அக்குபஞ்சரின் தாயகமான சீனா இப்போதெல்லாம் அன்றாடம் செய்தி ஊடகங்களில் பலவாறாக அடிபடுகிறது, ‘அடுத்து சந்திர மண்டலத்தில் கால் பதிக்கப் போவது ஒரு சீனர்’ பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு அமெரிக்கா அழிகிறது. ஜப்பான் சரிகிறது. அடுத்த உலகப் பேரரசு சீனாதான் - இவ்வாறெல்லாம் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இப்படியான செய்திகளுக்கிடையே 27.6.2009 அன்றைய இந்து நாளிதழின் துணைத் தலையங்கம் “China’s push for health” என்னை வெகுவாக வியப்படையச் செய்தது. அதைத் தொடர்ந்து இணையத்தில் தேடிப் படிக்கப் படிக்க வியப்பு எல்லைகளற்று விரிந்து கொண்டே போகிறது. சீனா குறித்து கடந்த இரண்டாண்டுகளில் புகழ் பெற்ற The Iancet ஏட்டில் வெளிவந்த கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டு பின் வரும் பதிவுகள் உருவாக்கப்படுகின்றன.

மருத்துவத்துறை அமைச்சரான பதிவிலா மருத்துவர் :

இப்போது சீனாவின் மத்திய மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சராக இருப்பவர் மருத்துவர் சூசென் அவர்கள் இவர் கலாச்சாரப்புரட்சி காலத்தில் ஐந்தாண்டுகள் ஊரகப் பகுதி சேவைக்காக அனுப்பப்பட்டவர். அங்கு தன்னார்வத்தில் மருத்துவம் பயின்று பதிவிலா (Bare foot doctor) மருத்துவராய் தகுதி பெற்றவர். பின்னர் பிரான்சிலுள்ள பாரிசில் சுயமுயற்சியில் இரத்தவியல் செல் மரபியல், குளோனிங் ஆகியவற்றில் முனைவர் பட்டம் பெற்றார். சீனா திரும்பிய பிறகு பல பணிகள் முயற்சிகளுக்கிடையே சீன அறிவியல் கழகத்தின் துணைத் தலைவராக உயர்ந்தார். இப்போது அந்நாட்டின் நடுவண் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருக்கிறார். கம்யூனிஸ்ட் நாட்டின் கம்யூனிஸ்ட் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள கம்யூனிஸ்ட் அல்லாத அமைச்சர் இவர். உலகி லேயே பதிவிலா மருத்துவராக வாழ்க்கையைத் துவங்கி அத்துறைக்கே அமைச்சராவதற்கு முன்னோடி அடையாளமாக சென்சூவின் வாழ்க்கை இருக்கக்கூடும்.

ஆங்கிலத்தில் தேர்ந்த புலமையுடைய அமைச்சர் அவர்கள் லேன்செட் ஏட்டில் நேரடியாக கட்டு ரைகளை எழுதியுள்ளார். அதில் குறிப்பிடத்தக்கது. 18.4.2009 தேதியிட்ட இதழின் பக்கங்கள் 1322 - 1324 ல் இடம் பெற்றுள்ள “Launch of the health care reform plan in China” என்பது.

1978 முதல் சீனா கடைப்பிடித்து வந்த மருத் துவ நலக் கொள்கைளை காலத் தேவைக்கேற்ப மாற்றீடு செய்ய வேண்டுமென அந்நாட்டு ஆட்சி 2006ல் முடிவு செய்தது. இதைத் தெரடர்ந்து 17 அமைச்சரவைகள் பங்கேற்ற பல குழுக்கள் புதிய கொள்கை அறிக்கையை தயாரிக்கும் பணியில் ஈடு பட்டன இறுதியாக வடிவமைக்கப்பட்ட நகலறிக் கை 2008 அக்டோபர் 14 அன்று ஒரு மாத கால அவகாசமளிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டது. இதன் மீது 30,000 எதிர் வினைகள் பதிவு செய்யப்பட்டன. இவையனைத்தும் கவனத்தில் கொள்ளப்பட்டு புதிய மாற்றங்க ளோடு அண்மையில் புதிய மருத்துவக் கொள்கை நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த கொள்கை அம்சங்கள் குறித்து பார்பதற்கு முன்னால் கழுகுப் பார்வை கண்ணோட்டத்தில் சீன மருத்துவ வரலாற்றை சிறிது பார்த்து விடலாம்.

