Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu
நவம்பர் 2006
வெறியாடும் ஜாதி

- பூங்குழலி

ஜாதி மீண்டும் தன் கொடூரக் கரங்களால் மனிதத்தைப் பிய்த்தெறிந்திருக்கிறது. இந்து மதத்தின் சாதி ஆதிக்கம் எத்தனைக் கேவலமானது, கொடூரமானது, நாகரிகமற்றது என்பதை நாம் மீண்டும் உணர்ந்து கொள்ள, வன்மையாகக் காவு வாங்கப்பட்டிருக்கின்றன நான்கு உயிர்கள். உறுப்புகள் சிதைக்கப்பட்ட அந்தக் கொடூரத்தைப் பார்க்கும் மனிதநேயமுள்ள எவருக்கும் மனச் சிதைவே மிஞ்சும்! உடல் கூசச் செய்யும், மனங்கொதிக்க வைக்கும் அந்தக் கொடூர ஜாதி வெறியாட்டத்தை நிகழ்த்தியவர்கள் மிருகங்கள் என்றால், மிருகங்கள் அசிங்கப்படும்.

Priyanka அடிமைத்தனத்தை மறுத்தாலோ, மதத்தைப் புறக்கணித்தாலோ, சாதிக் கட்டமைப்பை உடைத்தாலோ, நாகரிகமடைந்தாலோ, கல்வி கற்றாலோ அதைத் தாங்க முடியாத ஆதிக்க சமூகம் என்ன செய்யும்? வர்ணாசிரம தர்மத்திற்கு (சாதி அமைப்புக்கு) சிறிய அளவில் அச்சுறுத்தல்கள் ஏற்படும்போது, இந்து வெறியர்கள் எந்த எல்லை வரை துணிவார்கள்? சிந்திக்கவும் இயலாத இந்தக் கொடூரங்கள், வர்ணாசிரம தர்மத்திற்கு எதிராக சிந்திக்கும் ஒவ்வொருவருக்கும் விடப்படும் மிரட்டலாகவே இருக்கின்றன...

கயர்லாஞ்சி. மகாராட்டிர மாநிலத்தின் பண்டாரா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம். இந்து மதம் உழைக்கும் மக்கள் மீது திணித்த சாதிக் கழிவுகளைக் கழுவிக் கொள்ள, புரட்சியாளர் அம்பேத்கர் லட்சக்கணக்கான மக்களோடு பவுத்தம் தழுவிய மாநிலம். கயர்லாஞ்சியில் வாழ்ந்த ஒரே தலித் பய்யாலால் போட்மாங்கே குடும்பத்தினர். அம்பேத்கர் வழி நின்று பவுத்தம் தழுவிய குடும்பம் அது. இக்கிராமத்தைச் சுற்றிலும் உள்ள பெரும்பாலான குடும்பங்கள் இந்து மதத்தைப் புறக்கணித்து, பவுத்தத்தை தங்கள் வாழ்வின் மார்க்கமாக ஏற்றுக் கொண்டவர்கள்.

Priyanka பய்யாலால் குடும்பத்துக்கு கயர்லாஞ்சியில் சொந்தமாக அய்ந்து ஏக்கர் நிலம் இருந்தது. நிலத்தில் உழைத்து, அதன் மூலம் கிடைத்த வருமானத்தில் பிறரை சாராத சுயமரியாதை வாழ்க்கை வாழ்ந்தனர். பய்யாலாலும் அவரது மனைவி சுரேகாவும் சாதி அடிமைத்தனத்திலிருந்து தங்களை மீட்டெடுக்கும் கருவியாக கல்வியைக் கருதினர். தங்களுக்கு கிடைத்த குறைந்த வருமானத்திலும் குழந்தைகளைப் படிக்க வைத்தனர். 19 வயது மகள் பிரியங்கா, உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். 23 வயது மகன் ரோஷன் கல்லூரி மாணவர். பிரியங்காவும் ரோஷனும் கயர்லாஞ்சியில் அதிகம் படித்தவர்கள். அடுத்த மகன் சுதிர், கண் பார்வையற்றவர். இவருக்கு 21 வயது.

