கொரோனாவும் தேசிய இன உரிமையும்

இந்திய அரசின் பொருளாதாரக் கொள்கை வெள்ளையர் காலத்தில் பொருளாதார ஆதிக்க சக்தியாக வளர்ந்த பனியாக்களின் சார்பாகவே இருந்திருக்கிறது. இந்த பனியா ஆற்றல்கள் புதிய பொருளாதாரக் கொள்கை நடைமுறைக்கு வந்த பின்னர் கட்டற்ற மூலதன சேகரிப்பினைச் செய்திருக்கின்றன. மூலதனப் பெருக்கத்தைச் சாதிக்க முடிந்த இந்த ஆரியக் கூட்டம், தேசிய இனங்களைத் தனது சந்தையாக்கும் முயற்சியில் ஈடுபட்டு அதில் பெருவெற்றியும் ஈட்டி இருக்கிறது. இந்த வகையில் தமிழகத்தின் பெரு முதலாளிகளாக இந்த இந்திய தேசிய அல்லது ஆரிய முதலாளிகள் தான் இருக்கிறார்கள்.

anna 450மூலதனத்தை வளர்த்தெடுத்துக் கொள்ளும் துறைகளில் இந்தியாவின் விடுதலைக்கு முன்பிருந்தே தம்மை வளர்த்துக் கொண்ட இச்சமூகம், சுதந்திர இந்தியாவின் பார்ப்பனிய அரசாட்சியில் தம்மை முடிசூடா மன்னனாக வணிகத்தில் இறுத்திக் கொண்டது. மூல வளங்களாக இருக்கும் தாதுப் பொருட்கள், பெட்ரோலியம் உள்ளிட்ட துறைகளில் இருந்து உற்பத்தி தொழிற்சாலைகள் வரை இவர்களது ஆதிக்கம் விரிவடைந்தது. இந்தியா முழுவதுமான தொழிற்சாலைகள் இந்த பனியா-மார்வாடி- குஜராத்தி/ராஜஸ்தானி முதலாளிகளால் துவக்கப்பட முடிந்தது. இவர்களுக்கான அரசு கொள்கை மாற்றங்களும், நிதி ஒதுக்கீடுகளும் அரசினால் கொண்டு வரப்பட்டன. இம்முதலாளிகள் வளருவதற்கு ஏற்ப தாராளமயவாதம் திறந்து விடப்பட்டது.

வெளிநாட்டில் வரும் மூலதனங்களோடு தம்மைப் பிணைத்துக் கொள்ளும் வாய்ப்பு இந்த கும்பல்களுக்கே வாய்த்தது. இந்தியாவின் முக்கிய வணிகக் கேந்திரங்கள் இவர்களது கைகளுக்கு வந்து சேர்ந்தன. துறைமுகங்கள், சந்தைகள் ஆகியன இவர்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டன. பிற தேசிய இனத்தைச் சார்ந்த முதலாளிகள், குறிப்பாக தமிழ்த்தேசிய முதலாளிகளின் தொழில் வளர்ச்சி என்பது இந்த பனியா முதலாளிகளுக்கு சேவை செய்யும் முதலாளிகளாகவே மாற்றப்பட்டனர். காங்கிரஸ் கட்சி விடுதலைக்கு முன்பிருந்தே இந்த சமூகத்திற்கான கட்சியாகவே வளர்த்தெடுக்கப்பட்டது. இந்தியா முழுவதும் வர்த்தகத்தை விரிவுபடுத்திக் கொள்ளும் வாய்ப்பு இவர்களுக்கே வழங்கப்பட்டது. பிற தேசிய இனங்கள் விடுதலைப் போராட்டங்களில் ஈடுபட்ட காலத்தில் வெள்ளையருடன் சேர்ந்து தமது முதலீடுகளை, உற்பத்தியைப் பெருக்கிக் கொண்டனர். இந்த உறவானது தற்போது பாஜகவினால் மேலும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பாஜகவின் தலைமை குஜராத்திகளின் கீழே வந்ததும், அவர்கள் இந்தியாவின் உயர் அதிகாரத்திற்குச் சென்ற பின்னர், பனியா கூட்டம் பெரும் வேகத்துடன் மூலதனத்தைச் சேகரிக்கத் துவங்கியது.

