பால் பிடித்துப் பசியகற்ற
மண் கீறிக் கிளம்பும்
நெல்லின் சிறு நாற்றாய்
வாழ்த்துச் சொல்லெடுத்து
பசுமையாய்ப் படர்கிறது
புத்தாண்டிற்கான வரவேற்பு!

நள்ளிரவின்
மையிருட்டு கிழித்து
மலரும் புத்தாண்டே .....
வறுமை இருட்டு விரட்டும்
வெளிச்சக் கீற்றுக்களோடு
விரைந்தோடி வா!

உன் பயணக் குறிப்புகளில்
மண் பயனுறும்
மகத்தான கணங்களாய் .....
ஒவ்வொரு நொடியும் விடியட்டும்!
கடந்த காலங்களில்
நடந்த பாதைகளில்
இடறிய இடங்களை
அடையாளம் காணும்
அனுபவ அறிவை
புகட்டும் ஆசானாய்
புலர்ந்து வா புத்தாண்டே!

பொன்னான தேசத்தின் நெஞ்சில் புரையோடியிருக்கும்
‘ லஞ்சம்’ ‘ ஊழல்’ எனும்
புற்றுக் கட்டிகளை
அறுவை சிகிச்சை செய்திட
 அவதரித்து வா!

ஆழி சூழ் உலகில்
‘போலி’ முகங்களைப்
பொசுக்கும் நெருப்பாய்
கனன்று வா!

‘பசி’ பொதுவாகிய உலகில்
‘உணவை’யும் பொதுவாக்கு!
ஏழைகளின்
கரடு முரடான
வாழ்க்கைப் பாதையையும் மெதுவாக்கு!

‘கொலை’ ‘கொள்ளை’ என்ற
சொல்லில்லாத
யாசிப்பவனற்ற
தேசமிதுவென்ற செய்தியை
வாசிக்கும் வரம் கொண்டு
வருவாயா புத்தாண்டே?

 - கவி.வெற்றிச்செல்வி சண்முகம்