Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu
ஏப்ரல் 2007

“மூன்றாம் உலக நாடுகளின் கடன்களை ரத்து செய்’

எரிக் டூசைன்ட் - சந்திப்பு: அ. முத்துக்கிருஷ்ணன்

எரிக் டூசைன்ட் (Eric Toussaint), உலகை வலம் வரும் 52 வயது இளைஞர். பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த எரிக், அரசியல் மற்றும் அறிவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். ஆம்ஸ்ட்ரடாமில் உள்ள கல்வி மற்றும் ஆய்வுக்கான சர்வதேச நிறுவனத்தில் தொடர்ந்து உரையாற்றுபவர். உலகப் பொருளாதாரம், மூன்றாம் உலக நாடுகளின் நிதிநிலை என அவரது நூல்கள் பல தளங்களில் பயணிக்கின்றன.

Eric Toussaint மூன்றாம் உலக நாடுகளின் அவலநிலை, மக்களின் பாடுகள் என அக்கறை சார்ந்த பல கேள்விகளை, வாதங்களை, தகவல்களை தனக்கான லாவகமான அணுகுமுறை யுடன் ஏகாதிபத்தியத்தின் திரைமறைவு திட்டங்களை கட்டவிழ்க்கிறார். உலக சர்வாதிகாரம், பொருளாதார சூழ்ச்சிகள் என வடக்கின் கோரமான லாப வெறியினைத் துல்லியமாக நமக்கு காட்சிப்படுத்துகிறார் எரிக்.

பிரெஞ்ச் காலாண்டிதழான Les Autres Voix de la Plane’te (other voices of the planet) இன் ஆசிரியராகவும் பணியாற்றுகிறார் எரிக்.

எந்தப் பகட்டுமின்றி இயல்பாகப் பழகக்கூடியவராக, தொடர்ந்து உரையாடுபவராக, துருதுருவென செயல்படுபவராக இருக்கும் எரிக்கின் குணம் உடனிருப்பவர்களை உற்சாகப்படுத்துவதாக உள்ளது. 13 வயதில் கார்ல் மார்க்சின் எழுத்துகளை வாசிக்கத் தொடங்கிய எரிக், பின்பு எர்னஸ்த் மன்தலின் பால் ஈர்க்கப்பட்டார். தொடர்ந்த வாசிப்பு, பயணம் என உலகை வலம் வந்து கொண்டிருக்கிறார். பிடல் காஸ்ட்ரோ, ஹூயுகோ சாவேஸ், ஈவோ மொரல்ஸ் முதல் மூன்றாம் உலக நாடுகளில் இயங்கி வரும் உலகமய எதிர்ப்பாளர்கள், இயக்கங்கள் வரை அவரது நண்பர்கள் எங்கும் விரவிக்கிடக்கிறார்கள்.

உலக சமூக மாமன்றத்தின் (WSF) உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றி வரும் எரிக், மூன்றாம் உலக நாடுகளின் கடனைத் தள்ளுபடி செய்யக் கோரும் இயக்கத்தின் பெல்ஜியம் நாட்டுத் தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார் (CADTM – Committee for the Abolition of third World Debt). இந்த அமைப்பு எல்லா நாடுகளிலும் செயல் வடிவம் பெறத் தொடங்கியுள்ளது. ஆனால், இவர்கள் சர்வதேச அளவிலான கட்டுமானம் எதையும் வைத்துக் கொள்ளவில்லை. மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த பொருளாதார அறிஞர்கள், ஆய்வாளர்கள், உலகமய எதிர்ப்பாளர்கள், போராளிகள் எனப் பலரும் அதில் சமூகப் பொறுப்புடன் இயங்கி வருகின்றனர்.