வங்கிகள் பெருமளவில் மக்கள் பணத்தை இச்சிறு கூட்டத்திற்கு வாரி வழங்க ஆரம்பித்தன. இவர்களால் பல நிறுவனங்கள் துவங்கப்பட்டு, மக்கள் பணம் சுரண்டப்பட்டது. இதில் முறைகேட்டினை அனுமதித்த மோடி அரசு, இந்த சுரண்டல்வாதிகளைப் பாதுகாத்தது. முகில் சோக்ஸி, நீரவ் மோடி என பல மார்வாடி முதலாளிகள் பாதுகாக்கப்பட்டதை நாம் கண் முன்னால் கண்டோம். வங்கிகள் இம்முதலாளிகளுக்கே சேவை செய்ய ஆரம்பித்தன. இவர்களுக்கே பெரும் கடன்களைக் கொடுத்தன. இக்கடன்களைத் திரும்பப் பெரும் முயற்சியற்று திவாலாகும் நிலை வங்கிகளுக்கு ஏற்பட்டன. இவை அனைத்தும் நம் கால வரலாறுகள்.

இந்தியாவின் முதலாளியம் என்பது அனைத்து தேசிய இனங்களுக்கும் பொதுவானதாக உருவாகவில்லை. தேசிய இன மக்களைச் சந்தைகளாக மாற்றினார்கள். தேசிய இன மக்களின் வளங்களான கனிம வளங்கள், மலை வளங்கள், கடல் வளங்கள், உள்ளிட்டவை பனியா மார்வாடி நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கப்பட்டன. இதற்கு ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு கொடுக்கப்பட்ட அனுமதியே பெரும் உதாரணம்.

வளங்களைத் தம் வசமாக்கும் முயற்சிக்கு வரும் எதிர்ப்புகளை முறியடிக்கும் விதமாகவும், அதை சட்டவிரோதமாக்கவும், இந்நிலவள அபகரிப்பிற்கு ஏற்ப சட்டங்களைப் பாஜக அரசு கொண்டு வந்தது. இதே போன்று ரியல் எஸ்டேட், சில்லரை விற்பனை துறை, பிற உற்பத்தித் துறை ஆகியனவற்றில் இந்த மார்வாடிக் கூட்டத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. மேலும் சேவைத் துறை எனப்படும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவையும் இந்தக் கூட்டத்தினரின் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. இப்படியாக இந்திய முதலாளியத்தின் பெரும் ஆதிக்க ஆற்றலாக வளர்ந்து நிற்கும் இந்த வலைப்பின்னலை மேலும் கவனமாக நாம் ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது.

சிறு-குறு தொழில்களிலேயே தமிழர்கள் தம்மை வளர்த்துக் கொள்ள வேண்டிய சூழலில், இந்திய அரசின் பொருளாதாரக் கொள்கை இத்துறைகளுக்கு எதிராகவே அமைந்திருக்கிறது. இது குறித்து மே17 இயக்கம் தொடர்ந்து எழுதியும், பேசியும் வந்திருக்கிறது. தமிழினம் தற்சார்புப் பொருளாதாரம் நோக்கி நகர்வதற்குரிய வாய்ப்புகள் மறுக்கப் பட்டிருக்கின்றன. இந்த பொருளாதார வளர்ச்சியைத் தகர்க்கும் வண்ணம் மாநில வரிவசூல் உரிமைகள், மூலவளத்தின் மீதான உரிமைகள் என பலவற்றைத் தமிழ்த் தேசிய இனம் இழந்திருக்கிறது. ஒரு மாவட்ட அளவிலான அதிகாரத்தை மட்டுமே வைத்துக் கொள்ளுமளவு தமிழ்நாட்டின் அதிகாரம் சுருக்கப் பட்டிருக்கிறது. ஆக தமிழ்த் தேசிய இனத்தின் உரிமை என்பது இந்திய அரசாலும், அதனால் வளர்க்கப்பட்ட மார்வாடி-பனியா முதலாளிகளின் சுரண்டல் தேவைகளாலும் மறுக்கப்பட்டு வருகிறது.

