உலகத் தமிழர்கள் நெஞ்சில் வீரத் தமிழனாய் வீற்றிருக்கும் முத்துக்குமாரோடு வாழ்ந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கிறேன். அரசியல் தலைவனாக மட்டுமன்று, கலையுலகில் வெற்றி பெற்ற திரைப்பட இயக்குநராகவும் வளர்ந்திருக்கக் கூடியவர். முத்துக்குமாரின் நுட்பமான அறிவும் ஆழமான பகுப்பாய்வும் தனிச்சிறப்பானவை.

ஈழ இன அழிப்புப் போர் அவரது தூக்கத்தை அறவே கலைத்துப் போட்டது. ஈழ மக்களின் அழிவும் அழுகுரலும் அவரை நிலைகுலையச் செய்தன. சிங்களப் பேரினவாதத்தின் கொடும்போரினால் கூட்டம் கூட்டமாக அழிந்து கொண்டிருந்;த ஈழ மக்களுக்குத் தான் என்ன செய்ய முடியும் என்ற கேள்வி அவரைத் துளைத்தெடுத்தது. அதற்கான விடைதான் ஊழித்தீயாக அவருள் பற்றியெறிந்தது.

முத்துக்குமார் என்ற ஒற்றை உயிர் தமிழக அரசியலைப் புரட்டிப் போட்டது பற்றி வியந்து பேசினோம். சட்டக் கல்லூரி மாணவர்களும், வழக்குரைஞர்களும் ஏற்படுத்திய எழுச்சிமிகு போராட்டங்கள் தமிழக மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இப்போராட்டங்கள் 1965இல் நடைபெற்ற மொழிப் போரை நினைவுபடுத்தின. இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு அதேபோல் தமிழகம் ஈழத்திற்கு ஆதரவாக எழுந்து நின்று போராடியது.

தேர்தல் கூட்டணிக்காகவும் ஓட்டுக்காகவுமான சந்தைக் கூச்சல் ஓரணியில் திரண்டிருந்த தமிழ் மக்களின் போர்நிறுத்த முழக்கத்தையும் தமிழீழ மக்களின் அழுகுரலையும் அமுக்கிப் போடவே பயன்பட்டது. நம் போராட்டங்கள் எதுவும் இந்தியாவை அசைத்துக் கூடப் பார்க்கவில்லை. ஈழப்பிரச்சனை என்பதைப் பதவி அரசியலுக்கு உட்பட்டதாக, இங்குள்ள ஈழ ஆதரவு அரசியல் கட்சிகள் கூட மாற்றிவிட்டன. “முத்துக்குமாரின் ஈகம் வீணாகிப் போய்விட்டதோ? அவரின் கனவு நனவாகுமா?” என்ற கேள்விகளை நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள், ஏன் தோழர்கள் கூட என்னிடம் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இன அழிப்புப் போரில் பெரும் அழிவுக்குள்ளான ஈழத்தமிழர்கள் வாழ்வில் என்ன மாற்றங்களை கொண்டு வரப் போகிறோம்? நம்பிக்கை இழந்து காணப்படும் தாயக வாழ் ஈழத் தமிழர்களுக்கும் புலம்பெயர் தமிழர்களில் குறிப்பிட்டோருக்கும் எப்படி நம்பிக்கை ஊட்டப் போகிறோம்? ஈழப் படுகொலையின் மனித உரிமை மீறல்களையும் போர்க்குற்றங்களையும் உலகுக்கு எப்படி எடுத்துச் செல்லப் போகிறோம்? இதற்கான விடை காணும் போதுதான் முத்துக்குமாரை நினைவு கூர்வது பொருளுடைத்தாகும்.

“வாழ்க்கை மனிதனுக்குத் தரப்பட்டதே அவன் எந்த நிலையில் இறக்க விரும்புகிறான் என்பதை முடிவு செய்து கொள்ளவே” என்று எழுதினான் ஒரு பின்லாந்துக் கவிஞன். மனிதன் எத்துணைக் காலம் வாழ்ந்தான் என்பதை விட அவன் வாழ்ந்த காலத்தில் தன் இனத்திற்கு எந்த வகையில் பயனுடையவனாக இருந்தான் என்பதே முக்கியம். விடுதலைக்கான போராட்டத்தை முன்னெடுத்த போராளிகள் தம்மையே கொடுத்துக் கொண்டார்கள். அதுவே உயிர்ப்பான வாழ்வு!

மனித வாழ்வு சந்ததிப் பெருக்;கம், முதுமை, இறப்பு என்பதோடு முடிவடைந்து விடுகிறது. ஆனால் வாழ்வின் மெய்யான பொருளை உணர்ந்த வர்களால்தான் வாழ்வை அதிகம் நேசிக்க முடிகிறது. வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் ரசிக்க முடிகிறது. விடுதலை இலட்சியத்தை நேசிக்கும் தோழர்கள் மரணத்திற்கு அஞ்சுவதில்லை என்பது உண்மைதான். ஆனால் யாரும் மரணத்தை நேசிப்பதில்லை என்பதை மறந்து விடக் கூடாது. வாழ்வதன் மூலம் மட்டுமல்ல சாவதன் மூலமும் கூட சமரசமற்ற, போர்க்குணமிக்க ஒரு அணியை உருவாக்கி விட முடியும். பகத்சிங் என்கிற இளைஞன் விடுதலைப் போரில் 23 வயதில் வீரச்சாவடைந்தான். இன்று வரை அவன் விடுதலை நாடும் ஒவ்வொருவரின் நெஞ்சிலும் நிலைத்திருக்கிறான். அப்படியொரு உன்னத நிலையை அடைந்தவர்தான் முத்துக்குமார்.

