போபாலில் 1984ஆம் ஆண்டு டிசம்பர் 2ந் தேதி நடைபெற்ற மாபெரும் படுகொலை, ஒரு அமெரிக்க பன்னாட்டு நிறுவனம் இந்திய மக்களின் உயிரை துச்சமாக மதித்ததன் காரணமாக நிகழ்ந்த ஒன்று. சுமார் 20,000க்கும் மேற்பட்டோர் அங்கு "வாயுப் படுகொலை" செய்யப்பட்டனர். இருந்தபோதும் இந்த மக்களைக் கொன்றவர்களுக்கு தண்டனை வழங்குவதற்காக 26 ஆண்டுகளுக்கு மேலாக நீண்ட வழக்கின் முடிவில், படுகொலையைப் புரிந்தவர்களுக்கு வெறும் இரண்டு ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நமது பாரத மணித் திருநாட்டைத் தவிர வேறெங்கு இதுபோல் நிகழ முடியும்?

அமெரிக்கா - வெள்ளை உலகின் குடியரசுத் தலைவரும் கறுப்பான இந்தியாவின் பிரதமரும் தாலிபான், மாவோயிஸ்ட் - நக்சலைட்டுகளின் பயங்கரவாதத் தாக்குதல்கள் பற்றி கழுத்து நரம்புகள் புடைக்கக் கத்துவார்கள். ஆனால் ஓர் அமெரிக்க கும்பணி இந்தியாவின் பின்தங்கிய பகுதியில் மேற்கொண்ட படுகொலைகளுக்கு தண்டனை வழங்கப்படுவதற்கான நீதிமன்ற தீர்ப்பைப் பெறுவதற்கு மட்டும் 26 ஆண்டுகள் ஆகியிருக்கிறது.

என்ன இருந்தாலும் அமெரிக்க டாலர்களுக்காக வாயைப் பிளந்துக் கொண்டிருக்கும் அடிமை நாடு தானே இந்தியா, இல்லை யென்றால் விஷவாயுவைக் கசியச் செய்து ஆயிரக்கணக்கானோரைக் கொன்றது ஒரு சாதாரண குற்றம் என்று கருதப்பட்டிருக்குமா? விக்டோரிய ஆட்சிப் பாரம்பரியத்தில் வந்த மெக்காலேயின் நீதிதான் இந்தியாவை இன்னமும் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. நமது நாடாளுமன்றமும், அதிகார வர்க்கமும் "இந்தியாவின் மக்கள்" என்று கூறிக்கொள்ளும் நம் மீது மிகக் குறைவான அக்கறையையே கொண்டுள்ளன. அக்கறையின்மைக்கு மற்றொரு மிகப்பெரிய எடுத்துக்காட்டான நமது நீதித் துறை, உறுதியான தீர்ப்பை வழங்குவது என்ற அடிப்படைக் கடமையை எப்பொழுதுமே தவற விடுகிறது. மக்களின் வாழ்க்கையைக் காக்க சட்டம் இயற்ற வேண்டிய நாடாளுமன்றமோ வெறும் கூச்சல் போடுவதிலேயே காலத்தை கழித்துக் கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் புலனாய்வு - நீதி வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் எந்த வகையிலும் மன்னிக்க முடியாத ஒரு குற்றமாகும்.

நீதிபதிகள் முறையாக நியமிக்கப்பட்டு, நேர்மையான நடைமுறையில் நீதிமன்றங்கள் நடை பெற்றால், உணர்வுப்பூர்வமான, அறிவுப் பூர்வமான சட்டங்கள் இயற்றப்பட்டால், அவர்கள் நேர்மை, சுதந்திரம், ஆர்வமுடன் செயல்பட்டால் மட்டுமே இந்திய நீதிமன்றங்கள் நீதியை வழங்க முடியும்.