இந்த முதலாளிக் கூட்டத்தை ஆதரிக்கவும், வலுப்படுத்தவுமே அரசின் செயல்பாடுகள் 1947 ஆண்டு முதல் இருந்தது என்பதை நாம் கவனிக்கலாம். தமிழ்த் தேசிய இனமக்களின் செல்வத்தைச் சுரண்டியும், ஆக்கிரமித்தும், அடக்கியும் தம்மைப் பெருக்கி வரும் இந்த பனியாக் கூட்டத்தினைப் பாதுகாக்கவே மோடி அரசு இந்த கொரோனா தொற்றுக் காலத்திலும் திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருக்கிறது.

கடந்த பிப்ரவரி பட்ஜெட் அறிவிப்புகள் மற்றும் கொரோனா தொற்றுக்காக ஊரடங்கினை அறிவித்த பின்னராக மார் 24, 2020 முதல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் வெளியிடப்பட்ட நிவாரணத் திட்டங்களும் இந்த பனியா-கார்ப்பரேட் முதலாளிகளின் நலனைப் பாதுகாப்பதாகவே இருந்தன. சிறுகுறு தொழில்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டன. தமிழகத்திற்கு அளிக்கப்பட்டிருக்க வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைப் பணம் கூட வழங்கப் படவில்லை. தமிழ்நாட்டில் தொழில்துறைகளைப் பாதுகாக்கும் வகையில் எவ்வகையான திட்டங்களையும் அறிவிக்க இயலாத நிலையே நமது நிலை.

டில்லி அரசின் அனைத்துத் திட்டங்களும் இந்திய தேசிய முதலாளிகளாக உள்ள மார்வாரிக் கும்பலின் நலன்களைச் சார்ந்தே அமைந்திருக்கின்றன. உலக முதலாளியப் பொருளாதாரத்தோடு இந்தியப் பொருளாதாரம் பின்னிப் பிணைக்கப்பட்டிருக்கிறது. இந்தியப் பொருளாதாரத்தின் ஆக்கிரமிப்பில் சிக்கித் தவிக்கும் தமிழகப் பொருளாதாரமும், உற்பத்தியும், வணிகமும் உலக - இந்திய அளவிலான மாற்றங்களில் சீட்டுக்கட்டைப் போல சரிந்து விழும் நிலையிலேயே பாதுகாப்பற்று இருக்கிறது.

தமிழகத்தின் கட்டமைப்பு என்பது சமூக நீதி அடிப்படையிலான கல்வி வளர்ச்சியின் விளைவாக நாம் உருவாக்கியது. கடந்த 70 ஆண்டுகளாக கடுமையான உழைப்பினால் தமிழர்கள் உருவாக்கிய கட்டமைப்பு எவ்விதப் பாதுகாப்புமின்றி நிராதரவாக நிற்கிறது. சர்வதேச முதலாளிய நெருக்கடி, கடன் நெருக்கடி மற்றும் சந்தையின் ‘தேவை’ சார்ந்த நெருக்கடி, ’சப்ளை’ நெருக்கடி என பல சவால்களை எதிர்கொள்கின்றன தமிழ்நாட்டின் உற்பத்தி, வணிகத் துறைகள். இதுமட்டுமல்லாமல் இந்திய அளவில் ஜி.எஸ்.டி வரி நெருக்கடிகள், வங்கிகளின் கடன் நெருக்கடிகள், வட்டி நெருக்கடிகள் என பலவற்றைத் தமிழர்கள் எதிர்கொள்கிறார்கள். முற்றும் முழுதாக சுரண்டப்படும் இனமாக தமிழர்கள் இந்த கொரோனா நெருக்கடியை எதிர்கொள்கிறார்கள்.

இச்சமயத்தில் அறிஞர் அண்ணாவின் கருத்துக்களை மீண்டுமொரு முறை திரும்பிப் பார்ப்பது நமக்கு இதன் மூலப்பிரச்சனையைப் புரிந்து கொள்ள உதவும். இந்த ஆதிக்கத்தின் ஆரம்ப நிலையை அறிஞர் அண்ணா 1940களிலேயே ஆய்வுப்பூர்வமாக தகவல் - புள்ளி விவரங்களோடு அம்பலப்படுத்தி இருக்கிறார். இந்த வடநாட்டு பனியாக் கூட்டம் நிதி மூலதனத்தைத் தமதாக்கிக் கொள்ளும் முயற்சியை 1940களில் அறிஞர் அண்ணா தனது பணத்தோட்டத்தில் அம்பலப்படுத்துகிறார்.

