கொரோனா நோய்த்தொற்று இன்று உலகின் செயல்பாட்டையே முடக்கிப் போட்டுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வல்லரசு நாடுகளும் முன்னேறிய நாடுகள் என்று அறியப்படும் ஐரோப்பிய நாடுகளும் இப்பெருந்தொற்றினால் அதிகம் பாதிப்பைச் சந்தித்தும், கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன. இது அந்நாடுகளின் பலமான பொருளாதாரத்தை அசைத்துள்ளது. அதேவேளை, பெருமுதலாளிகளைக் கொண்ட அதிகார வர்க்கத்தினால் இயக்கப்படும் இந்த முதலாளித்துவ நாடுகள், கொரோனா நோய்த்தொற்றினால் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவைச் சரிக்கட்டும் வேலைகளிலும் ஈடுபட்டுவருகின்றன.

கொரோனா பெருந்தொற்றுப் பல்வேறு வணிகங்களை முடக்கிப் பொருளாதாரத்தில் தாக்கத்தை உண்டாக்கி இருந்தாலும், பல்வேறு வணிகங்களுக்கான சந்தையையும் திறந்துள்ளது. அதில் மருத்துவத் துறை முக்கியத்துவம் பெறுகிறது. அவற்றில் முன்னிலை வகிப்பது கொரோனாவிற்கான நோய்த் தடுப்பு மருந்துகளை உருவாக்குவது. அதிலும் குறிப்பாக கொரோனாவிற்கான தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடிப்பதில் அனைத்து பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களுமே ஈடுபட்டுள்ளன. அதேவேளை, நோய்த் தொற்றின் தீவிரம் காரணமாக, வைரசுடனான நேரடி தொடர்பைத் துண்டிக்கும் பொருட்டும், தடுப்பூசி இடப்பட்டவர்களை தடமறியவும் சில தடுப்பூசி தொழில்நுட்பங்களும் முன்னிலை பெறுகின்றன. இந்தத் தொழில்நுட்பங்களுடன் இணைந்த தடுப்பூசித் திட்டங்கள் மனித வரலாற்றில் நிரந்தர மாற்றங்களை உருவாக்கக்கூடியதும், அவை உலகின் அதிகாரம் பொருந்திய சில நபர்களிடமும் சில கார்பரேட் நிறுவனங்களிடமும் சிக்கும் போது, முதலாளி தொழிலாளி இடையேயான வர்க்க பேதத்தை அதிகரித்து முதலாளிகளுக்குத் தொழிலாளர்களை நிரந்தர அடிமையாக்கக் கூடியதாகவும் மாறிவிடக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரசின் தோற்றம் பற்றியான சூழ்ச்சி கோட்பாடுகள் குறித்து இங்கே பேசப் போவதில்லை. அவற்றில் துளியும் நம்பிக்கை இல்லை. ஆனால், கொரோனா வைரசிற்கான தடுப்பூசி தொழில்நுட்பங்களை முன்வைத்து எதிர்காலத்தில் சமூகத்தில் ஏற்படப் போகும் மாற்றங்கள் குறித்து கட்டாயம் பேச வேண்டும். அப்படியான மாற்றங்களை உருவாக்கக்கூடிய இரண்டு தடுப்பூசி தொழில்நுட்பங்கள் குறித்தான செய்தியை முதலில் பார்ப்போம்.

biometricமுதல் செய்தி, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரை மையமாகக் கொண்ட ஒரு நிறுவனம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிட்ட தகவல். அந்த நிறுவனம் குழந்தைகளுக்கான தடுப்பூசித் திட்டங்கள் மூலம், பல்வேறு வகைப்பட்ட பயோமெட்ரிக் அடையாளத் தொழில்நுட்பங்களை ஆராய்ந்து, அதன் மூலம் பயோமெட்ரிக் ஐடி (Bio-ID) உருவாக்கும் நோக்கில் வெற்றிகரமான அணுகுமுறைகளைக் கையாளும் வேலைத்திட்டத்தில் இருப்பதாக அறிவித்தது. அதாவது, குழந்தைகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகள் அடிப்படையில் ஒரு மின்னிலக்க (டிஜிட்டல்) அடையாளத்தை பல்வேறு பயோமெட்ரிக் தகவல்களோடு உருவாக்குவது. அதன் மூலம் அந்தக் குழந்தைக்கு எப்போது என்னென்ன தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என்பதைக் கண்டறிவது. இந்தச் செய்தி கொரோனா தொற்றுநோய் கண்டறிவதற்கு மூன்று மாதங்கள் முன்பே வெளிவந்தது.

