அன்புள்ள ஆசிரியருக்கு,

ஜூலை மாதச் செம்மலரில் ‘நாட்டுப்புறம்’ என்ற சொல் ஆறாம் வகுப்புத் தமிழ்ப்பாடப் புத்தகத்தில் ‘நாட்டுப்புரமாக’ மாற்றப்பட்டது குறித்து எழுதியிருந்தேன்.

அந்த விவாதம் செம்மலரில் நிற்காமல் தொடர்வது கண்டு மகிழ்கிறேன். தோழர் தி. வ. அவர்களுக்கு நன்றி.

இறுதியாக்கப்பட்ட பாடப்பிரதிகள் இன் றும் எங்கள் கைவசம் உள்ளன. அந்தப் பாடப் பிரதிகளில் ‘நாட்டுப்புறமே’ உள்ளது. அச்சுக்குப் போகுமுன் இதை ‘நாட்டுப்புரம்’ ஆக்கியவர் யார் என்ற மர்மம் இன்னும் விளங்கவில்லை.

நானும் பலமுறை கல்வித்துறையைத் தொடர்பு கொண்டு கேட்டுப் பார்த்துவிட்டேன். ஒரு மூத்த அமைச்சரின் அலுவலகக் கோப்புகளில் எல்லாம் நாட்டுப்புறம் என்பது நாட்டுப்புரமாக எழுதப்படுகிறது என்ற வாய்மொழிப் பதில்தான் கிடைத்துள்ளது. இதுதான் நேரடியான பதிலா என்பதும் தெரியவில்லை.

நாட்டுப்புரம் என்ற சொல்லைத்தான் தமிழக அரசு அங்கீகரிக்கிறதா? அல்லது இதைப் பிழை யென ஒப்புக்கொண்டு திருத்தம் செய்யப் போகிறதா?

தமிழக அரசிடம் இருந்து ஒரு நேர்மையான பதிலை எதிர்பார்க்கிறோம்.

- ச.மாடசாமி, மதுரை - 3.

(சமச்சீர் கல்வி 6ஆம் வகுப்புத் தமிழ்ப்பாட நூல் உருவாக்கத்தில் பங்கேற்றவன்)

 *******

 அன்புள்ள ஆசிரியர்க்கு, வணக்கம்.

செம்மலர் ஆகஸ்ட் இதழ் படித்தேன். அதில் தி. வரதராசன் அவர்கள் எழுதிய நாட்டுப் புறமா நாட்டுப்புரமா என்ற கட்டுரை விவாதத்திற் குரியதாக இருந்தது.

அந்த விவாதத்தில் இரண்டு அம்சங்கள் உள்ளன. ஒன்று முன்னோர் மொழி பொருளைப் பொன்னே போல் போற்றுதல், மற்றொன்று காலம் எவ்வளவு கடந்தாலும் எது சரியென ஆய்வு செய்து காய்தல் உவத்தல் இன்றி ஏற்றுக் கொள்ளுதல். முதலாவது பாதையென்றால் நாட்டுப்புறம் என்பதையே சரியெனக் கொள்ளலாம்.

இரண்டாவது பாதையென்றால் இந்தச் சொல்லாட்சி எதற்காக என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும்.

நாட்டுப்புறம் என்றால் நாட்டுக்கு வெளியே என்பது பொருள். இந்தச் சொல்கூட country side என்ற ஆங்கிலச் சொல்லுக்கு ஈடாக உருவாக்கப்பட்டது. அந்த ஆங்கிலச் சொல்லுக்கு விளக்கம் கிராமப் பகுதியின் நிலம் அல்லது இயற்கைக் காட்சி என்பதாகும். இதிலிருந்துதான் நாட்டுப்புறத்தான் என்ற சொல் உருவாக்கப்பட்டது. இதற்கு கிராமப் பகுதியில் பிறந்த அல்லது வசிக்கும் நபர் என்பது பொருளாகும்.

இதிலிருந்து முற்றிலும் வேறு பட்டது folk. இந்தச் சொல்லுக்கு பொதுவான பொருள் மக்கள். என்றாலும் பண்புப் பெயராக வரும்போது ஒருகுறிப்பிட்ட இனத்தின் அல்லது தேசத்தின் பாரம்பரியக் கலை அல்லது கலாச்சாரம் folk- (adj) relating to the traditional art or culture of a community or nation (பார்க்க - ஆக்ஸ்போர்ட் அகராதி)

இதிலிருந்து தான் folk songs, fock dance, folk Arts எனப் பல சொற்கள் கிடைத்துள்ளன. எடுத்துக் காட்டாக folk dance என்பதற்கு a popular dance considered as part of the tradition of a particular people or area ஒரு குறிப்பிட்ட மக்கள் அல்லது நிலப்பரப்பினது பாரம்பரியத்தின் பகுதியாக இந்த நடனம் கருதப்படுகிறது என்பது இதன் பொருள்.

 அப்படியென்றால் மக்கள் பாடல்கள், கலைகள், ஆட்டங்கள் என்றோ பாரம்பரிய பாடல்கள், கலைகள், ஆடல்கள் என்றோதான் இதற்குப் பெயர் கொடுக்க வேண்டும். ஏறத்தாழ இந்தப் பொருள் பொதிந்ததாகத்தான் நாட்டார் பாடல்கள், நாட்டார் வழக்காற்றியல் என்று முன்பு பெயர் கூறப்பட்டுள்ளது. இவற்றை மறுதலித்து நாட்டுப் புறவியல் என்று பெயர் சூட்டியது பொதுவாக கிராமச் சூழலை ஆய்வு செய்வது என்றாகும். நாட்டுப்புரம் பொருளற்றது என் பதைப்போலவே நாட்டுப்புறவியல் என்பதும் சரியான பொருள் தருவதாகாது.

