Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu
நவம்பர் 2006

அனைத்து சாலைகளும் தீக்ஷா பூமியை நோக்கி...
சு. சத்தியச் சந்திரன்

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் எழுத்தும் பேச்சும்' நூல்களின் தொகுப்பாசிரியர் வசந்த் மூன், தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களை ‘ஒரு தலித்திடமிருந்து...' என்ற நூலில் பதிவு செய்தார். இந்நூலைப் படிக்கும் அனைவரும் நாக்பூர் தலித் மக்களின் போராட்ட வரலாறு குறித்து அறிந்து கொள்ள, நாக்பூர் செல்ல வேண்டுமென்ற ஆர்வத்தால் உந்தப்படுவர். இந்தத் தூண்டுதலிலும், அம்பேத்கர் பவுத்தம் தழுவிய பொன்விழா ஆண்டாக அமைந்ததிலும் நாங்கள் தூண்டப்பட்டு நாக்பூர் பயணித்தோம். அங்கு நடைபெற்ற நிகழ்வுகளின்போது ஏற்பட்ட உணர்வுகளையே இங்கு பகிர்ந்து கொள்கிறோம்.

அரசியல், மதம் ஆகிய இரண்டு காரணங்களுக்காகத்தான் இந்தியாவில் மக்கள் திரளாகக் கூடுகின்றனர். அரசியலைப் பொருத்தமட்டில் கூட்டம் கூடுவது என்பது, பொருளாதார ஆதாயம் பெறுவதையோ அல்லது ஏற்கனவே அனுபவித்து வரும் பொருளாதார ஆதாயம் பறிக்கப்படுவதை எதிர்ப்பதையோ அடிப்படையாகக் கொண்டுள்ளது. அதே போல், மதம் தொடர்பான கூட்டங்கள், அவற்றில் பங்கேற்போரின் தனிப்பட்ட ஆதாயத்திற்காக (தானும் தன் குடும்பமும் வசதியாக இருக்க வேண்டும் என்ற சுயநலம்) மட்டுமே கூட்டப்படுகிறது. இந்த இரண்டு காரணங்களுமின்றி மக்கள் திரள்வது, இந்நாட்டில் மிகவும் அரிதாகவே நிகழ்கிறது. குறிப்பாக, எந்தவொரு அரசியல் தலைவரோ, மதத் தலைவரோ அழைக்காமல் அல்லது அழைத்து வரப்படாமல் கூடும் மக்கள் கூட்டம் என்பது மிக மிக அரிது. அது போன்றதொரு நிகழ்வுதான் டாக்டர் அம்பேத்கர் பவுத்தம் தழுவிய ‘தீக்ஷா நாள்' கொண்டாட்டமாகும்.

2500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தோன்றி, பல நூற்றாண்டுகள் வரை இந்தியா முழுவதும் மட்டுமின்றி, உலகின் பல நாடுகளிலும் கோலோச்சி, தற்பொழுது ஆசியக் கண்டத்தின் பல நாடுகளில் மட்டுமே இருந்துவரும் பவுத்தத்தை, நீண்ட ஆய்வுக்குப் பிறகே 1956 இல் அம்பேத்கர் தேர்ந்தெடுத்தார் என்பதை வரலாறு தெளிவாகச் சொல்கிறது. ‘‘இன்னும் பத்துப் பதினைந்து ஆண்டுகளில் மதமாற்றம் என்ற அலை, நாடு முழுவதும் பரவும். இந்தியா முற்றிலும் ஒரு பவுத்த பூமியாக மாறும்'' என்ற அம்பேத்கரின் நம்பிக்கை, இன்று எந்த அளவு நிறைவேறியுள்ளது என்பதை எண்ணுகையில், அவருக்குப் பிறகு வந்த தலித் தலைவர்களின் செயல்பாட்டிற்கு ஓர் உரைக்கல்லாக அமைகிறது.