இரண்டாவது செய்தி, அமெரிக்காவின் பிரபலமான மாசச்சூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (MIT), கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அதன் தொழில்நுட்ப ஆராய்ச்சி குறித்து வெளியிட்ட தகவல். குவாண்டம் புள்ளிகள் (Quantum Dots) எனப்படும் நுண் படிமங்களைக் கொண்ட, கண்களுக்குப் புலப்படாத டாட்டூ (பச்சை குத்துதல்) போன்ற மை நம் தோலிற்குக் கீழே வைக்கப்படும். தடுப்பூசி மூலமாகச் செலுத்தப்படும் இதில், ஒவ்வொருவரின் தடுப்பூசி வரலாறு சேமிக்கப் பட்டிருக்கும். குறைந்தபட்சம் ஐந்து வருடங்களுக்கு அகச்சிவப்புக் கதிரை வெளியிடும் இதனை, குறிப்பிட்ட செயலியின் மூலம் கைப்பேசியினை கொண்டு கண்டறிய முடியும். இந்தத் தொழில்நுட்பம் ஒவ்வொரு குழந்தைக்கும் அனைத்து தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்யும் என்று MIT நிறுவனம் கூறியது.

Quantum Dotsஇந்த இரண்டு செய்திகளில் சொல்லப்படும் தொழில்நுட்பங்களுக்கு அடிப்படையாக இருப்பது தடுப்பூசி. மற்றொரு ஒற்றுமை மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ். முதல் செய்தியில் சொல்லப்பட்டிருக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் பில் கேட்ஸின் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இரண்டாவது செய்தியில் சொல்லப்பட்டிருக்கும் தொழில்நுட்பத்திற்கு பில் & மெலிண்டா கேட்ஸ் நிறுவனம் பெருமளவு நிதியுதவி அளிக்கிறது. இந்தத் தொண்டு நிறுவனம் வளரும் ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் தடுப்பூசி திட்டங்களைப் பரிசோதனை முறையில் நடைமுறைப் படுத்துவதில் முதன்மை வகிக்கிறது. தற்போது, இந்த இரண்டு செய்திகளுக்கும் அடிப்படையான, தடுப்பூசி மற்றும் பில் கேட்ஸ் இடையேயான தொடர்பைப் புரிந்து கொள்ள முடியும்.  

MIT news microsoftகொரோனா தொற்றுநோய் பரவலுக்குப் பிறகு உலக நாடுகள் அதற்கானத் தடுப்பூசியைக் கண்டறிவதில் அதிதீவிரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில், கொரோனா வைரஸ் மாதிரிகளின் தடுப்பூசிகளுக்கான காப்புரிமையை (Patent) இங்கிலாந்தின் பிர்பிரைட் நிறுவனம் (Pirbright Instituite) வைத்துள்ளது. காப்புரிமைக்கு 2015-இல் விண்ணப்பித்த இந்நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர் பில் & மெலிண்டா கேட்ஸ் நிறுவனம். அதாவது, கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான காப்புரிமை பில் கேட்ஸ் வசம் உள்ளது. தற்போது கொரோனா வைரசிற்கான தடுப்பூசிக்கும், தடுப்பூசி அடிப்படையில் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கும், பில் கேட்ஸிற்குமான தொடர்பை நாம் புரிந்து கொள்ள முடியும்.

coronavirus patent newsஇதே கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில், க்ரிப்டோகரன்ஸி (Cryptocurrency) எனப்படும் மின்னிலக்க (டிஜிட்டல்) நாணய முறையை உருவாக்குவதிலும் வல்லரசுகள் போட்டியிடுகின்றன. பேஸ்புக் நிறுவனம் லிப்ரா திட்டம் (Libra Project) என்றொரு உலகளாவிய மின்னிலக்க நாணய முறையை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்நிலையில், சீன அரசு அந்நாட்டின் நாணயமான யுவான் (Yuan) மதிப்பை அடிப்படையாகக் கொண்டு DCEP (Digital Currency Electronic Payment) என்ற மின்னிலக்க நாணயத்தை சில வாரங்களுக்கு முன்பு சில பகுதிகளில் சோதனை முறையில் புழக்கத்தில் விட்டுள்ளது. அப்படியொரு க்ரிப்டோகரன்ஸி தொழில்நுட்பத்திற்கு பில் கேட்ஸின் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் காப்புரிமை வைத்துள்ளது. அது என்னவெனில், உடல் செயல்பாட்டுத் தரவுகளைப் பயன்படுத்தும் க்ரிப்டோகரன்ஸி முறை (Cryptocurrency System using Body Activity Data) என்னும் தொழில்நுட்பம்.

