Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
அக்டோபர் 2007

இந்தியாவில் புதிய மதம்

கோவி.லெனின்

ஒரு திரைப்படம். அதில் நாயகன் அறிமுகமாகும் காட்சி அவனது கைகளில் உள்ள ஒரு நரம்பு புடைக்கிறது. அது துடித்தபடியே தலை வரைக்கும் செல்கிறது. என்ன காரணம்? அவனுக்கு எதிரில் இருக்கும் ஒருவன், “கிரிக்கெட்டில் இந்தியா தோற்றுவிடும்’’ என்று சொல்லிவிட்டான். இந்தியா தோற்பதை, அதிலும் கிரிக்கெட்டில் தோற்பதாகச் சொல்லப்படுவதைக்கூட நாயகன் விரும்புவதில்லை. அதனால் தான் அவனது நரம்பு புடைக்கிறது. துடிக்கிறது, கிராஃபிக்ஸ் வித்தைகளால் இன்னும் என்னென்னவோ செய்கிறது. ரசிகர்களின் கைதட்டலை அள்ளிக் கொண்டு போகிறது.

இந்தியாவில் மதத்திற்கு அடுத்தபடியாக உணர்ச்சிகளை வெகு சீக்கிரமாகத் தூண்டிவிடக் கூடியவை வயாக்ராவும் கிரிக்கெட்டும்தான். அதிலும் வயாக்ராவை விடவும் கிரிக்கெட்டுக்குத் தான் அதிக விளம்பரம், அதிக வருமானம், சந்தையில் அதிக மதிப்பு.

இந்தியர்கள் விளையாடுவதற்கு வேறு விளையாட்டுகளே இல்லையா என்றால், எத்தனையோ விளையாட்டுகள் இருக்கின்றன. அவையெல்லாம் அரசாலும், தனியார் அமைப்புகளாலும், ஊடகங்களாலும் புறக்கணிக்கப்பட்டு கிரிக்கெட் மட்டுமே விளையாட்டு என்பதுபோன்ற மாயை இங்கே உருவாக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து அண்மையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியிருக்கிறார். இத்தகையக் கேள்விகளை இந்தியாவில் உள்ள ஏனைய விளையாட்டு வீரர்களும் பயிற்சியாளர்களும் பல ஆண்டுகளாகக் கேட்டுக் கொண்டே இருக்கின்றனர். பதில்தான் கிடைப்பதில்லை.

தென்னாப்பிரிக்காவில் நடந்த 20 ஓவர்கள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி உலகக் கோப்பையை வென்று வந்தது. உண்மையிலேயே இது பாராட்டுக்குரிய செயல். அந்த விளையாட்டு வீரர்களை விளையாட்டு வீரர்களாகவே கருதிப் பாராட்டிப் பரிசுகளை அளிக்க வேண்டும். அதற்கு மாறாக, ஏதோ போர்க்களம் சென்று நாடு காத்த வீரர்களைப் போலவும், விண்வெளிக்குச் சென்று சாதித்தவர்களைப் போலவும் கிரிக்கெட் வாரியமும் அதில் பொறுப்பில் உள்ள மத்திய அமைச்சர்கள், அரசியல்வாதிகள், அதிகார வர்க்கத்தினர் உள்ளிட்ட பலரும் செயல்பட்டனர். அதற்குச் சில வாரங்களுக்கு முன்புதான், இந்திய ஹாக்கி அணி சென்னையில் நடந்த போட்டியில் ஆசியக் கோப்பையை வென்றது.

இந்த வெற்றியின் மூலமாகத்தான் அது சீனாவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு நுழையும் தகுதியைப் பெற்றது. அந்த வகையில், இந்தக் கோப்பை என்பது மிக முக்கியமானது.

ஆனால், இந்தப் போட்டியில் வென்ற ஹாக்கி வீரர்களுக்கு யாரும் மேடை போட்டுப் பாராட்டவில்லை. பேரணி நடத்தவில்லை. அவ்வளவு ஏன்? கோப்பையை வென்ற அந்தப் போட்டியைக் கூட தொலைக்காட்சிகளில் எல்லோரும் பார்க்கும்படியாக ஒளிபரப்பவில்லை. கிரிக்கெட் என்றால் அதைத் தனியார் தொலைக்காட்சி அதிக விலை கொடுத்து, ஒளிபரப்பு உரிமையை வேண்டுமென்றும் இல்லையென்றால் அந்தத் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்குத் தேசப்பற்று இல்லை என்றும் செய்தி பரப்பப்படுகிறது.

