காலையில் சாப்பிடும் உணவை எக்காரணம் கொண்டும் தவிர்க்கவே கூடாது; எட்டு அல்லது பத்து மணி நேரம் இடைவெளிக்கு பின், நம் வண்டியை ஓட்ட பெட்ரோலாக தேவைப்படும் உணவு அது. 

காலை உணவு முறையை “பிரேக் பாஸ்ட்” என்று கூறுவர்.  “பாஸ்ட்” டை (உண்ணாதிருத்தலை) “பிரேக்” (துண்டிப்பது) பண்ணுவது என்று அர்த்தம்.  முதல் நாள் இரவு சாப்பிட்டபின், தூங்கி எழுந்திருக்கும் போது, பல மணி நேரம், சாப்பிடாமல் உடல் இயங்குகிறது.  அதனால் அதற்கு, சத்துக்கள் தேவைப்படுகிறது.  காலையில் சாப்பிடாமல், மதிய உணவு சாப்பிடலாம் என்று எண்ணுவது சரியல்ல.  பத்துமணி நேரத்தையும் தாண்டி பட்டினி போடுவது, உடலில் உள்ள முக்கிய சத்துக்கள் குறைபாடு ஏற்படக் காரணமாகி விடும்.

என்ன சாப்பிடணும்

காலையில் எழுந்தவுடன் காபி, பால் போன்ற பானங்கள் சாப்பிட்டு விட்டு, உணவு அல்லது சிற்றுண்டி சாப்பிடுவோர் பலர் உள்ளனர்.  சிலர், காலையில், முழு உணவு சாப்பிட்டு விட்டு, மதியம் சாதாரண அளவில் சாப்பிட்டு, இரவு டிபன் சாப்பிடுகின்றனர். 

ஆனால், காலை உணவை தவிர்ப்போரும் உண்டு. இவர்களுக்கு தான் பாதிப்பு வரும்.  குறிப்பாக வீட்டு, ஆபிஸ் வேலை பார்க்கும் பெண்களுக்கு காலை உணவு மிக முக்கியம். அதை தவிர்த்தால் அவர்களுக்கு பல கோளாறுகள் வரவாய்ப்பு அதிகம்.

உணவு என்றால் ...

உடலுக்கு தேவைப்படும் சத்துக்களை தருவதுதான் உணவு.  கார் போன்றது உடல்.  கார் ஓட பெட்ரோல் தேவைப்படுவது போல, உடல் சிறப்பாக இயங்க எரிசக்தி தேவை.  அந்த எரிசக்தியை தருவது சத்துக்கள் தான்.  அந்த சத்துக்களை நாம் உணவில் இருந்து தான் பெறவேண்டும்.  காலை உணவு சாப்பிட்டால், அது சிற்றுண்டியாக இருந்தாலும், உணவாக இருந்தாலும், உடலுக்கு முழு எரிபொருளை தருகிறது.  சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், மயக்கம், சோர்வு, தலைவலி, மூட்டு பாதிப்பு வராமல் இருக்கவும் காலை உணவு மிக முக்கியம்.

எடை குறைக்கவேண்டும் என்று இருப்பவர்கள், காலையில் உணவை சாப்பிட மாட்டார்கள்.  ஆனால் அப்படி இருப்பது ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.  ஏனெனில் இரவில் உண்ட பிறகு, நீண்ட நேர இடைவெளிக்குப் பின் காலை நேரத்தில் உணவு உண்போம். ஏனெனில் அப்போது உண்டால்தான் அந்த நாளை தொடங்குவதற்கு ஏற்ற சக்தியானது கிடைக்கும்.  இத்தகைய சக்தியை காலை உணவில் மட்டுமே கிடைக்கும். மதியம் கூட உண்ணாமல் இருந்துவிடலாம்.  ஆனால் காலையில் உண்ணாமல் இருந்தால் எந்த வேலையையும் செய்யமுடியாது.  அப்படி உண்ணாமல் இருப்பவர்கள், இப்போது இருந்து உண்ணும் பழக்கத்தை கொள்ளுங்கள்.  மேலும் அப்படி ஏன் உண்ணாமல் இருக்கவேண்டும் என்று பல காரணமும் இருக்கிறது.  அது என்னவென்றால் படித்துப் பாருங்கள் ...