".. (இரண்டாம் உலகப்) போரின் காரணமாக இங்கு பணப்பெருக்கம் ஏராளம். ஒன்றுக்குப் பத்தாக விலை கொடுத்து வாங்குகிறவர்களைக் காண்கிறோம். இந்தச் சமயத்திலே பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமலிருக்கும், ‘ஆசாமிகளை’ வடநாடு மோப்பம் பிடித்து விட்டது…. வடநாட்டார் பணநடமாட்டம் (இங்கு) ஏராளமாக இருப்பது கண்டு இந்தப் பெருக்கம், புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு விடும் என்பதை உணர்ந்து, அந்தச் சக்தியைக் கட்டுப்படுத்த வேண்டுமென்று திட்டம் தயாரித்து, பல புதிய பாங்குகளை (வங்கிகளை) ஏற்படுத்தி விட்டனர். அதாவது பொருளாதாரப் போருக்கு புதிய பாசறைகளை ஏற்படுத்திக் கொண்டனர். இந்தப் போர் ஆரம்பிப்பதற்கு முன்பு வரை ஜப்பானுக்குப் பழைய இரும்பு விற்று வந்தோம். பிறகு நமது இரும்பு நமக்கே குண்டாகி, நம்மவரை நாசம் செய்தது. இப்போது வடநாட்டார் அமைக்கும் பொருளாதாரப் பாசறைக்கும் நாமே பொருளும் தருகிறோம். டிபாசிட்டுகள், சேமிப்புகள் என்ற பெயரால் எவ்வளவோ பணம் பாங்குகளிலே சென்று தங்குகின்றன. இந்தப் பணமே பிறகு இந்நாட்டு (தமிழ்நாட்டு) தொழில் வளர்ச்சிக்கோ ஊறு தேட உதவக்கூடும்…" இவ்வாறு இந்த பனியா நிதித்திரட்டல் தமிழர்களுக்கு எதிராகச் செல்லும் என்றும் 1940களிலேயே தமது ’பணத்தோட்டம்’ கட்டுரையில் எச்சரிக்கிறார் அறிஞர்.அண்ணா.

அவர் மேலும் குறிப்பாகச் சொல்லும் போது, "1941-44இல் பணம் மலிவாகிய காலம். அந்தச் சமயமாகப் பார்த்து பாங்குகளைத் துவக்கினர் (பனியாக் கூட்டத்தார்) அதாவது மழை சமயமாகப் பார்த்து பாங்குகளைத் துவக்கினர். அதாவது மழை பெய்து ஆறு நிரம்பும் நாட்களை அறிந்து, அதை அணைக்கட்டி தண்ணீர்த் தேக்கங்களை ஏற்படுத்திக் கொண்டனர். இனி அந்தத் தேக்கங்களின் மூலம் வறண்ட பூமியையும் வளமாக்க முடியும். மேட்டூர் தண்ணீர் தேக்கம், ஒரு தனி ஆளின் சொத்தாக இருந்தால், அந்த நீரைப் பாய்ச்சலுக்கு எதிர்பார்த்துள்ள நிலத்துச் சொந்தக்காரரின் நிலைமை என்ன ஆகும்! மேட்டூர் மிட்டாதாரர் வைத்தது தானே சட்டம். 1941-44இல் பணவெள்ளம் இதனைச் சரியானபடி ‘தேக்கி’ வைத்துக் கொண்டனர் பனியாக்கள். நாட்டு நிலையை நிர்ணயிக்கக் கூடிய பெரிய பாங்குகள் இந்தப் பணப்பெருக்கத்தின் போது வடநாட்டில் வடநாட்டுப் பாங்குகளில் அதிகாரம் பெற்ற மூலதனம் 43 கோடி ரூபாய்க்கு மேலாகவே இருக்கிறது என்றால் பொருளாதாரப் பிடி, வடநாட்டினிடம் எவ்வளவு பலமாகச் சிக்கி இருக்கிறது என்பதை விவரிக்கத் தேவை இல்லை.… இந்த வகையிலே 1941-44களில் துவக்கப்பட்ட 14 வட இந்திய பாங்குகளிலே எவ்வளவு டிபாசிட்டாகச் சேர்ந்திருந்தது? 1943ம் ஆண்டுக்கு மட்டும் உள்ள கணக்கின்படி டிபாசிட்டாக குவிந்த தொகை 42,10,64,328.00 ரூபாய் (42 கோடி ரூபாய்)... இங்கோ 'தாயின் மணிகொடி பாரீர்!' என்ற கீதத்தோடு திருப்தி அடைந்து விடுகிறோம். இது சரியா? முறையா? (இந்தியத்) தேசியம் பேசுபவர் அங்கு பண அரசு அமைக்கிறார்கள். இங்கு இன அரசு கேட்கும் நம்மை ஏளனம் செய்கிறார்கள்..." என்று தமிழ்த் தேசிய இன உரிமையை அறிவியல் பூர்வமாக முன்வைக்கிறார் அறிஞர் அண்ணா.