கேரளாவுக்கு மார்ச் மாதம் வந்திருந்த எரிக்கை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அவருடனான உரையாடல், நான்கு நாட்கள் தொடர்ந்து கொண்டேயிருந்தது. இந்த உரையாடல் ஓர் இனிய அனுபவமாகவே மனதில் தங்கியது. அவருடனான உரையாடலின் ஒரு பகுதி :

கடந்த 20 ஆண்டுகளில் உலக மக்ணீளை பசி கொடூரமாக வாட்டி வருகிறது. ஏழ்மை சகிக்க முடியாததாக ஒரு மதத்தைப் போல் வெளியெங்கும் பரவிக் கிடக்கிறது. ஏழ்மையின் கோரக் காட்சிகளை ஊடகங்களில்கூட நம்மால் பார்க்க சகிக்க முடியவில்லை. இந்தியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தின் அமெரிக்கா என பேதமற்று இந்தப் பிணி விரவிக் கிடக்கிறது. இந்த ஊழல் உலகளாவியதாக - பொதுவானதாக உருவாக எது காரணமாக விளங்குகிறது என்பதை நாம் கண்டுபிடிக்க முயல வேண்டும். நாம் நம் வரலாற்றுக்குள் சற்றே மாற்றுக் கண்ணோட்டங்களுடன் பயணிக்க வேண்டும். உலக வங்கி, பன்னாட்டு நிதி மூலதனம் (IMF) என இந்த நிறுவனங்கள் உருவாக்கப்பட்டதன் வரலாறு என்ன, தேவை என்ன என்று ஆய்ந்தறியும் நோக்கில் நாம் நம் பயணத்தைத் தொடங்க வேண்டும்.

உலக முதலாளிகள் தங்கள் மேலாதிக்கத்தைத் தொடர்ந்து நிலைநாட்டுவதற்கு, உலக உழைக்கும் மக்கள் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். வாழ்வாதாரங்களை சிதைப்பது, கொள்ளையடிப்பது, கூலியை குறைப்பது, சந்தை விதிகளை மாற்றுவது என முன் உணர முடியாத மாற்றங்களுக்கு உலகை அடிபணிய வைப்பது அதில் அடக்கம். 1960களில் சர்வாதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்குள் பல நாடுகள் திணறின. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை அப்புறப்படுத்துவது, தங்களின் செல்லப் பிள்ளைகளை ஆட்சிப் பீடத்தில் அமரச் செய்வது - இந்தோனேசியாவில் அகர்னோ அப்புறப்படுத்தப்பட்டு சுகர்தோ ஆட்சிக்கு வந்தார். லத்தின் அமெரிக்காவின் இடதுசாரி அரசுகளை ஆதிக்கவாதிகள் நிலைகுலையச் செய்தனர். ஓர்டேகோ, அலாண்டே எனப் பலர் அந்த வலையில் வீழ்ந்தார்கள். பல நாடுகளில் கிளர்ச்சி குழுக்களை உருவாக்குவது, ஆயுதம், பண உதவிகள் என சகல ஆசிர்வாதங்களுடன் செயல்பட அனுமதிப்பது; இந்த செயல்பாடுகளின் பிரதிபலிப்பாக எழுந்த விமர்சனங்கள், எதிர்ப்பியக்கங்கள் என இவைகளை மட்டுப்படுத்த புதிய ஆலோசனைகள் தொடங்கின.

1960களில் ஏகாதிபத்தியம் புதிய கருவியை கண்டுபிடித்தது. அந்தக் கருவியின் பெயர் ‘கடன்'. இரண்டாம் உலகப் போர் முடிந்த கையோடு பல நாடுகள் காலனி ஆதிக்கத்திலிருந்து சுதந்திரம் பெற்றன. இரண்டாம் உலகப் போருக்கு சற்று முன்னர்தான் உலக வங்கி, பன்னாட்டு நிதி மூலதனம் ஆகிய இருபெரும் நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. அவை அய்.நா.வின் சிறப்பு அந்தஸ்து பெற்ற நிறுவனங்கள். ஆனால், அய்.நா.வின் ஜனநாயக, வெளிப்படைத்தன்மை அவைகளுக்கு இல்லை. மூன்றாம் உலக நாடுகளுக்கு அங்கு வாக்குரிமைகூட கிடையாது. அமெரிக்கா 35%, பிரித்தானியம் 13%, பெல்ஜியம் 5% என வளர்ந்த நாடுகளின் கட்டுப்பாட்டில் அந்த நிறுவனம் இயங்குகிறது. இந்தியாவின் வாக்கு வெறும் 3 சதவிகிதம் மட்டுமே. இந்த நிறுவனங்கள் தொடங்கப்பட்டபோது, அதன் நோக்கம் போரில் பாதிக்கப்பட்ட அய்ரோப்பிய மற்றும் பின் தங்கிய நாடுகளை வளர்ச்சியடையச் செய்வது என்பதாகத்தான் இருந்தது.

