தேசத்தின் தென்முனையில் இருக்கும் கன்னியாகுமரி மாவட்டம் 1956 வரை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாய் இருந்த இம்மாவட்டம் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போது தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. 1684 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தில் சுமார் 17 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். எங்கு நோக்கினும் பசுமையாய் மலைகளும், காடுகளும், வயல் வெளிகளும், நீண்ட நெடிய கடற்கரைகளும் என இயற்கை வளம்மிக்க மாவட்டம்.

தமிழகத்திலேயே அதிக கல்வியறிவு கொண்ட இம்மாவட்டத்தில் மூன்று லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கிறார்கள். 19 கலை, அறிவியல் கல்லூரிகள், 26 பொறியியல் கல்லூரிகள், 14 பாலிடெக்னிக் என ஆண்டுதோறும் உயர்கல்வி முடித்து சுமார் 25 ஆயிரம் மாணவர்கள் வெளியேறு கின்றனர். இத்தகைய இளைஞர்களுக்கு எவ்விதமான வேலைவாய்ப்பும் இம்மாவட்டத்தில் இல்லை. இதனால் இவர்கள் மும்பை, திருப்பூர், சென்னை, பெங்களூர் என வெளிமாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் இடம்பெயர்ந்து வேலை தேடிச்செல்ல வேண்டிய அவலநிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், இயற்கை வளம்மிக்க இம்மாவட்டத்தில் கிடைக்கும் வளங்களைப் பயன்படுத்தி புதிய தொழிற்சாலைகளை உருவாக்கினால் இம்மாவட்டத்திலேயே பல்லாயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க இயலும். ஆனால் மத்திய, மாநில அரசுகள் இம்மாவட்டத்தை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.

தமிழகத்திலேயே ரப்பர் விளையும் மண்வளமிக்க பூமி இங்கு மட்டுமே உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் உள்ள விளவங்கோடு, கல்குளம், தோவாளை ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கில் நெடுமரங்களாக வளர்ந்து நிற்கும் ரப்பர் மரங்களிலிருந்து பால் வடிக்கும் தொழில்நுட்ப பணியில் சுமார் 25,000 தொழிலாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர். இதன் மூலம் தினசரி 40 முதல் 45 டன் ரப்பர் பால் கிடைக்கிறது. இது இந்தியாவின் மொத்த ரப்பர் உற்பத்தியில் 8 சதவீதம் ஆகும். இங்கு கிடைக்கும் ரப்பர் பால் உலகிலேயே மிகவும் தரமானது என தேசிய ரப்பர் வாரியம் குறிப்பிடுகிறது.

இத்தகைய ரப்பர் பால், ஷீட்டாகவும், பாலாகவும் தமிழகத்தின் பிற தொழில் மையங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு டயர், டியூப், பலூன்கள், கையுறைகள் முதலியன உற்பத்தி செய்யப்படுகின்றன. இம்மாவட்டத்தில் கிடைக்கும் ரப்பர் பாலை மூலப்பொருளாகக் கொண்டு கனரக ரப்பர் ஆலையை இம்மாவட்டத்தில் நிறுவினால் சுமார் 10,000 இளைஞர்களுக்கு வேலை கொடுக்க முடியும். இம்மாவட்டத்தில் கொட்டிக்கிடக்கும் இன்னொரு வளம் அரிய மணல். நீண்ட, நெடிய கடற்கரையைக் கொண்ட இம்மாவட்டத்தின் கடற்கரை பகுதிகளிலுள்ள மணலில் இலுமினைட், தோரியம், யுரேனியம், சிலிமினைட் மற்றும் சிலிக்கான் போன்ற அரிய கனிம வளங்கள் விரவிக்கிடக்கின்றது. மத்திய அரசு நிறுவனமான மணவாளக்குறிச்சி அரிய மணல் ஆலை இத்தகைய மணலிலிருந்து தாதுப் பொருட்களை பிரித்தெடுத்து அப்படியே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. அற்புத பொக்கிஷத்தை அற்ப விலைக்கு அந்நிய நாடுகளுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. இப்பகுதியிலேயே அணுசக்திக்கு தேவையான யுரேனியம், தோரியம் போன்றவற்றை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை உருவாக்குவதன் மூலம் இந்திய நாட்டு வளத்தை அந்நிய முதலாளிகள் சுரண்டுவதை தடுக்க முடிவது மட்டுமின்றி ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலையும் கொடுக்க முடியும்.

வானுயர வளர்ந்து அடி முதல் முடி வரை பலன் தரும் தென்னை மரங்களின் பூமி இது. இவைதரும் நாறும், கயிறும் அரிய பொருட்களும் எண்ணிலடங்காதவை. இதனை பயன்படுத்தி கயிறு தொழிற்சாலை அமைத்தால் பலநூறு பேருக்கு வேலை கொடுக்க முடியும். தோவாளை பகுதிகளில் உற்பத்தியாகும் மலர்களைக் கொண்டு நறுமணப் பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கலாம். இம்மாவட்டத்தில் கிடைக்கும் முக்கனிகளான மா, பலா, வாழைப் பழங்களை பயன்படுத்தி பழச்சாறு உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அமைக்கலாம்.

