தமுஎகசவின் 12 ஆவது மாநில மாநாட்டை நோக்கி...

விருதுநகர் மண்ணுக்கே உரிய பாரம்பரியங்களும் பெருமை களும் நிறைய உண்டு.தமிழுக்கு நீதி கேட்டுத் தன் இன்னுயிரை ஈந்த தியாகி சங்கரலிங்கம் வாழ்ந்து மறைந்த ஊர். பெருந் தலைவர் என்று மக்களால் போற்றப்படும் முன்னாள் முதல்வர் காமராசர் பிறந்த ஊர். பொதுவுடமைக் கருத்துக்களைத் தன் வில்லிசை மூலம் தமிழகமெங்கும் பட்டிதொட்டியெல்லாம் பரப்பிய வில்லிசை வேந்தர் சாத்தூர் பிச்சக்குட்டி பெருவாழ்வு வாழ்ந்து மறைந்த பூமி. பன்மொழிப்புலவர் மு.கு.ஜகந்நாத ராஜா தன் பன்மொழி ஆளுமை வெளிப்படப் பலப்பல நூல் களை எழுதித்தந்த ராஜபாளையம் இந்த மாவட்ட்த்தில்தான் இருக்கிறது. மறைந்த எழுத்தாளர் கொ.ச.பலராமனும் இதே ராஜபாளையம்தான். எண்ணற்ற தொழிலாளர் போராட்டங் களையும் ஆங்கிலேயரின் அடக்குமுறைகளையும் சந்தித்த பூமி இது.சேதுபதி சீமையில் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வெடித்துக்கிளம்பிய உழவர் கலகத்துக்குத் தலைமை தாங்கிய சித்திரங்குடி மயிலப்பனின் வாள் சாத்தூர் தாலுகா அலுவலகத் தின் சுவர்களை மோதி உடைத்த சத்தம் இன்னும் காற்றில் ரீங்கரித்து நிற்கிறது. பொதுவுடைமை இயக்கத்தோழர்களின் தலை மறைவு வாழ்க்கைக்கு அடைக்கலம் தந்த ராஜபாளையம், வத்திராயிருப்பு - மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மறை வாக அவர்கள் காய்ச்சிய கஞ்சியிலிருந்து எழுந்த கொதிக்கும் ஆவி இன்னும் அங்கே கசிந்து வந்து கொண்டிருக்கிரது.

வைப்பாறும் அர்ஜூனா நதியும் குண்டாறும் வெறும் மணல் நதிகளாகவே மக்களுக்கு வெக்கையை வாரி வழங்கிக் கொண்டிருக்கும் இக் கந்தகபூமியில் பட்டாசும் தீப்பெட்டியும் பிரதான தொழில்களாகி எத்தனையோ ஏழைக்குழந்தை உழைப் பாளிகளைக் கருமருத்துக்குத் தின்னக்கொடுத்த சோக காவியங் கள் இங்கு உலவும் காற்றில் கலந்திருக்கின்றன. காற்றில் கரைந்த இக் கதைகளைத் தம் எழுத்தில் இறக்கித்தந்த நம் பெருமை மிகு படைப்பாளிகள் ப.சிங்காரம், மேலாண்மை பொன்னுச் சாமி,எஸ்.ஏ.பெருமாள், தனுஷ்கோடி ராமசாமி, எஸ்.இலட்சுமணப்பெருமாள், மே.சு.சண்முகம், ச.தமிழ்ச்செல்வன்,கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன், ச.மாதவன், மாதவராஜ், எஸ்.காமராஜ், கொ.மா.கோதண்டம், ஆனந்தி, திலகபாமா, பாரததேவி, ச.முருகபூபதி, ஸ்டெல்லா புரூஸ், லட்சுமிகாந்தன், மணிமாறன், ஜனகப்ரியா, எஸ்.ரவிச்சந்திரன், வேலாயுதம் பொன்னுச்சாமி, விமலன், தமிழ்க்குமரன், சுந்தரமகாலிங்கம், கவிஞர் கே.சண்முகம், நந்தன்(ஆல்பர்ட்), பால்ராஜ், சண்முகவேல், ச.வெங்கடாசலம், முத்து பாரதி, மறைந்த சாத்தூர் அழகர்சாமி, ஆதிசேஷன், தேசநேசன், நந்தன் கனகராஜ் எனப் பலரையும் படைத்தளித்த பூமி. வ.புதுப்பட்டி என்கிற ஒரு ஊரிலிருந்து மட்டும் பாமா, ராஜ் கவுதமன், ஜனக ப்ரியா, குமணன், ஜகந்நாதன் எனத் தமிழின் மிக முக்கியமான படைப்பாளிகள் வந்துள்ளனர். ஒரு காலத்தில் சாத்தூர்தான் தமிழகத்து எழுத்தாளர்களுக்கெல்லாம் பேனா நிப்புகள் தயாரித்து வழங்கியது என்பது இன்று மறந்துபோன கதையாகிவிட்டது. அறிவொளி இயக்கத்தில் தமிழகத்துக்கே பல முன்மாதிரிகளை உருவாக்கிய பேராசியர் ச.மாடசாமியின் தலைமையிலான பெரும்படை வீறு கொண்டு செயல்பட்டதும், இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் முளைகிளம்பி எழுந்ததும் இந்த மண்ணில்தான்.

