Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu
நவம்பர் 2006
பொருளாதாரத் தடை: இந்திய நாட்டின் மீது அல்ல; தமிழகச் சேரிகள் மீது!

- மா. பொன்னுச்சாமி

க. வேலாயுதபுரம் கிராமம். தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்குள்ள தலித் மக்கள், ஊரைவிட்டே வெளியேறிப் போக வேண்டிய நெருக்கடியான சூழலினாலும், சாதி இந்துக்கள் விதித்துள்ள பொருளாதாரத் தடையினாலும் உயிருக்கு உத்திரவாதமின்றி தங்கள் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர். இக்கிராமத்தில் நுழைந்து, ‘‘நாயனக்காரர் முத்தையா வீடு எங்கிருக்கிறது'' என்று ஒரு வயதான ரெட்டியாரிடம் விசாரித்தபோது, நம்மை கீழும் மேலுமாகப் பார்த்துவிட்டு, ‘‘நாயனக்கார முத்தையாவா... குழலுக்கார(ன்) முத்தையான்னு சொல்லுங்க. என்ன பெரிய நாயனக்கார முத்தையா'' என்று உறுமியபடியே நம்மிடம் வழி சொன்னார்.

Subha's mother ஏறக்குறைய 6 தலைமுறைகளாக 21 வகையான தீண்டாமைக் கொடுமைகளை அனுபவித்து வரும் 200 பேர் கொண்ட 43 அருந்ததியர் குடும்பங்களும், 2000 மக்கள் தொகை கொண்ட 357 ரெட்டியார் குடும்பங்களும் இங்கு வசித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தலித் சமூகத்தைச் சார்ந்த பசுபதி பாண்டியன், தேர்தல் சம்பந்தமாக இக்கிராமத்தில் நுழைந்தபோது, அருந்ததியர்கள் அவருக்கு மாலை மரியாதை செய்து அனுப்பியுள்ளனர். இந்த ஒரே செயலுக்காக, தொடர்ந்து 10 நாட்களாக 43 அருந்ததிய குடும்பங்களும் ரெட்டியார் சமூகத்தவரின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வைக்கப்பட்டுள்ளனர். ஒருவர் வரத் தவறினாலும் மீண்டும் ஒருமுறை அனைவரும் வர வேண்டும். ரெட்டியார்கள் வாழும் ஊருக்கு அருந்ததிய இளைஞர்கள் இரவு காவல் இருக்க வேண்டும். கடந்த ஆண்டு திருவிழாவின் போது அருந்ததியர்கள் யாரும் காவலுக்குச் செல்லாததால், மறுநாள் ஞானசேகரன் என்ற ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்த ஓர் இளைஞன், அருந்ததிய இளைஞரை அனைத்து விருந்தாளிகளின் முன்பு அடித்து இழுத்துச் சென்றிருக்கிறார். இந்த 2 சம்பவங்கள்தான் அடுத்தடுத்து நடந்த வன்கொடுமைகளுக்கு தொடக்கமாக இருந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, வழக்கமாக ரெட்டியார்களின் திருவிழாவிற்கு நாதஸ்வர வித்வான் முத்தையாவின் நையாண்டி மேள நிகழ்வு நடைபெறும். இந்த ஆண்டு திருவிழாவின் தேதி சரிவர சொல்லப்படாததால், முத்தையா வேறு இடத்தில் முன்பணம் பெற்றுவிட்டார். இதனால் கடும் கோபத்திற்குள்ளான ரெட்டியார் சமூகம், முத்தையாவின் வீட்டையே பிரித்துப் போட்டது. ரெட்டியார்களின் திருவிழாவிற்கு மறுவாரம் அருந்ததியர்கள் பத்தரகாளியம்மனை வழிபடுவதுண்டு. கடந்த சூன் மாதம் அருந்ததிய சமூகம் திருவிழாவை கொண்டாடியுள்ளது. தங்களிடம் அனுமதி பெறாமல், கோலாகலமாகத் திருவிழா கொண்டாடியது, ஆதிக்க சாதியினரை கோபத்திற்குள்ளாக்கியது.

மறுநாள் சூன் 8 அன்று சுப்பிரமணி (45) என்பவர் காலை 11.30 மணிக்கு விருந்தினர்களை வழியனுப்பி விட்டு திரும்பிக் கொண்டிருக்கும்போது, ரெட்டியார் சமூகத்திற்குச் சொந்தமான திருமண மண்டபத்திற்கு முன்பு ரெட்டியார் சமூகத்தைச் சார்ந்த மணிகண்டன் (25), கண்ணன் (25), வசந்தகுமார், ராமசேகர், நாகு, கணேசன் ஆகிய 6 பேரும் திட்டமிட்டு சுப்பிரமணியைப் பார்த்து ‘‘ஏய் சக்கிலிய... மகனே, ...மவனே'' என்று கெட்ட வார்த்தைகளால் திட்டி ‘‘இங்க வாலே'' என்று அழைத்து ஊருக்குள்ள மாடு பத்திக்கிட்டு வரக்கூடாதுன்னு சொன்னியாமே என்று கேட்க, உடனே சுப்பிரமணி இல்லைய்யா என்று கைவிரித்துப் பதில் கூறியிருக்கிறார். உடனே என்னடா கை நீட்டிப் பேசுறே என்று சொல்லி, 6 பேரும் அவரை அடித்து துவைத்துள்ளனர். இதனால் செய்வதறியாது திகைத்த சுப்பிரமணி, திருமண மண்டபத்திற்குள் நுழைந்தபோது, உள்ளே ஊர் நாட்டாண்மை ராமமூர்த்தி (ரெட்டி)யும், ஊர் தர்மகர்த்தா செஞ்சி (ரெட்டி)யும் இருந்ததைப் பார்த்து முறையிட்டிருக்கிறார்.

