருகிறார். அப்பா - டாடி ஆகி வருகிறார். சோறு - ரைஸ் ஆகிவிட்டது. சமற்கிருதத்தை மறுத்தால், ஆங்கிலத்தின் வழியே ஆரியப் பார்ப்பனர்கள் தமிழர்களை அடிமைப் படுத்துவார்கள்! எச்சரிக்கை!

ஒரு தமிழ்ச்சொல் மறைந்து - அதனிடத்தில் அயல் சொல் வரும்போது, நாம் அயலார்க்கு அடிமையாகத் தொடங்குகிறோம் என்பதே தமிழர்களுக்கு வரலாறு தந்துள்ள படிப்பினை!

தமிழர் மறுமலர்ச்சிக் காலம் வள்ளலாரிலிருந்து தொடங்குகிறது என்கிறீர்கள். வள்ளலார் புலால் மறுப்பைத் தம் கொள்கையாக்கினார். இப்போது, ஆர்.எஸ்.எஸ். - பா.ச.க. குழாம் மாட்டுக்கறி சாப்பிடத் தடை போடுகிறது. இந்தப் புள்ளியில் வள்ளலாரும் ஆர்.எஸ்.எஸ்.காரர்களும் ஒரே இடத்தில் நிற்பது போல் தோன்றுகிறதே?

உயிர்க்கொலைக் கூடாது என்ற அனைத்துயிர் நேய அடிப்படையில் ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, கோழிக்கறி, மீன் உள்ளிட்ட புலால் உணவு கூடாது என்றார் வள்ளலார்.

ஆர்.எஸ்.எஸ். - பா.ச.க. பார்ப்பனியத் தலைமை பசுமாட்டுக் கறி மட்டும் சாப்பிடாதீர் என்கிறது. காளை மாட்டுக்கறி சாப்பிடுவதை பா.ச.க. தடுக்கவில்லை.

தமிழர் ஆன்மிகத்தில் பாகுபாடு கிடையாது. மனிதப் பிறப்பில் வர்ணாசிரமம் கற்பித்து மேல் கீழ் என்று தமிழர் ஆன்மிகம் பாகுபாடு காட்டவில்லை. அதேபோல் உயிர்க்கொலை கூடாது என்பதிலும் பாகுபாடு காட்டவில்லை. பார்ப்பனியம் மனிதப் பிறப்பிலும் உயர்வு தாழ்வு கற்பித்து பாகுபாடு காட்டுகிறது; உயிர்க்கொலை கூடாது என்பதிலும் பசுக் கொலை மட்டும் கூடாது என்கிறது.

உயிரின உணவு முறை,- உலகெங்கும் நிலவும் சமூக நிலை அனைத்தையும் கணக்கில் கொண்டு, புலால் உண்பதும், புலால் மறுப்பதும் அவரவர் விருப்பம் என்கிறோம். அதே வேளை வள்ளலாரின் உயிர்நேயக் கோட்பாடும், பார்ப்பனியத்தின் பசு நேயக் கோட்பாடும் ஒன்றல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

சமூக வலைத்தளங்களில் தருக்கம் புரியும், தமிழ்த் தேசியத் தோழர்களில் சிலர், சட்டப் பேரவைத் தேர்தலைப் பயன்படுத்தி ஆட்சிக்குப் போக வேண்டும் என்றும், ஆட்சி நடத்தும் போது நமக்கான உரிமைகளை இந்திய அரசு கொடுக்கவில்லை என்றால் தமிழ்நாட்டைத் தனியே விட்டுவிடு என்று கேட்கலாம் என்றும் கூறுகிறார்கள். அப்போது மக்கள் நம் பக்கம் நிற்பார்கள் என்றும் கூறுகிறார்களே!

இந்திய அரசமைப்புச் சட்டம் செயலுக்கு வந்த 1950 சனவரி 26-லிருந்து இன்றுவரை இந்தியா, தமிழ் நாட்டிற்கான இன, மொழி உரிமைகளை, இறையாண்மையுடன் அதிகாரம் செலுத்தும் உரிமை களை வழங்கவில்லை என்பதை இந்தத் தோழர்கள் ஏற்கவில்லையா?

இவர்கள் ஆட்சிக்குப் போய், உரிமை கேட்டு அதை இந்திய அரசு கொடுக்கவில்லை என்றால்தான், இந்தியாவுக்குத் தமிழ்நாடு அடிமையாய் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வார்களா?

தி.மு.க. 1963-இல் தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிடும்போது, சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று ஆட்சி அமைத்து அதன் வழியாகத் தனிநாடு பெறுவோம் என்றார் அண்ணா!

1967-இல் முதலமைச்சரான அண்ணா, இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கைதான் தி.மு.க. அரசின் வெளியுறவுக் கொள்கை என்றார். இந்திய அரசுக்கும் மாநில அரசுக்குமான அதிகாரங்கள் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றார். விடுதலை கேட்க வில்லை.