நம்பகத்தன்மையின் அத்துமீறல்

அதேநேரம், இந்த சோஷலிச குடியரசு சாதாரண மக்களுக்கு காலங்காலமாக பெரும் அவலத்தையே தந்து வந்துள்ளது. இந்த மிகப் பெரிய முரண்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்த நாட்டின் ஒவ்வொருவர் கண்ணிலிருந்தும் வழியும் ஒவ்வொரு கண்ணீர்த் துளியையும் துடைக்க வேண்டும் என்ற நமது தேசத் தந்தையின் குறிக்கோளை அடைவதற்குத் தேவையான மனித வளம், நம்மிடம் போதுமான அளவு இருக்கிறது. ஆனால் இந்திய இறையாண்மை மீது வைக்கப்பட்ட அந்த நம்பகத்தன்மை போபாலில் அப்பட்டமாக மீறப்பட்டிருக்கிறது.

வறுமையில் வாடிக் கொண்டிருந்த ஒவ்வொரு ஏழையும் பிரிட்டிஷ் பேரரசை எதிர்த்தபோது, அவன் காங்கிரஸ்காரன் என்று முத்திரை குத்தப்பட்டான். விடுதலைக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, தாகம் மிகுந்த ஒவ்வொரு தீவிரவாதியும் கம்யூனிஸ்ட் என்று அழைக்கப்பட்டான். சில மாநிலங்களில் கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வந்தபோதும், மக்கள் பட்டினியில் வாடினர், அவர்களோ நக்சலைட்டுகள் என்றழைக்கப்பட்டனர்.

சரி, இந்தியாவுக்கு எதிர்காலம் என்று ஏதாவது இருக்கிறதா? நிச்சயமாக. அற்புதமான அரசியல் சாசனமும் அழகான பண்பாட்டு பாரம்பரியமும் கொண்ட இவை இரண்டும் காரல் மார்க்ஸ், காந்தியின் பார்வையை சரிசமமாகக் கொண்டவை. அப்படிப்பட்ட உணர்வுப் பூர்வமான பார்வையை நாம் பெற்றிருக்கிறோமா? அரசியல் சாசனத்தை நடைமுறைப்படுத்துவதை ஒர் இயக்கமாகவும், பற்றுறுதியுடனும்செயல்படுத்துகிறோமா? நீதிபதிகளுக்கு அந்த நோக்கம் இருக்கிறதா? விக்டோரிய நிலப் பிரபுத்துவ காலத்திலிருந்து இந்தியா இன்னமும் விடுபடவில்லை என்பதைத் தான் போபால் தீர்ப்பு உணர்த்துகிறது. சோசலிசக் கனவில் இருந்து அது விலகியே நிற்கிறது.

இந்த நிகழ்வில் உள்ள முற்றிலும் மாறுபட்ட விஷயம் என்னவென்றால், யூனியன் கார்பைடை வழிநடத்தும் பொறுப்பில் இருந்த வாரண் ஆண்டர்சன் இந்தப் பிரச்சினையின் எந்த ஒரு காட்சியிலும் மருந்துக்குக்கூட இடம்பெறவில்லை என்பதுதான். இது நீதியை அவமதிப்பதாகும். இந்த வளையத்துக்குள் முதன்மைக் குற்றவாளி வராதபட்சத்தில், அவரைவிடக் குறைந்த குற்றம் புரிந்தவர்களால் லட்சக்கணக்கானோர் அவமதிக்கவே படுகிறார்கள். வலுவான நீதித் துறையின் தளைகளில் இருந்து அவர்களை விலக்கி வைக்கும்போது, சட்டம் செயலிழந்து விடுகிறது. இந்திய நீதிமன்ற நடைமுறை நடத்தும் புலனாய்வில் இருந்து அமெரிக்க குற்றவாளிகளுக்கு என தனியே விலக்கு ஏதும் வழங்கப் பட்டிருக்கிறதா? இப்படிப்பட்ட புறக்கணிப்பு நீதியைப் பார்த்து நமுட்டுச்சிரிப்பு சிரிப்பதாகும்.

