Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruHistoryTamilnadu
‘கொடுமுடிக் குயில்’ கே.பி.சுந்தரம்பாள்

சிறு வயதிலேயே சிறப்பாகப் பாடும் திறன் இயல்பாகவே அமையப் பெற்றவர்தான் பிற்காலத்தில் தமிழ்நாட்டின் இசை உலகில் புகழின் உச்சிக்கு உயர்ந்த கே.பி.சுந்தராம்பாள். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ‘கொடுமுடி’ என்கிற ஊரில் பிறந்தார். பொருளாதாரத்தில் ஏற்றம் பெற்றிராத ஏழ்மையான குடும்பம்.

சிறுமி சுந்தராம்பாளை பெரியவர்கள் பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்ததுடன் பூஜை நடைபெறும் நேரங்களில் கோயிலில் பாடச் சொல்லிக் கேட்டனர். சுந்தராம்பாள் கோயிலில் பாட, படிப்படியாக கோயிலுக்கு கூட்டம் அதிகமாக வரத் தொடங்கியது. இவ்வாறு சுந்தரம்பாள் ஒரு பாடுகிற பெண் என்று கொடுமுடிப் பகுதியில் பலருக்குத் தெரிந்தது.

கொடுமுடி சுந்தராம்பாளின் தாய்வழிப் பாட்டனாரின் ஊர். கரூர் இவரது தாயாரைத் திருமணம் செய்து கொடுத்த ஊர். சுந்தராம்பாள் கொடுமுடியில்தான் பிறந்தார், வளர்ந்தார். கொடுமுடிக்கும் கரூருக்கும் அதிகத் தூரமில்லை. இருப்பினும் கொடுமுடி ரயிலடியிலேயே சுந்தராம்பாளின் வீடு இருந்ததால் ரயிலில்தான் கரூருக்குப் பயணம் செய்வது வழக்கம்.

ஒருமுறை சுந்தரம்பாள் கொடுமுடியிலிருந்து கரூருக்கு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். சக பயணிகளாக அந்த ரயிலில் வந்த கொடுமுடியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சுந்தராம்பாளைப் பார்த்ததும் பாடச் சொல்லிக் கேட்டனர். சுந்தராம்பாள் பாடத் தொடங்கியதும் அந்தக் குடும்பத்தினருடன் சேர்ந்து, அந்த ரயில் பெட்டியில் இருந்த அனைவரும் ஆர்வமாகக் கேட்டு மகிழ்ந்தனர்.

இந்த ரயில் பெட்டியில் வேலு நாயர் என்பவரும் இருந்தார். மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட இவர், கும்பகோணத்தில் நாடகக் கம்பெனி நடத்திவந்தார். தான் இயக்குகிற நாடகங்களில் குழந்தை வேடங்களில் நடிப்பதற்குப் பொருத்தமான, திறன் வாய்ந்த சிறுவர் சிறுமியரைத் தேடிக் கொண்டிருந்த வேலு நாயருக்கு சுந்தராம்பாளின் பாடும் திறனைத் தெரிந்து கொண்டவுடன், இவரே பொருத்தமாக இருப்பார் என்பதை உணர்ந்தார்.

தனது தாய்மாமா மலைக்கொழுந்துவுடன் ரயிலில் சென்று கொண்டிருந்த சுந்தராம்பாளையும் அவரது மாமாவையும் அணுகி, அவர்களின் சம்மதத்தைப் பெற்று, அவர்களை நேராக கும்பகோணம் அழைத்துச் சென்றார் வேலு நாயர்.

கும்பகோணத்தில் நாடகத்தில் பங்கேற்றுப் பாடி ரசிகர்களின் பலத்த ஆதரவை குறுகிய காலத்திலேயே பெற்றார் சுந்தராம்பாள். பாட்டு ஒரு பக்கம், நடிப்பு ஒரு பக்கம் என்று இரண்டிலும் ஒன்றைவிட ஒன்று சிறப்பு என்று பார்த்தோரும், கேட்டோரும் பரவசப்படும் அளவுக்கு திறன்களை முழுமையாக வெளிப்படுத்தினார். காலப்போக்கில் கே.பி.சுந்தராம்பாளுக்காகவே நாடகம் பார்ப்பதற்குக் கூட்டம் அலைமோதியது. பேசும் சினிமாப் படம் வராத காலமென்பதால் நாடகங்கள் கொடிகட்டிப் பறந்த காலம் அது.

கே.பி.சுந்தராம்பாளும் கிட்டப்பாவும் இணைந்து நாடகங்களில் நடித்துப் பாடியது ரசிகர்களுக்கு இன்னும் ஊக்கமளித்தது. கும்பகோணத்தில் மட்டுமல்லாது தமிழகத்தின் முக்கியமான பல ஊர்களில் இந்நாடகங்கள் அரங்கேறின. சுந்தராம்பாளும் கிட்டப்பாவும் ஒருவரையொருவர் காதலித்து 1924இல் திருமணம் செய்து கொண்டனர்.

கே.பி.சுந்தராம்பாளும் கிட்டாப்பாவும் சேர்ந்து இதிகாச நாடகங்களில் தொடக்கத்திலிருந்தே நடித்து வந்தாலும், ஆங்கிலேயர்களின் அக்கிரம ஆட்சிக்கு எதிரான ஏராளமான பாடல்களை அந்த நாடகங்களின் இடையிலேயே கதையுடன் இணைத்துப் பாடினர். வெள்ளையர் எதிர்ப்புப் பாடலைப் புரிந்து கொண்ட மக்கள் உற்சாகத்துடன் கைதட்டி தங்களது உணர்விணை வெளிப்படுத்தினர்.

