Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
ஜூன் 2008

உடைந்து நொறுங்கிய செயற்கை தேச பக்தி!
கோவி. லெனின்

திணறிக் கொண்டிருக்கிறார்கள் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள். அவர்கள் எதைத்தான் பார்த்து ரசிப்பார்கள்? வீரர்களின் ஆட்டத்தையா? அவர்களின் ஆட்டத்திற்குத் தக்கபடி அரைகுறை ஆடையில் அதிசயிக்க வைக்கும் கோணங்களில் காட்டப்படும் பெண்களின் நடனத்தையா?
இந்திய வீரர்களே அணி அணியாகப் பிரிந்து நின்று ஒருவர் கன்னத்தில் ஒருவர் அறைந்து கொள்ளும் ஆட்டத்தையா?

உன்னாலே நான் கெட்டேன். என்னாலே நீ கெட்டே என கிரிக்கெட் அணியை விலைக்கு வாங்கிய பெருங்கோடீஸ்வரர்களுக்கும் அந்த அணிகளுக்கு கேப்டன்களாக விளங்கும் ஆட்டக்காரர்களுக்கும் நடக்கும் திடீர் சண்டைகளையா? விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகள் விளையாடும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் பார்த்து ரசிப்பதற்கு பல அம்சங்கள் இருப்பதால் ரசிகர்கள் திக்குமுக்காடிப் போயிருக்கிறார்கள். அதனால், போட்டி நடைபெறும் அரங்கங்கள் நிரம்பி வழிகின்றன. நன்றி சொல்ல வேண்டியது இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் அணிக்கு உலகக் கோப்பையை வாங்கித் தந்த ஒரே கேப்டனுமான கபில்தேவுக்குத்தான்.

கபில்தான் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வில் நடக்கும் தில்லுமுல்லுகளைத் தோலுரிக்கும் விதத்தில் ஜீ டி.வி. அதிபருடன் சேர்ந்து ஐ.சி.எல். (இந்தியன் கிரிக்கெட் லீக்) என்ற கிரிக்கெட் அமைப்பைத் தொடங்கினார். (ஜீ டி.வி. அதிபருக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மீதான கோபத்திற்கு தொழில்ரீதியான காரணங்கள் இருப்பது வேறு விஷயம்). கபில் உருவாக்கிய ஐ.சி.எல் அமைப்பில் பல அணிகள் உருவாக்கப்பட்டன.

ஒவ்வொரு அணியிலும் வெளிநாட்டு வீரர்கள், இந்தியாவின் பிரபல வீரர்கள் ஆகியோருடன் வளர்ந்து வரும் இந்திய வீரர்களும் இடம்பெற்றனர். இந்த அணிகளுக்கிடையே போட்டிகள் நடந்தன. இதன் வாயிலாக, வளர்ந்து வரும் வீரர்கள் உலகளாவிய வீரர்களுடன் களமிறங்கி ஆடி, தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டது.

புதிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் கபிலின் முயற்சி பலராலும் பாராட்டப்பட்டதால், ஐ.சி.எல் அமைப்பை ஒடுக்கும் முயற்சிகளை மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் வாரியம் போட்டிக்காக உருவாக்கியதுதான். ஐ.பி.எல். (இந்தியன் பிரிமியர் லீக்) அமைப்பு. பணக்கொழுப்பும் படாடோபமான விளம்பரமும் இருந்தால் கிரிக்கெட்டில் ஊறித் திளைத்திருக்கும் இந்திய ரசிகர்களை எப்படி வேண்டுமானாலும் கவர்ந்து விடலாம் என்ற நிலைமையை உருவாக்கியிருக்கின்றன ஐ.பி.எல் நடத்தும் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள். இதில் பங்கு பெற்றுள்ள அணிகள் எதுவும் தேர்வு செய்யப்பட்ட அணிகள் அல்ல. மாறாக, ஏலம் எடுக்கப்பட்ட அணிகளாக (விலைக்கு வாங்கப்பட்ட அணிகளாக) உள்ளன.

இந்தி நடிகர் ஷாருக்கானால் விலைக்கு வாங்கப்பட்ட கிரிக்கெட் அடிமைகளாக கொல்கத்தா அணி வீரர்கள், சாராய மன்னன் விஜயமல்லையாவால் விலைக்கு வாங்கப்பட்ட கிரிக்கெட் அடிமைகளாக பெங்களூரு அணி வீரர்கள், நடுத்தர மக்களுக்கு நியாய விலையில் சிமெண்ட் கிடைக்காதபடி சிண்டிகேட் அமைத்துக் கொண்டு, விலை உயர்த்தி வரும் இந்தியா சிமெண்ட்ஸ் அதிபர் சீனிவாசனால் விலைக்கு வாங்கப்பட்டிருக்கிறது சென்னை அணி.