international application status reportபில் கேட்ஸின் இந்த க்ரிப்டோகரன்ஸி தொழில்நுட்பத்தில், மனித உடலில் இணைக்கப்பட்டுள்ள ஒரு சென்சார், உடலின் செயல்பாடுகளைக் கவனித்து அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு கருவிக்குத் தகவல்களைச் சேகரித்து அனுப்பும். அதாவது, ஒருவருக்கு ஒரு வேலை கொடுக்கப்பட்டால், ஒரு கணினி சர்வர் அவரின் உடலின் சென்சார் இணைக்கப்பட்டுள்ள கருவிக்குத் தகவல் அனுப்பும். அந்த சென்சார், அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலையை அவரின் உடல் செயல்பாடுகள் அடிப்படையில் கணித்து அதற்கான ஊதியத்தை டிஜிட்டல் பணமாக அவர் உடலில் இணைத்துள்ள க்ரிப்டோகரன்ஸி சிப்பில் (Chip) செலுத்தும்.

பில் கேட்சின் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் காப்புரிமை வைத்திருக்கும் இந்த தொழில்நுட்பம், மனிதனின் அடிப்படை உரிமையான தனியுரிமை மற்றும் தொழிலாளர் உரிமைக்கு முற்றிலும் எதிரானதும் தொழிலாளர்களைச் சுரண்டக்கூடிய அமைப்புக்குள் நிரந்தரமாகத் தள்ளக் கூடியதுமாக இருக்கிறது. இவ்வாறு மனித உடலுக்குள் சிப் பொருத்தும் ஒரு தொழில்நுட்பம் தான், இதே பில் கேட்ஸ் தொண்டு நிறுவனத்தின் நிதியுதவியில், MIT உருவாக்கும் மனிதனின் தோலுக்கு அடியில் தடுப்பூசிக்கான தகவல் சேமித்து வைக்கும் டாட்டு போன்ற மை செலுத்தும் தொழில்நுட்பம். ஒரு மனிதன் பிறக்கும் போதே தடுப்பூசி மூலம் அவனது வாழ்நாள் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படவும் அதன்மூலம் கட்டுப்படுத்தப் படவும் போகின்றன என்பது எந்த அளவிற்கு ஆபத்தானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அது பில் கேட்ஸ் முன்னெடுக்கும் கொரோனாவிற்கான தடுப்பூசி தொழில்நுட்பமாகக் கூட இருக்கக்கூடும்.

கொரோனா வைரசிற்கு பிறகான காலம் சமூகத்தில் பல நிரந்தரமான மாற்றங்களை உருவாக்கும் எனப் பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனோடு, இரண்டு வாரங்களுக்கு முன்பு CBS செய்தி நிறுவனத்திற்கு பில் கேட்ஸ் வழங்கிய நேர்காணலில், கொரோனா காலத்தில் மக்கள் ஒன்றுகூடல் என்பது இயலாத ஒன்று; கொரோனா வைரஸ் தடுப்பூசி பரந்துபட்டளவில் போடப்படாத வரை மக்கள் பெருந்திரள் நிகழ்வுகள் சாத்தியமில்லை என்று கூறியதையும் இணைத்துப் பார்ப்போம். அப்படியென்றால், கொரோனாவிற்குப் பிறகான காலத்தில், கொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை வைத்திருக்கும் நிறுவனம், மேற்சொன்ன ஆய்வுகளின் அடிப்படையில் பரந்துபட்டளவில் தடுப்பூசி திட்டத்தை நடைமுறைப் படுத்துகிறது என்றால், சமூகத்தில் அதன் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பதையும் அதனால் சமூகத்தில் ஏற்படப் போகும் விளைவுகளையும் சிந்திக்க வேண்டும்.