சீனாவின் மருத்துவ வரலாறு

இந்தியாவைப் போலேவே சீனாவும் கல்தோன்றி மண் தோன்றாகக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடிதான் நம்மைப் போலவே நீண்ட நெடிய தத்துவ மரபுக்கு சொந்தக்காரர்கள் அவர்கள் அங்கே உருவாகிய தாவோயிசம் தான் அக்குபஞ்சரின் அடிப்படை. அக்குபஞ்சரும் சுதேசி மூலிகை மருத்துவமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல இதுவே அந்நாட்டின் பாரம்பரிய மருத்துவம். பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு நம்மைப் போலவே அவர்களும் மேற்கத்திய நாடுபிடிக்கும் காலனிய ஆட்சியாளர்களின் கரங்களில் வீழ்ந்தனர். காலனிய வருகையின் தொடர்ச்சியாக அங்கே ஆங்கில மருத்துவம் அறிமுகமாகியது. காலனி ஆதிக்கத்துக்கு உட்பட்ட எல்லா நாட்டு மக்களையும் போல சீனர்களும் சுதந்திரத்திற்காக பெரும் போராட்டங்கள் நடத்தினர் அங்கே சுதந்திரப் போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர்கள் கம்யூனிஸ்ட்கள் மற்ற அரசியல்வாதிகளைப் போல அதிகார மாற்றத்தை மட்டும் ஆதிக்கவாதிகளிடமிருந்து பறித்தெடுக்கும் நோக்கம் கொண்டவர்களல்ல கம்யூனிஸ்ட்கள் மேலிருந்து கீழ்வரை அதிகாரத்திலிருந்து பொருளாதாரம், தத்துவம், பண்பாடு, கல்வி, மருத்துவம்... என எல்லாத் தளங்களிலும் காலனியாதிக்க வாதிகளின் சுவடுகளை அழித்தொழித்து சொந்த முறையில் அதனை உருவாக்க சீன கம்யூனிஸ்ட் போராளிகள் தொடக்க முதலே முனைந்தனர்.

இதன் விளைவாக சுதந்திரப் போராட்ட காலத்திலேயே நார்மன் பேத்யூன் எனும் மேற்கத்திய மருத்துவரை வரவழைத்து போராட்ட வீரர்களின் ஒரு பகுதியினருக்கு பயிற்சியளித்து அக்கால முதலே வெறுங்கால் மருத்துவர்களை உருவாக்கினர். 1949-ல் அவர்கள் சுதந்திரம் பெற்ற பிறகு போராட்ட கால .இலக்குகளை கைவிட்டார் களில்லை. ஆங்கில மருத்துவத்தையும் சீனப் பாரம்பரிய மருத்துவத்தையும் ஆய்வுப் பூர்வமாக இணைத்து உலகின் முதல் ஒருங்கிணைந்த மருத்துவ முயற்சியை நிறைவேற்றினர். உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு ஆறு லட்சம் வெறுங்கால் மருத்துவர்களை உருவாக்கி தன்னிறைவு பெற்றனர்.

1978ல் அமெரிக்கா அதிபர் நிக்சன் அந்நாட்டின் பயணம் மேற்கொள்ளும் வரை இந்த மக்கள் பங்கேற்புடனான மருத்துவ தன்னிறைவு திட்டங்களை உலகம் அறியாதிருந்தது. அதன் பிறகு உலக சுகாதார நிறுவனத்திலிருந்து மக்கள் நல்வாழ்வை விரும்பும் அனைவருக்கும் முன்னோடி தேசமாக சீனா திகழ்கிறது.

அத்தகையதொரு முன்னோடி தேசம் தான் இப்போதும் புதிய தேவைகளுக்கான மருத்துவ மறுமலர்ச்சி திட்டத்தை வெளியிட்டு முன்னத்தி ஏர்பிடித்துள்ளது. உலகெங்கும் இப்போது மருத்துவத் துறையின் இயலாமை குறித்தும் போதமை பற்றியும் பன்னாட்டு நிறுவனங்களின் பகாசூரக் கொள்ளை குறித்தும் விரிவான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அண்மை யில் அமெரிக்காவில் பெரும் பரபரப்புகளுக் கிடையே நடைபெற்ற தேர்தலில் பாரக் ஒபாமா அவர்கள் வெற்றி பெற்றார்கள். அவர் வெற்றிக்கு காரணமான பலவற்றில் முக்கியமான ஒன்று அவர் மருத்துவத் துறையில் சீர்திருத்தத்தைக் கொண்டு வருவேன் என்று கொடுத்த வாக்குறுதியும் தான் என பால் குரூக்மேன் போன்ற ஊடகவியலாளர்களின் கருத்து கவனிப்பத்தக்கது.

