அகராதி!

அடித்தார்களா மகளே உன்னை?

ஆண் பெண் பிரிவின்றி

வளர்ந்தவளை

வளர்க்கப்பட்டவளை

ஆண்மையற்ற ஆண்களும்

பெண்மையற்ற பெண்களுமான

நாலைந்து காக்கிப் போக்கிலிகள்

இறுக்கிப் பிடித்துக் கொள்ள

பொறுக்கிச் சிறுக்கி

தன்கை வலிக்கத்

தடி கொண்டடித்தாளா?

தன்னந்தனியாய்

வெறுங்கையாய் நீயொருத்தி

உன்னைச் சுற்றி நின்று

தடி சுழற்ற

இத்தனை விலங்குகளா?

அப்போதே

அவர்கள் தோற்றுப் போனார்கள்,

சிரி மகளே, வென்றது நீ!

நாய்களுக்குத் தெரியுமா

பெண்புலி நீயென்று?

அகராதி –

போர்க்குணத்தில் நீ அணையாத் தீ!

அய்யோ கொல்றாங்களே

என்றுநீ கத்தவில்லையா?

கதறவில்லையா மகளே?

காவல் சேவையைப்

பொதுவாகப் பாராட்டத்தான்

வேண்டும் என்றவர்கள்

ஒரு பெண்ணை

இத்தனை ஓநாய்கள்

வளைந்து நொறுக்கியதை

நக்கீரனில் பார்த்து

நெற்றிக்கண் திறந்தார்களா மகளே?

அல்லது

காவல் மனம் கசங்காதிருக்க

இந்தச் சேவையைப் பாராட்டி

அண்ணா விருது கொடுப்பார்களோ?

பெட்டைப் பன்றிக்கு

கல்பனா சாவ்லா விருது கூட

கொடுப்பார்களோ?

அடிவிருந்து படைப்பவர்களுக்குத்

தனிவிருது ஏற்படுத்திக்

கொடுத்தாலும் கொடுப்பார்

காவற் காவலர்.

இந்த ஊரில்

ஈழச்சிக்கலே உன்னால்தான்

என்று சொல்லி அடித்தார்களா மகளே?

அவர்களுக்குத் தெரியுமா

கண்ணகி மதுரையை

எரித்தது யாரால் என்று?

அரசியல் பிழைத்தோர்க்கு

அறம் கூற்றாகுமென்ற

காப்பியத் தலைவிக்கு

சிலை வைத்தென்ன

படம் எடுத்தென்ன

அறச் சீற்றத்தின்

அகராதியைப் புண்ணாக்கிய

வெறி நாய்களின்

காவலராய் இருந்து கொண்டே?

ஈழத்தைச் சொல்லி

உன்னை அடித்த தடி

கொழும்பு சென்ற குழு

இராசபட்சனிடம்

வாங்கி வந்த பரிசோ?

அகராதி!

அடித்தபோது

வலித்ததா மகளே உனக்கு?

உடல் புண் ஆறினாலும்

உள்ள வடு ஆறாதே!

சட்டம் படிக்கிறாய்.

வழக்கறிஞர் நீதிபதி

யாரானாலும்

அடிபடும் பயிற்சியும் தேவை

தெரியாதா உனக்கு?

இந்த நாட்டில் இரண்டு வர்க்கம் -

அடிக்கிறவர்கள், அடிக்கப்படுகிறவர்கள்

அடிக்கப்படும் வர்க்கத்தில்

முழுத் தகுதியோடு

சேர்ந்து விட்டதற்காய்ப்

பெருமை கொள் மகளே!

பெற்றவர்க்குப் பெருமை

என்போல் தோழமை

உற்றவர்க்குப் பெருமை!

அகராதி அல்லவா நீ?

உன்னில் எல்லாச் சொற்களும்

இருக்க வேண்டுமே,

அச்சம் நாணம் அடிமைக் குணம்

கூழைக் கும்பிடு கோழைத்தனம்

விடுபட்டதேன்?

அகராதி!

மதுரையில்தான் மகளே

பிட்டுக்கு மண்சுமந்த ஈசனைப்

பிரம்பால் காவலன்

அடித்தபோது

அனைத்து மாந்தர்க்கும்

வலித்ததாகக் கதை –

அடித்தவனுக்கும் கூட

அடிவிழுந்தாற் போல்

வலித்ததாம்.

உனக்கு விழுந்த

அடியைப் படித்த போது

மகளே எங்களுக்கும் வலித்தது.

உணர்வுள்ள ஒவ்வொரு

தமிழச்சி தமிழனுக்கும்

வலித்திருக்க வேண்டும்.

ஆனால் அடித்த

காவலர்க்கும்

காவலரின் காவலர்க்கும்

வலித்திருக்காது,

வலிக்கச் செய்ய வேண்டும் நாம்.

அடித்த கைகளை –

தடிக்கை, அதை ஏவிய

கொடிக்கை இரண்டையும்

ஒடிக்கும் நாள் வரும்,

வர வைப்போம் மகளே!

அது வரை

பொறுத்திரு என்று

யார் சொன்னாலும்

கேட்காதே,

போராடு!

- தியாகு