ஆனால், அந்த இருவரும் சாதி பெயரைச் சொல்லித் திட்டி மீண்டும் அடித்து அனுப்பியுள்ளனர். அதன் பிறகு கழுகுமலை காவல் நிலையத்தில் 8 பேர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம், தனது தீர்ப்பில் ஊர் தர்மகர்த்தா ஊருக்குள் நுழையக் கூடாது எனவும், வெளியூர் சென்று தங்கிக் கொள்ளுமாறும் உத்தரவிட்டது. குற்றவாளிகள் ஊருக்குள் வர அனுமதியில்லை என்று மதுரை மேலவளவு கொலை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்குப் பிறகு இதுவே இரண்டாவது தீர்ப்பாகும்.

ஆக, ஆறு தலைமுறைகளாக அடங்கியே வாழ்ந்த அருந்ததியர் சமூகம், இன்று எதிர்க்கத் தொடங்கிவிட்டதே என்று எண்ணி அருந்ததியர்களுக்கு பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. அருந்ததியர்களுக்கு ஆதிக்க சாதிகள் யாரும் தங்கள் நிலத்திலோ, தீப்பெட்டித் தொழிற்சாலைகளிலோ வேலை தரக் கூடாது எனவும், கூட்டுறவுப் பால் நிலையங்களில் பால் தரக் கூடாது எனவும், உணவுக்குத் தேவையான எந்தவொரு கடை சரக்குகளும் தரக் கூடாது எனவும் தடை விதிக்கப்பட்டது. குழந்தை அழுதால், பாலுக்காக நாலந்துளா என்ற கிராமத்திற்கு 3 கி.மீ. நடந்து சென்று வாங்கி வந்திருக்கின்றனர். இவ்வாறு பொருளாதாரத் தடைக்கு ஆளான அருந்ததியர்கள், ‘அருந்ததியர் மகா சபை'யுடன் இணைந்து உயிர் வாழ உத்திரவாதமும், வேலைவாய்ப்பும் கேட்டு கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்து, இப்பகுதியில் வருவாய்த் துறை அதிகாரிகளும், காவல் துறை அதிகாரிகளும் தங்கி ஆய்வு செய்து, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளும், அத்தியாவசியப் பொருட்களும் உரிய காலத்தில் கிடைக்க செய்து தரப்படும் என்றும், சாதி இந்துக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமூக உறவு ஏற்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தனர். இதனால் அரசின் உதவியோடு ‘சமத்துவம்' என்ற பெயரில் தேநீர்க் கடையும், மளிகை கடையும் நிறுவப்பட்டது. மேலும், 43 குடும்பங்களுக்கு 2 கழிப்பறையும் கட்டப்பட்டது. அதன் பிறகு எந்த அரசு அதிகாரியும் வரவில்லை. அருந்ததியர்களிடம் மேலும் விசாரித்தபோது, சாதி இந்துக்களின் கொடுமைகளை விவரித்தனர்:

 சைக்கிளில் யாரும் ஏறிப் போகக் கூடாது என்பதற்காக, ராஜேஸ்வரி என்ற மாணவி சைக்கிளில் பள்ளிக்குச் செல்லும்போது ‘‘சக்கிலிய கழுதைக்கு சைக்கிளா'' என்று சொல்லி சாதி வெறிபிடித்த வயதான கிழவி, சக்கரத்தில் கம்பை நுழைத்து விழ வைத்திருக்கிறார்.

 தபால் நிலையம் அமைத்து பணிபுரிய முத்துக்கிருஷ்ணன் என்பவருக்கு வேலைவாய்ப்பு வந்ததும், ஒரு சக்கிலியன் உட்கார்ந்து ஸ்டாம்ப் கிழித்துக் கொடுக்க நாங்கள் நின்று கொண்டு வாங்குவதா என்று சொல்லி வேலையையும், தபால் நிலையத்தையும் மறுத்துவிட்டிருக்கிறது.

 சைக்கிளில் யாரும் ஏறிவரக் கூடாது என்பதற்காக 2 கால்களையும் இழந்த முத்தையா (25) என்பவருக்கு அரசு மூன்று சக்கர வாகனம் கொடுத்ததைத் தடுத்துள்ளது.

