யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்ற வாக்கைப் போல தேர்தல் வரும் பின்னே, தேனாய் இனிக்கும் அறிவிப்பு வரும் முன்னே. கடந்த 2006 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தால் கீழ்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்று தேர்தல் அறிக்கையில் வெளியிட்டார்கள்.      படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும் வரை, 10 ஆம் வகுப்பு தேறியவர்களுக்கு ரூ. 150, 12ஆம் வகுப்பு தேறியவர்களுக்கு ரூ. 200, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ. 300 வீதம் ஒவ்வொரு மாதமும் வழங்குவோம்.   

வேலை நியமனத்தடைச் சட்டத்தை திரும்பப் பெறுவதோடு 5 ஆண்டு வேலை வயது வரம்பையும் உயர்த்துவோம். அரசுத் துறையில் உள்ள 3 இலட்சம் காலிப் பணியிடங்களை நிரப்புவோம். கிராமப்புற இளைஞர்களுக்கு இலவச கணினி பயிற்சி மையமும் பயிற்சியாளரையும் நியமித்து அனைத்து கிராமப்புற இளைஞர்களுக்கும் பயிற்சி கொடுத்து வேலை வாய்ப்யை பெருக்குவோம்.     தொழில் முனைய விரும்புவோருக்கான அபிவிருத்தி மையங்களை அனைத்து மாவட்டங்களிலும் உருவாக்கி தொழில் முனைய ஏற்பாடு செய்வோம்.சொன்னதை செய்வோம்! செய்வதை சொல்வோம்!! என்ற நாடக ஒப்பனை வெளுத்துவிட்டது. தேர்தல் வாக்குறுதியை கண்ட இளைஞர்கள் 2007ம் ஆண்டு மட்டும் தமிழகம் முழுவதும் சுமார் 10 லட்சம் இளைஞர்கள் கால்கடுக்க வரிசையில் நின்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ததும், லட்சக்கணக்கான இளைஞர்கள் புதுப்பித்தலும் நடந்தேறியது. வெள்ளை காக்கா பறக்குது என்பார்களே.. அதே போல் தேர்தல் வாக்குறுதியும் பறந்துவிட்டது.

தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள 66 இலட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களில், கடந்த ஐந்து ஆண்டுகளில் பயன் பெற்றவர்கள் வெறும் 3.8 இலட்சம் பேர் மட்டுமே. இவர்கள் கொடுக்கும் இந்த சொற்ப நிவாரணத்தைக் கூட முழுமையாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த அனைவருக்கும் இந்த அரசு வழங்கவில்லை. நிவாரணம் என்பதை பிச்சையாகவே ஆட்சியாளர்கள் கருதுகின்றனர். எதற்கெடுத்தாலும் மேலை நாடுகளை உதாரணம் கூறுபவர்கள். இதற்கு மட்டும் ஏன் கூற மறுக்கின்றனர். அமெரிக்காவில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை 60 சதமும், ஜப்பானில் 50 சதமும் ஆஸ்திரேலியாவில் வேலையில்லாக்கால நிவாரணம் வழங்குகின்றனர். இப்படி மேலை நாடுகளில் வேலை என்பது அடிப்படை உரிமையாக்கப்பட்டுள்ளது.

ஆனால் நம் நாட்டில் மட்டும் ‘இருப்பதும் போச்சுடா நொல்லக்கண்ணா’என்று வேலையில் இருப்பவர்களையும் வீட்டிற்கு அனுப்பும் வேலையை கனக்கச்சிதமாய் செய்து வருகின்றனர்.அரசுத்துறையில் உள்ள 3 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்புவேன் என்றவர் 25 ஆண்டுகளுக்கு முன் அரசுத்துறையில் காண்ட்ராக்ட் வேலையில் சேர்ந்தவர்களை தொகுப்பூதிய ஊழியர்களாக மாற்றிவிட்டு வேலை கொடுத்தோம் என்று பிதற்றி வருகிறார்.அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் வேலையில்லாத இளைஞர்களும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புங்கள், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குங்கள் என்று போராட்டம் நடத்தினால், காவல் துறையின் தடி இளைஞர்களின் மண்டையைப் பதம் பார்க்கின்றது. பதம் பார்க்க வேண்டிய சமூக விரோதிகளிடம் ஆட்சியாளர்களைப் போலவே காவல்துறையின் தடியும் பம்முகிறது.

