Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu width=
 width=பிப்ரவரி 2009

மீண்டெழுவோம்

பிரிட்டிசாருக்கு ஒரு பேரரசு உள்ளது; இந்துக்களுக்கும்தான்! இந்துயிசமும் ஒரு வகை ஏகாதிபத்தியம்தானே! தீண்டத்தகாதவர்கள் இந்துக்களால் அடிமைப்படுத்தப்பட்ட இனம் தானே! இரண்டாம் உலகப் போரில் சர்ச்சில் ஈடுபடுவதன் நோக்கம் என்ன என்று தெளிவு படுத்துமாறு அவரைக் கேட்பது நியாயம் எனில், திரு. காந்தியும் இந்துக்களும் நடத்தும் விடுதலைப் போரின் நோக்கம் என்னவென்று அறிவிக்க வேண்டும் என்று கேட்பதை எப்படித் தவிர்க்க முடியும்?

–டாக்டர் அம்பேத்கர்

Natarajan and Tirumavalavan “யாருங்க இப்பல்லாம் ஜாதி பாக்குறாங்க''

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கிளியூர் கிராமத்தில், தலித் மக்கள் முடிவெட்டும் கடைகளுக்குச் சென்றால், சாதி இந்துக்கள் முடிவெட்ட மறுக்கிறார்கள். மேலும், அங்குள்ள கிளியம்மன் கோயிலுக்குள் சென்று வழிபடவும் தலித்துகளுக்கு உரிமை மறுக்கப்படுகிறது ("தீக்கதிர்', 12.2.2009)  ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆதங்கொத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த 8ஆம் வகுப்பு படிக்கும் தலித் மாணவனை கழுத்தில் மிதித்து, இடுப்பில் கடுமையாக உதைத்து கொடுமைப்படுத்திய சாதி இந்துவை கைது செய்யாமல், பாதிக்கப்பட்ட மாணவரின் தந்தையை விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்துள்ளனர் ("தீக்கதிர்' 3.2.2009).

திருச்சி மாவட்டத்தில் மணப்பாறைக்கு அருகில் உள்ள திருமலையான்பட்டி என்ற கிராமத்தில், பொது சுடுகாட்டில் தலித் பிணத்தைப் புதைக்க கவுண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அனுமதி மறுத்து வருகின்றனர். இச்சுடுகாடு, "அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்'தின் கீழ் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. 10.2.2009 அன்று அக்கிராமத்தில் உள்ள அமிர்தம் என்ற 70 வயது தலித் பெண்மணி காலமானார். நீண்ட காலமாக இரட்டை சுடுகாடு இருந்து வந்தது. ஆனால் தற்பொழுது அரசு புது சுடுகாட்டை உருவாக்கி இருப்பதால், அங்கு சென்று எரிக்கலாம் என்று நினைத்து சென்ற தலித்துகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. வருவாய்த் துறை அதிகாரிகள் சாதி இந்துக்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது ("டைம்ஸ் ஆப் இந்தியா' 12.2.2009) கிருஷ்ணகிரி மாவட்டம் கல்கேரியில் தலித் மக்களுக்கு சொந்தமான நிலங்களில் விளைந்து அறுவடை செய்யப்பட்ட கேழ்வரகு கதிர்களை தலித் அல்லாதோர் தடுத்து வைத்துள்ளனர். அங்கு தலித்துகள் ஆடு மாடுகள் மேய்க்கவும், விளைநிலங்களுக்குச் செல்லவும் வழிகள் மறுக்கப்பட்டுள்ளன. இதனால் சுமார் 1 லட்சம் பெருமானம் உள்ள கேழ்வரகு கதிர்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ("தீக்கதிர்' 2.3.2009)

ஜாதியை மறுத்த சிசுவையும் கொல்லும் ஜாதி!

“காதலித்துக் கைப்பிடித்த என் மனைவியின் வயிற்றிலிருந்த ஆறு மாத சிசுவை, வலுக்கட்டாயமாக வெளியே எடுத்து அவள் பெற்றோரே கொன்று புதைத்துவிட்டனர் பாவிகள்'' என்று கதறுகிறார், முத்தழகன் என்ற தலித் இளைஞர். இக்கொடுமை நடைபெற்ற இடம் : புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகிலுள்ள அம்புகோவில் கிராமம். முத்தழகனின் மனைவி தனலட்சுமி இசைவேளாளர் சாதியை சேர்ந்தவர். இது குறித்து சனவரி 23 அன்று கந்தர்வக்கோட்டை போலிசில் புகார் கொடுத்திருக்கிறார் முத்தழகன். அதற்கு ரசீது மட்டும் கொடுத்தவர்கள் முதல் தகவல் அறிக்கைகூட போடாமல், விசாரணை என்ற பெயரில் இழுத்தடிக்கிறார்கள். தனலட்சுமி உயிரோடு இருக்கிறாரா என்று தெரியாமல் திகைத்து நிற்கிறார் அவர் ("ஜுனியர் விகடன்' 8.2.2009).