ஆதிக்க சாதியினரின் கண்களை இதுவே உறுத்தியது. ஒரு தலித் குடும்பத்தின் கவுரவமான நல்வாழ்க்கை அவர்களை மனம் புழுங்கச் செய்தது. அவ்வப்போது கொடுத்து வந்த தொல்லைகளை சமாளித்தனரே தவிர, பய்யாலால் சுயமரியாதையை விட்டுக் கொடுக்கவில்லை.

பய்யாலாலின் விளைநிலத்திற்கு அருகிலேயே கயர்லாஞ்சி கிராமத் தலைவரின் விளை நிலமும் இருந்தது. தன் நிலத்திற்குச் செல்ல பாதை போட, பய்யாலால் நிலத்திலிருந்து ஒரு பகுதியை கிராமத் தலைவர் கேட்டபோது, மறுப்பேதும் சொல்லாமல் கொடுத்தார் பய்யாலால். இன்னும் இன்னும் என நில ஆக்கிரமிப்பு இரண்டு ஏக்கரை கடந்தது. அதற்கு மேல் முடியாது என பய்யாலாலும் சுரேகாவும் மறுத்தனர். தன்னம்பிக்கையும் துணிச்சலும் மிகுந்த சுரேகா, பலமுறை ஊர்த் தலைவரின் அநியாயங்களை எதிர்த்து கேள்வி எழுப்பி சண்டை போட்டுள்ளார். பய்யாலாலின் உறவினரான சித்தார்த், அப்பகுதியில் இருந்த தலித் குடும்பங்களின் நன்மதிப்பைப் பெற்றவராக இருந்தார். அவர் இருக்கும் துணிச்சலில்தான் பய்யாலாலும் சுரேகாவும் தங்களை எதிர்ப்பதாகக் கருதிய ஆதிக்க சாதியினர், சித்தார்த் கயர்லாஞ்சி கிராமத்திற்குள் நுழையத் தடை விதித்தனர். அதை சித்தார்த் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராமத்தினர், சித்தார்த்தை மிகக் கடுமையாகத் தாக்கினர்.

காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சித்தார்த், தாக்குதல் குறித்து காவல் நிலையத்தில் முறையிட்டார். அவ்வழக்கில் சித்தார்த்தை அடித்தவர்களுக்கு எதிராக பய்யாலால், சுரேகா, ரோஷன் மூவரும் சாட்சியளித்தனர். இதனால் சித்தார்த்தை அடித்த ஆதிக்க சாதியினர் கைது செய்யப்பட்டனர்.

2006, செப்டம்பர் 29 ஆம் நாள் அந்தக் கொடூரத்தை நிகழ்த்தினர். பிணையில் வந்த ஆதிக்க சாதியினர் சித்தார்த்தையும் பய்யாலாலையும் கொலை வெறியோடு தேட, அவர்கள் கிடைக்கவில்லை. ஆத்திரம் தலைக்கேற பய்யாலாலின் வீட்டிற்கு வந்த சாதி அயோக்கியர்கள், வீட்டிற்குள் இரவு உணவை தயாரித்துக் கொண்டிருந்த சுரேகா, படித்துக் கொண்டிருந்த பிரியங்கா, சுதிர், ரோஷன் ஆகிய நால்வரையும் வெளியில் இழுத்து வந்தனர்.

Priyanka and his brother நால்வரின் ஆடைகளையும் உருவி, உடம்பில் துண்டு துணியுமின்றி, அவர்களை ஊரின் மய்யப் பகுதிக்கு இழுத்து வந்து மிகக் கொடூரமாகத் தாக்கினர். சித்தார்த்தை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மட்டுமின்றி, கயர்லாஞ்சி கிராமத்தைச் சேர்ந்த ஆதிக்க சாதியினர் ஆண் பெண் பேதமின்றி, அனைவரும் தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போதும் அவர்களின் ஆதிக்க வெறி அடங்கவில்லை.