1960களில் ஏறக்குறைய எல்லா மூன்றாம் உலக நாடுகளுக்கும் கடனை வாரி குவிக்கத் தொடங்கினார்கள். ஆனால், இந்த கடன்களுக்குப் பின்னால் ஏராளமான நிபந்தனைகள் அணிவகுத்து நின்றன. இப்பெரும் தொகையின் துணையுடன் ஏராளமான வளர்ச்சி வாழ்வாதாரத் திட்டங்களை மூன்றாம் உலக நாடுகள் செயல்படுத்தியிருக்க இயலும். ஆனால், அந்த நிதியுடன் வந்த நிபந்தனைகள் அந்தப் பெரும் தொகைகளை விரயமாக்கவே உதவின. நிதானமற்ற, ஊழல் மலிந்த நம் அரசுகளும் அந்தப் பணத்தைச் சூறையாடி, அனாவசியமாய் செலவு செய்தன. நகரங்களை அழகு படுத்துவது, பெரிய அணைகள், அணுமின் நிலையங்கள் எனப் பல பெரும் திட்டங்கள் தொடங்கப்பட்டன. ஏராளமான திட்டங்களில் இறைக்கப்பட்ட பணம் வீணாய்ப் போனது. இதில் பயனடைந்தவர்கள் இந்த ஒப்பந்தங்களைப் பெற்ற வெளிநாட்டு முதலாளிகள் மற்றும் துணை ஒப்பந்தங்களைப் பெற்ற உள்நாட்டு அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது உறவினர்கள்தான்!

காங்கோ நாட்டில் கட்டப்பட்ட இங்கா அணை, இந்தியாவில் நர்மதா அணை, பிலிப்பைன்சில் பத்தான் அணு உலை, அர்ஜென்டினா பராகுவே எல்லைப் பகுதியில் தொடங்கப்பட்ட நீர்மின் நிலையம் அனைத்திலும் பழங்குடிகள் விரட்டியடிக்கப்பட்டு, விளை நிலங்கள் மூழ்கடிக்கப்பட்டு, விளிம்பு நிலை மக்கள் லட்சக்கணக்கில் அகதிகளாக்கப்பட்டனர். பல மின் நிலையங்கள் 30 ஆண்டுகளாக கோடிகளை விழுங்கி, இன்னும் மின்சாரத்தை மட்டும் தயாரிக்கவில்லை. இப்பின்புலத்தில் டாலரின் மதிப்பு செயற்கையாக கூட்டப்பட்டு, ஒரே நாளில் மூன்றாம் உலகக் கடன் மூன்று மடங்கு அதிகரித்தது. 1980களில் இந்தக் கடன் சுமையைத் தாங்க முடியாமல் பல அரசுகள் நிலைகுலைந்தன. அந்த கால கட்டத்தில் கடன்களை திருப்பிச் செலுத்த இயலாத நாடுகளில், பல புதிய கட்டுமான மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

1950களின் இறுதியில், உலக வங்கியின் வட்டி விகிதங்களை விமர்சனம் செய்ய இந்தியா எந்த வகையிலும் தயங்கவில்லை. இந்தியாவின் மதிப்பும் பின் தங்கிய நாடுகளில் உயர்ந்து காணப்பட்டது. ஆனால், உடனடியாக இந்தியாவை சர்வதேச வளர்ச்சிக் கழகத்தின் (International Development Agency) மூலம் குறைந்த வட்டியில் பெரும் தொகைகளைக் கொடுத்து சமாதானப்படுத்தினார்கள். இந்தியா தன் குரலை இழந்தது. பல பெரும் கால்வாய்கள், பசுமைப் புரட்சி என ‘போர்ட் பவுண்டேஷன்' உள்பட இங்கு களமிறங்கின. பல உற்பத்திசார் வளர்ச்சியின் மாதிரிகள் நம் மீது திணிக்கப்பட்டன. தொழில் நுட்பங்கள், கருவிகள், புதிய முறைமைகள் என இவை அனைத்தும் பன்னாட்டு நிறுவனங்கள் கட்டுப்பாட்டில் உள்ளவை.