நாகபுரியில் அமைந்துள்ள தீக்ஷா பூமி நோக்கி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் மக்கள் திரளாக, எவருடைய தனிப்பட்ட ஆதாயத்திற்காகவும் கூட்டப்படாமல் வந்து செல்வது வரலாற்றுச் சாதனையாகும். இக்கூட்டத்தைத் திரட்ட, எந்தவொரு மய்ய அமைப்பும் விளம்பரமும், நிதியும் செலவிட இயலாத நிலையிலும், மிகச் சாதாரண மக்கள் (அம்பேத்கர் பெற்றுத் தந்த இடஒதுக்கீட்டினால் பயன் பெற்றோரில் பெரும்பான்மையினர் இந்நிகழ்வு குறித்து ஏதும் அறியாதது மட்டுமல்ல; அறிந்தவர்களில் பெரும்பான்மையினர் இந்நிகழ்வை அலட்சியம் செய்து, வெட்டி வியாக்கியானங்களில் ஈடுபடுகின்றனர்) திரள்வது, மக்கள் எழுச்சி வென்றெடுக்கப்படாத ஒன்றாகவே உள்ளதை உணர்த்துகிறது.

ஆண்டுதோறும் கூடும் லட்சக்கணக்கான (குறைந்தபட்சம் 10 முதல் 15 லட்சம் வரை) மக்கள், ‘ஜெய்பீம்' என்ற ஒரேயொரு தாரக மந்திரத்தின் அடிப்படையில்தான் கூடுகிறார்களே தவிர வேறல்ல. ‘ஜெய்பீம்' தவிர வேறு எந்த முழக்கத்தையும் நாகபுரியில் இந்த நாட்களில் கேட்க முடியாது. எங்கு திரும்பினாலும் தம்மச் சக்கரம் தாங்கிய நீலக் கொடிகளும், அதனினும் பல மடங்கு அதிகமான எண்ணிக்கையில் புத்தரின் பஞ்சீலத்தை நினைவுறுத்தும் நீலம், மஞ்சள், சிவப்பு, வெண்மை, காவி வண்ணப் பட்டைகள் கொண்ட கொடிகளுமே (அக்டோபர் ‘தலித் முரசு' அட்டைப் படத்தைக் காண்க) கண்ணில் பட்ட இடமெல்லாம் பறந்து கொண்டிருந்தன.

இந்த ஆண்டு பொன் விழா ஆண்டென்பதால், கூடுதல் சிறப்புடன் திகழ்ந்தது. ரோமானியப் பேரரசின் தலைநகரான ரோமைப் பற்றிச் சொல்லும்போது, ‘எல்லா சாலைகளும் ரோமை நோக்கியே' (All roads to Rome) என்று சொல்லப்படுவதுண்டு. மக்கள் வெள்ளம் தீக்ஷா பூமி நோக்கிப் பல்வேறு திசைகளிலிருந்தும் செல்வதைப் பார்க்கும்போது, ‘அனைத்து சாலைகளும் தீக்ஷா பூமியை நோக்கியே...' என்பதை உணர முடிந்தது. இவர்கள் எந்த ஒரு எதிர்பார்ப்புடனும் வந்தவர்கள் அல்லர். உண்ண உணவின்றி, பயணிக்கப் பணமின்றி, தங்க இடமின்றி திரண்டு வந்த பெரும்பான்மையினரின் தன்னலமற்ற இச்செயல் மனநெகிழ்வையும், கண்ணீரையும், குற்றவுணர்வையும் ஒருசேர வரவழைத்தது.

இவ்வளவு அரிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை நாகபுரி பதிப்பு நாளிதழ்கள், பத்திரிகைகள் தவிர, மற்றவை பதிவு செய்ய மறுப்பது வெட்கக் கேடானது மட்டுமல்ல; சூழ்ச்சியானதும்கூட! ‘தேசிய நாளிதழ்' என்று தன்னை வர்ணித்துக் கொள்ளும் ‘இந்து' கூட சென்ற ஆண்டு வெளியிட்ட ஒரேயொரு புகைப்படச் செய்தியைக்கூட, இந்தப் பொன்விழா ஆண்டில் வெளியிடாதது, ஊடகங்களின் பார்ப்பனியப் பார்வையையே வெளிப்படுத்துகிறது.