இந்தப் பின்னணியில் தான் உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் மருத்துவ நல சீர்திருத்தத்திட்டத்தை சீனா எவ்வாறு மேற்கொள் ளப் போகிறது. என நாம் கவனிக்க வேண்டியுள்ளது. அத்திட்டம் 12 முதன்மை அம்சங்களைக் கொண்டுள்ளது. அவை (1) மானியங்களோடு கூடிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை 2010க்குள் 90 % குடிமக்களுக்கு வழங்குதல் (2). மருந்து விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருதல் மற்றும் அடிப்படை மருந்துக் கொள்கையை நிறுவுதல் (3) பொது மருத்துவ நலம் மற்றும் பொது மருத்துவ நலக் கல்வியை வலிமைப் படுத்துதல் (4) படிப்படியாக மருத்துவம் மற்றும் மருத்துவத் துறையை வேறுபடுத்தி வளர்த்தெடுத் தல் (5) ஒருங்கிணைந்த மருத்துவத்தை ஊக்கப் படுத்துதல் (6) மருத்துவத் துறைக்குள்ளான பணப் புழுக்கத்தில் மறுமலர்ச்சியை உருவாக்குதல் (7) ஊரக கட்டமைப்பை பலப்படுத்துதல் (8) சமூகம் சார் பொது மருத்துவ நல மையங்களின் வலைப் பின்னலை உருவாக்குதல் (9) தனியார் முன்முயற்சியை ஊக்கி வளர்தல் (10) மருத்துவ தகவல் தொழில் நுட்ப முறையை நவீனப்படுத்துதல் (11) மருத்துவக் கல்வியை வலிமைப்படுத்துதல் (12) மருத்துவ தொழில் நெறியை பலப்படுத்துதல்.

இந்த புதிய மருத்துவக்கொள்கையை திறனாய்வதற்கு முன்னதாக இப்போது நிலவும் சீன மருத்துவ அமைப்பு முறை குறித்து சிறிது பார்த்துவிடலாம்.

இப்போதைய சீன கட்டமைப்பு 1978 முதல் எல்லோருக்கும் மருத்துவம் எனும் கோட்பாட்டின் கீழ் கட்டி எழுப்பப்பட்டது. இம்முறைப்படி பொதுத்துறையின் கீழான சீனமருத்துவமனைகளின் இயக்குநர்கள் தன்னாட்சி அதிகாரமும் சுயசெல்வாக்கும் கொண்டவர்கள். மருத்துவமனை கள் தன்னாட்சி அதிகாரம் பெற்றவை. நாடெங்கும் ஆறுலட்சம் வெறுங்கால் மருத்துவர்கள் பணியில் உள்ளனர். சீனப் பாரம்பரிய மருத்துவம் பயிலாமல் எந்த ஒரு ஆங்கில மருத்துவமும் அங்கு தொழில் புரிய முடியாது. அங்கு அக்கம்பக்கமாக அங்கில மருத்துவமும் அக்குபஞ்சர் மருத்துவமும் தனித்தனியாக கடைவிரித்து துயரரை துன்பப் படுத்துவதில்லை. ஒரு நோயாளியின் உண்மையான தேவையை அடிப்படையாகக் கொண்டு அவருக்கு என்ன சிகிச்சைஎன மருத்துவர் முடிவுசெய்கிறார் இதற்கான மொத்த அறிவும் அம்மருத்துவருக்கு ஏற்கனவே பயிற்றுவிக்கப்பட்டுள்ளது - இவைதான் செஞ்சீனம் படைத்த மருத்துவ கட்டமைப்பு.

