Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Anangu
Anangu Logo
செப்டம்பர் - நவம்பர் 2006


இனியான மாற்று அரசியல் என்ன?

பிரேம்

முப்பது சதவிகிதம் மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழும் மற்றொரு முப்பது சதவிகிதம் மக்கள் வறுமையிலும் வாழ நேர்ந்துவிட்ட இந்தியச் சூழலில் சமூக ஒழுங்கு, அமைதி, முன்னேற்றம் என்று பேசப்படுபவை அனைத்தும் வெற்றுச் சொற்களே. சுதந்திர இந்திய அரசியலின் வழிகாட்டு நெறிகளாக அமைந்த சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பவை மெய்ப்படுவதற்கான எந்த நடைமுறை திட்டங்களும் இன்றைய இந்திய அரசியலில் இல்லாமலேயே போய்விட்டது. இந்தியச் சூழலில் மற்ற எந்த மாநிலத்தை விடவும் இவை பற்றிய நினைவும் சுரணை உணர்வும் அற்ற மக்கள் கூட்டமாக தமிழக மக்கள் மாற்றப்பட்டுவிட்டனர். முன்பு பெரிய திரையிலும் தற்போது சின்னத்திரையிலும் அறிவை, அரசியலை, சமூக உணர்வைத் தொலைத்துவிட்டு சுயமரியாதையற்ற நோய்த்தன்மை உடைய சமூகமாக தமிழ்ச் சமூகம் மாறிவிட்டது. அரசியல் என்பது இலவசங்களை வழங்கி மக்களை பிச்சை ஏற்கும் கூட்டமாக மாற்றி பெருமை கொள்வது என்று அர்த்தமாகிவிட்டது.

தற்போது உலக அளவிலும் தேசிய அளவிலும் மனித உயிர்வாழ்க்கை குறித்தும் கௌரவமான மனிதவாழ்வு குறித்தும் மிகக் கடுமையான சிக்கல்கள் உருவாகி உள்ளன. ஆனால் இவை பற்றிய எந்த அக்கறையும் அற்று பயங்கரவாதம் பெருகிவிட்டது, வன்முறை பெருகிவிட்டது, சட்டம் ஒழுங்கு குலைந்துவிட்டது என்ற கோஷங்களை முன்வைத்து மனிதர்களை ஆயுதங்களின் முனையில் வழி நடத்துவதற்கான திட்டங்களும் சட்டங்களுமே உலக அளவில் தினம் விவாதிக்கப்படுகின்றன. இந்தத் திட்டங்கள் வறுமையிலும் ஒடுக்குதலிலும் வாழ நிர்பந்திக்கப்பட்டுவிட்ட பெரும்பான்மையான உலக மக்களை சிறிது சிறிதாக அழிப்பதைத் தனது உள்நோக்கமாகக் கொண்டிருப்பவை. பாதுகாப்பு, தன்னாட்சி சமூக அமைதி என்ற பெயரில் அடக்குமுறையையும் படுகொலைகளையுமே இன்றைய உலக அரசுகளும், உலக வல்லரசுகளும் நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில் தமிழ்ச் சமூகம் தனக்கான நிகழ்கால அரசியலையும் எதிர்கால அரசியலையும் மிகப் பொறுப்புடன் திட்டமிட்டு அமைத்துக் கொள்ளவில்லையெனில் படுபாதகமான அழிவையும் நாசத்தையும் சந்திக்க வேண்டியிருக்கும்.

இந்த நாசம், அழிவு பற்றிய எந்த அறிவும் அறவுணர்வும் அற்றுத்தான் இன்றைய தேசிய, மாநில அரசியல் கட்சிகளும், சமூக இயக்கங்களும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றிற்கு நிலையான ஆட்சி, நிரந்தர தலைமை என்பவையே உயிர்ப்போகும் பிரச்சினைகளாக உள்ளன. இது தீர்க்கப்பட்டால் உலகமே காப்பாற்றப்பட்டுவிடும் என்ற கேவலமான பொய்யைப் பரப்பி மக்களை ஏமாற்றிக் கொண்டுள்ளன இந்தக் கட்சிகள். இவற்றிற்கு தேசிய நலம், மனித உரிமைகள், சமூக நலம், மக்கள் முன்னேற்றம் என்பவை பற்றிய எந்தப் புரிதலும் திட்டங்களும் அக்கறைகளும் இல்லை என்பது கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நிரூபணமாகிக் கொண்டே இருக்கிறது. என்றாலும் அவை தினம் ஒரு உறுதி மொழியோடும், பொய்க் கணக்கோடும் மக்களைத் தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டே இருக்கின்றன. இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படை வழிகாட்டு நெறிகளும், அவற்றிற்கு அடிப்படையான மனித அறங்களும் மிக வன்முறையுடன் மறுக்கப்பட்டுவிட்டன.