மற்றொருபுறம், கொரோனா நோயிற்கான மருந்தையும் தடுப்பூசியையும் விரைந்து கண்டறிந்து பயன்பாட்டிற்குக் கொண்டுவர உலக சுகாதார நிறுவனம் (WHO) ஒரு முன்னெடுப்பை மேற்கொண்டது. அதற்கான துவக்க விழா ஏப்ரல் 24 அன்று நடைபெற்றது. இதில் அமெரிக்கா பங்கெடுக்காது என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. WHO அமைப்பு சீனாவிற்குச் சாதகமாகச் செயல்படுவதாகக் கூறி அதற்கு அளித்து வரும் நிதியை நிறுத்தி வைப்பதாக ஏற்கனவே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார். அதோடு மட்டுமல்லாமல் WHO அமைப்பிற்கு மாற்றாக ஒரு சர்வதேச அமைப்பை அமெரிக்கா உருவாக்கும் என்றும் கூறியிருந்தார்.

கொரோனா பெருந்தொற்றின் வரலாறு எழுதப்படும் போது இதுவரை நாம் பார்த்திருப்பது மூன்றில் ஒரு பாகம் தான் என்றும், இனி வரப்போவது தான் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றும் பில் கேட்ஸ் எகனாமிஸ்ட்.காம் இணையதளத்திற்கு எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அதில், நோய்த்தொற்றானது வளர்ந்த நாடுகளில் உச்சத்தை அடைந்து குறையத் துவங்கும் இந்த வேளையில், ஏழை மற்றும் வளரும் நாடுகளில், இடைவெளி கடைப்பிடிப்பது சாத்தியப்படாத நிலையில், மிக விரைவாக வைரஸ் தொற்று ஏற்படும் என்கிறார். அங்குள்ள மருத்துவக் கட்டமைப்பு அதனைச் சமாளிக்கக் கூடிய நிலையில் இருக்காது என்றும், இதனால் லட்சக்கணக்கான மக்கள் இறக்க நேரிடும் என்கிறார். இதற்கு ஒரே தீர்வு நோய்த்தடுப்பு மருந்து மட்டுமே; அதுவரை கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும் சமூகம் இப்போதுள்ளது போல தான் செயல்படும் என்கிறார்.

மேலும், வழக்கமான முறையில் தடுப்பூசி கண்டுபிடிக்க அதிக காலம் எடுத்துக்கொள்ளும் என்பதால், mRNA உயிரி-தொழில்நுட்பத்தில் மிக விரைவாகக் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்கிறார். வழக்கமான முறை என்பது இறந்த அல்லது பலவீனமான வைரஸ் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் உடலுக்குள் செலுத்தப்படுவதால் நம் உடலமைப்பு அதற்கான நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்கிக் கொள்ளும். mRNA முறையில், DNA மாதிரியைக் கொண்டு உருவாகும் RNA-விற்கு சில கட்டளைகளை அனுப்புவதால் வேதிமுறையில் மாற்றத்தை உண்டாக்கி உருவாகும் mRNA, நோயிற்கான எதிர்ப்பாற்றலை உருவாக்கும். மேலும், இரண்டாம் உலகப்போருக்கு பிறகான காலத்தை கொரோனாவிற்கு பிறகான காலத்தோடு ஒப்பிடும் பில் கேட்ஸ், ஐ.நா. மன்றம் உருவாகியது போல் பெருந்தொற்றைக் கையாள அறிவியலைத் தாண்டி ஒரு சர்வதேச அமைப்பு உருவாக வேண்டும் என்கிறார்.

பில் கேட்ஸ் கூறும் இந்த mRNA தொழில்நுட்பம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. கொரோனாவிற்கு விரைவாகத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்ற நெருக்கடியைப் பயன்படுத்தி, பின்விளைவுகள் பற்றி அறியாத ஒரு தொழில்நுட்ப அடிப்படையில் தடுப்பூசி தயாரிக்கப்பட வேண்டும் என்கிறார். இதற்கு மற்றொரு காரணமும் உள்ளது. இந்த mRNA தொழில்நுட்பத்தில் முன்னோடியாக இருப்பது ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் க்யூர்வாக் (CureVac) தடுப்பூசி ஆராய்ச்சி நிறுவனம். பில் கேட்ஸ் - மெலிண்டா பவுன்டேசன், mRNA ஆராய்ச்சிக்காக 2015-இல் இந்த க்யூர்வாக் நிறுவனத்தின் மீது $52 மில்லியன் முதலீடு செய்துள்ளது. இதன்மூலம், பில் கேட்ஸ் mRNA தொழில்நுட்ப முறையிலான தடுப்பூசியைப் பரிந்துரைப்பதற்கானக் காரணத்தினைப் புரிந்துகொள்ளலாம்.