பல்லாயிரம் கோடி செலவில் பல அடுக்கு மாடிகளுடன் பங்களா கட்டும் அசுர வளர்ச்சி தொழிலதிபர் முகேஷ் அம்பானி தான் டென்டுல்கர் உள்ளிட்டவர்கள் பங்கேற்கும் மும்பை அணியை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார். நடிகை ப்ரீத்தி ஜிந்தாவின் கண்ணசைவுக்குக் கட்டுப்பட்டதாக இருக்கிறது அவரால் விலைக்கு வாங்கப்பட்டுள்ள பஞ்சாப் அணி. இப்படி 8 அணிகள் பங்கேற்கும் ஆட்டம்தான் ஐ.பி.எல் போட்டிகள்.
இந்தியா முழுவதும் வியாபித்திருக்கும் கிரிக்கெட் மோகத்திற்கு எந்தளவிலும் குறைவில்லாத மாநிலம் தமிழகம். அதனால், சிமெண்ட் அதிபர் சீனிவாசனால் விலைக்கு வாங்கப்பட்ட சென்னை அணியின் அடிமைகளுக்கு தமிழகத்தில் ஏக மவுசு. ஐ.பி.எல். அடிமைகளிலேயே அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட அடிமையான டோனி இந்த அணியில்தான் இடம் பெற்றுள்ளார்.

இதன் நட்சத்திரத் தூதுவர்களாக இளைய தளபதி விஜய்யும், அழகுப் புயல் நயன்தாராவும் நியமிக்கப்பட்டார்கள். இவர்களுக்கும் தனித்தனி விலை நிர்ணயிக்கப்பட்டது. சென்னையில் கிரிக்கெட் அடிமைகள் விளையாடும் போதெல்லாம் நடிகர் விஜய் அரங்கத்திற்கு வந்து உற்சாகப்படுத்துகிறார். ஆனால், முதல் போட்டிக்கே நயன்தாரா வரவில்லை. அதனால் அவர் நட்சத்திரத் தூதுவர் என்ற தகுதியை இழந்துவிட்டார். (இதற்குப் பின்னணியாகப் பல... பல... காரணங்கள் சொல்லப்படுகின்றன)

அடிமை அணிகளின் ஆட்டத்தை இந்திய ரசிகர்கள் எப்படி விரும்புவார்கள் என்ற தயக்கம் ஐ.பி.எல். போட்டிகளை நடத்தும் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ஆரம்பத்தில் இருந்திருக்க வேண்டும். அதனால்தான் அந்தந்த அணிகளுக்கேற்ற படி நட்சத்திரத் தூதர்கள், இசைக் கலைஞர்கள் என அரங்கத்திற்குக் கொண்டு வந்து ஆட்டத்திற்கு உத்வேகம் கொடுக்க முயன்றுள்ளது. ரசிகர்களைக் கவர்வதற்கான இத்தனை அம்சங்கள் வைத்தும் மனநிறைவடையாத ஐ.பி.எல். அடிமைகள் ஆடும் ஆட்டத்தின் போது ரசிகர்களைக் கவர்வதற்காக ஒரு புது உத்தியைக் கையாண்டு வருகிறது.

போட்டி போடும் இரண்டு அணிகளின் உடை என்ன நிறத்தில் இருக்கிறதோ அதற்கேற்ற நிறத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு ஆட்டப் பெண்களை அரங்கத்தின் ஓரத்தில் சிறு மேடையிலேற்றி ஆட்டம் போட வைத்து வருகிறது. பந்து எல்லைக் கோட்டைத் தாண்டும் போதும், விக்கெட்டுகள் விழும்போதும் இவர்கள் போடும் ஆட்டத்தில் ரசிகர்கள் மெய்சிலிர்த்துப் போகிறார்கள். அதிலும் வெளிநாட்டு ஆட்டப்பெண்கள் அவர்கள் பாணியில் குதித்து குதித்து ஆட்டம் போட, அதனைக் கீழ்ப்புறத்திலிருந்து கோணம் வைத்து ஒளிபரப்புகின்றன போட்டிக்கான தொலைக்காட்சி உரிமையைப் பெற்றிருக்கின்ற சேனல்கள். ரசிகர்களுக்குப் பரவசமோ பரவசம்தான்.

ஐ.பி.எல். ஆட்டங்களில் இத்தகைய பரவசங்களுக்கும் பரபரப்புகளுக்கும் பஞ்சமேயில்லை. களத்தில் ஆடப்படும் கிரிக்கெட் ஆட்டத்தைவிட, களத்திற்கு வெளியே ஆடப்படும் குத்தாட்டமும், திரைமறைவில் ஆடப்படும் ரகசிய ஆட்டங்களும் ஐ.பி.எல். போட்டிகளை விறுவிறுப்பாக்கியுள்ளன. பெங்களூரு அணியை அதிக விலை கொடுத்து வாங்கிய சாராய மன்னர் விஜய மல்லையாவுக்கு ஆரம்பத்திலிருந்தே ஏமாற்றம்தான். அவரது அடிமை அணிக்குத் தொடர் தோல்விகள். அவரது நிறுவனத்தில் தயாரிக்கப்படும் சரக்கை அடித்தவர்கள் போலவே பெங்களூரு அணி தள்ளாடியது.

