Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
செப்டம்பர் 2008

வீரியமிழந்த அணுக்கதிர்கள்
கோவி. லெனின்


ஆர்.டி.எக்ஸ் வெடிப்பவன் தீவிரவாதி. அணுகுண்டு வெடித்தால் வல்லரசு. இது உலக இலக்கணமாக மாறியிருக்கிற காலம் இது. பொக்ரானில் இந்திராகாந்தியும் வாஜ்பாயும் அணுகுண்டுகளை வெடித்து இந்தியாவை வல்லரசு என நிலைநாட்ட முயற்சித்தார்கள். அந்த குண்டுவெடிப்புகளால் நாட்டில் வறுமைக்கோடுகள் மீது எந்தக் கீறலும் விழவில்லை. விவசாயிகள் மூன்று போக சாகுபடி செய்துவிடவில்லை. அவற்றிற்கும் அணுகுண்டு வெடிப்புக்கும் எந்தத் தொடர்புமில்லை. ஆனால், இந்திய மக்கள் எல்லோரும் கொண்டாட வேண்டிய சாதனையாக ஊடகங்கள் வாயிலாக பிரபலப்படுத்தப் பட்டது. பலம் பொருந்திய நாடுகளுக்கு இணையாக இந்தியா தன் வலிமையைப் பெருக்கியுள்ளது என்றனர் ஆளுந்தரப்பின் அறிவுஜீவிகள்.

இந்திராகாந்தியும் வாஜ்பாயும் இந்தியாவுக்கு உண்டாக்கிய "வல்லமை'யின் இன்றைய நிலை என்ன? அமெக்கா நினைத்தால்தான் இந்தியாவில் அணுசக்தியை ஆக்கத்திற்கோ அழிவிற்கோ பயன்படுத்த முடியும் என்கிற நிலைமை. அணுவை வெடிகுண்டுகளாக்கிச் சோதனை நடத்தியவர்கள் மக்களின் கைதட்டல்களை வாங்கிக் கொண்டார்கள். அணுவை மின்சார உற்பத்திக்குப் பயன் படுத்தலாம் என ஒப்பந்தம் போட்டவர்கள் மக்களால் கைகொட்டிச் சிரிக்கப்படும் நிலைமைக்கு ஆளாகியிருக்கிறார்கள். இந்தியாவின் மின்சாரத் தேவையை ஈடு செய்வதற்காக அணுமின்சார உற்பத்திக்கு அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போட்டார் பிரதமர் மன்மோகன்சிங். 123 என்றழைக்கப்படும் அந்த ஒப்பந்தத்திற்கு இடதுசாரிகளிடமிருந்தும் பாரதிய ஜனதா கட்சியிடமிருந்தும் எதிர்ப்பு வந்தது. பா.ஜ.க.வின் எதிர்ப்பு சந்தர்ப்பவாத எதிர்ப்பு என்பதும், இத்தகைய முயற்சிகளை அவர்கள் ஆட்சியில்தான் முதலில் மேற்கொண்டார்கள் என்பதும் நாடறிந்த ரகசியம்தான்.

அமெக்காவுடனான எந்தவிதமான உறவையும் இடதுசாகள் எதிர்க்கவே செய்வார்கள். அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் அவர்களின் எதிர்ப்பு வலுவாக இருந்ததுபோலவே, அதற்கான காரணங்களும் வலுவாக இருந்தன. 123 ஒப்பந்தத்துடன் இணைந்த ஹைடு சட்டத்தின் மூலம் இந்தியாவை அமெரிக்கா கட்டுப்படுத்த முயல்கிறது. அணுஆற்றல் விஷயத்தில் இந்தியாவின் சுதந்திர மான முடிவுகளை அமெரிக்கா பறிக்கும் விதத்தில் இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு விவகாரங்களுக்குள் அமெரிக்கா மூக்கை நுழைக்க இந்த ஒப்பந்தம் வழி வகுக்கும் என இடதுசாரிகள் எச்சரித்து எதிர்ப்புக்காட்டினர். மன்மோகன்சிங் அரசு அதை மறுத்தது. 4 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதரவளித்து வந்த இடதுசாரிகளைவிடவும் அமெக்காவின் தயவே அதிமுக்கியம் என முடிவெடுத்தது. இந்த முடிவால், மன்மோகன்சிங் அரசுக்கு உடனடி ஆபத்து ஏற்பட்டுவிடவில்லை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை கோரும் தீர்மானத்திலும் சாமபேத தண்டங்களைப் பயன்படுத்தி வெற்றி பெற்றுவிட்டது.

மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிலைக்க வேண்டும் என்பதால் அதனைத் தொடர்ந்து ஆதரித்து வரும் கட்சிகள்தான் தங்களின் நம்பிக்கைக்குரிய தோழர்களாக இருந்துவந்த இடதுசாகளின் ஆதரவை இழந்தனர். குறிப்பாகத் தமிழகத்தில், 1991-96 காலகட்டத்திலும் 2001-2006 காலகட்டத்திலும் நடைபெற்ற மக்கள் விரோத அரசை வீழ்த்தும் எண்ணத்துடன் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்தன. கடந்த தேர்தலின்போது தமிழகத்தில் உள்ள ஜனநாயக முற்போக்கு மதநல்லிணக்கச் சக்திகள் ஓரணியில் நின்றதால் புதிய ஆட்சி மலர்ந்தது. ஆனால், இன்றோ அணுசக்தி ஒப்பந்தத்தினால் காங்கிரஸ் இருக்கும் கூட்டணியில் நீடிக்க முடியாது என இடதுசாகள் தங்கள் நிலைப்பாட்டை அறிவித்திருப்பதால் தமிழகத்தில் காங்கிரசுக்கு எந்த இழப்பும் இல்லை. தி.மு.க.வுக்குத்தான் நல்ல தோழமை இல்லாத நிலை உருவாகியுள்ளது.

தனது அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்து வந்த இடதுசாகளின் உறவை உதறித்தள்ளிவிட்டு, அமெக்காவுடனான ஒப்பந்தமே முக்கியம் என்று மன்மோகன்சிங் முடிவெடுத்த தருணம், அவரது அமெரிக்க அடிமைத்தனத்திற்கான அப்பட்டமான எடுத்துக்காட்டு. அணுசக்தி ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்தே முடிவெடுப்போம் என்று அவரது கட்சிப் பிரமுகர்கள் அறிவித்துக் கொண்டிருந்த நேரத்தில், ஜ-8 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜப்பானுக்கு விமானம் ஏறிய மன்மோகன்சிங், அந்த விமானத்திலேயே செய்தியாளர் களிடம், “அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றியே தீருவோம்'' என்றார். அதாவது, நாடு எப்படியோ போகட்டும். நான் விமானத்தில் பத்திரமாக ஏறிவிட்டேன் என்பதுபோல இருந்தது அவரது பேட்டி.

கூட்டணி தர்மம், நம்பிக்கை எல்லாவற்றையும் உடைத்தெறிகின்ற வகையில் மன்மோகன்சிங் அளித்த பேட்டியும் அதன்பின் நடந்த நிகழ்வுகளும் இடதுசாரிகளை காங்கிரசுக்கு எதிரான மாற்று அணியை உருவாக்கும் முயற்சியை வேகப்படுத்த உதவின. மாயாவதி தலைமையில் மூன்றாவது அணி என்று தொடக்கத்தில் சொல்லப்பட்டது. இப்போது ஜெயலலிதாவின் பெயர் வரையிலும் மூன்றாவது அணி கட்டமைப்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் - தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்ற மத்திய அரசில் குறைந்த பட்ச பொது செயல்திட்டம் என்கிற அளவில் ஒரு கூட்டணி உருவாகியிருந்தது. இப்போது உருவாக்கப்படுகிற மூன்றாவது அணியில் குறைந்தபட்ச கொள்கை ஒற்றுமைகூட இல்லாத கட்சிகள் வெறும் தேர்தல் இலாபத்தை முன்னிட்டே அணிசேர ஆர்வமாகியிருக்கின்றன. அணுசக்தியின் முதல் விளைவு இது.