 ஓவியர் மாரியப்பன் (38) தன் பணிக்காக இரண்டு சக்கர மோட்டார் வாகனம் வாங்கியும் ஊருக்குள் தள்ளிக் கொண்டுதான் போக வேண்டுமென நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார்.

 நாதஸ்வர வித்வான் இன்றும் தன் வீட்டிற்கு முன்பு இருக்கும் தெரு குழாயில் தண்ணீர் பிடிக்க முடியாது.
இத்தனைக் கொடுமைகளையும் கடந்து, அருந்ததியர்கள் வசிக்கும் இடத்தைச் சுற்றி இரும்பு கம்பிகளால் வேலி போட்டு அடைத்துள்ளது ஆதிக்க வர்க்கம். சிறுநீர் கழிக்கவோ, மலம் கழிக்கவோ, ஆடு மாடு மேய்க்கவோ முடியாது. எங்கு போக வேண்டுமானாலும் அரை கிலோ மீட்டர் நடந்து வேலியைக் கடந்துதான் செல்ல வேண்டும். இது மட்டுமின்றி, இந்த வேலியை அருந்ததியர்கள் உடைத்து விட்டதாகவும், விவசாயத்தை அழித்து விட்டதாகவும் 16 பேர் மீது பொய் வழக்குப் போட்டுள்ளது ஆதிக்க சமூகம். அருந்ததியினரை ஊரைவிட்டு வெளியேற்றுவதற்கும், மீண்டும் ஒரு முறை பிரச்சனை வந்தால் இரும்பு வேலிகளில் மின்சாரத்தைப் பாய்ச்சி அடித்து விரட்டி, அதில் விழ வைத்து கொல்லுவதற்கான திட்டம்தான் என்று ஒருவர் விளக்கினார். கடைசியாகப் பொருளாதாரத் தடையையும் கடந்து இன்று நடைபாதைக்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லி முடித்தார்.

வரலாற்றில் முதல் மனிதனாய் வாழ்நிலையில் கடைசி மனிதனாய் காலங்காலமாக சாதி இந்துக்களின் வன்கொடுமைகளை அனுபவித்து வருகிறது அருந்ததியர் சமூகம். வேலாயுதபுரம் மட்டுமல்ல, தமிழத்தின் ஒட்டுமொத்த அருந்ததியர்களும் இதே நிலையில்தான் உள்ளனர். ஆக, இந்துக்களின் சாதிய வன்கொடுமைகளுக்குத் தீர்வு தான் என்ன? எத்தனையோ இயக்கங்கள் அருந்ததிய மக்களுக்காகப் பணிபுரிந்தாலும் மக்கள் யார், எந்த இயக்கம் தீர்வு கொடுக்கும் என்று காத்துக் கிடக்கின்றனர். நாங்கள் அம்பேத்கரியத்தை, பெரியாரியத்தை, மார்க்சியத்தைக் கற்றுக் கொண்டிருக்கிறோம் என்று உரக்கப் பேசும் தலைவர்களால் ஏதாவது தீர்வு வந்துவிடுமா என்று பார்த்தால், இன்று வரை ஏமாற்றமே மிஞ்சுகிறது.

வழக்குகளைப் பதிவு செய்வதும், மிகக் குறைந்தபட்ச தண்டனை பெற்றுத் தருவதும், மீண்டும் கொடுமைகள் அரங்கேறுவதுமாகவே காலம் கழிகிறது. சாதியக் கொடுமைகளுக்கும் இழிவுகளுக்கும் முடிவே இல்லை. அண்ணல் அம்பேத்கர் கூறியது போல ‘தீண்டாமை என்பது குறுகிய அல்லது தற்காலிகமானது அல்ல. அது நிரந்தரமான ஒன்று.' இந்து மதத்தில் இருக்கப் போய்த்தானே இவ்வளவு கொடுமைகளும், அடிமைத் தனமும். இந்நிலையில், மக்கள் ஏன் இந்த மதத்தை விட்டு வெளியேறக் கூடாது? ஒரு மனிதனுக்கு காய்ச்சல் என்றால், அவன் காய்ச்சலோடு போராடினால் இறுதியில் மரணம்தான் மிஞ்சும். அதிலிருந்து விடுபட அம்பேத்கர் அளித்த மதமாற்ற மருந்தை உட்கொள்வதுதான் நோய்க்கு சரியான தீர்வாகும். ஆனால், இத்தீர்வை முன்வைக்க தலைவர்கள் தயங்குகின்றனர். இந்தத் தயக்கமே தீண்டாமை தொடர வழிவகுக்கிறது.

சக்கிலியனும் சகமனிதனாய் நடத்தப்பட வேண்டுமெனில், க. வேலாயுதபுரம் அருந்ததியர்கள், அம்பேத்கர் தீர்வை அருமருந்தாய் ஏற்பார்களா?



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com