இன்றைய இந்தியா வெறும் பத்து சதவீதம் மக்களின் ஆடம்பரங்களைப் பாதுகாக்கும் ஒரு சதிகார நிலமாக மாற்றப்பட்டுவிட்டது. இந்தச் சூழலில் தனிமனித ஒழுக்கம், சக மனித மரியாதை, சமூகப் பொது உணர்வு என்பவை எதுவும் செயல்படுத்தப்பட முடியாத வெற்று வார்த்தைகளாகவே மறைந்துபோகும். மனிதர்கள் மீது உண்மையில் அக்கறையும் மனித வாழ்வு மீது உண்மையில் மதிப்பும் கொண்ட, சமூகப் பொதுநலம் என்பதை மையமாகக் கொண்ட மாற்று அரசியல் உருவாகாத வரை இந்த வன்முறைகளையும் கொடூரங்களையும் தவிர்க்க முடியாது. அப்படிப்பட்ட மாற்று அரசியல் என்பது உருவாக நாம் கவனத்தில் கொள்ளவேண்டியவை எவை என்பதுதான் தற்போது நம்முன் உள்ள கேள்வி. இந்த மாற்று அரசியல் எந்தக் கோட்பாடுகளை, அறங்களைக் கொண்டு அமையும் என்பதை மிக்க பொறுப்புடன் அணுக வேண்டியுள்ளது.

நவீன சமூகம் என்பது காலனிய மேலாதிக்கம் மற்றும் மேற்கு உலக ஒடுக்குமுறையின் விளைவால் உருவானது. இந்திய நிலத்தை மட்டுமல்ல உலகின் எல்லா நிலப்பகுதிகளின் சமநிலையையும் கடந்த 500 ஆண்டுகளில் குலைத்து இன்றைய சீரழிந்த உலகச் சூழலை, நசிந்துபோன இயற்கைச் சூழலை உருவாக்கியது மேற்கு உலகின் காலனிய மையமான, இனவெறி மேலாண்மைத் தன்மையுடைய மனித வெறுப்பு தன்மையுடைய நவீன அறிவும் அரசியலுமே. சுயச்சார்பு, தன்னுரிமை என்பவற்றை உலகின் எல்லா இனங்களும், நிலம்சார் சமூகங்களும் இழந்து போனதற்கு இந்த நவீன காலனியத் திட்டங்களே காரணம். இந்தியாவின் சமூகங்களையும் இதே காலனிய நாசக்காரத் திட்டங்களே நசிப்பித்தன, ஒடுக்கின, தற்சார்பற்று குலைந்து போகவைத்தன. இந்திய விவசாயத்தை, கைத்தொழிலை, இயற்கைச் சூழலை, காடுகளை, ஆறுகளை பிரிட்டிஷ் ஆதிக்கம் எந்தப் பொறுப்பும் அற்று மாற்றிக் குலைத்தது. அதனை இந்தியச் சமூகம் ஏற்றுக் கொண்டதன் விளைவே இன்றுள்ள இயற்கை அழிந்த இந்திய நிலம். இந்த இயற்கை அழிப்புத் திட்டங்கள்தான் இந்தியாவின் வனப்பரப்பை 60% லிருந்து 16.5% ஆகக் குறைந்தது. இந்த காலனிய மேலாதிக்க சமூகக் கோட்பாடுகள்தான் இந்தியாவின் நகர்மயமாதலைத் துரிதப்படுத்தியது. நகர்மயமாதலும் நவீன மயமாதலும்தான் இன்றைய இந்தியச் சரித்திரத்தின் பெருங்கேடுகளுக்கெல்லாம் காரணமாக அமைந்துவிட்டவை.

மேற்கு உலகின் அரசியலை, அறிவை, பொருளாதாரத் திட்டங்களை, நுகர்பொருள் கலாச்சாரத்தை அப்படியே ஏற்றுக்கொண்ட இந்தியச் சமூக அரசியல்தான் இன்று எல்லாவிதமான மனிதக் கேடுகளுக்கும் காரணமாக அமைந்தவை. இந்தியச் சமூகம் விவசாயத்தையும், கைத்தொழிலையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அமைய வேண்டிய சமூகம். சிறுதொழில்கள், குடிசைத் தொழில்கள் என்பவையே இவற்றின் துணைத் தொழில்களாக இருக்க முடியும். அதனால் பெருந்தொழில்களும் தொழில் நுட்பங்களும் இந்தியச் சரித்திரத்தின் உயர் அதிகாரத்தை எடுத்துக் கொண்டபின் 60% மக்களுக்கு மேல் மனித கௌரவம் அற்ற வறுமை நிலையை அடைய வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. விவசாயம் மிகக் கேவலமாக அவமதிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு விட்டது. உழைப்பும் தொழில் திறனும் பயனற்றவையாகப் போய்விட்டன. இதனால் இந்தியச் சுற்றுச்சூழல் முழுமையாக நாசமடைந்துவிட்டது. இந்த நிலையில்தான் உலகமயமாதல், தாராளமயமாதல், சந்தைப் பொருளாதாரம் என்கின்ற பெருங்கேடு விளைவிக்கும் நாசகாரத் திட்டங்கள் மற்ற பல நாடுகளைப் போலவே இந்தியாவையும் சூழ்ந்தன.