அண்ணாவுக்குப் பின் ஆட்சிக்கு வந்த கலைஞர் கருணாநிதி மாநில சுயாட்சி (தன்னாட்சி) கோரினார். பிறகு, சொல்லாமல் கொள்ளாமல் ஊறுகாய்ப் பானையில் மாநில சுயாட்சியைப் போட்டுவிட்டு இந்திய ஏகாதிபத்தியக் கட்சிகளான காங்கிரசோடும், பா.ச.க.வோடும் கூட்டுச் சேர்ந்தார். நடுவண் அரசிலும் பங்கேற்றது தி.மு.க.

ஐந்து தடவை மாநில ஆட்சியைப் பிடித்த கருணாநிதி புதிதாக என்ன உரிமையைப் பெற்றார்? இந்திய ஏகாதிபத்தியக் கொடியை ஏற்றும் உரிமையைத் தான் அவர் பெற்றார்!

தமிழ்நாட்டுக்கான புதிய உரிமை எதையும் பெறவில்லை; ஏற்கெனவே இருந்த சில உரிமை களையும் இழந்தார்.

இன்னொரு தி.மு.க.வாக, இன்னொரு கருணாநிதி யாக உருமாறிட வேண்டுமானால் தமிழ்நாடு சட்டப்பேரவைக்குப் போகலாம்!

தமிழ்நாட்டு விடுதலையில், உண்மையான, நேர்மையான அக்கறை உள்ளவர்கள் தமிழ்நாட்டுக் கங்காணி ஆட்சிக்குப் போக மாட்டார்கள்.

இந்தியப் பேரரசு - தனது மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தை மேலும் வலிவடையச் செய்து அதிகாரத்தைக் குவித்துக் கொண்டுள்ளது. அதன் முப்படை வலிமை உலக வல்லரசுகளுடன் ஒப்பிடும் அளவிற்கு வளர்ந்து கொண்டுள்ளது. இந்நிலையில் மக்கள் எழுச்சியின் மூலம் தமிழ்நாடு விடுதலை யைத் தமிழர்களால் அடைந்திட முடியுமா?

உலக வரலாற்றையும் இந்தியத் துணைக் கண்ட வரலாற்றையும் எடுத்துப் பாருங்கள்! ஐரோப்பாவையே ஒரு குடைக்குள் வைத்து அரசாண்ட வலிமைமிக்க பிற்கால ரோமப் பேரரசு எங்கே? அதிலிருந்து பிரிந்துதான் இங்கிலாந்து, பிரான்சு என நாடுகள் உருவாயின.

இன்று வலிமை மிக்க வல்லரசாக விளங்கும் பிரிட்டனிலிருந்து வெளியேற ஸ்காட்லாந்து கோரிக்கை வைத்து, அதற்கான கருத்து வாக்கெடுப்பும் அனுமதிக்கப்பட்டது.

பிரிட்டன் மக்கள் தொகை 6,31,81,775; அதில் ஆங்கிலம் பேசும் இங்கிலாந்தின் மக்கள் தொகை 5,30,12,456; ஸ்காட்லாந்து மக்கள் தொகை 52,95,000 (2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி).

அமெரிக்க வல்லரசுக்கு அறைகூவல் (சவால்) விடும் அளவிற்குப் படைத்துறையிலும் அறிவியல் துறையிலும் வளர்ச்சி அடைந்திருந்த சோவியத் ஒன்றியம் 1991-இல் பதினைந்து நாடுகளாகப் பிரிந்தது.

இந்தியத் துணைக் கண்டத்தை எடுத்துக் கொண்டால் மிகவும் வலிமை வாய்ந்த குப்தப் பேரரசு இருந்தது. அதன்பிறகு அதைவிட மிகவும் வலிமை வாய்ந்த மொகாலயப் பேரரசு தில்லியைத் தலைநகராகக் கொண்டு இருந்தது. அவையெல்லாம் எங்கே?

இப்பொழுதுள்ள இந்தியப் பேரரசுக்கும் மேற்கண்ட பேரரசுகளுக்கு ஏற்பட்ட கதிதான் ஏற்படும்.

இந்திய விடுதலைப் போராட்டம் தொடங்கப்பட்ட காலத்தில், சூரியன் மறையாத பிரித்தானியப் பேரரசை எதிர்த்து விடுதலை பெற முடியுமா என்று பலரும் பேசினர். ஆனால் பிரித்தானியா இந்தியாவை விட்டு வெளியேறியது.

இந்தியா பல தேசங்களின் கூட்டமைப்பே தவிர ஒரே தேசமல்ல. தமிழர்கள் மட்டுமின்றி, வேறு பல தேசிய இனங்களும் தங்கள் அரசை உருவாக்கிக் கொள்ளும் பேராவலில் இருக்கின்றன. இவற்றில் சிலவற்றின் குரல் வெளியே கேட்கிறது. வேறு சிலவற்றின் குரல் மனத்திற்குள் பேசிக் கொள்வதாக இருக்கிறது.

ஐயம் வேண்டாம்; வரலாறு தமிழர்களுக்கான தேசத்தைப் படைக்கும்! நம்பிக்கையோடு தமிழ்த் தேசியத்தை வளர்த்திடுங்கள்!