ரோஷனையும் தங்கை பிரியங்காவையும் உடலுறவு கொள்ளச் சொல்லி துன்புறுத்தினர். மறுத்த ரோஷனையும் சுதிரையும் மிகக் கடுமையாகத் தாக்கியதோடு, அவர்களின் பிறப்புறுப்பு மீது அடித்து உதைத்து வெட்டி எறிந்தனர். இந்தக் கொடுமை ஒரு புறம் நடக்க, இன்னொருபுறம் தாய் சுரேகாவையும் மகள் பிரியங்காவையும் அனேகமாக அத்தனை ஆதிக்க சாதி ஆண்களும் வன்புணர்ச்சி செய்தனர். அதுவும் போதாதென, இரு உயிரும் பிரியும் வரை மாடு விரட்டப் பயன்படும் தொரட்டிக் குச்சியையும் மூங்கில் குச்சியையும் இருவரின் பிறப்புறுப்பிற்குள்ளும் குத்தினர்.

அடிபட்டு மயங்கிக் கிடந்த ரோஷனையும் சுதிரையும் பல முறை மேலே தூக்கியெறிந்து தரையில் விழச் செய்து சாகடித்தனர். மாலை 5 மணி முதல் 7 மணி வரை நடந்த இந்த வெறியாட்டத்துக்குப் பிறகு நான்கு உடல்களையும் கால்வாயில் வீசியெறிந்தனர். இந்த வெறியாட்டம் தொடங்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அங்கு வந்துவிட்ட பய்யாலால், சித்தார்த், அவரது தம்பி ராஜன் மூவரும் உயிருக்கு அஞ்சி அங்கேயே மறைந்திருந்தனர். அவர்கள் கண்ணெதிரே இத்தனைக் கொடூரமும் நடந்து முடிந்தது. ஆதிக்க சாதியினர் வீட்டை முற்றுகையிட்ட உடனேயே பிரியங்கா, தனது செல்பேசி மூலம் சித்தார்த்தின் தம்பி ராஜனுக்கு தகவல் சொல்லியிருக்கிறார். அவரும் காவல் துறைக்கு உடனே தெரியப்படுத்தியிருக்கிறார். ஆனால், காவலர்கள் ‘அவசரமாக' வந்து சேர்ந்தது இரவு பத்து மணிக்கு. மறுநாள்தான் உடல்கள் கால்வாயிலிருந்து எடுக்கப்பட்டன. வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பதினெட்டுப் பேர் கைது செய்யப்பட்டனர்.

என்றபோதும் ஆதிக்க சாதி அரசியல்வாதிகளின் பின்புலத்தோடு, ஆதிக்க சாதி அதிகாரிகளால் நடத்தப்படும் இவ்வழக்கில் நாம் நீதியைப் பெற்றுவிட முடியுமா? எந்த சாதிக் கொடுமைக்கு தான் இந்தச் சட்டம் சரியான நீதியைப் பெற்றுத் தந்தது. இதற்கு மட்டும் நாம் எதிர்பார்த்துவிட... செப்டம்பர் 29 நடந்த கொடூரத்துக்கு, முதல் தகவல் அறிக்கையே அக்டோபர் 1 இல்தான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், பாலியல் வன்புணர்ச்சிக் குற்றம், மானபங்கப்படுத்துதல் போன்ற எந்தப் பிரிவும் வழக்கில் சேர்க்கப்படவில்லை. சுரேகா, பிரியங்கா உடல்களை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர், அவர்கள் வன்புணர்ச்சிக்கு ஆளாகவே இல்லையென அறிக்கை கொடுத்துள்ளார்.