முத்துக்குமார் உணர்ச்சிவயப்பட்டுத் தன் உயிரை மாய்த்துக் கொள்ளவில்லை. சில முட்டாள்கள் சொல்வது போல் அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அது அறிவுவயப்பட்டதாய் அமைந்தது. தான் வாழ்ந்தும் கற்றும் பெற்ற அறிவைக் கொண்டு தமிழ்ச் சமூகத்திற்கு ஓர் அறிக்கை அளித்தாரே! அதன் கருத்தியல் தெளிவு ஒவ்வொரு தமிழ்த் தேசியனுக்கும் அடிப்படைத் தேவை இல்லையா!

வாழ்வின் அடிப்படைத் தேவைகளை இழந்த நிலையில்தான் தொடக்கக் கல்வியை முத்துக்குமார் கற்றார். அப்போது யாரோடும் அதிகம் பேசமாட்டார். அவர் தனிமை விரும்பி! முடங்கிக் கிடந்த அவரை வெளிக்கொணர ஆசிரியர்கள் சிலர் முயன்றனர். அந்த முயற்சி உரையாட வேண்டுமென்ற உந்துதலை அவருக்கு உண்டாக்கியது. புலவர் தமிழ்மாறன் பேச்சால் தமிழ் மீது தணியாத தாகம் ஏற்பட்டது. நிறைய புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தார். அன்று தோன்றிய படிப்பார்வம் வாழ்வின் இறுதி வரை தொடர்ந்தது. அந்தப் படிப்பார்வம்தான் முத்துக்குமார் அறிக்கைக்கு அடிக்கல்லாய் அமைந்தது.

தி.மு.க.வைச் சேர்ந்த ஒருவர் என் உறவினர் ஒருவரிடம் நான் எழுதித் தமிழ்த் தேசம் வெளியீடாக வந்த “முத்துக்குமார்: நெருப்பாய் வாழ்ந்தவன்” எனும் நூலைப் பார்த்துவிட்டு முத்துக்குமாரைத் தியாகி (ஈகி) ஆக்கி விட்டார்களே என்று ஆதங்கப்பட்டார். உறவினரே அதற்கு இப்படி பதிலளித்தார்:

“இது மரணமல்ல, மாபெரும் வரலாற்று நிகழ்ச்சி. முத்துக்குமார் சாதாரண மனிதப் பிறவி அல்ல! தன்னையே எரித்துக் கொண்ட இலட்சிய நெருப்பு! நம் மண்ணின் மைந்தன்! நம் காலத்தின் நாயகன்! முத்துக்குமாரின் 14 அம்சக் கோரிக்கை ஒரு முதிர்ச்சி பெற்ற அரசியல் தலைவருக்குரிய பாங்கை வெளிப்படுத்துகிறது”.

முத்துக்குமார் அவரை இந்தளவு ஆட்கொண்டதற்கு அவருடய தனித்துவமான அறிக்கை ஒன்றே காரணம். அவ்வறிக்கை படிப்பவரைப் பாதிப்புக்குள்ளாகும் இலக்கியமாகவே இருக்கிறது. குறுகிய வட்டத்துள் சுற்றிச் சுழலும் மனித வாழ்வை “விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை” என்கிற அளவில் விரிந்த பார்வையைத் தரவல்லது அவரது அறிக்கை.

ததேவிஇ, தோழர் பாரி “அமைப்புச் செயல்பாட்டுக்கு முத்துக்குமார் ஏன் தன்னை அணியமாக்கிக் கொள்ளவில்லை” எனக் கேட்டார். முத்துக்குமார் அமைப்புத் தேவையை மறுக்கவில்லை. அதுதான் புரட்சியை வழிநடத்தக் கூடிய முன்னணிப் படை என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். முத்துக்குமார் அதிகமாகக் கேள்வி கேட்பார். பதிலளிக்கும் நிலையில் தோழர்கள் சிலர் இருக்க மாட்டார்கள். இப்படியான சின்னச் சின்ன முரண்பாடுகள் இருந்து கொண்டேயிருக்கும். இருப்பினும் புரட்சிகர இளைஞர் முன்னணியின் அனைத்து அரசியல் நடவடிக்கைகளிலும் கலந்து கொண்டார். தமிழ்நாடு மார்க்சிய லெனினியக் கட்சியின் அனைத்து ஆவணங்களையும் வைத்திருந்தார். “தேசிய இனப் பிரச்சனை” பற்றிய மார்க்சிய ஆசான்களின் நூல்களைச் சேகரித்து வைத்திருந்தார். அவற்றைப் படித்ததன் மூலம் அது குறித்துத் தெளிவு பெற்றிருந்தார். விவாதத்தின் போது மார்க்சிய மேற்கோள்களைத் திறம்படக் கையாள்வார்.