தென்னாட்டில் தனது ஆக்கிரமிப்புகளை விரிவு செய்யும் இந்த வடஇந்திய பனியா நிதிக் கட்டமைப்புகளைப் பற்றி ‘அண்ணா’ சொல்லும் போது, "பாரத் பாங்குகள் மட்டும் 216 கிளை ஸ்தாபனங்கள், சென்னை மாகாணமெங்கும் அமைத்திருக்கிறது. இதன் பொருள் என்ன? இவ்வளவு இடங்களிலும் எந்தச் சமயத்திலே தொழில் நடத்தவும், தாராளமான வசதியைக் ‘கரம்சந்த்’ பெற முடியும், கருப்பண்ணனால் முடியாது" என்று மிக எளிமையாக இந்த பனியா ஏகாதிபத்தியத்தைத் தோலுரிக்கிறார்.

இந்தக் கட்டமைப்பு இந்தியாவின் ‘வால்ஸ்ட்ரீட்டாக’ மாறி இருக்கிறது. அதாவது பொருளாதார ரவுடிக் கூட்டமாக மாறி இருக்கிறது. தமது நலனுக்காக எதையும் உருவாக்கவோ, நிர்மூலமாக்கவோ முடியக்கூடிய வகையில் வளர்ந்து நிற்கிறது. ’கெய்னீசிய’ பொருளாதார முதலாளித்துவ முறையில் இந்திய அரசு இந்தக் கட்டமைப்பிற்கு சாதகமாக செயல்பட்டு வருவது சவகர்லால் நேரு காலத்திலேயே உருவாகி இருக்கிறது. அதாவது முதலாளித்துவ உற்பத்தியை வளர்த்தெடுக்க அல்லது ஆதரிக்க அல்லது உதவ அரசின் பங்கேற்பு பற்றிப் பேசிய இந்த கெய்னீசிய முறை, இந்த பனியாக் கும்பலை மிருகத்தனமாக வளர்த்தெடுத்திருக்கிறது. இதன் துவக்கத்திலேயே, இந்த முதலாளிய உற்பத்தி முறை அழிவை நோக்கியே செல்லுமெனவும் அறிஞர் அண்ணா தனது ‘பண்டித நேருவின் கண்முன்’ எனும் கட்டுரையில் விவரிக்கிறார்.