வடக்கு தொடர்ந்து தெற்கிற்கு கடன் கொடுக்கிறது. தெற்கில் உள்ள முதலாளிகள் தங்களின் உபரிப் பணத்தை எல்லாம் வடக்கில் உள்ள பெரிய வங்கிகளில் செலுத்துகிறார்கள். அந்தப் பணத்தை மீண்டும் அவர்கள் நமக்கு அதிகப்படியான வட்டியில் வழங்குகிறார்கள். அது மட்டுமின்றி, லண்டன் கிளப், பாரிஸ் கிளப் என தனியார் குழுக்கள் மூன்றாம் உலக நாடுகளின் அரசுகளுக்கு கடன் கொடுக்கத் தொடங்கின. நாம் ஏன் இந்த கடன்களைப் பெற வேண்டும்? இக்கேள்வி, நம் ஒவ்வொருவரின் மனதிலும் உரக்க ஒலிக்க வேண்டும்.

தெற்கில் உள்ள நாடுகள் கடன்களைத் திருப்பிச் செலுத்தாவிட்டால், நாம் வடக்கை நிலைகுலையச் செய்திடலாம். 2001 டிசம்பரில் அர்ஜென்டினாவில் மக்கள் கொதித்தெழுந்து தெருக்களில் சங்கமித்தனர். அந்த நாட்டு குடியரசுத் தலைவர் ஹெலிகாப்டரில் தப்பித்து ஓடினார். அது முதல் 2007 வரை அந்த நாடு தன் கடன்களை திருப்பிச் செலுத்தவில்லை. பல ஆண்டுகள் பலவித மிரட்டல்கள் விடுக்கப்பட்டும் எந்தப் பயனும் இல்லை. இப்போது அர்ஜென்டினா அரசிடம் பாரிஸ் கிளப் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த முயல்கிறது. இப்போது அர்ஜென்டினா அரசின் புதிய நிபந்தனைகளை ஏற்றாக வேண்டிய சூழலுக்கு அவர்கள் ஆளாகியிருக்கிறார்கள். தங்களின் கடன் பத்திரங்களை திருப்பிக் கொடுத்து, கடன் தொகையை 60 மடங்கு குறைக்க வேண்டும் என நிர்பந்தித்திருக்கிறார்கள். இந்த வழிமுறை உலகத்துக்கு புதிய நம்பிக்கையை, உற்சாகத்தை அளித்திருக்கிறது.

கடன் சுமை தாளாத தெற்கின் தேசங்கள் ஒன்றுபட்டு புதிய சவால்களை சந்திக்க வேண்டும். வெனிசுவேலா அதிபர் சாவேஸ், ‘தெற்கு வங்கி' (Bank of South) பற்றி தொடர்ந்து உரையாடி வருகிறார். அடுத்த மாதம் அர்ஜென்டினா, பொலிவியா, வெனிசுவேலா எனப் பல நாடுகள் புதிய வங்கி தொடர்புடைய பணிகளைத் தொடங்க இருக்கிறார்கள். இது தொடர்பாக இந்தியா, சீனா, இந்தோனேசியாவின் நிலைப்பாடு என்ன? சீனா எந்த வழியிலும் மூன்றாம் உலக நாடுகளுக்கு உதவுவதில்லை. மாறாக, சீனா, ஆப்பிரிக்க நாடுகளுக்கு அதிகளவு வட்டியில் கடன்களை வழங்கி, அதற்கு பதில் ஆப்பிரிக்க இயற்கை வளங்களை கொள்ளை அடித்துச் செல்கிறது. அதனால்தான் அவர்களால் பொருள்களை மலிவான விலைக்கு தயாரிக்க முடிகிறது. சீனா வடக்கின் வரிசையில் தன்னை மேலாதிக்க தேசமாகவே பாவிக்க விரும்புகிறது.