கிராமப்புற இளைஞர்களுக்கு கணினி பயிற்சி கொடுத்து வேலை கொடுப்போம் என்ற திமுக, இருந்த விவசாய வேலையையும் ஒழித்ததோடு நில்லாமல் 100 நாள் வேலை உறுதிச்சட்டத்தில் கொடுக்க வேண்டிய ரூ.100 கூலியிலும் பாதிக்கு மேல் பஞ்சாயத்து தலைவரும், மக்கள் நலப் பணியாளர் மற்றும் அரசு அதிகாரிகள் கூட்டுக் கொள்ளையடிக்கின்றனர். தற்போது கிராமப்புறத்தில் கணினி பயிற்சி மையமும் காணோம், விவசாய வேலையும் காணோம் பஞ்சம் பிழைக்க நாடோடிகளாய் அலைகின்றனர் கிராம மக்கள். மாவட்டம் தோறும் தொழில் முனைய விரும்புபவரின் ஆற்றலை அபிவிருத்தி செய்ய மையங்களை உருவாக்கி அனைத்து மாவட்டங்களிலும் சுய தொழிலை வளர்ப்போம் என்றவர்கள், தமிழ் மையத்தின் உதவியோடு கனிமொழியும், கஸ்பரும், மந்திரிகளும், கலெக்டரும் இணைந்து பன்னாட்டு நிறுவனங்களுக்கான கொத்தடிமைக்கு ஆள்பிடிக்கும் வேலைவாய்ப்பு முகாமை நடத்தி வருகின்றனர்.

சொன்னதை செய்வோம் என்றவர்கள் இந்த ஐந்து ஆண்டில் மாநில அரசின் கீழ் செயல்படக்கூடிய எத்தனை அரசு பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கியுள்ளனர். அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 14 பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கியுள்ளனர். ஒவ்வொரு பொதுத்துறை நிறுவனத்திலும் தலா 5000 இளைஞர்களுக்கு நேரடியாக வேலையும், மறைமுகமாக பல ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் உருவாக்கிக் கொடுத்துள்ளனர். ஒன்றரை இலட்சம் அரசுப் பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள கனிம வளங்களைப் பயன்படுத்தி அரசு பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கி புதிய வேலை வாய்ப்புகளை தர மறுக்கின்றனர். சர்க்கரை என்று காகிதத்தில் மட்டும் எழுதினால் இனிக்குமா..

இந்த நான்கு ஆண்டுகாலத்தில் தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை. வேளாண்மைத்துறை. வணிகவரித்துறை வருவாய்த்துறை போன்ற பல்வேறு துறைகளில் ஆயிரக்கணக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் தலைமைச் செயலாளர் தலைமையில் உள்ள ஸ்டாப் கமிட்டியால் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. வருவாய்த்துறையில் கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடம் மட்டும் சுமார் 4000 இடங்கள் காலியாகவுள்ளன.

சுகாதாரத்துறையில் 10000-க்கும் மேற்பட்ட சுகாதார ஆய்வாளர் மற்றும் சுகாதரா செவிலியர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறைகளில் ஆயிரக்கணக்கான பொறியாளர்கள் பணியிடங்கள் காலியாகவுள்ளன. தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இன்று இலட்சக்கணக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலாவதியாகிவிட்டன.

ஆரம்பப் பள்ளி ஆசிரியர் முதல் கல்லூரி பேரரிசிரியர் பணியிடங்கள் வரை பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவுள்ளன.

தமிழக முதல்வர் அவர்களும் துணை முதல்வர் அவர்களும் அடிக்கடி 4 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்பட்டதாக தெரிவித்துவருகின்றனர். இது குறித்து தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை வெளியிட்டுள்ள கொள்கை விளக்க குறிப்பில் 302517 ஊழியர்கள் கால முறை ஊதியத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வேடிக்கை என்னவென்றால் இவர்கள் 25 ஆண்டுகளுக்கு முன்னரே பணியில் அமர்த்தப்பட்டவர்கள்.

இவர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் என்று இல்லாத ஒன்றை கண்டுபிடித்து கொடுத்து இப்பொழுது பணியில் அமர்த்தியிருப்பதைப்போல் அரசு கணக்கு காட்டி மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறது. 1980-இல் 1115 பணியாளர் பணியாற்றிக்கொண்டிருந்த வேலை வாய்ப்புத்துறையில் இன்று 573 ஊழியர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். 1980-இல் வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்திருந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சம். 2010-இல் 70 இலட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

Pin It