இந்தத் திருப்பணியை ஊடகங்கள் திறம்படவே செய்து வருகின்றன. ஆனால் ஹாக்கி, கால்பந்து, நமது மண்ணின் விளையாட்டான கபடி போன்றவையென்றால் அதை ஒளிபரப்பத் தனியார் தொலைக்காட்சிகளும் முன்வருவதில்லை. தேசப்பற்று பேசும் அரசுத் தொலைக்காட்சியும் தயாராக இருப்பதில்லை. கேட்டால், கிரிக்கெட்டுக்குத்தான் சந்தை மதிப்பு இருக்கிறது என்பார்கள்.

விளையாட்டுக் களத்தில் எடுப்பான விலைமாது கிரிக்கெட் மட்டும்தான், அதனால் அதற்கு மட்டுமே கிராக்கி என்பதுபோல இருக்கிறது இவர்களின் வாதம். ஒரு விளையாட்டு என்ற அளவில் கிரிக்கெட் எப்படி வளர்க்கப்படுகிறதோ, அதற்குச் சற்றும் குறையாமல் பிற ஆட்டங்களும் தடகளப் போட்டிகளும் ஊக்கப்படுத்தப்படவேண்டும். இந்தியாவில் கிரிக்கெட் வீரர்கள் என்றால் அவர்கள் கண்களில் வெண்ணெய்யும் மற்ற விளையாட்டு வீரர்களின் கண்களின் சுண்ணாம்பும் வைக்கப்படுவது வழக்கமாக இருக்கிறது. ஏன் இந்த நிலை?

கிரிக்கெட் என்பது இங்கிலாந்து நாட்டிலிருந்து அடிமை இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட விளையாட்டு. அதனால் தான் இன்றுவரை கிரிக்கெட் விளையாடும் நாடுகளைப் பட்டியலிட்டால் அதில் இங்கிலாந்தும் அதன் ஆதிக்கத்திற்குட்பட்டிருந்த நாடுகளுமே மிகுந்திருக்கும். உலகின் மிகப் பெரிய வல்லரசுகளான அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டுவதில்லை என்பதும் புரியும்.

அடிமை இந்தியாவை ஆட்சி செய்த வெள்ளைக்காரர்களுக்குத் தங்களுடன் கிரிக்கெட் விளையாட உயர்ரக அடிமைகள் தேவைப்பட்டனர். கறுத்த இந்தியர்களிடையே வெள்ளைத் தோலுடன் இருந்த ஆரியர்களான பார்ப்பனர்கள்தான் வெள்ளைக்காரர்களுடன் விளையாடும் தகுதிக்குரியவர்களாக இருந்தனர். அவர்களைச் சேர்த்துக் கொண்டு வெள்ளைக்காரர்கள் கிரிக்கெட் விளையாடினார்கள்.

அன்றிலிருந்து இன்று வரை கிரிக்கெட்டில் உயர் சாதியினரின் ஆதிக்கமே கொடிகட்டிப் பறக்கிறது. ஹாக்கி, கால்பந்து, கபடி போன்ற விளையாட்டுகளில் கருப்புத் தோல் வீரர்களே நிறைந்திருப்பார்கள். கிரிக்கெட் அதற்கு நேர்மாறானது.

பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் என ஊடகங்கள் இன்றளவும் உயர்சாதியினரின் பிடியிலேயே இருப்பதால், மற்ற விளையாட்டுகள் பின்தள்ளப்பட்டு கிரிக்கெட்டுக்கு மட்டுமே எல்லா வகையிலும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் இந்திய மக்கள் மீது கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட் பல வடிவங்களிலும் திணிக்கப்பட்டது. பொருளாதாரத்தில் முன்னேறும் சூத்திரர்களும் தங்களைப் புதுப் பார்ப்பனர்களாக வெளிப்படுத்திக் கொள்வது இயல்பு.

அதன் ஒரு வெளிப்பாடு தான் இந்தியா முழுவதும் இன்று கிரிக்கெட் தவிர்க்க முடியாத ஒரு விளையாட்டாக உருவாகியிருப்பதும், அது தேச ஒற்றுமையின் அடையாளமாகச் சித்திரிக்கப்படுவதுமாகும்.

