Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ani
Ani Logo
மே - ஜூலை 2008

நிறைய எழுதுவதும் ‘நிறைவாக’ எழுதுவதும்
த. பழமலய்

ஒரு காலம் இருந்து கபிலர், பரணர் ஆசிரியப்பாக்கள் மட்டும் எழுதினார்கள். வள்ளுவர் குறள்பா மட்டுத்தான் செய்தார். இளங்கோவடிகள் சீத்தலைச் சாத்தனார், திருத்தக்க தேவர், கம்பர், சேக்கிழார் போன்றோர் உதிரிகளாக எழுதுவதில் அக்கறை கொள்ளவில்லை

நாலாயிரம், பன்னிரு திருமுறைகள் என்னும் தொகுதிகளால் அறிய வருவோரும் ஒன்றன் மீது அடுக்கிப் பாடுபவர்களாக இருந்தார்கள். அவ்வையார், காளமேகம் போன்றோர் தனிப் பாடல்கள் இயற்றுவதோடு நிறுத்திக் கொண்டதாகத் தெரிகிறது.

இவர்கள் நடை, கவிதை நடையாகவே இருந்தது. அடியார்க்கு நல்லார், நச்சினார்க்கினியர், பரிமேலழகர் போன்றோர் உரை எழுதினார்கள். உரை மட்டுமே எழுதினார்கள். ஒரு பாடல் கூட எழுதியதாகக் கிடைக்கவில்லை.

“நீங்கள் தொடக்கத்தில் எழுதத் தொடங்கியது கவிதை. இன்னும் கவிதைதான் எழுதிக் கொண்டிருக்கிறீர்களா?''

இன்றும் தொடர்ந்து கவிதைகள் கவிதைகள் மட்டுமே எழுதிக் கொண்டிருக்கும் ஒருவரிடம் கேட்கக் கூடாத கேள்வி அல்ல இது. ஏன் என்றால். தொடக்கத்தில் கவிதைகள் எழுதிய பலர் பிறகு சிறுகதை, புதினம் என்று அடுத்த வடிவத்திற்கு மாறியிருக்கிறார்கள்.

இவர்கள் நடை, கவிதை நடையாக மட்டும் அல்லாமல் உரை நடையாகவும் மாறியது. இவர்கள் கவிஞர்களாக மட்டும் அல்லாமல் எழுத்தாளர்களாகவும் மாறினார்கள்

படைப்பாளிகள் பல வடிவங்களில் செயல்பட்டதோடு திறனாய்வாளர்களாகவும் வினைபுரிந்தார்கள். ஒரு காலத்தில் கவிஞனாக மட்டுமே அறியப்பட்ட படைப்பாளி நம் காலத்தில் எழுத்தாளன் ஆனது ஏன்? பல்துறைத் திறமைகள் வந்தது எப்படி ?

பொதுவாக, எழுத்தாளர்கள் பலரும் தாங்கள் தொடக்கத்தில் எழுதியது கவிதை என்று சொல்வது உண்டு. பிறகு ஏன் அதே துறையில் முன்னேறாமல் அதைக் கைவிட்டார்கள் அல்லது பிறதுறைக்கு தாவினார்கள்?

விடை எளியது : நம் காலத்தில் உரைநடை பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்தது. கவிதை நடையில் சொல்லப்பட்ட சிறிய கதைகளையும் பெரிய கதைகளையும் பரந்துபட்ட மக்கள் உரைநடையில் எதிர்பார்த்தார்கள்.

ஒருபுறம் மக்கள் திரைப்படப் பாடல்களை விரும்பினார்கள். பாடல் ஆசிரியர்களுக்கு நல்ல விளம்பரமும் சம்பளமும் கிடைத்தன. எந்தத் துறையில் முன்னேற முடியுமோ அந்தத் துறையில் “தொழிலில்” இறங்குவது தானே மனித இயல்பு!

இவ்வாறாகத்தான் இன்று படைப்பாளி கவிஞனாக அல்லாமல், எழுத்தாளனாகப் பாடல் ஆசிரியனாக இயங்குகிறான். பாடல் ஆசிரியன் தன்னைக் கவிஞன் என்று சொல்லிக் கொள்வதும், எழுத்தாளன் இடையிடையே கவிதை மேல் காதல் கொள்வதும் ஏன்?

கவிதையின் பெருமை அது. இது ஒரு கவர்ச்சியான முத்திரையாக இருந்தது உண்மைதான். இன்றோ காசு பண்ண முடியாத கலையாகிவிட்டது! என்றாலும் இத்தனைக் கவிஞர்கள் இருப்பது எப்படி?

