பத்தாயிரம் ஆண்டுக்குப் பிறகு உள்ளூர் அரசியல்வாதிகளும் தேசிய அரசியல்வாதிகளும் ஒன்றை புரிந்து கொண்டிருக்கிறார்கள். மிகப் பெரிய பணக்காரர் ஆவதற்கான எளிய வழி, நாட்டின் கனிம வளங்களைச் சுரண்டி விற்பது என்பதே அது. தமிழகத்தில் கிரானைட் குவாரிகள் யாரிடம் இருக்கின்றன என்பதையும், கர்நாடக முதல்வரின் தலைக்கு மேல் கத்தியை தொங்க விட்டிருக்கும் பெல்லாரி ரெட்டி சகோதரர்கள் அடித்து வரும் கொள்ளை பற்றியும், மத்திய இந்தியப் பகுதியில் "மாவோயிஸ்ட் பயங்கரவாதம்" என்ற பெயரில் மூடிமறைக்கப்படும் பொன் முட்டை வாத்தான கனிம வளம் ஆகியவற்றை ஒரே நேர்கோட்டில் இணைக்கும் சரடு - இந்த கனிம வளங்கள் சம்பந்தப்பட்டவர்களுக்குக் கொண்டு வந்து சேர்க்கும் பணம்தான்.

நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், இந்த கனிம வளங்களைப் பற்றி தெரிந்து கொள் ளாமலேயே தலைமுறை தலை முறையாக இவற்றை பாதுகாத்து வந்தது அந்தந்தக் காடுகளில் வாழ்ந்த பழங்குடி மக்கள்தான். இன்று அவை தேசிய சொத்து என்று அறிவிக்கப்பட்டு, மிகமிக சொற்பமான தொகைக்கு தனியாருக்கு தாரை வார்க்கப்படுகின்றன. ஒன்று இந்த சுரங்கங்களின் முதலாளிகளாக அரசியல்வாதிகள் இருக்கிறார்கள், அல்லது அந்த முதலாளிகளிடம் தேர்தல் நேரத்தில் "மொத்த வசூலும்", மற்ற நேரங்களிலும் "மாமூல் வசூலும்" செய்பவர்களாக நம்மை ஆட்சி செய்பவர்கள் இருக்கிறார்கள். தேசிய சொத்துகளை அவர்களால் அதிகாரப்பூர்வமாக தனிச்சொத்தாக மாற்ற முடிகிறது.

இந்த உண்மைகள் உறுத்திக் கொண்டிருக்கும் நிலையில் ஒரிசாவில் உள்ள நியமகிரி பகுதியில் வேதாந்தா நிறுவனம் அலுமினியம் தோண்டுவதற்கான உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ள நடவடிக்கை, சூழலியலாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம். சற்று பொறுங்கள். சூழல் தாக்கம் ஏதுமில்லை என்று சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் முன்அனுமதி பெற வேண்டி நிற்கும் 95 சதவீத திட்டங்கள் இந்தியாவில் அனுமதிக்கப்படுகின்றன என்பதை அந்த அமைச்சகமே ஒப்புக்கொள்கிறது. இந்த நிலையில் பழங்குடிகளின் தொடர்ச்சியான போராட்டங்களைப் புறக்கணித்துவிட்டு, இவ்வளவு காலம் கழித்து வேதாந்தா சுரங்கப் பணி நிறுத்தப்பட்டது மக்களின் நலனை கருத்தில் கொண்டா நடந்திருக்கிறது?

கோண்ட்வானா என்ற பெயரில் உலக கண்டங்கள் ஒன்றாக இருந்த காலம் தொடங்கி, அங்கு வாழ்ந்து வரும் டோங்கரியா கோந்த், குடியா கோந்த் பழங்குடிகளின் போராட்டங்களை தள்ளி வைத்துவிட்டு, இன்றைக்கு என்.சி. சக்சேனா குழு அளித்த அறிக்கையின் பேரில் வேதாந்தா நிறுவனத்துக்கு உரிமத்தை ரத்து செய்ய வேண்டிய அவசியம் என்ன? அது கிரெய்ன் என்ற எண்ணெய் துரப்பன நிறுவனத்தை வாங்கியதும், இதன் காரணமாக ரிலையன்ஸ் நிறுவனத்தைத் தாண்டி அதன் செல்வாக்கு அதிகரித்துவிடும் என்பதும் தான் உண்மையான காரணம் என்கின்றன தகவலறிந்த வட்டாரங்கள். இந்திய மக்களின் முன்னேற்றத்தைப் பற்றி மட்டுமே காலம் முழுவதும் சிந்தித்த "மக்கள் தலைவர்" திருபாய் அம்பானியின் நிறுவனங்களுக்கு, சமீப இருபது ஆண்டுகளில் ஆட்சியில் இருந்த இரண்டு தேசிய கட்சிகளும் கூழைக்கும்பிடு போட்டு வருகின்றன.