இந்தியாவின் அதிகாரம் காங்கிரசின் கைகளுக்கு வந்த பின்னர் அவர்களது ஆட்சிமுறையைப் பற்றி பின்வருமாறு சொல்கிறார் அண்ணா. இந்திய அரசு முதலாளித்துவ அரசாகவே வடிவமைக்கப்பட்டு செயல்பட்டது என்பதை இதைவிட எளிமையாக விளக்கிவிட இயலாது. "பசித்த மக்களுக்கு உணவளிக்கும் முறையிலேயோ, வேலையற்றுக் கிடப்போர்களுக்கு வேலை தரும் வகையிலேயோ, ஆளவந்தார்களின் போக்கு இருக்கவில்லை. முதலாளிகளின் மிடுக்கு தளராமல் எப்படி பார்த்துக் கொள்வது - அவர்களுடைய இலாபப் பெருக்கத்திற்கு எவ்வாறு ஆக்கந் தேடுவது - மத்திய கிழக்கிலும், கீழ்க் கோடியிலும் உள்ள சிறு சிறு நாடுகளின் சந்தையை எவ்வாறு பிடிப்பது- அங்கு இத்துறையில் ஏற்படும் போட்டியை எவ்வாறு சமாளிப்பது - ஆசியா கண்டத்திற்குத் தலைமை தாங்கி நடத்த வேண்டும்- அதற்கான முறையில் இராணுவம் அமைக்க வேண்டும்- தேச கவுரவம் காக்கப்பட வேண்டும் என்பன போன்ற பிரச்சனைகளில் தான் ஆளவந்தார்களின் செயலும், கருத்தும் செல்கிறது." என்று இந்திய அரசு முதலாளிய நலனுக்காகவே திட்டமிட்டு செயல்படுகிறது, தேசியத் திட்டங்களை வடிவமைக்கிறது, வெளியுறவு-நிதிக் கொள்கைகளை வகுக்கிறது என்பதை இந்த வரிகளிலேயே எளிமையாக்கி விளக்குகிறார் அறிஞர் அண்ணா.

மூலத் தொழிற்சாலைகளுக்கு பண உதவி செய்வதற்காக ‘இண்டஸ்ட்ரீயல் பைனான்ஸ் கார்ப்பரேசன்' எனும் ஒரு நிதி அமைப்பை ஏற்படுத்த ஒரு மசோதாவை நேரு அரசில் நிதி அமைச்சர் சண்முகம் கொண்டு வருவதைப் பற்றி கேள்வி எழுப்புகிறார் அறிஞர் அண்ணா. "இந்த நிதி அமைப்பின் தன்மை என்ன? இதன் போக்கு எவ்வாறு இருக்கும்? இதனால் இலாபம் பெறுகிறவர்கள் முதலாளிகளா அல்லது மக்களா? இதற்கு அவசியமென்ன? என்பன போன்ற விசயங்களை நாம் அலசிப் பார்க்க வேண்டும்." இந்த அமைப்பைப் பற்றி விரிவாக பேசுகிறார். "இந்த கார்ப்பரேசனை 11 பேர் நிர்வாகிக்கிறார்கள். அரசு சார்பில் இருவரும், தொழில் அரசர்களையே நிர்வாகிகளாகக் கொண்ட ரிசர்வ் வங்கியின் சார்பில் மூவர், முதலாளிகள் ஆதிக்கத்தில் உள்ள வங்கிகள், இன்சூரன்ஸ் கம்பெனிகளின் சார்பில் ஐந்து பேர் இதன் நிர்வாக அங்கத்தவர். இதன் மானேஜிங் டைரக்டர், இந்திய அரசாங்கத்தினரால் நியமிக்கப்பட்ட போதிலும், இவர் ரிசர்வ் வங்கி நிர்வாகிகளைக் கலந்து கொண்ட பின்னரே நியமிக்கப்படுவர்" என்பதை விவரிக்கும் அண்ணா தனது கேள்விகளை மேலும் கூர்மையாக்குகிறார். "மூலதனம் வரும் வகையையும் (எந்த நாட்டவராயினும் இந்த அமைப்பில் பணத்தை சேமிக்கலாம், இதுமட்டுமல்ல மத்திய அரசாங்கத்தின் அனுமதியின் பேரில் வெளிநாடுகளில் கடன் வாங்க உரிமை இருக்கிறது. இதன் பங்குகளான 2000 பங்குகளில் இந்திய அரசின் 400 பங்குகளைத் தவிர்த்து அனைத்தும் தனியார் முதலாளிகளின் ஆதிக்கத்திலேயே இருக்கும்), நிர்வாகிகள் நியமிக்கப்படும் முறையையும் பார்க்கும் பொழுது இந்த இண்டஸ்டிரியல் பைனான்ஸ் கார்ப்பரேசன் ஒரு முதல் தரமான முதலாளிகள் ஆதிக்கம் மிகுந்த நிறுவனமாகத் தான் இருக்க முடியும் என்பது விளங்கவில்லையா?" என்கிறார்.