இத்தனைக் கவிஞர்கள் இருக்க முடியாது! இவர்கள் பயிற்சியில் இருப்பவர்கள் அல்லது படிகளில் இருப்பவர்கள் பதினெட்டுப் படிகளையும் ஏறாதவர்கள்! இடைநிற்பவர்கள்!

இந்தச் சூழலில்தான், ஈழத்தமிழ்க் கவிஞர் ஜெயபாலன், “நீங்கள் நீள்கவிதைக்கான முயிற்சி எடுத்தாலென்ன?” என்று கேட்ட கேள்வியை அடைகாத்துக் கவிஞர் திலகபாமா சிறகுகளோடு அக்கினிப் பூக்களாய் (கவிதைகள்), நனைந்த நதி (கவிதைகள்) எனச் செய்துள்ளார்.

இங்கு ஒன்றைக் கவனிக்கலாம் கவிதை, க(வி)தை ஆகிறது. கவிதைக் கதை! கதைக் கவிதை! கவிதைக் கதை என்பதில் கவிதை முதன்மை பெறுகிறது கதைக்கவிதை என்பதில் கதை முதன்மை பெறுகிறது. மொத்தத்தில் இது கவிதையில் சொல்லப்பட்ட கதைகளான காப்பியங்களின் தேவையை உணர்த்துகிறது.

சிறு காப்பியங்களின் இடத்தைக் குறு நாவல்களும், பெருங்காப்பியங்களின் இடத்தைப் புதினங்களும் பிடித்துவிட்ட நிலையில், இவை, உரை நடையில் இயங்கும் சூழலில், கவிதை நடையில் மட்டும் இயங்குவதாக எது இருக்கமுடியும்? அது கவிதையாக மட்டுமே இருக்க முடியும்! அப்படியானால், கவிதையில், கதை இருக்க முடியாதா? கதையில் கவிதை இருக்க முடியாதா? இருக்கலாம். ஏனென்றால், எதுவும் எதுவாகவும் தனித்து இருப்பது இல்லை.

கவிதையைக் கவிதையாக மட்டுமே எழுதுவது எப்படி? அது சவாலானதுதான்! அய்க்கூவை, அய்க்கூவாக மட்டுமே எழுதுவதைப் போன்றது. அய்க்கூவை, அய்க்கூவாக எழுதுவது என்றால் என்ன? தியானத்தை தியானமாக மட்டுமே எழுதுவது! ஓர் உணர்ச்சியை ஓர் உணர்ச்சியாக மட்டுமே எழுதுவது.

உணர்ச்சிகளின் கலவை, சிறு கதையாக நெடுங்கதையாகச் சொல்லப்படுகிறது. அதே வேளையில், தனித்த உணர்ச்சி மட்டுமே அல்ல, கலவை உணர்ச்சியும் கவிதையாகச் சொல்லப்பட்ட வேண்டியதாகிறது. சொல்லப்பபடுவது, எப்படிச் சொல்லப்படுகிறது என்பதுதான், சொல்லப்பட்டுவதற்கு ஓர் தனித்த அடையாளத்தைத் தருகிறது.

யாரும் எதையும் சொல்லலாம் இங்குச் சொல்பவர்கள் முக்கியம் அல்ல. சொல்லப்படுபவை தாம். நான் கவிதைநடையில் எழுதியதைவிட, உரை நடையில்தான் நிறைய எழுதியிருக்கிறன். நான் கவிஞனா? உரைநடை ஆசிரியனா? நிறைய எழுதியிருப்பது அல்ல, ‘நிறைவாக’' எழுதியிருப்பதே அளவுகோலாக இருக்க முடியும். அப்படியானால், எழுதியிருப்பவை எல்லாம்? இந்த ‘ஒன்றுக்காகச்’ செய்த பயிற்சிகள்தாம்.

இந்த ஒன்று எது? கவிநடைப் படைப்பா ? உரைநடைப் படைப்பா? அறிந்தோ அறியாமலோ ஒரு கவிநடைப் படைப்புக்காகதான், பிற கவி நடைப் படைப்புகளும் சரி, உரைநடைப் படைப்புகளும் சரி எனக்கு.

நான் எப்போதும் ஒரு கவிதை எழுதவே விரும்பி வந்திருக்கிறேன். உரைநடையை இதற்கு உதவும் என்று நம்பியே, ஒரு விரிந்த தளத்திலான பயிற்சியாகவே மேற்கொண்டேன். இந்தப் பயிற்சியைக் கவிநடையிலேயே காலூன்றிச் செய்திருந்தால், அது சரியாக இருந்திருக்குமோ என்கிற சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது. கவிஞனாக விரும்புகிற ஒருவனுக்கு இது தீராதது போலும்!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com