கிட்டத்தட்ட 26 ஆண்டுகளுக்கு இந்த வழக்கு நடந்திருக்கிறது. இந்த காலத்தில் உச்ச நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதிகளாக எத்தனை பேர் வந்து சென்றிருக்கிறார்கள். அவர்களது வரம்புக்கு உட்பட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ள நிலையில், ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமே? ஆனால் அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? விசாரணையை விரைந்து முடிக்க இந்திய அரசு செய்தது என்ன? குற்றவாளிகளுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது தனக்குப் பிடிக்கவில்லை என்று சட்ட அமைச்சர் தற்போது கூறியுள்ளார். ஆனால் கடந்த 26 ஆண்டுகளாக சட்டப் பிரிவு 300 முதல் 304 வரையிலான இந்திய தண்டனைச் சட்டத்தில் எந்தத் திருத்தமும் முன்வைக்கப்படவில்லை, செய்யப்படவில்லை, கடுந் தண்டனைச் சட்டம் எதுவும் புதிதாக இயற்றப்படவும் இல்லை. நாடாளுமன்றமும் அரசு நிர்வாகமும் தங்களது கடமையில் இருந்து தவறியிருக்கின்றன என்பதற்கு இதைவிட பெரிய எடுத்துக்காட்டு தேவையில்லை. இவ்வளவு காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த அரசியல் கட்சிகளும் திட்டமிட்டு அலட்சியமாக இருந்துள்ளன. இந்திய மனிதத்துவத்தின் மீது அவர்கள் படுத்துத் தூங்கியிருக் கிறார்கள்.

பாதிக்கப்பட்டவர்களுக்குஇதுவரை நியாயமான நஷ்டஈடு வழங்கப்படவில்லை. யூனியன் கார்பைடு வழங்கிய நிதியில் ஒரு மிகப்பெரிய மருத்துவமனை கட்டப்பட்டிருக்கிறது. ஆனால் அதுவும்கூட ஏழைகளுக்கு அல்ல, பாதிக்கப்பட்ட பணக்காரர்களுக்கு மட்டும்தான். எண்ணற்ற ஏழைகளின் சடலங்களின் மீது மட்டும் அந்த மருத்துவமனை கட்டப்படவில்லை. வறுமையில் உழல்பவர்களால் இன்னமும் அந்த மருத்துவமனைகளின் படிகளில் ஏற முடியாது. தனது படிகள், சம்பள உயர்வு போன்றவற்றிலேயே உச்ச நீதிமன்றம் மூழ்கிக் கிடக்கிறது. விசாரணை நீதிமன்றத்திலிருந்து வழக்கைப் பெற்று, ஒட்டுமொத்தமாக தீர்மானிப் பதற்கு அது தவறிவிட்டது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை வாரண் ஆண்டர்சன் என்பது முடிந்துபோன அத்தியாயமாகி விட்டது. உலகின் சக்திவாய்ந்த அணுசக்தி நாடான அது, நீதிக்கு வழங்கும் மதிப்பு மிகவும் குழப்பமானது. இந்தியாவில் உள்ள பல்வேறுபட்ட மக்கள், இந்த டாலர் அடிமைத்தனத்தை எதிர்ப்பதற்கான நெஞ்சுறுதியை அது உருவாக்கும். அமெரிக்கர்கள் நமது சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள். பன்னாட்டு கும்பணிகளின் தலைவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டால், கறுப்பு இந்தியா, வெள்ளை நீதிக்கு அடிபணிந்து அடைந்துவிடும்.

சர்வதேச மனிதஉரிமை பிரகடனத்தை அமெரிக்கா ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் அதேநேரம் அணுஆயுத ஒப்பந்தத்தைப் பயன்படுத்தி தனக்குச் சாதகமாக விஷயங்களை மாற்றிக் கொள்கிறது. இது முட்டாள்தனமானது என்று கூறுவதற்கான நெஞ்சுரம் இந்தியாவுக்கு இல்லை. வானளாவிய அதிகாரம் கொண்ட பன்னாட்டு நிறுவனங்களையே நாம் பெற்றுள்ளோம். ஆண்டர்சன் ஒரு அமெரிக்கர், யூனியன் கார்பைடும் அப்படியே. இந்திய நீதி என்பது நகராட்சிகள், கிராம பஞ்சாயத்தைத் தாண்டி செல்லுபடியாவதில்லை.