முதலாளிகள் எனில் அது பனியாக்களாகவே இருக்க இயலும் என்பதை அவர் பல கட்டுரைகளில் ஆதாரப்பூர்வமாக 'பணத்தோட்டம்' முதலே விளக்குகிறார். இதில் அரசாங்கத்தின் நிலையைப் பற்றி சொல்லும் பொழுது "அரசாங்கத்தின் மேற்பார்வை, கட்டுப்பாடு என்பனவெல்லாம் வெறும் அலங்காரச் சொற்களேயன்றி வேறன்று" என்கிறார். அதாவது இந்திய அரசு என்பது இம்முதலாளிகள் வளர்வதற்குரிய கட்டமைப்பாகவே இருக்கிறது. மார்க்சின் வரிகளில் சொல்வதெனில் இந்த அரசின் பங்கேற்போடு இந்திய முதலாளி வர்க்கத்தின் சுரண்டல் கட்டமைப்பு முழுமையடைகிறது. இந்த முதலாளித்துவ முயற்சி குறித்து அண்ணா தொடர்ந்து எழுதும் பொழுது, “தனிநபர்களால் தொடங்கப் பெறும் தொழில்களுக்கு உதவி செய்வதையே குறியாகக் கொண்டு இக்கார்ப்பரேசன் ஆரம்பிக்கப்படுகிறது" என நிதி அமைச்சர் சண்முகம் குறிப்பிடுவதை எடுத்துக்காட்டி தனது வாதத்தைக் கூர்மையாக்குகிறார்.

"…உலகத்தின் முதலாளித்துவ முறைக்கே இன்று பெரியதோர் நெருக்கடி காத்துக் கொண்டிருக்கிறது. இதனை முதலாளித்துவ நாடுகள் நன்கு தெரிந்து கொண்டு தான் இருக்கின்றன. அந்நாட்டு முதலாளிகளும் இதனை உணராமல் இல்லை. முதலாளிகளில் ஒருவரான நிதி அமைச்சர் சண்முகம், வரவிருக்கும் ஆபத்தை அறிந்துள்ளதன் விளைவாகத்தான், தன் வர்க்கத்தைக் காக்கும் பெரும் பணியில் முனைந்துள்ளார். அமைச்சரின் வார்த்தையே இதைச் சொல்லுகிறது" என்று எடுத்துக் காட்டுகிறார் அண்ணா. அமைச்சரின் கூற்றாக, "தனிநபர் தொழில் ஸ்தாபனத்தின் பணபலம் எவ்வாறு இருந்த போதிலும், குறிப்பிடத் தகுந்த அளவு உதவத் தேவைப்படும் நிலை ஏற்பட்டு தீரும். அந்நிலையில் வேண்டும் தொகையைப் பொதுமக்களிடமிருந்து சாதாரணமாகப் பெற முடியாது. குறித்த தொழிலின் அழிவும், வளர்ச்சியும் அவ்வாறு பெறப்படும் உதவியைப் பொருத்த விசயமாகும். இது போன்ற நெருக்கடியான நிலைமையிலிருந்து சம்பந்தப்பட்ட தொழில்களைக் காப்பாற்றவே இக்கார்ப்பரேசன் துவக்கப்படுகிறது” என்று அமைச்சரின் வார்த்தையை இம்முதலாளித்துவத்தின் நிலையற்ற தன்மை பற்றியும், அதை பாதுகாக்கும் அரணாக அரசு இயங்கும் நிலையையும் குறிப்பிடப் பயன்படுத்துகிறார்.