முத்துக்குமாரின் அரசியல் கொள்கை என்ன? மனித குல விடுதலைக்கான மார்க்சியத் தத்துவத்தைக் கொண்டு; உழைக்கும் மக்களுக்கான நிகரமைச் சமூகம் அமைக்க வேண்டும் என்பதே. இன்றைய படிநிலையாக இந்தியத் துணைக் கண்டத்துள் அதை நோக்கிய வழி தமிழ்த் தேசிய விடுதலையே என்பதில் அவருக்குத் தெளிவிருந்தது. அதையே தன் இலட்சியமாகக் கொண்டிருந்தார்.

இந்தியத் தேசியம் என்ற புனைவுத் தேசியம் அனைத்து வகை ஒடுக்குமுறைக்கும் ஊற்றுக்கண்ணாக, பார்ப்பன பனியாக்களுக்கான தேசியமாகவே இருக்கிறது. தமிழ்த் தேசியம் தன் பிறப்பிலேயே பார்ப்பனியத்தை எதிர்க்கிறது. வல்லாதிக்கத்தை எதிர்த்து முறியடிக்க, உலகமயக் கொள்ளையைத் தடுத்து நிறுத்தத் தமிழர்கள் தமிழர்களாய்த் திரண்டால் மட்டுமே முடியும். தமிழ்த் தேசியத்தின் பிரிக்க முடியாக் கூறுகளான பெண் விடுதலை, சமூக நீதி, தமிழ் வழிக் கல்வி ஆகியவற்றை ஏற்றுக் கொண்டு தமிழ்ப் போராளியாகத் தன்னை முன்னிறுத்தி முத்துக்குமார் போராடக் கற்றுக் கொண்டார். தமிழ்த் தேசியப் புரட்சியின் மூலம் தமிழ்த் தேசக் குடியரசை நிறுவ வேண்டும். தமிழ்த் தேசத்தில் நிகரமை மலர வேண்டும் என்பதைத் தன் கொள்கையாகக் கொண்டிருந்தார்.

ஆனால், தமிழ்த் தேசியப் புரட்சியாளனாக அன்றி முத்துக்குமாரை இன உணர்வாளராக மட்டும் காட்சிப்படுத்துகின்றனர். சமூக உணர்வு உள்ள முத்துக்குமார் இயக்கத்திற்கான பாதையைச் சொல்லவில்லையே என்று சிலர் வருத்தப்படுவதுண்டு. உண்மையில் அவரே ஒர் இயக்கமாக இருந்தார். “நான் உயிராயுதம் ஏந்துகிறேன். நீங்கள் அறிவாயுதம் ஏந்துங்கள்” என்ற அறைகூவல் பிரச்சனையை இனம் கண்டு தீர அலசி ஆராய்ந்து, அதனின் இயக்க விதி கண்டு, முரண்களைக் களைய தன் உயிரை ஆயுதமாக்கிக் கொண்ட முத்துக்குமார் விடுதலைப் படிமமாகவே காட்சியளிக்கிறார்.

நான் முத்துக்குமாருக்கு மார்க்சிய லெனினியத்தை அறிமுகப்படுத்தினேன்.ஆனால், எனக்குக் கற்றுக் கொடுக்கிற அளவில் வளர்ந்தார். அந்தக் கறுப்பு வைரத்தை தோழர்களும், புலவர் தமிழ் மாறனும், நானும் பட்டை தீட்டிக் கொண்டேயிருந்தோம். ஆனால் இன்று முத்துக்குமார்தான் அனைவரையும் பட்டை தீட்டிக் கொண்டிருக்கிறார்.

இன்று உலகத் தமிழரிடையே சுடரொளியாய்க் காட்சியளிக்கும் முத்துக்குமாரை நினைத்துப் பெருமிதம் கொண்டு நின்றுவிடவில்லை. முத்துக்குமாரின் அரசியல் நிலைப்பாட்டைத் தமிழ் மக்களிடையே கொண்டு செல்லத் தொடர்ந்து பாடாற்றும் கடமையை உணர்ந்திருக்கிறேன். முத்துக்குமார் இந்த உலகத்திற்கு விட்டுச் சென்ற “விதியே விதியே என் செய நினைத்திட்டாய் என் தமிழ்ச் சாதியை” எனும் தலைப்பிலான அறிக்கையை இன்றும் சந்திப்பவர்களுக்குக் கொடுத்து வருகிறேன். அந்த அறிவாயுதம் தொடர்ந்து ஏந்தப்பட வேண்டியதுதானே! முத்துக்குமாரை நெஞ்சில் ஏந்தியிருக்கிறோம் என்றால் அந்த நெருப்பையும் ஏந்தியிருக்க வேண்டும் என்றே பொருள்! ;