தீக்ஷா பூமி, 14 ஏக்கர் நிலப் பரப்பளவு கொண்டது. அம்பேத்கர் பவுத்தம் தழுவியதன் நினைவாக, அந்த நிகழ்வின்போது மேடை அமைக்கப்பட்டிருந்த இடத்தில் ஒரு ‘விகார்' எழுப்பப்பட்டுள்ளது. இவ்விகாரின் வெளியே அம்பேத்கரின் மார்பளவுச் சிலையும், புத்தரின் உருவச் சிலையும் வைக்கப்பட்டுள்ளன. விகாரின் முன்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அரங்கில் கருத்தரங்குகளும், புத்தக வெளியீட்டு விழாக்களும் நடைபெற்றன. அம்பேத்கர் தன் கைப்பட எழுதி வாசித்த 22 பவுத்த ஏற்பு உறுதிமொழிகள் மீண்டும் எடுத்துக் கொள்ளப்பட்டன. விகார் அமைந்திருந்த வளாகத்துக்குள்ளேயே அம்பேத்கரின் நூல்களும் அம்பேத்கரைப் பற்றிய நூல்களும், ஒலிநாடாக்கள் மற்றும் குறுந்தகடுகளும் நூற்றுக்கணக்கான கடைகளில் விற்பனைக்குக் கிடைத்தன. அம்பேத்கரின் பல்வேறு பணிகளைப் பற்றிய புதிய இசைப்பாடல்களும், இசை நடன நிகழ்ச்சிகளும் அடங்கிய குறுந்தகடு தொகுப்புகளும் விற்கப்பட்டன.

விகாரின் வெளியிலும் இதே போன்ற பொருட்களை விற்கவும், சிறு சிறு கடைகள் நூற்றுக்கணக்கில் அமைக்கப்பட்டிருந்தன. பல்வேறு அமைப்புகள் (அரசியல் அமைப்புகள் அல்ல), சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் கொட்டகைகளும் அமைக்கப்பட்டிருந்தன. நாக்பூர் மாநகராட்சியின் துப்புரவுப் பணியாளர்கள் இடைவிடாமல் விகாரைச் சுற்றிலும் பணியில் ஈடுபட்டிருந்தனர். வெளியூரிலிருந்து வந்து கொண்டிருந்த மக்கள் பயன்படுத்திக் கொள்ள, தற்காலிகமான குடிநீர் குழாய்கள் பெருமளவில் வழி நெடுக அமைக்கப்பட்டிருந்தன. விடுதி/அறை எடுத்துத் தங்க வசதியில்லாத பெரும்பான்மையான மக்கள் பல் துலக்குதல், குளியல் ஆகியவற்றை சிரமமேதுமின்றி முடித்துக் கொண்டதைப் பார்க்க முடிந்தது.

விகாரின் வெளியே வழியில் கடைகள்/கொட்டகைகள் அமைத்திருந்த ஒரு சில அமைப்புகள், அங்கு வந்திருந்த மக்களுக்கு அன்புடன் உணவுப் பொட்டலங்களை வழங்கினர். மாறாக, வங்கி, காப்பீடு போன்ற பொதுத்துறை நிறுவன எஸ்.சி./எஸ்.டி. ஊழியர் சங்கங்கள் அமைத்திருந்த கொட்டகைகளில், இலவசமாகத் தண்ணீர் மட்டும் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது. இது எரிச்சலையும் கோபத்தையுமே ஏற்படுத்தியது. அதிலும் இவர்கள் ஒருபடி மேலே சென்று தங்கள் வங்கி/காப்பீடு நிறுவனங்களின் திட்டங்களை, விளம்பரத் துண்டறிக்கைகளாக விநியோகித்துக் கொண்டிருந்தனர்.