நாடகங்களில்லாமல் தனித்த பாடல்களாகவும் விடுதலைப் போராட்டப் பாடல்களை இவர்கள் இருவரும் பாடினர். இப்பாடல்களில் ஈர்க்கப்பட்ட காங்கிரஸ் இயக்கத் தலைவர்கள் சத்தியமூர்த்தி, காமராஜ் ஆகியோர் நேரடியாக கொடுமுடிக்குச் சென்று காங்கிரஸ் இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற முக்கியமான கூட்டங்களில் பாடுவதற்கு கே.பி.சுந்தராம்பாளை அழைத்தனர். சுந்தரம்பாளும் அவர்களின் அழைப்பையேற்று கூட்டங்களில் பாடி தொண்டர்களுக்கு உற்சாகத்தையும், உணர்வையும் ஊட்டினார்.

1937 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் நீதிக்கட்சியும்தான் களத்தில் இருந்தன. காங்கிரஸ் கட்சிக் கூட்டங்களிலெல்லாம் தலைவர்கள் உரையாற்றுவதற்கு முன்பு கே.பி.சுந்தராம்பாளின் பாடல்கள் நிச்சயம் ஒலிக்கும். ‘ஓட்டுடையோர் எல்லாம் கேட்டிடுங்கள்’ என்ற பாடலை தனக்கே உரிய கணீரென்ற குரலில் கம்பீரமாக சுந்தராம்பாள் பாடத் தொடங்கினால், வெட்டவெளி மைதானமாக, பெட்டல்காடாகக் கிடக்கிற பொதுக்கூட்ட மைதானம், மனிதத் தலைகளால் நிரம்பி வழியும்.

அதே போன்று கூட்டம் முடியும் போதும் சுந்தரம்பாள் பாடுவார் என்று அறிவித்துவிட்டு தலைவர்கள் பேசுவர்கள். கூட்டம் முடியும்போது ‘சிறைச்சாலை என்ன செய்யும்?’ என்ற பாடலை சுந்தராம்பாள் பாடக்கேட்டு, அனைவரின் நெஞ்சுக்கும் சிறைச்சாலைக் கொடுமைகளைத் துச்சமென மதிக்கத் தோன்றும்.

காந்தியடிகளைப் பற்றிய கே.பி. சுந்தரம்பாளின் பாடல்களை மேடைதோறும் மக்கள் கேட்டு உருகிப் போவது மட்டுமின்றி, இசைத் தட்டுகளாகவும் அப்பாடல்கள் வெளிவந்தன. ‘காந்தியடியோ பரமஏழை’ என பாடல் மிகவும் பிரசித்தி பெற்றது. காந்தியடிகளைப் பாடல்கள் மூலம் பரப்பிய பெருமைக்குரியவர்களில் கே.பி.சுந்தராம்பாள் மிகவும் முக்கியமானவர்.

திருமணமான ஒன்பதாம் வருடத்தில் இருபத்தெட்டு வயது இளைஞராக இருந்தபோது கிட்டப்பா மரணமடைந்தார். அப்போது சுந்தராம்பாளுக்கு இருபத்து நான்கு வயது. தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பாடிக்கொண்டிருந்தபோதுதான் கணவர் கிட்டப்பா இறந்த செய்தி சுந்தராம்பாளுக்குக் கிடைத்தது. பாடுவதை பாதியில் நிறுத்தி விட்டு வீட்டுக்கு விரைந்த சுந்தராம்பாள் மீண்டும் பாடுவதற்கோ, நடிப்பதற்கோ வீட்டைவிட்டு வெளியில் வரவேயில்லை.

காந்தியடிகளின் தமிழகச் சுற்றுப் பயணத்தின் போது இந்தச் செய்தியை காந்தியடிகளிடத்தில் சிலர் சொல்ல, காந்தியடிகள் நேராக கே,பி.சுந்தராம்பாளை கொடுமுடி சென்று சந்தித்து, ஆறுதல் கூறிவிட்டு எஞ்சியுள்ள வாழ்வை நாட்டு விடுதலைக்குக் குரல் கொடுப்பதில் கழிக்க வேண்டுகோள் விடுத்தார். இதனையடுத்து மீண்டும் மேடைகளில் தோன்றி தனது தேசபக்தக் கடமையை முன்னைப் போலவே செவ்வனேயாற்றியவர் சுந்தராம்பாள். திரைப்படத்திற்குச் சென்ற சுந்தராம்பாள் அதில் உச்சியை அடைந்தார். உலகம் போற்றும் வித்தியாசமான நடிகையாக உயர்ந்தார்.

காமராஜர் முதல்வராக இருந்தபோது சட்டமன்ற மேல்சபை உறுப்பினராக விளங்கினார்.

அகில இந்தியாவின் சிறந்த பாடகி என்ற அங்கீகாரம் பெற்ற அவர், இசை உலகில் பெறாத விருதுகளேயில்லை. ‘கொடுமுடி கோகிலம்’ என்று அண்ணா இவரைப் புகழ்ந்து எழுதினார். எழுபத்து இரண்டு அர்த்தமுள்ள ஆண்டுகள் வாழ்ந்து மறைந்தார் கே.பி.சுந்தராம்பாள்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

வாசகர்களின் கவனத்திற்கு...

நீங்கள் படித்து ரசித்த வரலாற்றுச் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செய்திக்கான ஆதாரத்தை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected].


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com