அணுசக்தி ஒப்பந்தத்தினால் இந்தியாவின் உரிமைகளுக்கும் இறையாண்மைக்கும் ஆபத்து என இடதுசாரிகள் எழுப்பிய குரலுக்கு மன்மோகன்சிங் அரசு தொடர்ந்து மறுப்புத் தெவித்து வந்தது. இந்தியாவின் அணுகுண்டு சோதனைகளுக்கு இந்த ஒப்பந்தமும் அதனுடன் இணைந்த ஹைடு சட்டமும் தடையாக உள்ளன என்பதுதான் இடதுசாகளின் வாதம். இதற்கு பூசி மெழுகி வந்தது மத்திய அரசு. பொய்யை எத்தனை நாளைக்குப் பொத்தி வைக்க முடியும்? இப்போது அமெக்காவின் வாஷிங்டன் போஸ்ட் இதழ் அம்பலப்படுத்தி விட்டது. இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தினால் அணுசக்தி ஒப்பந்தம் ரத்தாகிவிடும் என அமெக்க அரசு சார்பில் எழுதப்பட்டுள்ள ரகசிய கடிதத்தை வெளியிட்டு புதிய குண்டை வெடிக்கச் செய்தது அந்த இதழ். அமெக்காவின் முகமாக இருக்கிற ஜார்ஜ் புஷ் என்கிற நரியின்முகம் அப்போதுதான் வெளிப்பட்டது.

ஆப்பசைத்த நிலையில் இந்திய ஆட்சியாளர்கள் திணறினர். அமெக்காவிலிருந்து புது விளக்கம் வெளிப்பட்டது. அணுகுண்டு சோதனை நடத்தக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்படவில்லை. இந்தியாவே இனி அணுகுண்டு சோதனை நடத்தமாட்டோம் என்று ஒப்புக்கொண்டுதான் ஒப்பந்தத்திற்கு முன் வந்திருக்கிறது என்பதே அமெக்காவின் விளக்கம். இந்தியத்தரப்பில் அடிமைசாசனம் எழுதித் தரப் பட்டிருக்கிறது என்பதே விளக்கத்திற்கான விளக்கம். தனது அடிமைப்பட்டியலில் மிகப் பெரிய ஜனநாயக நாடு ஒன்று இணைந்திருப்பதில் அமெக்காவுக்கு அளவு கடந்த ஆனந்தம். அதனால்தான், இந்தியாவுக்கு அணுமூலப்பொருள் தர வேண்டிய நாடுகள் சற்று யோசித்துப் பின்வாங்கியபோது, அமெரிக்காவே முன்னின்று முயற்சிகள் எடுத்து, அணுமூலப்பொருள் கிடைக்க வழி செய்திருக்கிறது.

இது, இந்தியாவுக்கு மகத்தான வெற்றி என இரு விரல் காட்டுகிறார் மன்மோகன்சிங். காங்கிரஸ் தரப்பினர் மகிழ்ச்சிக் கூத்தாடுகிறார்கள். அணு ஆற்றல் தொடர்பாக 35 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த தடை நீங்கியதாக ஊடகங்கள் எழுதுகின்றன. தடை நீக்கப்பட்டிருப்பதன் பின்னணி அந்த அடிமை சாசனம்தான். பட்டியில் பூட்டப் பட்டிருந்த ஆடு, மைதானத்தில் அவிழ்த்துவிடப்பட்டிருக்கிறது. புலியின் பசிக்காக.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com