எல்லாத் தரப்பு மக்களும் இன்று கிரிக்கெட் ஆட்டத்தை ரசித்துப் பார்க்கிறார்கள். தமிழகத்தின் குக்கிராமங்களிலும் கிரிக்கெட் விளையாடாத சிறுவர்கள் இல்லை. நமது கிராமத்துச் சிறுவர்களும், இளைஞர்களும் இந்திய கிரிக்கெட் அணியில் என்றாவது இடம் பிடிக்க முடியுமா? கிரிக்கெட் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் அதனைப் புரிந்து கொள்ளலாம்.

தமிழகத்திலிருந்து இந்திய கிரிக்கெட் அணிக்கு விளையாடச் சென்றவர்களின் வரிசையைப் பார்த்தால் வெங்கட்ராகவன், ஸ்ரீகாந்த், சிவராமகிருஷ்ணன், டபிள்யூ.வி.ராமன், சடகோபன் ரமேஷ், தினேஷ் கார்த்திக் போன்றவர்கள்தான் நினைவுக்கு வருவார்கள். இவர்களின் சிறப்புத் தகுதி, உயர்சாதியினர் என்பதுதான். குமரன் என்கிற பந்து வீச்சாளர் தமிழகத்திலிருந்து இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டார். அவரிடம் எல்லாத் தகுதிகளும் இருந்தும், உயர்சாதி என்கிற தகுதி இல்லாததால் இந்திய அணியில் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இப்போது அவர் கபில்தேவ் என்கிற இன்னொரு சூத்திரரால் வழிநடத்தப்படும் இந்திய கிரிக்கெட் லீக் என்கிற மாற்று அணியில் இடம் பெற்றிருக்கிறார்.

இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் அதில் எப்போதுமே பார்ப்பனர்களின் ஆதிக்கம் மேலோங்கியிருக்கும். கவாஸ்கர், வெங்க்சர்க்கார், டெண்டுல்கர், கங்குலி, அகர்கர், ரவி சாஸ்திரி போன்றவர்கள் பல சரிவுகளுக்குப் பிறகும் அணியில் இடம்பெற்றுவிடுவார்கள். ஏனெனில் இவர்களுக்கு உயர்சாதி என்ற தகுதி இருக்கிறது. மற்றவர்களுக்கு அத்தகைய வாய்ப்புகள் கிடைப்பதில்லை. சினிமாவைப் போலவே கிரிக்கெட்டிலும் வெற்றி பெற்ற சிலரை மட்டுமே முன்னிறுத்தி, வாய்ப்பிழந்து போன பெரும்பாலானவர்களின் நிலைமையை மறைத்துவிடுகின்றன இந்திய ஊடகங்கள்.

கிரிக்கெட்டை ஒரு மதமாக்கி (மார்க்ஸின் பார்வையில் சொல்வதென்றால் அபினாக்கி) ஒரு வித வெறியை இளைஞர்களுக்குள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அதனால்தான் கிரிக்கெட்டில் வெற்றி பெற்றால் தலைக்கு மேல் தூக்கி வைத்துக் கொண்டாடும் ரசிகர்கள், அதே கிரிக்கெட்டில் இந்திய அணி தோற்றுப் போனால் வீரர்களின் வீடு தேடிச் சென்று வெறித்தனமாக அடித்து நொறுக்குகிறார்கள். விளையாட்டை அதற்குரிய தன்மைகளுடன் பார்க்கத் தவறியதன் விளைவுதான் இவை.

தோல்வியில் மனந்தளராமையும் வெற்றியில் தள்ளாடாமையும் விளையாட்டு வீரர்களின் பண்புகள் எனப்படும். இந்திய கிரிக்கெட் வீரர்களைவிட, இந்திய ரசிகர்களுக்கு இன்றைக்கு இந்தப் பண்புகள் மிகவும் தேவைப்படுகின்றன. அதிலும் தமிழக கிரிக்கெட் ரசிகர்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். ஏனென்றால், மற்ற மாநிலத்துக்காரர்களின் ஆட்டத்தைக் கைதட்டி வேடிக்கை பார்க்கும் இந்தியனாகத் தான் தமிழன் இருந்து வருகிறான்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com