காலையில் உண்ணாமல் இருந்தால் என்ன ஏற்படும்? ...

1.காலையில் உடலில் உள்ள சர்க்கரையின் அளவு குறைவாக இருக்கும். அப்போது உடலுக்கு வேண்டிய சக்தியை காலை உணவே தருகிறது.  காலை முதல் இரவு வரை நன்கு வேலை செய்ய உடலுக்கு சக்தியானது தேவைப்படுகிறது.  அதற்கு காலை உணவே சிறந்தது.

2.சிலர் எடையை குறைக்க காலை உணவை மட்டும் தவிர்த்து, மற்ற நேரத்தில் கொஞ்சம் உண்பர்.    ஆனால் உண்மையில் காலையில் உண்ணாமல் இருந்து மதியம் குறைவாக உண்ண முடியாது,     அப்போது வயிறு நிறைய தான் உண்பர். ஆனால் அது அவர்களுக்குத் தெரியாது. மேலும் அத்தகைய உணவை உண்ணும் போது ஆரோக்கியமான உணவைக் கூட உண்ண மாட்டார்கள். ஆகவே இதனால் எடைதான் கூடுமே தவிர எடை குறையாது.

3.மேலும் உணவை உண்ணாமல் இருந்தால் முதலில் உடலில் சுரக்கும் இன்சுலின் அளவு அதிகரித்து, பின் கலோரியின் அளவு அதிகரிக்கும்.  மேலும் இது உடலில் மெட்டபாலிக் டிஸ்ஆடரை ஏற்படுத்தும். இதனால் எடை தான் அதிகரிக்கும்.

4.வேலைக்கு செல்பவர்களும், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளும் காலை உணவை உண்ணாமல்     சென்றால் அவர்களால் வேலையில் கவனத்தை செலுத்த முடியாது.  ஆகவே காலை உணவு அவர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியைத் தந்து கவனத்தை அதிகப்படுத்துகிறது.

5.காலை உணவை உண்டால், உடலில் இருக்கும் தேவையில்லாத கலோரியானது விரைவில் கரைத்து விடும்.

6.மேலும் வீட்டில் குழந்தைகள் இருந்தால், அவர்கள் எப்போதும் நீங்கள் நடந்து கொள்வதையே பழகுவார்கள்.  இப்படி நீங்கள் சாப்பிடாமல் இருந்தால் அவர்களும் போக போக சாப்பிடாமல் தான் இருப்பார்கள்.  பின் அவர்கள் ஆரோக்கியம் தான் பாதிக்கப்படும்.  ஆகவே அவர்களுக்கு ஒரு நல்ல உதாரணமாக இருக்க நினைப்பவர்கள், சரியான நேரத்தில் சாப்பிடுங்கள், அவர்களும் அதையே பின்பற்றுவார்கள்.

7.காலையில் உண்ணும் போது வேண்டுமென்றால் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளான தானியங்கள், பழங்கள், பால் போன்றவற்றை உண்டால் உடலும் ஆரோக்கியமாக இருப்பதோடு எடையும் கூடாமல் அளவாக இருக்கும்.

8.வேலைக்குச் சென்று சிடுசிடுவென டென்சனாக இருக்கிறீர்களா? அதற்குக் காரணம் வேலைப்பளு    அல்ல.  அதற்கு காரணம் காலை உணவை உண்ணாதது ஆகும். 

ஆகவே காலை உணவை சாப்பிடுங்க! சந்தோஷமா அன்றைய தினத்தை துவங்குங்க!!