இந்த கட்டமைப்பின் போதாமையை சென்ற நூற்றாண்டின் கடைசி பத்தாண்டுகளிலும் இந்த நுற்றாண்டின் தொடக்கத்திலும் பற்றிப் பரவிய தொற்றுநோய்களும் சார்ஸ், பறவைகாய்ச்சல் போன்றவையும் புரிந்து கொள்ளத் தூண்டின என நடுவண் நல்வாழ்வைத் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இப்பின்னணியில் தான் புதிய மருத்துவக் கொள்கையின் தேவைகளையும் பொருத்தப்பாட்டையும் ஆராய வேண்டியுள்ளது இந்தக் கொள்கையின் சிறப்பம்சங்களாக ஒருங்கிணைந்த மருத்துவத்திற்கு ஊக்கம், 133 கோடி குடிமக்களுக் கும் உடல் நல பதிவேடு மற்றும் அடையாள அட்டையை உருவாக்கிப் பராமரித்தல், பொது மருத்துவநல கல்வி & கட்டமைப்பை பலப்படுத்து தல் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவற்றை நம் நாட்டிலும் பயன்படுத்திக்கொள்ள நம்மாலானதை செய்ய வேண்டுமென்பதே நமக்கான படிப்பினை.

இன்னொரு நோக்கில் இந்த அறிக்கை குறித்த திறனாய்வை - இன்னொரு நாட்டு உள்விவகாரம் என்கிற புரிதலோடும் நமக்கான படிப்பினை என்கிற எண்ணத்தோடும் சீன பொதுவுடைமை அமைப்பின் மீதும் சீன மருத்துவத்தின் மீதும் விசுவாசம் கொண்டவர்கள் என்கிற அடிப்படை யிலும் - முன்வைப்பது எமது கடமையாகும். இந்த அறிக்கை மெல்ல மெல்ல உலகப் பொதுபோக் குக்கு ஏற்ப மக்கள் மற்றும் அரசு சார்புடைய சீன மருத்துவத் துறையை தனியார் கரங்களுக்கு தாரை வார்த்து விடுமோ என்ற அய்யம் எழாமலில்லை. 90% மக்களுக்கு காப்பீடு வழங்கிறோம் என்ற பெயரில் மருத்துவத்திற்கு தொடர்பில்லாத மாமேதை லெனின் வார்த்தைகளில் சொல்வதா னால் சீட்டு கத்தரிக்கும் வர்க்கத்தின் லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட நிதி நிறுவனங்களான இன்சூரன்ஸ் அமைப்புகளின் தலையீடை மருத்துவத்துறைக்குள் கொண்டுவந்து சேர்த்திடும் அபாயத்தை இந்த புதிய மருத்துவக் கொள்கை முன்னறிவிக்கிறது.

‘நவீனம்’, ‘அறிவியல்’ என்கிற பெயர்களால் சீனப் பராம்பரிய மருத்துவமும் அக்குபங்சரும் சிறுகச் சிறுக பின் தள்ளப்பட்டு ஆங்கில மருத்துவத்தின் ஆதிக்கம் விரிவடைய இந்த கொள்கை இடமளித்து விடுமோ என்ற பயம் காரணமற்றதல்ல.

உலகின் முதல் மக்கள் தொகை கொண்ட நாடு இன்று வரை மருத்துவ போதாமையால் பாதிக்கப்பட்டதில்லை, என்கிற பெருமைக்கு இதுகாரும் காரணமாய் இருந்தது சேர்மன் மாசே துங் அவர்களால் வழிநடத்தப்பட்டு நார்மன் பெத்யூன், போங், துவாரக் நாத் எனத் தொடங்கிய அந்த நீண்ட பாரம்பரிய - ஒருங்கிணைந்த மருத்துவம் - வெறுங்கால் மருத்துவர்கள், மக்கள் பங்கேற்பு ஆகியவற்றை அங்கங்களாய்க் கொண்ட மக்கள் நல மருத்துவ கட்டமைப்புதான். இவை சிறப்புக்குரிய சாதனைகளை படைத்தவைகள் என்பதால் இதில் மாற்றமே வரக்கூடாது என்பதல்ல. நமது நிலைப்பாடு. மாற்றம் என்கிற சொல்லைத் தவிர மாறாதது எதுவுமில்லை என்பதை தாரக மந்திரமாகக் கொண்ட மார்க்சிய பராம்பரியத்தில் வந்த சீனா மாற்றங்கள் வளர்ச்சிக்கானதாக இருப்பதை உறுதி செய்யும் என்கிற நம்பிக்கை நமக்குண்டு.