தமிழருக்கும் காவல்; சிங்களருக்கும் தோழன்!

மருத்துவர் ராமதாசின் பாட்டாளி இளைஞர் சங்கம் "உறுதியேற்பு மாநில மாநாட்டை' சென்னையில் 7.3.2009 அன்று நடத்தியது. அதில், புகை, மது, வரதட்சணை, வன்முறை, தீவிரவாதம், ஆபாசம், பெண்ணடிமைத்தனம் ஆகியவற்றை ஒழித்திடுவதாகவும்; எய்ட்ஸ், பெண் சிசுக்கொலை, ரசிகர் மன்றம், மாசுபடுதல் ஆகியவற்றைத் தடுத்திடுவதாகவும் அறிவித்துள்ளனர். ஆனால், இந்நாட்டின் அனைத்து சிக்கல்களுக்கும் முதன்மைக் காரணமான ஜாதியை மட்டும் ஒழிப்பதாகவோ, தடுப்பதாகவோ, கண்டிப்பதாகவோ அவர்கள் அறிவிக்கத் தயாரில்லை. புகை, மது போன்றவற்றை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை இவருடைய குடும்பம் நடத்தவில்லை. எனவே, இப்பரப்புரை யால் மருத்துவர் குடும்பத்திற்கு இழப்பேதுமில்லை. ஆனால், இவர்களுடைய ஜாதி (உற்பத்தி) சங்கத்திற்குப் பெரும் சேதம் ஏற்படும் என்பதால் தான் ஜாதியை வளர்ப்பதாக நாள்தோறும் உறுதியேற்றுக் கொண்டுள்ளனர். இதை இந்நாட்டுத் தமிழர்கள் மட்டுமல்ல; ஈழத் தமிழர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் உணர்வாளர்கள் பா.ம.க.வையும் மருத்துவரையும் புரிந்து கொள்வதற்கு இன்னொரு செய்தி: “காயமடைந்த இலங்கை ராணுவத்தினருக்கு அறுவை சிகிச்சைக்குப் பிறகு அளிக்கப்படும் மருந்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், அம்மருந்தை இந்தியா அளிப்பதாக ஒப்புக் கொண்டிருக்கிறது'' என்ற தகவலை, இலங்கை நல்வாழ்வுத் துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார் ("டைம்ஸ் ஆப் இந்தியா' 21.2.2009). இந்திய நல்வாழ்வுத் துறை அமைச்சர் "மருத்துவர் சின்ன அய்யா' அவர்களுடைய கடைக்கண் பார்வை இல்லாமலா இத்தகு கொடுமைகள் எல்லாம் அரங்கேறும்?

கண்டிக்க மறுக்கும் தலித் இயக்கங்கள்

கே.எம். விஜயன் என்றொரு மூத்த வழக்குரைஞர் "தினமணி' ஏட்டில் 24.2.2009 அன்று எழுதியுள்ள கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார் : “மற்ற இடங்களைப் பற்றித் தெரியாது. ஆனால், தமிழகத்தில் வன்கொடுமைக்கு உள்ளாகும் ஒரே ஜாதி பிராமணர் ஜாதி தான். பிராமணரைத் திட்டுவது போல் வேறு யாரையும், எந்த ஜாதியினரையும் திட்டுவதில்லை. அவர்களுக்குத் தான் நிஜமாகப் பாதுகாப்புத் தரப்பட வேண்டும். தமிழகத்தில் இருக்கும் உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள். மற்றவர்களை ஜாதி பெயர் சொல்லித் திட்டியதாக சமீப வரலாறு இல்லை. இந்நிகழ்வைப் போல, தவறாக பிரயோகிக்கப்படும் வன்கொடுமைச் சட்டத்திற்கு முதலில் திருத்தம் வேண்டும்.'' கே.எம். விஜயன் சூத்திரர் என்பதால்தானோ என்னவோ, இக்கருத்துக்கு திராவிட இயக்கங்களிட மிருந்துகூட எந்தக் கண்டனமும் வெளிவர வில்லை. கொங்கு மண்டல கவுண்டர்களின் (சாதி) அரசியல் எழுச்சி மாநாடு அண்மையில் நடந்தேறியது. இதில் முன்வைக்கப் பட்ட அதி முக்கியமான தீர்மானம் : “நாங்கள் பாதிக்கப்படுவதால் வன்கொடுமைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.''கவுண்டர்களோ, கள்ளர்களோ, தங்கள் மீதான சூத்திரப் பட்டத்தை ஒழிக்க முன்வராதவரை – அவர்கள் வன்கொடுமைச் சட்டத்தை நாள் தோறும் சந்தித்தே தீர வேண்டும். ஆனால் அதில் ஒரு சிக்கல். பறையன் பட்டம் போகாமல், சூத்திரப் பட்டம் போகாதே! 