எனவே மீண்டும் பழைய சொல்லாட்சி யைப் பயன்படுத்துவதுதான் பொருள் பொதிந் ததாக இருக்கும். இல்லையென்றால் பொருளற்ற ஒரு சொல்லைப் பொருள் உள்ளது போல் போலி யாகப் பயன்படுத்திக் கொண்டே இருக்கலாம்.

‘நினைவு கூறுவோம்’ என்ற சொல்லா ட்சிக்கு என்ன பொருள்? இட்டுக் கட்டி என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், அது பொரு ளாகாது. நினைவு கூர்வோம், என்பதில் உள்ள கூர் என்பதற்கு மிகுதி என்ற பொருள் இருப்பதை அறியாததால் சொல்லப்படுவது. பிரச்னையா? பிரச்னைய? பிரச்சனையா? கருப்பா? கறுப்பா? தொழில்துறையா? தொழிற்துறையா? என்பது போன்று சிக்கல் தொடரும் சொல்லாட்சிகள் நிறையவே இருக்கின்றன. பொருள் புரியாமை; வேர்ச்சொல் அறியாமை என பல வகைக் காரணங்களும் இருக்கின்றன. இப்படித்தான் நாட்டுப்புறவியலும் ஆகிவிட்டது.

எனவே நாட்டுப்புறமா? நாட்டுப்புரமா என்று பட்டி மண்டபம் ஏறுவதைவிட மெய்யான பொருள் கொண்ட தமிழர் நாட்டுப் பாடல்கள், நாட்டார் வழக்காற்றியல் என்ற சரியான சொல் லாட்சிகளைப் பயன்படுத்துவதில் முனைப்பு காட்டலாம்.

- மயிலை பாலு

சென்னை- 42

 ***** 

அர்த்தத்திற்கு வெளியே. . .

‘நாட்டுப்புறம்’ எனும் சொல்லில் உள்ள சொல்லின் பகுதியாகிய ‘நாடு’ என்பதை விரிந்த எல்லைகளும் ஆளுகையும் கொண்ட தேசமாகவும் ‘புறம்’ என்பதை ‘வெளியே’ என்றும் பொருள் கண்டால் அது நாட்டுப்புறத்தை ‘நாட்டுக்கு வெளியே’ என்றுதான் தவறான அர்த்தத்திற்கும் விளக்கங்களுக்கும் இட்டுச் செல்லும். COUNTRY என்றால் ‘நாடு’ மட்டுமல்ல, கிராமப்புறமும்தான். தோழர் மயிலை பாலுவே கூறுவதுபோல் COUNTRYMAN என்றால் கிராமத்தான் என்பதுதான். இந்த இடத்தில் COUNTRY என்பது நாடாக இல்லாமல் கிராமமாகவே உள்ளது. அதுபோல COUNTRYSIDE என்பதும் நாட்டுக்கு வெளியே அல்ல, நாட்டுப்புறம்தான் - கிராமப்புறம்தான்.

நாட்டுப்புறம் என்பது நமது மக்களின் சொல். ஆங்கிலச் சொல்லின் தமிழ் வடிவம் அல்ல. அதனால், நாட்டுப்புறத்தை ஆங்கிலத்தின் வழி அர்த்தம் காணவேண்டியதில்லை.

‘நாட்டுப்புறம்’ என்பது ஒரு மரபு சார்ந்த சொல். அதை அப்படியே வார்த்தைப் பொரு ளாகப் பார்க்காமல் உணர்த்துப் பொருளாகப் பார்க்க வேண்டும்.

கிராமவாசியைப் போலவே நாட்டுப் புறமும் ஓர் எளிமையான சொல். அதற்கு வலிந்த வார்த்தைகளோடு பொருள் காணப் புகுந்தால் சரியான பொருள் வெளியேதான் தள்ளப்பட்டு விடும்!

தமிழக அரசு சார்பிலான தஞ்சை பெரிய கோவில் ஆயிரம் ஆண்டு நிறைவு விழாவின் நிகழ்ச்சி நிரல் பற்றிய அரசின் செய்திக்குறிப்பு 11. 9. 2010 தேதிய முரசொலியில் வெளியாகி யிருந்தது. அதில் மூன்று இடங்களில் சரியான வடிவத்தில் ‘நாட்டுப்புறம்’ எனும் சொல் இருந்தது. அது -

“. . . ஆகிய ஐந்து இடங்களில் நாட்டுப்புறக் கலைஞர்களின் சங்கமம் நிகழ்ச்சிகளும் நடை பெறவுள்ளது”.

“இந்த நாட்டுப்புற நிகழ்ச்சிகளில் மொத்தம் 1000 கலைஞர்கள் கலந்து கொள்வார்கள்”

“மதுரை முத்து குழுவினர் வழங்கும் நாட்டுப்புற நிகழ்ச்சிகளும்”

-இந்த வாசகங்களில் நாட்டுப்புறம் நாட்டுப்புறமாகவே உள்ளது.

சமச்சீர்க் கல்வி ஆறாம் வகுப்பு தமிழ்ப்பாட நூலில் உள்ள திருத்தப்பட்ட ‘நாட்டுப்புர’த்திற்கு அரசின் அங்கீகாரம் இல்லை போலும்!

- தி. வரதராசன்