லட்சக்கணக்கான மக்கள் வெள்ளம் வந்து சென்ற அந்த இடத்தில் ஒரு சிறு திருட்டோ, பெண்களை கேலி, கிண்டல் செய்தல், இடித்தல் போன்ற ஒழுக்கக் கேடான செயல்கள் ஏதும் நிகழவில்லை. மக்கள் சரியான வழிகாட்டுதல் இருந்தால், மிக மேம்பட்ட நிலையை அடைவார்கள் என்பதற்கான சான்றாகவே இது இருந்தது. அங்கு பணியிலிருந்த காவல் துறை அதிகாரி ஒருவரிடம் விசாரித்தபோது, ‘‘இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை. எனினும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மிகவும் கவனத்துடன் செய்து வருகிறோம்'' என்று கூறியது பெருமிதத்திற்குரியது. அவ்வளவு மக்கள் நெருக்கத்திலும் ஒரு சிறிய தள்ளுமுள்ளு சம்பவம்கூட இல்லை. 1956 இல் பவுத்தத்தை ஏற்கும் விழாவிற்கு வருபவர்கள், தூய வெண்ணிற ஆடையணிந்து பெருமளவில் வர வேண்டும் என்ற அம்பேத்கரின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு, இதோ 50 ஆண்டுகள் கடந்த பின்னரும், இன்னமும் வெண்ணிற உடை உடுத்தி அவர் சொன்னதைப் பின்பற்றுகிறார்கள். தமிழ்நாட்டில் தீக்ஷா பூமி குறித்து மிகக் குறைவானவர்களே அறிந்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் தற்போதைய தலித் தலைவர்கள், இது குறித்து எந்தவொரு விவாதத்தையும் எழுப்பாதது வருந்தத்தக்கது. அம்பேத்கர், தலித் மக்களின் ஒட்டுமொத்த விடுதலைக்கு மதமாற்றமே (பவுத்தத்தை ஏற்பது) ஒரே தீர்வு என்றும், ‘இந்தியாவுக்கு சுயாட்சி எந்த அளவுக்கு இன்றியமையாததோ அதே போல் தீண்டத்தகாத மக்களுக்கு மத மாற்றமும் மிக மிகத் தேவையானதே' என்றும், ‘நிரந்தர மகிழ்வுக்கு மதமாற்றமே ஒரே வழி, மதமாற்றத்திற்காக அரசியல் உரிமைகளைத் தியாகம் செய்ய வேண்டும் என்ற நிலை வந்தால்கூட எவரும் தயங்கக் கூடாது' என்றும், ‘மனித சமத்துவத்தை அடைய, விடுதலைக்காக மதம் மாறுங்கள்' என்றும் பல்வேறு வகையில் வலியுறுத்தியிருக்கிறார். சாதிக் கட்டமைப்பில் தாழ்த்தப்பட்டோரை மூளைச் சங்கிலியால் கட்டி வைத்திருக்கும் இந்து மதத்தைத் துறப்பது குறித்து விவாதிக்காத எந்தவொரு இயக்கமும் அம்மக்களுக்கு எதிரானதாகவே இருக்கும்.

ஏனெனில், மிக நீண்ட, ஆழ்ந்த ஆய்வுக்குப் பிறகு அம்பேத்கர் தாழ்த்தப்பட்டோரின் விடுதலைக்கு முன் மொழிந்த ஒரே வழி, எளிய வழி மதமாற்றமே. இதன் மீது நமக்கு சரியான புரிதலும், தெளிவும் இருக்க வேண்டும். மதம் என்ற சொல்லின் உண்மையான பொருள் அறியாமல் மதம் என்றால், கடவுளுடன் தொடர்புடையது என்று நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம். இன்று நாடெங்கிலும் தலித்துகளுக்கெதிரான வன்கொடுமைகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. அரசியலமைப்புச் சட்ட உறுதி மொழியும் (பிரிவு 17), குடிமை உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் (1955), பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்புச்) சட்டம் (1989) போன்றவற்றால் வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. பாப்பாபட்டி, கீரிப்பட்டி, மேலவளவு வரிசையில் இணைவதற்குதான் ஒவ்வொரு சாதிய கிராமமும் ‘இந்துத்துவ சாதிக் கட்டமைப்பு உடையக் கூடாது, உடைவதைப் பொறுத்துக் கொள்ள முடியாது' எனக் கூக்குரலிட்டு, வன்கொடுமைகளை நிகழ்த்தி வருகின்றன.

இந்நிலையில், அரசியல் உரிமைகளைப் பறிக்காத (பவுத்த) மதமாற்றத்தை ஏற்றுக் கொள்வதில் என்ன தடை என்பதைக்கூட விவாதிக்க, தலித் அரசியல் கட்சிகள் முன்வருவதில்லை. இதில் இந்தியக் குடியரசுக் கட்சி மட்டும் பவுத்தத்தை ஏற்று தன்னளவில் பணி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணமாக இருப்பது, தலித்துகளெல்லாம் பவுத்தர்களாகி விட்டால், சாதிய அடக்குமுறை, வன்கொடுமை ஆகியவற்றின் அடித்தளத்தில் கட்டி எழுப்பப்பட்டிருக்கும் தலித் ஓட்டு வங்கி அரசியல் மறைந்துவிடும் என்பதாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. ‘வாழும் அம்பேத்கர்கள்' (?) இருக்குமிடத்தில் வாழ்ந்த அம்பேத்கரும் அவர் சிந்தனையும் தேவையில்லை என்பதன் வெளிப்பாடாகக்கூட இதனைக் கருதலாம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com