அதே போல், இதுவரை வளர்ந்த நாடுகள் அளவிற்குப் பெரிய பாதிப்பைக் கண்டிராத வளரும் நாடுகள் மிகப்பெரிய பாதிப்பைச் சந்திக்கப்போகிறது என்று ஆருடம் கூறுகிறார். ஏனென்றால், பில் கேட்ஸ் – மெலிண்டா பவுன்டேசனின் தடுப்பூசி சோதனைக்களமாக இருப்பது இந்த வளரும் நாடுகள் தான். அதாவது mRNA முறையில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளைக் கொரோனாவினால் அதிகம் பாதித்திராத வளரும் நாடுகள் மீது பரிசோதிப்பதற்காக, அதிகம் பரவப்போகிறது என்ற அச்சத்தை உருவாக்குகிறார். அதற்கேற்றார் போல் இதன் தீவிரம் குறைய 2021 பிற்பகுதி ஆகும் என்கிறார். மேலும், WHO அமைப்பிற்கு மாற்றாக ஒரு அமைப்பை உருவாக்கப் போவதாக அமெரிக்க அதிபர் கூறுவதும், இரண்டாம் உலகப்போருக்கு பிறகான காலம் போன்று கொரோனாவிற்கு பிறகான காலம் இருக்கும் என்றும், அப்போது ஐ.நா. உருவாகியது போல் அறிவியல் தாண்டிய ஒரு அமைப்பு உருவாக வேண்டும் என்று பில் கேட்ஸ் கூறுவதும் தற்செயலானதாகத் தோன்றவில்லை.

கொரோனாவினால் ஏற்படப் போகும் முக்கியமான மாற்றம் என்றால் மக்கள் ஒன்று சேர இயலாமல் போவது. தற்போது இது ‘சமூக விலக்கம்’ என்ற தவறான சொற்பதம் கொண்டு அழைக்கப்படுகிறது. இங்கு நாம் கடைப்பிடிப்பது உடலளவிலான விலகல் மட்டுமே. ஒவ்வொருவரும் குறிப்பிட்ட இடைவெளியில் தள்ளி இருப்பது. சமூக விலக்கம் என்பது சமூக ஒன்றிணைதல் என்பதற்கு நேர் எதிரானது. சமூக விலக்கம் என்பது தீண்டாமை போன்றது; அது சமூகநீதிக்கு எதிரானது. சமூகநீதி என்பது போல சமூக ஒன்றிணைவு என்பது திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்ட வார்த்தை. இந்த ஒன்றிணைவு சமூக விரோதம் என்பது போல் மக்களிடையே கட்டமைக்கப் படுகிறது. இந்த சமூக விலக்கம், மக்கள் ஒன்றிணைவைத் தடுப்பது அல்லது ஒன்றிணைவு அனுமதியோடு நடைபெற வேண்டியது என்பதாக மாற்றப்படுகிறது.

இனிவரும் காலங்களில் சமூக ஒன்றிணைவு, மக்கள் ஒன்றுகூடல் நடக்க வேண்டுமெனில், இதுபோன்ற தோலின் கீழுள்ள டாட்டூ எனும் மையை ஸ்கேன் செய்து அனுமதிப்பது என்பது எளிய வழிமுறையாக ஆக்கப்படுமெனில் பில் கேட்ஸ் வெற்றி பெற்றவராவார். அப்படி நடந்தேறினால், அதேபோல் பார்வையாளராக மக்கள் பெருமளவில் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டிகளிலும் இந்த தொழில்நுட்பம் நடைமுறைப் படுத்தப்படும். அதே போன்று உரிமைக்காக மக்களால் நடத்தப்படும் போராட்டங்களில் இது தவிர்க்கப்படுமெனில் அது சட்ட விரோதமாக்கப்படும் எனும் உள்ளர்த்தத்தையும் சேர்த்தே புரிந்து கொள்ள வேண்டும்.

robot in health industryகொரோனா நோய்த்தொற்றுக்கான நோய்த்தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க வேண்டிய இந்த இக்கட்டான சூழலில், இந்த தனிநபர் இடைவெளி என்பது மருத்துவ உலகிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. இதற்குத் தீர்வாக ஆர்டீபீசியல் இன்டலிஜென்ஸ் (Artificial Intelligence [AI]) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சிறந்த தீர்வாகக் கருதப்படுகிறது. மனிதர்களின் செயல்பாடுகளினால் வெளிப்படும் முடிவுகளின் அடிப்படையில் பல்வேறு காலசூழ்நிலை தகவல்களைக் கொண்டு, ஒரு செயலி அல்லது அதனால் கட்டுப்படுத்தப்படும் ஒரு இயந்திரம் மனிதரின் உதவியில்லாமல் எப்படியாகச் செயல்பட வேண்டும் என்னும் தொழில்நுட்பம் தான் இந்த AI தொழில்நுட்பம். தடுப்பூசி நிறுவனங்கள் அனைத்துமே இன்று AI தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியே ஆராய்ச்சியில் ஈடுபடுகின்றன. அதில் குறிப்பிடத்தக்க வெற்றியும் கண்டுள்ளன. இதனையே தடுப்பூசி செலுத்துவதற்காகப் பயன்படுத்தக்கூடிய சாத்தியக்கூறுகளும் அதிகளவில் உள்ளன.