எல்லாவற்றுக்கும் மேலாகத் தன் பாலியல் உணர்வுகளை படைப்பில் வெளிப்படுத்திய முதல் பெண் கவிஞரான ஆண்டாள் நடந்து திரிந்த திருவில்லிபுத்தூரும் இதே மண்ணில்தான். ஆதி மனிதர்கள் வாழ்ந்த தடயங்களாக முதுமக்கள் தாழி களையும் புதிய கற்கருவிகளையும் கொண்ட ஆவியூர், தேவதானம், திருத்தங்கல் போன்ற தொல்லி யல் நினைவுகளைச்சுமந்து நிற்கும் ஊர்களும் இங்குண்டு. கு.அழகிரிசாமியின் உலகப்புகழ் பெற்ற சிறுகதையான வாசகர் நெஞ்சங்களை உலுக்கும் திரிபுரம் கதையின் நிகழ்களனாக அமைந்ததும் சாத்தூர்தான்.

இத்தனை பண்பாட்டுப் பாரம்பரியமும் இலக்கியப் படைவரிசையும் கொண்ட வளமிக்க விருதுநகர் மாவட்டம்தான் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 12 ஆவது மாநில மாநாட்டை விருதுநகரில் நடத்தித் தரும் பொறுப்பை ஏற்றுள்ளது. சொலவடைகள் துள்ளிக் குதிக்கப் பேசும் சோர்விலாத உழைப்பாளி தேனி வசந்தன் செயலாளராகவும் சாத்தூர் கல்வியாளர் மெரிட் சுப்பாராஜ் அவர்கள் தலைவராகவும் தோழர் ரெங்கசாமி பொருளாளராகவும் கவிஞர் லட்சுமிகாந்தன் துணைச் செயலாளராகவும் பொறுப்பேற்ற ஒரு வலுவான வரவேற்புக்குழு மடை திறந்த உற்சாகத்தோடும் மாநாட்டைத் தம் ஊரில் நடத்தும் பெருமித உணர்வோடும் சுழன்று பணியாற்றி வருகிறது.

இந்திய அரசியல் வானில் கரிய மேகங்கள் சூழ்ந்து இருட்டைக் கொண்டுவந்த 1975 இல் அந்த இருட்டைக்கிழித்துப் பிறந்த இயக்கம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம். முதிர்ச்சியும் கனிவும் கலந்த அக்கறையோடு இந்த இயக்கத்துப் படைப்பாளிகளை அரவணைத்துத் தாய்க் கோழியாய்க் கூவி எமை வழி நடத்திச்சென்ற எம் தோழர் கே.முத்தையாவின் அகலாத ஈர நினைவுகளோடு அவருடைய வார்த்தைகளை நெஞ்சில் சுடராக ஏந்தி 11 மாநாடுகளைக் கடந்து இன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமாகப் புதிய பரிமாணமும் பரிணாமமும் பெற்றுப் 12 ஆவது மாநாட்டில் விருதுநகரில் கூடுகிறோம்.

1936இல் முன்ஷி ப்ரேம்சந்த்,கே.ஏ.அப்பாஸ் போன்ற முன்னணிப் படைப்பாளிகளால் வழி நடத்தப்பட்ட அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம், 40களில் தீவிரமாக இயங்கிய இந்திய மக்கள் நாடக மன்றம்(இப்டா),கவிஞர் தமிழ் ஒளியைச் செயலாளராகக்கொண்டு இயங்கிய தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம், சிகரம் செந்தில்நாதன் உள்ளிட்ட தலைவர்களால் முன்னெடுத்துச்செல்லப்பட்ட மக்கள் எழுத்தாளர் சங்கம் 60களின் முற்பாதியில் அமரர் ஜீவா அவர்களின் முன் முயற்சியால் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் போன்ற இயக்கங்களின் பாரம்பரியத் தொடர்ச்சியாகவும் அடுத்த கட்டமாகவும் எழுந்து நிற்கும் பண்பாட்டு இயக்கம் தமுஎகச.

தமிழ்க் கலை இலக்கிய உலகம் புறக்கணிக்க முடியாத ஒரு சக்தி தமுஎகச. மாநிலம் முழுக்கக் கிளைகள் பரப்பி இயங்கும் ஒரே கலை இலக்கிய அமைப்பாக -சொந்த மண்ணில் வேர்பரப்பி, சர்வ தேச இலக்கிய வெளிகளில் கிளைகள் பரப்பி நிற்கும் இயக்கமாகத் தன்னை நிறுவிக் கொண்டுள்ளது தமுஎகச. 