தீவிரவாதத்திற்கு (அமெரிக்காவிற்கு) எதிரான போர்!

அண்மையில் வெளிவந்துள்ள "அமைதிக்காகப் போராடுவோம்' நூலிலிருந்து சில வரிகள் : ராணுவ நலன், எண்ணெய்க் கட்டுப்பாடு ஆகிய இரு காரணங்களுக்காக மட்டுமே தீவிரவாதத்திற்கு எதிரான போரை அமெரிக்கா அறிவித்தது. தீவிரவாதக் குழுக்கள் பல நிலப் பகுதிகளில் சிதறிக் கிடக்கின்றன. அவர்களை கண்டுபிடித்து அழிப்பது அத்தனை எளிதானது அல்ல. தீவிரவாதிகளை பிடிக்கப் போகிறோம் என்கிற பெயரில், அமெரிக்கா ஒவ்வொரு பகுதியையும் தேர்ந்தெடுத்து, அதனைத் தொடர்ந்து வெடிகுண்டு வீசி, அந்தப் பகுதியை கற்காலத்திற்கு அழைத்துச் செல்கிறது. ஆப்கானிஸ்தான், ஈராக் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. ஒன்றுமறியா பொதுமக்கள்தான் அமெரிக்காவின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு அதிகளவில் பலியாகி வருகின்றனர். பேரழிவு ஆயுதங்களை அழிக்கும் பொருட்டுதான் ஈராக் மீது போர் தொடுக்கப்பட்டது. ஆனால் இன்று வரை அப்படி எந்த ஆயுதமும் கண்டுபிடிக்கப்படவில்லை. அய்.நா.வின் முடிவுகளைக் கூட இவ்விஷயத்தில் அமெரிக்கா அவமதித்தது, நிராகரித்தது. ஒன்றுமறியா ஈராக்கியர்களை கொல்வது, அபுகரீப் போல் சிறையில் இருப்பவர்களை நிர்வாணப்படுத்துவது, துன்புறுத்துவது – அமெரிக்கப் படைகளுக்கு அன்றாட நிகழ்வுகள் ஆகிவிட்டன.

அமெரிக்காவின் எண்ணெய்க்கான போரை "நாகரிகங்களின் மோதல் கருத்தாக்கம்' நியாயப்படுத்தி வருகிறது. பின் தங்கிய இஸ்லாமிய நாகரிகம்தான் மேற்கு நாகரிகங்களுக்குப் பெரும் சவால், ஆபத்து என சாமுவேல் ஹண்டிங்டனின் கருத்தாக்கம் வாதிடுகிறது. இதன் அடிப்படையில்தான் 2005 ஆகஸ்ட்டில் "நாகரிகங்களின் கூட்டணி' என்கிற முயற்சியை அய்.நா. தொடங்கியது. அய்.நா. அறிக்கை நாகரிகங்களிடையே பல மட்டங்களிலும் உள்ள நல்லுறவை சுட்டிக் காட்டியது. ஆனால், இந்த "மோதல் கருத்தாக்கம்' உலகை, உண்மைப் பிரச்சனைகளிலிருந்து திசை திருப்பும் முயற்சியே. நம் நாட்டு முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கே. ஆர். நாராயணன், “எப்பொழுதும் நாகரிகங்கள் மோதிக் கொண்டதில்லை; காட்டுமிராண்டிகள்தான் மோதுவார்கள்'' என்றார்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com