அண்ணா எழுதிய பின்வரும் வார்த்தைகளை இன்றைய கொரோனா தடை நிலைக்குப் பொருத்திப் பார்த்தால் இந்த முதலாளித்துவத் தோல்வியை எளிதில் புரிந்து கொள்ள இயலும். "முதலாளித்துவ முறைக்கு எதிர்காலம் இல்லை என்பதையும், நெருக்கடி விரைவில் வரவிருக்கிறது என்பதையும் தனி முதலாளிகளால் சுயேட்சையாகத் தீர்த்துக் கொள்ள முடியாதென்பதையும், அரசாங்கமே அச்சமயத்தில் துணை செய்ய வேண்டும் என்பதையும் தீர்க்கமாகத் தெரிந்துள்ள சண்முகம், தனது பங்காளிகளைக் காப்பாற்ற, இந்தப் புனிதப் பணியில் இறங்கியுள்ளார்… முதலாளித்துவ முறை பயனற்றது என்று கண்ட பின்னரும், அதனைத் தொலைத்துத் தலைமுழுக முதலாளிகள், தாமாக முன்வர மாட்டார்கள். அதன் அழிவைத் துரிதப்படுத்த, அது அழிந்த இடத்தில் வேறோர் நல்ல முறையை நிர்மாணிக்க, சமதர்மமே பிணி தீர்க்கும் மருந்து…" என்பதை உணர்த்தும் அறிஞர் அண்ணாவின் வார்த்தைகளை நினைவில் கொள்வது காலத்திற்கேற்ற கருத்தாகும். சோசலிசம் பேசிய நேருவின் முன்னிலையில் தான் முதலாளித்துவத்தை உயிர்ப்பிக்கும் ஆர்வம் காட்டப்படுகிறது என இந்திய அரசின் உண்மை முகத்தைத் தோலுரித்துக் காட்டுகிறார் அண்ணா.

தமிழ்த் தேசிய எழுச்சி என்பது இத்தகைய வேலிகளை எதிர்கொண்டே வளரும் போக்காகும். பொருளியல் ரீதியாக முடக்கப்பட்ட, சுதந்திரம் இழந்த நிலையில் இருக்கும் ஒரு இனம் தமது விலங்குகளின் மூலக்காரணிகளை அறிந்து கொள்வது அவசியம். கொரோனா நெருக்கடியினால் உருவாகும் அசாதாரணமான பொருளாதார நெருக்கடியில் இந்திய அரசானது இந்த பனியா பணக்கார மாபியாக்களை, ஏகாதிபத்திய குழுக்களைப் பாதுகாக்கவே முனைகிறது. உலகெங்கும் எழுந்துள்ள கடன் நெருக்கடியில் இந்திய முதலாளியமும் சிக்கி இருக்கிறது. நிதி மூலதன நெருக்கடியில் இந்தியாவின் வங்கிகளும் சிக்கி உள்ளன.

உலக முதலாளியத்தின் உற்பத்தியோடு பின்னிப் பிணைந்திருக்கும் இந்திய உற்பத்தி முறையைப் பாதுகாக்கவே இந்திய அரசு திட்டங்களை அறிவித்துக் கொண்டிருக்கிறது. இதில் வங்கிகளைப் பாதுகாக்கவும், தனது கொடுமையான ஜி.எஸ்.டி வரியை சுமத்தவும் செய்கிறது. உலக அளவிலான உற்பத்தி - சப்ளை- சந்தை- கடன் நெருக்கடியோடு இந்திய பனியாக் கட்டமைப்பின் பின்னணியை இணைத்துப் பார்த்தால் தமிழர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி உள்ளங்கை நெல்லிக்கனி. பொருளாதார இறையாண்மையற்ற எந்த இனமும் சுயமரியாதையோடு வாழ இயலாது.

இது பற்றிய விழிப்புணர்வு இல்லையெனில் நம்மால் நமது நிகழ்கால- எதிர்கால பொருளாதார- அரசியல்- சமூக உரிமைகளைப் பாதுகாத்துவிட இயலாது. தகர்ந்து வீழும் நிலையில் இருக்கும் ஒரு பொருளாதாரக் கட்டமைப்பில் சிக்கி இருக்கும் இந்திய முதலாளியத்தின் அழிவில் தமிழ்த் தேசிய இனம் கற்றுக் கொள்ளவும், தம்மை மீட்டுக் கொள்ளவும் தேவையான சிந்தனையை அண்ணாவின் எழுத்துக்கள் நமக்கு எளிமையாகப் போதிக்கின்றன.

- மே 17 இயக்கக் குரல்