இவையனைத்திற்கும் முத்தாய்ப்பாய் இயற்கையிலேயே ஆழமான கடற்கரையைக் கொண்ட குளச்சலில் வர்த்தகத் துறைமுகம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை இம்மாவட்ட மக்களால் நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இக் கடற்கரை இயற்கையாகவே 20 மீட்டர் ஆழமான கடற்கரையைக் கொண்டிருப்பதால் கனரக பெட்டக வசதியுடன், மற்ற நாடுகளுக்கும் சரக்கு எடுத்துச் செல்ல வசதியான துறைமுகம் அமைக்க முடியுமென 2001ஆம் ஆண்டு மலேசிய நிறுவனம் ஒன்று தமிழக அரசிற்கு அறிக்கை கொடுத்துள்ளது. உலகத்தரம் வாய்ந்த துறைமுகங்களான சிங்கப்பூர், துபாய், கொழும்பு போன்ற துறைமுகங்களை விடவும் அதிகமான வசதிகள் குளச்சலில் இருப்பதாக அவ்வறிக்கை சுட்டிக்காட்டியது. 1,00,000 டன் எடை கொண்ட சரக்குகளைக் கொண்டு வரும் கப்பல்கள் இப்பகுதிக்கு எளிதாய் வந்து செல்ல முடியும். தமிழகத்தின் பிற துறைமுகங்களில் இத்தகைய வசதிகள் இல்லையென்பது குறிப்பிடத் தக்கது.

நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஏ.வி.பெல்லார்மின் அவர்களின் கடும் முயற்சியால் மத்திய அரசு குளச்சல் துறைமுகம் குறித்த விரிவான திட்ட அறிக்கையும், விரிவான ஆய்வு அறிக்கையும் தயார் செய்யும் பணியை சேது சமுத்திர திட்ட கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இத்தருணத்தில் கப்பல்துறை செயலாளர் சுரேஷ் அவர்கள் கள ஆய்வு செய்து முதலாவதாக சரக்கு பெட்டக பரிமாற்றம் துவங்கப்படும் என 2008 அக்டோபரில் அறிவித்தார்.

ஆனால் அதன் பிறகு எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் துறைமுகப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. குளச்சல் துறைமுகம் உருவாக்கப்படுவதன் மூலம் தென் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பெருகுவது மட்டுமின்றி நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்லாயிரக் கணக்கான இளைஞர்களுக்கு வேலை கொடுக்க முடியும்.

இவையனைத்திற்கும் மேலாக குமரி மாவட்டம் முழுவதும் ஏராளமான சுற்றுலாத் தளங்கள் நிறைந்திருக்கின்றன. முக்கடலும் சங்கமிக்கும் குமரி முனை, வானுயர்ந்த வள்ளுவன் சிலை, அமைதியான விவேகானந்தர் மண்டபம், ஆசியாவிலேயே உயரமானதும், நீளமானதுமான மாத்தூர் தொட்டிப்பாலம், கோடையிலும் வற்றாத திற்பரப்பு அருவி, அழகிய முட்டம் கடற்கரை, வரலாற்றுப் பெட்டகமான பத்மனாபபுரம் அரண்மனை, சிதறால் மலைக்கோவில், உலக்கை அருவி, காளிகேசம், வட்டப்பாறை என உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடங்கள் ஏராளம். ஆனால் இம்மாவட்டத்தை சார்ந்தவரே பத்தாண்டுகாலம் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த பிறகும் சுற்றலாத்துறையில் எவ்வித வளர்ச்சியும் இல்லை. குமரி மாவட்டத்தை சுற்றுலா மையமாக அறிவித்து தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தினால் சுற்றுலாத்துறை வளர்ச்சியடையும்.

மேற்கூறிய திட்டங்கள் எல்லாம் குமரி மாவட்டத்தில் படித்த, படிக்காத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும். மேலும், சமூக பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் வேலைவாய்ப்புக்காக இடம்பெயர்ந்து செல்லும் அவல நிலைக்கும் இத்தகைய தொழில்வளர்ச்சி முடிவு கட்டும் என போராடி வருகிறது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம். ஆனாலும் கேளாக்காதினராய் இருக்கிறது தமிழக அரசு. தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் குமரி மாவட்டத்திற்கு வரும்போதெல்லாம் மேற்கண்ட திட்டங்களை நிறைவேற்றுவேன் என வாக்குறுதி பட்டியல் நீளுது. ஆனால் வாக்குறுதி கொடுத்து செய்யப்பட்ட வேலைகள் சம்மந்தமான ஆவணங்கள் எங்கே என்று நம்மை கேள்விகேட்கத் தூண்டுகிறது.

எனவே தான் ஆளும் அரசு கொடுத்த வாக்குறுதியையும் அவர்கள் செய்யவேண்டிய கடமைகளை அவர்களுக்கே ஞாபகம் படுத்தும் வகையில் தொடர் போராட்டமாக அம் மாவட்டத்தில் டி.ஒய்.எப்.ஐ செய்து வருகிறது. இதன் ஒரு போராட்டமாக 2010 நவம்பர் 1 அன்று குளச்சலிலிருந்து இரு சக்கரத்தில் கன்னியாகுமாரி மாவட்டம் முழுவதும் பிரச்சாரம் செய்து இக்கோரிக்கையை வெற்றியடையும் வரை போராடுவோம் எனவும், வருகின்ற டிசம்பர் 8 அன்று மக்களை திரட்டி மாவட்ட ஆட்சியர் அலுலவகம் முன் மறியல் செய்ய உள்ளோம்.