இதனால், அணியின் கேப்டன் ராகுல் டிராவிட் மீது பாய்ந்தார் மல்லையா. அது போலவே, ஆரம்பத்தில் வாணவேடிக்கை காட்டிய கொல்கத்தா அணி பின்னர் சுணக்கமாகி விடவே அந்த அணியை விலைக்கு வாங்கிய இந்தி நடிகர் ஷாரூக்கான், கொல்கத்தா அடிமைகளுக்குத் தலைமை தாங்கும் கங்குலியை நோக்கி பொறுமினார். போட்டிகள் நிறைவடையும்போது இன்னும் பல முதலாளிகளுக்கும் அவரது அடிமைத் தலைவர்களுக்குமான அதிரடி மோதல்களை எதிர்பார்க்கலாம். குழாயடி குடுமிப்பிடிச் சண்டையாக மாறியுள்ளன ஐ.பி.எல் கிரிக்கெட் ஆட்டங்கள்.

இத்தனை காலமாக, கிரிக்கெட் விளையாட்டு ஒன்றுதான் தேசபக்தியின் அடையாளம் என்று செயற்கையான உணர்வுத் திணிப்புக்குள்ளான இளைய தலைமுறையினர் இந்த ஐ.பி.எல் போட்டிகளால் திடீரென தேசபக்தியை உதறித் தள்ளி விட்டு, மண்ணின் மைந்தர்களாக மாற்றம் பெற்றுள்ளனர். பாகிஸ் தான் கிரிக்கெட் அணி என்று சொன்னவுடனேயே பீரங்கியால் சுடக்கூடிய வெறியுடன் அதனை நோக்கும் ரசிகர்கள் இப்போது தங்கள் ஊர் அணியில் ஆடும் பாகிஸ்தான் நாட்டு வீரர்களுக்கும் சேர்ந்தே கைதட்டுகிறார்கள்.

எதிர்த்து ஆடும் மற்றொரு அணியில் இந்திய வீரர் இடம்பெற்றிருந்தாலும் அவரை ஆதரிப்பதில்லை. டென்டுல்கரும் கங்குலியும் சீக்கிரம் அவுட் ஆக வேண்டும் என பிரார்த்திக்கும் இந்திய ரசிகர்களை இப்போது பார்க்க முடிகிறது. சென்னை அணியின் கேப்டன் பதவியைப் பெற்றதன் மூலம் புதிய தமிழராகியிருக்கிறார் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மகேந்திரசிங் டோனி. சூப்பர் ஸ்டார் அந்தஸ்து பெற்றுவிட்ட ‘பச்சைத்தமிழன்' டோனிக்கு அரங்கமே எழுந்து நின்று வரவேற் பளித்தது.

ஆஸ்திரேலியாவின் கறுப்பின வீரர் சிம்மன்ஸ், குரங்கு எனச் சித்தரித்தார் என இந்திய வீரர் ஹர்பஜன்சிங் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தபோதும், ஆடுகளத்தில் அடாவடித்தனமான செயல்கள் புரிந்ததாக மற்றொரு இந்திய வீரர் ஸ்ரீசாந்த் மீது குற்றச்சாட்டு எழுந்தபோதும் அவர்களுக்காக வரிந்து கட்டி, ஆஸ்திரேலிய வீரர்களின் யோக்கியதை தெரியாதா என தேசபக்த வாதம் செய்த அதே இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்தான் தற்போது நடக்கும் ஐ.பி.எல். போட்டிகளின் போது, எதிரெதிர் அணியில் ஆடிய ஸ்ரீசாந்த்தும் ஹர்பஜன் சிங்கும் மோதிக் கொண்டதையும், ஸ்ரீசாந்த் ஏதோ அவதூறாகச் சொன்னார் என்பதால் அவரை ஹர்பஜன் பளார் பளார் என அறைந்ததையும், அதைப் பொறுக்க முடியாமல் ஸ்ரீசாந்த் கதறியதையும் பார்த்து, இந்தியத் தேசப்பற்றை ஓரங்கட்டி வைத்துவிட்டு, சொந்த மாநிலப் பற்றுடன் விவாதம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

கிரிக்கெட் மூலம் உருவாக்கப்பட்ட செயற்கை தேசபக்தியை உடைத்து நொறுக்கி, செயற்கையான மாநிலப் பற்றினை உருவாக்கியுள்ளன ஐ.பி.எல். நடத்தும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள். ரசனை போதையிலிருந்து மீள முடியாதவர்களிடம் ரசாயன மாற்றத்தை உருவாக்கியிருக்கிறது இந்திய கிரிக்கெட் வாரியம்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com