கலை இலக்கிய இரவு என்னும் புதிய மக்கள் செல்வாக்கு மிக்க ஒரு வடிவத்தை இந்த மண்ணுக்குத் தந்த இயக்கம் தமுஎகச. சோவியத் வீழ்ச்சியின் பின்னணியில் சோசலிச யதார்த்தவாதம் என்பதே செத்துவிட்டதாகவும் யதார்த்தவாதம் செத்துப்போனதாகவும் தமிழகத்து மூத்த படைப்பாளிகளெல்லாம்கூடக் குழம்பி நின்ற வேளையில் உறுதியான தத்துவ மண்ணில் காலூன்றி நின்று யதார்த்தவாதம் என்பது ஒரு வடிவமல்ல. அது ஒரு பார்வை - வாழ்க்கைக் கண்ணோட்டம் - தத்துவம் - அதன் உச்சகட்டமே சோசலிச யதார்த்தவாதம் என்று கொள்கைத்தளத்தில் போராடிய வரலாறு தமுஎகசவுக்கு உண்டு. படைப்பாளியைப் பார்த்துப் படைப்பைத் தீர்மானிக்காமல் படைப்பை முன்வைத்துத் தன் பார்வையை விரிக்கும் நடைமுறையை இந்த மண்ணில் உறுதியுடன் பற்றி நிற்கும் இயக்கமாகத் தமுஎகச தன்னை வளர்த்துக் கொண்டுள்ளது. அமைப்பில் பொறுப்புக்கு வருவது என்பது பதவி அல்ல அது ஒரு வேலைப் பிரிவினை மட்டுமே என்கிற புரிதலோடும் ஜனநாயக மாண்புகளோடும் மூன்று ஆண்டு களுக்கு ஒரு முறை கிளை மாநாடுகள் துவங்கி மாவட்ட /மாநில மாநாடுகள் வரை நடத்தித் தன்னைப் புதுப்பித்துக்கொண்டு வருகிறது.

நவீன தமிழ் இலக்கியத்தில் இன்று தடம்பதித்து வரும் படைப்பாளிகளின் கூட்டமைப்பாக இன்று தமுஎகச மிளிர்கிறது. சமூக ஆய்விலிருந்து நாவல், சிறுகதை, கவிதை, நாடகம், கூத்து எனச் சகல துறைகளிலும் தமிழகம் போற்றும் உன்னதமான ஆளுமைகளின் சங்கமிப்பாக தமுஎகச திகழ்கிறது. எவர் போட்டி நடத்தினாலும் தமுஎகச படைப்பாளிகள் விருதுகளை வென்று குவிக்கிறார்கள். அமைப்பும் படைப்பும் எதிரெதிரானவை என்கிற போலி வாதங்களைத் தவிடுபொடியாக்கி அமைப்பின் பலமும் படைப்பின் அழகும் ஒருசேர இணைந்து கம்பீரமாக எழுந்து நிற்கிறது தமுஎகச.

இலக்கிய அமைப்பாகப் புறப்பட்டு இன்று கலைஞர்களையும் சேர்த்துக்கொண்டு புதுப்பொலிவுடன் -    நாட்டுப்புறக் கலைஞர்களை அணி திரட்டும் அமைப்பாக -     நாட்டுப்புற ஆய்வுகள், ஆவணப்படுத்துதலில் முனைப்புடன் இறங்கி... • தெரு சினிமா இயக்கத்தை நோக்கிய ஒரு திரை இயக்கத்தை முன்னெடுத்து...

 •இளம் படைப்பாளிகளைப் புடம்போட்டுப் பட்டை தீட்டும் பயிலரங்குகளோடு...

 •சாதி மத பேதங்கள் ஒழித்து மக்கள் ஒற்றுமை காக்கும் படைப்புகளோடு...

 •விமர்சனம் சுயவிமர்சனம் என்கிற தராசில் படைப்புகளை காய்தல் உவத்தலின்றி எடை போட்டு...

 •கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே என்கிற மாறாத முழக்கத்தோடு...

- 2011 செப்டம்பர் 16,17,18 தேதிகளில் ஊடக அரசியல், மதவாத அரசியல் இவற்றுக்கு எதிராக தமிழ் அரசியலின் சாதகபாதகங்களை அலசும் ஒரு மாநாடாக இம்மூன்று முழக்கங்களோடு முன்னே வருகிறது மாநில மாநாடு. புதிய திசைகளைக் காட்டும் மாநாடாக... புதிய ரத்தம் பாய்ச்சும் மாநாடாக படைப்பு சக்தியைக் கட்டவிழ்த்து விடும் மாநாடாக பண்பாட்டு அரசியலை முன்னெடுக்கும் மாநாடாக... விருதுநகர் அழைக்கிறது - படைப்பாளிகளை அறைகூவி...