தொடர்ந்து கடந்த பத்தாண்டுகளில் மூன்றாம் உலக நாடுகளின் இயற்கை வளங்கள் மீது பன்னாட்டு நிறுவனங்களின் கருவிழி பதிந்து கிடக்கிறது. தொடர்ந்து உலகெங்கும் பழங்குடியினர் சுட்டுக் கொல்லப்பட்டு, காடுகளிலிருந்து அப்புறப்படுத்தப்படுகிறார்கள். காங்கோவில் உள்ள கடங்கா தாமிரச் சுரங்கத்தில் ‘அன்வில் மைனிங்' என்கிற ஆஸ்திரேலிய கனடா நாட்டு நிறுவனம், தாதுக்களை பெருமளவு வெட்டி எடுத்து வருகிறது. அங்கு இடையறாது கிளர்ச்சியில் ஈடுபட்டு வந்த மக்கள் காங்கோ ராணுவத்தின் துணையுடன் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த 90 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு உதவிய ராணுவத்திற்குப் பெரும் தொகையை அந்தப் பன்னாட்டு நிறுவனம் வழங்கியது. இருப்பினும், எதிர்ப்பியக்கங்கள் உலகளவில் வலுப்பெற்று வருகின்றன. எதிர்ப்பியக்கங்களை ஒன்றிணைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இந்த எதிர்ப்பலை, உலக வர்த்தகக் கழகத்தின் கூட்டங்களை நிலைகுலையச் செய்துள்ளது.

Eric Toussaint with Hugo Chavez பராகுவே கூட்டம் ரத்து செய்யப்பட்டது. ஜெனிவா, சியாட்டில் என எங்கும் மக்கள் திரள் உலகை ஆதர்சமடையச் செய்தது. அதனால் அண்மையில் அவர்கள் மக்கள் நெருங்க முடியாத வெளிகளில் கூட்டம் நடத்த முடிவு செய்தார்கள். தோகாவில் யாரும் நெருங்க முடியவில்லை. இருப்பினும், அல்ஜசீரா தொலைக்காட்சியின் செய்தியாளராக நான் சென்று வந்த அனுபவம் புதுமையானது.

உலகம் முழுவதிலும் இத்தகைய சூழ்ச்சியான தந்திரமான கடன்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. எவ்வாறு ஒவ்வொரு தேசமும் கடன் வலையில் சிக்கியது என்கிற வரலாற்றை மக்கள் இயக்கங்கள் தோண்டி எடுக்கத் தொடங்கிவிட்டன. கென்ய மனித உரிமை ஆணையத்திடம் அந்த நாட்டைச் சேர்ந்த மக்கள் 85,000 அஞ்சல் அட்டைகளை அனுப்பி, தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். அந்த நாட்டின் கடன் பேரேடுகளை மக்கள் பார்வைக்கு கொணர வேண்டுமென குரல்கள் வலுப்பெற்று வருகின்றன. தொடர்ந்து போராடியதன் விளைவாக, தற்பொழுது 2002 வரையிலான கென்ய நாட்டு கடன்கள் குறித்த விபரங்களைப் பெற்றும் உள்ளனர்.