சாதியின் வெறிப்பசி கண் முன்னாலேயே தன் ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் தின்று தீர்த்ததைக் கண்ட அதிர்ச்சியிலிருந்து மீளாத பய்யாலால், கயர்லாஞ்சி கொடூரம் குறித்து வாயைத் திறக்கும் எவரும் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படுவர் என எச்சரித்திருப்பதாகக் கூறுகிறார்.

இதுபோல் எத்தனையோ கொடூரங்களைப் பார்த்தாயிற்று. பார்க்காமலும் எத்தனை எத்தனை வெறியாட்டங்கள் நடந்தேறுகின்றன! ஒரு சாதாரண நிகழ்வாக அவை கடந்து போகின்றனவே ஒழிய, ஜனநாயக நாட்டின் பெரும்பகுதி மக்களுக்கெதிரான அச்சுறுத்தலாக, வன்கொடுமையாக பரபரப்பை ஏற்படுத்துவதில்லை. கயர்லாஞ்சியில் இந்தக் கொடுமை நடந்து ஒரு மாதமாகியும் சுரணையற்றிருக்கிறது ஊடகம். சலனமற்று இயங்குகிறது சமூகம். இதுதான் இந்து இந்தியா. தலித் மக்களுக்கு எதிரான உச்சபட்சக் கொடுமை, இங்கு ஊறுகாய் செய்தியாகக்கூட மதிக்கப்படுவதில்லை.

உலகின் எந்த மூலையில் நடக்கும் செய்திகளையும் உடனுக்குடன் தருவதே தங்களின் பணியென தம்பட்டமடித்துக் கொள்ளும், வாரத்தின் ஏழு நாட்களும் நாளின் 24 மணி நேரமும் விடாது சுழலும் 24 X 7 ஊடகங்கள், தலித் மக்களுக்கெதிரான அநீதிகள் நிகழும்போது மட்டும் காந்தியின் குரங்குகளாய் பார்க்க மறுக்கின்றன; பேச மறுக்கின்றன, கேட்க மறுக்கின்றன. செயல்படத் திராணியற்றுப் பம்முகின்றன ஏன்? மலம் தின்ன வைப்பது, மூத்திரம் குடிக்க வைப்பது, பிறப்புறுப்பை சிதைப்பது, வன்புணர்ச்சி செய்வது இவையெல்லாம் அவற்றின் செய்தி அரிப்பிற்கேற்ற தீனியாக இல்லையா?

ஊடகங்கள் வன்கொடுமைகளை செய்தியாக்கத் தயங்குவதன் காரணம் ஒன்றுதான். மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்ட வன்கொடுமைகள் பற்றிய விவாதம் சமூக அரங்கிற்கு, உலக அரங்கிறகு வரும்போது அவை கேள்விக்குள்ளாக்கப்படும், கண்டிக்கப்படும். தீர்வுகளை நோக்கிய போராட்டங்கள் வலுக்கும், சாதிக் கட்டமைப்பு ஆட்டங்காணும். இந்திய ஜனநாயகத்தின் மீது உலகமே காறி உமிழும். இந்து வெறியர்களின் கையில் இருக்கும் ஊடகம், அதை விரும்பவில்லை என்பதே பச்சை உண்மை.

கயர்லாஞ்சி கிராமத்தில் நடந்தேறிய கொடுமையையும், வழக்கம் போல் சமூக ஆர்வலர்களும் தலித் இயக்கங்களும்தான் வெளிக் கொண்டு வந்துள்ளன. ஆனாலும் அது பொது மக்கள் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படவில்லை. இடஒதுக்கீடு போன்ற பிரச்சனைகளைக் கையிலெடுக்கும் சமூக நீதி அமைப்புகள், மகளிர் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும் பெண்ணிய அமைப்புகள், மரண தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் மனித உரிமை அமைப்புகள், சுய மரியாதை இயக்கங்கள், கயர்லாஞ்சி படுகொலைகள் போன்ற சாதிய வன்கொடுமைகளை எதிர்த்து உரத்துக் குரல் கொடுக்கத் தயங்குவதேன்?