தடுப்பூசி தகவல்களைச் சேமித்து வைத்து, அதனை ஸ்கேன் செய்ய AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுமெனில், நாம் அனைவரும் முன்வடிவமைக்கப்பட்ட ஒரு எந்திரத்தின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிடுவோம். இப்படியாக வடிவமைக்கப்பட்ட தொழில்நுட்பத்தை அனுமதித்ததின் மூலமாகவே, கையால் பெறாத டிஜிட்டல் பண பரிவர்த்தனையைப் போல, டிஜிட்டல் கரன்ஸியையும் கொண்டு வருவது எளிமையாகி விட்டது. அப்படியாகவே, தனிமனித நடமாட்டத்தைக் கண்காணிக்கும், கட்டுப்படுத்தும் செயலிகளும் நிரந்தமாகச் செயல்பாட்டிற்கு வரக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தத் தொழில்நுட்பங்கள் மக்கள் மனநிலையைச் சார்ந்திராத AI தொழில்நுட்பம் வழியாக ஒருங்கிணைக்கப்படும் பொழுது பிரம்மாண்ட வலைப்பின்னலுக்குள் நாம் சென்று விடுவோம்.

எனவே, தடுப்பூசி என்று முன்மொழியப்படும் பாதுகாப்பின் பின்னால் இருக்கும் வணிக, கார்ப்பரேட், அரச அடக்குமுறை வழிமுறைகளை நாம் புறக்கணித்துவிட முடியாது. இதைத்தான் ‘சமூக விலக்கம்’ எனும் மனித நேயத்திற்கு ஒவ்வாத வார்த்தைகளால் குறிப்பிடுகிறார்கள். கொரோனாவை விடக் கொடிய அரச வன்முறைக்கும், வணிக நலத்திற்கும் நாம் பலியாகி விடும் அபாயத்தையும் கணக்கில் எடுப்பது அவசியம். பதட்டமான காலத்தில் நாம் இந்த முயற்சிகளுக்குப் பலியாகாமல் மக்கள் சார்ந்த பொதுச் சுகாதார வழிமுறைகள், மாற்றுச் சிகிச்சை வழிமுறைகள், உணவு வழிமுறைகள், லாப நோக்கமில்லாத அரசு நிறுவனம் சார்ந்த வழிவகைகளை முன்மொழிவதன் மூலம் மட்டுமே இது போன்ற கார்ப்பரேட் நலன் சார்ந்த ஏகாதிபத்திய வழிகளை எதிர்கொள்ள இயலும். 

தேசிய இன நலனைக் கட்டிக் காக்க விரும்பாத ஒரு அரசின் கீழ் வாழும் தமிழ்த் தேசிய மக்கள், இது போன்ற தொழில்நுட்ப ஆக்கிரமிப்புகளை எதிர்கொள்வதற்குரிய தற்சார்பு சிந்தனைகளை, வழிவகைகளைக் கண்டறிந்து முன்னேறுவது அவசியம். நமது போராட்டம் நோய்க் கிருமியை நோக்கி மட்டுமல்லாமல், நோய்த்தொற்றை முன்வைத்து நம்மை அடக்க நினைக்கும் அரசின் வழிவகைகளை எதிர்கொள்வதும் ஆகிறது. தேசிய இன நலனைக் காக்கும் பாதுகாப்பு அரண் இல்லாமல் மக்களைப் பாதுகாக்க முடியாது. இது குறித்த சிந்தனைகள் வலுப்பெற வேண்டும். இல்லையெனில் ஆரிய வழியான மூடப்பழக்கங்கள் மற்றும் கார்ப்பரேட் வழிவகைப்பட்ட சிறைப்படுத்தலுக்குள் நாம் சிக்க நேரிடும்.

- மே 17 இயக்கக் குரல்