இது போலவே நிகரகுவா, சாம்பியா, பிலிப்பைன்ஸ் எனப் பல நிலப்பரப்புகளில் புதிய புதிய வடிவங்களில் எதிர்ப்புகள் பரிணமித்தன. லைபீரியாவிற்கான கடனைத் தள்ளுபடி செய்யக் கோரி, பிப்ரவரி 13 - 15 தேதிகளில் லட்சக்கணக்கான காதலர்கள் காதலர் தினத்தை - கடன் தள்ளுபடிக்கான முழக்கத்தை முன்வைக்கும் நாளாக மாற்றினர். அவர்கள் தங்கள் கைகளில் ‘இதயத்துடன் இருப்பவர்கள் - லைபீரியாவின் கடனை ரத்து செய்யுங்கள்’ என்ற வாசகங்களுடன் தெருக்களில் சங்கமித்தனர். ஹியார்ட்டியில் மார்ச் மாதம் மகளிர் தினத்தன்று ஆயிரக்கணக்கான பெண்கள், அந்த நாட்டின் மீது சுமத்தப்பட்டுள்ள சூழ்ச்சியான அமெரிக்கக் கடன்களுக்கெதிராக குரல் கொடுத்தனர். நோம் சாம்ஸ்கி, டெஸ்மாண்ட் டுட்டு, ஹெரால்டு பின்டர், டோடி கோல்டு ஸ்மித் என அறிஞர்கள் உலகம் முழுவதிலும் நடக்கும் கடன் ரத்து குறித்து இந்த இயக்கங்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அர்ஜென்டினாவை ஆண்ட ராணுவ சர்வாதிகாரிகள் பெற்ற கடன்களை, எங்களால் திருப்பிச் செலுத்த இயலாது என்று அங்குள்ள புதிய அரசுகள் வெளிப்படையாகத் தெரிவித்து வருகின்றன. கடந்த கால சர்வாதிகாரிகளின் ஊதாரித்தனங்களுக்கும் சொகுசு வாழ்க்கைக்கும் செலவிடப்பட்ட பெருந்தொகைகளை, நாங்கள் ஏன் கட்ட வேண்டும் என குரல்கள், அர்ஜென்டின தொடு வானத்தைத் துளைத்து நிற்கிறது. பழைய கிழக்கு ஜெர்மனி தன்னிடமிருந்த பயனற்ற போர்க் கப்பல்களை இந்தோனேசியா தலையில் கட்டியது. இத்தாலி வசமிருந்த பழுதடைந்த மின்சார உற்பத்திக் கருவிகளை ஈக்வெடாருக்கு ஏற்றுமதி செய்தது. ஜப்பானியர்கள் தங்கள் வசமிருந்த வழக்கொழிந்த அலுமினிய உருக்கு ஆலையை இந்தோனேசியாவிற்கு அனுப்பினர். கென்யாவிற்கு பல துறைகளில் ஆலோசனை வழங்கியதாக பிரித்தானிய நிறுவனம் ஒன்று லட்சம் கோடிகளில் பணம் கேட்டு, பின்பு அதை அந்த நாட்டுக்குக் கொடுத்த கடனாக அறிவித்தது. இது போல் மூன்றாம் உலக நாடுகளின் மீது திணிக்கப்பட்ட தந்திரக் கதைகளை ஒரு மிகப் பெரிய நாவலாகவே எழுதிடலாம்.

உலக சமூக மாமன்றம் போன்ற அமைப்பை உருவாக்கியிருந்தாலும், அதில் தொண்டு நிறுவன மனப்பான்மையுடன் பலர் அணுகி சீரழித்து வருகிறார்கள். இந்தச் சீரழிவின் அபாயம் நீங்க, ‘உலக சமூக மாமன்றம் விற்பனைக்கு இல்லை' என முழக்கங்களை முன்வைக்க வேண்டியிருந்தது. நைரோபியில் அப்படியான கேலிக் கூத்துகள் நடந்தன. கோக் பெப்சி விற்பனை, பன்னாட்டுத் தொலைபேசி நிறுவனத்துடன் நிகழ்வுக்கான ஒப்பந்தம் எனப் பல சங்கடங்கள். நாம் நம்மை அரசியல்படுத்தி ஒருங்கிணைத்துக் கொள்ளாவிட்டால், எதிரிகளை இனம் காண இயலாமல் போய்விடும். இது மிகப் பெரிய சவால்தான்!

எரிக் போன்றவர்கள் தொடங்கியுள்ள இந்த முயற்சிகள், காலத்தின் இன்றியமையாத தேவையாக உள்ளன. இந்த முயற்சிகள் மெல்ல மெல்ல உலகின் நிலப்பரப்பெங்கும் படர வேண்டும். பல கிளை நதிகளாக, அவை வெவ்வேறு வடிவிலான நடவடிக்கைகளாக உருமாற வேண்டும். அது தொடர்ந்து மக்களின் மனங்கள் அரசியலாகத் தகவமைக்கப்பட வேண்டும். உலகின் மனசாட்சிகளாக, தீவிர ஈடுபாடு கொண்ட, உறுதியான நெஞ்சுரம் கொண்ட போராளிகளை காலம் எதிர்பார்க்கிறது.

எரிக் டூசைன்ட் எழுதியுள்ள நூல்கள் :

The World Bank : A never ending coup. The Hidden Agenda of the Washington Consensus (2007),
Your Money (or) Your life - The Tyranny of Global Finance (2005),
Tsunami Aid or Debt Cancellation (2005),
Who Owes Who? 50 questions about World Debt (2004),
Globalisation : 'Reality, Resistance & Alternatives' (2004),
The Debt Scam - IMF, World Bank and the Third World Debt (2003).



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com