Women agitation வன்கொடுமையில் சமூக உரிமை மீறல் இல்லையா, தலித் பெண் மீதான வன்புணர்ச்சி, பெண்ணியப் பிரச்சனை இல்லையா? வன்கொடுமைச் சாவு மரண தண்டனை இல்லையா? நிர்வாணப்படுத்துவதும், உடலுறவு கொள்ளச் சொல்லித் துன்புறுத்துவதும், சுயமரியாதைக்கு இழுக்கில்லையா?

ஜாதியின் வேர் மிகவும் நுட்பமானது. எங்கோ யாருக்கோ நடக்கிறதென நாம் உணர்வற்றிருந்தால், அவ்வேர் வளர்ந்து நம் ஒவ்வொருவரின் குரல்வளையையும் நெறிக்கும். எல்லையின்றிப் பரவியிருக்கும் சாதி மற்றும் சாதி ஆதிக்கத்திற்கான எதிர்வினையும் எல்லையற்றதாக வலுவானதாக இருக்க வேண்டும். இல்லையெனில், பய்யாலாலின் குடும்பம் போல் மிகச் சாதாரணமாக வன்கொடுமைக்கு யார் வேண்டுமானாலும் இரையாக்கப்படலாம்.

திரண்டெழுந்த சமூகம் மட்டுமே அநீதிகளுக்கெதிரானத் தீர்வைக் காணும். நாம் திரண்டெழுவது எப்போது?

*********
‘அம்னஸ்டி இன்டர்நேஷனல்' என்ற உலகளாவிய மனித உரிமை அமைப்பு, கயர்லாஞ்சியில் நடைபெற்ற கொடுமையைக் கண்டறிந்து, அதற்குத் தீர்வுகாண முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. முதல் கட்டமாக ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தைக் கூட்ட அது முடிவு செய்துள்ளது. ‘கயர்லாஞ்சி தலித் படுகொலை எதிர்ப்பு செயற்குழு', ‘சமதா சைனிக் தள்', ‘விதர்பா ஜன் அந்தோலன் சமிதி', ‘பகுஜன் சங்கரிஷ் சமிதி', ‘தீக்ஷா பூமி மகிளா தம்ம சந்யோஜ் சமிதி' உள்ளிட்ட 20 அமைப்புகள், இந்த அநீதிக்கு எதிராகக் களமிறங்கியுள்ளன.

அக்டோபர் 31 அன்று நாக்பூரில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இம்மறியலின்போது, போலிஸ் தடியடி நடத்தியதில் 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் நாக்பூரிலும் மகாராட்டிரத்தின் பிற இடங்களிலும் நடைபெறுவது கண்டு, போலிஸ் மேலும் ஆறு பேரைக் கைது செய்துள்ளது. இதில் சதித்திட்டம் தீட்டிய 2 பெண்களும் அடங்குவர். ஆக, இதுவரை 44 பேர் இப்படுகொலையில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். நவம்பர் 1 அன்று, பந்தாரா மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தை எதிர்த்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டெழுந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நவம்பர் 3 அன்று நாக்பூர் சட்டப் பேரவை முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் இயக்கத்தினர் ஈடுபட்டது குறிப்பிடத்தகுந்தது.

இது தொடர்பாக மேலும் தகவல்கள் பெறவும், தங்களால் இயன்ற உதவிகளை செய்யவும், கண்டனங்களைப் பதிவு செய்யவும் பின்வரும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் :

For details of the report submitted,
please go to this link
http://atrocitynews.wordpress.com
The Jambudvipa Trust
www.jambudvipa.org
'Manuski', Deccan College Road
Tel/Fax : +91-20-2669 6812 / +91-98506 66479
Yerwada, Pune - 411 006, India



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com