உண்மையில் சுற்றுச்சூழலையோ, மக்களையோ பாதிக்காமல் கனிம வளத்தை எடுப்பது மிகக் கடினம். அறிவியல் பூர்வமாக அதன் தாக்கங்களை மதிப்பிட்டு, பாதிப்புகளைக் குறைத்து கனிம வளத்தை எடுப்பதற்கு நீண்ட காலம் பிடிக்கும். இன்றைக்கே எல்லாவற்றையும் சுரண்டி, நாளைக்கே அனைத்தையும் சம்பாதித்துவிடத் துடியாய்த் துடிக்கும் முதலாளிகளுக்கு இதையெல்லாம் கவனிக்க நேரம் ஏது? கனிமச்சுரங்கம் தோண்டுதலை அரசுடைமையாக்கி, சுற்றுச்சூழல் தாக்கம், சமூகவியல் தாக்கங்களை மதிப்பிட்டு பாதிப்புகளைக் குறைக்க வேண்டும். லாபத்தில் மக்களுக்கு உரிய பங்களிக்க வேண்டும். இதை அரசுக்கு உணர்த்த வேண்டிய வகையில், உரிய வலுவுடன் உணர்த்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

பரிசோதனைக்கூட எலிகள்:

மத்திய அரசு மக்கள் பக்கம் நிற்கிறதா? அமெரிக்க அரசு - தனியார் அணுஉலை நிறுவனங்கள் பக்கம் நிற்கிறதா? என்பதற்கு தெளிவான இன்னொரு உதாரணம் அணுஉலை இழப்பீட்டுச் சட்டம். இதை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதில் காங்கிரசுக்கு பா.ஜ.க அளித்த ஆதரவு, இரண்டும் எப்பொழுதுமே யாருக்காக பரிந்து பேசுகின்றன என்பதற்கு மற்றொரு உதாரணம். (ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஆதரவு அளிப்பதிலும் இருவரும் ஒற்றுமை காட்டுவதையும் பார்த்தோம்)

முன்னர் பரிந்துரை செய்யப்பட்டதற்கு மாறாக, அணுஉலை விபத்து இழப்பீட்டுத் தொகை ரூ. 500 கோடியில் இருந்து, தற்போது ரூ. 1,500 கோடி உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இந்த இழப்பீட்டுத் தொகையை எதிர்கால அரசுகள் அதிகரித்துக் கொள்ளவும் தற்போது வழி செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டு அரசுகள், நிறுவனங்களின் நெருக்குதல் காரணமாக அணுஉலை அமைத்துத் தரும் நிறுவனத்தின் பொறுப்பற்ற அலட்சியத் தவறுகளுக்கு பொறுப்பேற்காமல் விலக்கு அளிக்கும் பிரிவை இந்த சட்டத்தில் சேர்க்க மத்திய அரசு முயற்சித்தது. ஆனால், தற்போது அது விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. 17 பி என்ற அந்தப் பிரிவு இருப்பதன் காரணமாக வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய அணுஉலைகளில் முதலீடு செய்யத் தயங்கும் என்று அமெரிக்க இந்திய வணிக கவுன்சில் போன்றவை முட்டுக்கட்டை போட்டன. அடுத்த பத்தாண்டுகளில் இந்தியா 40க்கும் மேற்பட்ட மிகப்பெரிய அணுஉலைகளை அமைக்கும் என்று தெரிகிறது. இந்த நிறுவனங்கள் ஒரு அணுஉலை அமைக்கப் பெறும் தொகை ரூ. 25,000 கோடி. எவ்வளவு மோசமான விபத்து நேரிட்டாலும், அதற்கு இந்த நிறுவனங்கள் அதிகபட்சமாக தரப்போகும் இழப்பீட்டுத் தொகை வெறும் ரூ. 1,500 கோடியாம். போபால் விபத்து இழப்பீடு 25 ஆண்டுகளாக இழுத்துக் கொண்டு கிடந்ததைப் பார்க்கும்போது, நமக்கு அழிவுக் கண்டம் அணுஉலை மூலமாகத் தானோ என்ற பயம் மோசமாக எட்டிப் பார்ப்பதை தவிர்க்க முடியவில்லை.       

- ஆசிரியர் குழு