இந்தியா முழுவதும் ஒரே அரசியல் நிலைபாடு எடுப்பதில் சி.பி.எம். கட்சிக்கு நிகர் சி.பி.எம். கட்சியே என்று சொல்லிக் கொண்டார்கள். இப்போது, அக்கட்சி சட்டப்பேரவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் காங்கிரசுடன் கூட்டணி - கேரளத்தில் காங்கிரசுடன் போட்டி என்று முரண்பட்ட நிலை எடுத்துள்ளதே?

எத்தனைக் காலம்தான் புறநிலை உண்மைகளுக்கு முரணாக இந்தியத் தேசியப் புருடா விட முடியும்? இந்தியா ஒரு தேசமல்ல; இது ஒரு துணைக் கண்டம்! இதில் ஒற்றை அரசியல் நிலைபாடு எடுக்க முடியாது என்பதைத் தமிழ்த் தேசியராகிய நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

மேற்கு வங்கத்திலும் கேரளத்திலும் தலைவலி வந்தால் உடனே அனைத்திந்திய அரசியல் நிலை பாட்டை சி.பி.எம். தலைமை மாற்றிக் கொள்ளும். தமிழ்நாட்டிலிருந்து தனித்தன்மை வாய்ந்த சிக்கல் ஒன்றைப் பேசினால், அது சி.பி.எம். தலைமையில் எடுபடாது. அப்படிப் பேசக் கூடிய ஆற்றல்மிகு தலைமையும் தமிழ்நாட்டில் இல்லை.

சி.பி.எம். - காங்கிரசு இரண்டுமே ஒற்றைப் பாரத ஒப்பாரி வைக்கும் கட்சிகள். அவை மேற்கு வங்கத்தில் ஓர் அரசியல் நிலைபாடும் கேரளத்தில் அதற்கு நேர் மாறான நிலைபாடும் எடுக்கின்றன. எல்லாக் கசடு களையும் வரலாறு என்னும் ஆறு சுமந்து செல்கிறது.

தமிழ்நாட்டில் தி.மு.க.விலிருந்து அ.தி.மு.க.வுக் கும் அ.தி.மு.க.விலிருந்து தி.மு.க.வுக்கும் பிரமுகர்கள் கட்சி மாறிக் கொள்வது போல், மேற்கு வங்கத்தில் சி.பி.எம். கட்சியிலிருந்து திருணாமூல் காங்கிரசுக்கும் திருணாமூல் காங்கிரசிலிருந்து சி.பி.எம். கட்சிக்கும் மாறிக் கொள்கிறார்களாமே, உண்மையா?

உண்மை தான்! திருணாமூல் காங்கிரசில் குறிப் பிடத்தகுந்த பிரமுகராக இருந்த ரபிக் உல் இஸ்லாம் என்பவர் தமக்குப் போட்டியிட வாய்ப்புத் தரவில்லை என்றவுடன், மேற்கு வங்கத்தின் பசிர்கட் உத்தர் என்ற தொகுதியில் இடது முன்னணி வேட்பாளராகி விட்டார். இடது முன்னணியிலிருந்து ஆறு சட்டப் பேரவை உறுப்பினர்கள் அண்மையில் திருணாமூல் காங்கிரசுக்கு மாறியுள்ளார்கள்.

அடைய வேண்டிய சமூக இலட்சியம் - அதற்கான பயணம் மட்டுமே அரசியல் என்ற வரையறை இல்லாத கட்சிகளில் பதவிக்காக அணிமாறுவது இயல்பானதே!

செயலலிதா கொளுத்தும் வெயிலில் நடத்திய தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் வெயில் கொடுமை தாங்காமல் நான்கு பேர் இறந்து விட்டார்கள். பலர் மயக்கம் போட்டு மருத்துவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள். இதற்கு நடவடிக்கை கிடையாதா?

கோமாளித்தனங்களில் மட்டும்தான் தேர்தல் ஆணையம் குதூகலம் கொள்கிறது. தேர்தல் ஆணையம் பொறுப்புணர்ச்சியும் மக்கள் மீது அக்கறையும் கொண்டதாக இருந்தால், செயலலிதா மீதும் மேற்படிக் கூட்டங்களை ஏற்பாடு செய்தவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

கட்டடம் கட்டும் போது அது இடிந்து உயிர்ப்பலி ஏற்பட்டால் கட்டுமானப் பணிப் பொறுப்பாளர்கள் மற்றும் கட்டட உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்து தளைப்படுத்தும் காவல்துறையினர், இந்த நால்வர் உயிர் பறிப்புக்கு என்ன சொல்கின்றனர்?

வழக்கத்தைவிட மிகக் கொடிய வெப்பம் தாக்கும் காலத்தில் காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணி வரை திறந்தவெளிக் கூட்டங்கள் நடத்த யாருக்கும் அனுமதி வழங்கக் கூடாது. இது போன்ற உயிர்க்காப்பு சிக்கல்களிலும் தேர்தல் ஆணையம் தலையிட வேண்டும்.