தற்போது மனித உயிருக்கு எந்த மரியாதையும் கிடையாது. மனித நலம் என்பது தண்டனைக்குரிய பேச்சு. அமெரிக்காவையும், சில ஐரோப்பிய நாடுகளையும் மையமாகக் கொண்ட உலக அரசியல், பொருளாதார அறிவியல் திட்டங்களும் கோட்பாடுகளும் எந்த கேட்டுக்கேள்வியும் அற்று இந்திய மக்களின் மீது கொட்டிக் கவிழ்க்கப்பட்டு, உடலில் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் இனப் பிரச்சினைகளும் காஷ்மீர் பகுதியில் பிராந்திய அரசியல் பிரச்சினையும், இந்தியாவின் முப்பது சதவீத நிலப்பரப்பில் வாழும் நாற்பது சதவீத மக்கள் தொகையினரிடையே ஏற்பட்ட மாவோயிச, மார்க்சிச - லெனினிய ஆயுதம் தாங்கிய போராட்ட இயக்கங்களை இந்திய அரசாங்கம் எதிர்கொள்ளவேண்டிய மிகத் தீவிரமான பிரச்சினையும் உருவாகி பெரும் பதட்டங்களை, அச்சங்களை உருவாக்கி உள்ளன. இந்த வகையான மக்கள் எழுச்சிகள், எதிர்ப்புகள், போராட்டங்கள் என்பவற்றின் அடிப்படையில் உள்ள உண்மையான காரணங்களை, அழுத்தங்களை, துயரங்களை, பாடுகளைக் கவனத்தில் கொள்ளாமல் அவற்றை வெறும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாக அணுகி ஆயுதங்களால் தண்டனைகளால் அவற்றை அழித்துவிடலாம் என்று நினைக்கும் பொறுப்பற்ற, மனித நேயமற்ற அரசியல் மற்றும் ஆட்சித் திட்டம் தற்போது பலப்பட்டுவிட்டது.

உலக அளவிலான ஆயுத மேலாதிக்கத்திற்கு இது வழிவகுத்து மக்களின் நியாயமான உரிமைப் போராட்டங்கள், வாழ்வாதாரப் போராட்டங்களை நசுக்கும் அரசியல் பயங்கரவாதங்கள் விரிவடைந்து கொண்டுள்ளன. இதே வேளையில் உலக அளவில் மனித உயிர் வாழ்க்கையையே இல்லாமலாக்கும் அளவுக்கான சுற்றுச்சூழல், இயற்கைச் சூழல் கேடு துரிதப்படுத்தப்பட்டு பெரும் நாச விளைவுகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த நாசங்களுக்கு நவீன அறிவியல் தொழில் நுட்பங்களே முழுக்க முழுக்க காரணம். நுகர்பொருள் காலாச்சாரம், அழிவுப்போர் விஞ்ஞானம் என்பவை இவற்றால் உருவானவை. கடந்த 50 ஆண்டுகளில் உலகின் வெப்ப நிலை 0.60 செல்சியஸ் மொத்தமாக உயர்ந்திருப்பதும் உலக அளவிலான காடுகளின் பரப்பு மூன்றில் இரண்டு பங்காகக் குறைந்திருப்பதும் எண்ணிப் பார்க்க முடியாத பெரு நாசத்தை விளைவிக்கும் கேடுகள். இந்நிலையில், இனி மனிதரைக் காக்க இயற்கை சார் விவசாயமும், இயந்திரத் தொழில் நுட்பம் மறுத்த மனிதத் தொழில் திறனுமே வழிகள்.

உண்மையான அறிவியலாளர்கள் அணு சக்தி என்பது எல்லா வகையிலும் மனித சமூகத்திற்கு எதிரான, கற்பனைக்கு மீறிய பெரு நாசத்தை விளைவிக்கக் கூடியது என்பதையெல்லாம் நிரூபித்த பின்னும் இன்று உலக அளவில் 480க்கும் மேலான அணுஉலைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவிலும் அணு உலைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்திலேயே இரண்டு உலைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இவை உண்மையில் அணு ஆயுதத்திற்கான மூலப் பொருளையே தயாரிக்கின்றன. செர்னோபிலில் ஏற்பட்ட அழிவுக்குப் பின்னும் மனிதநேயம் உடைய எவரும் அணுசக்தியை, அணு உலையை ஆதரிக்க முடியும் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. ஆனால் மனசாட்சியும், அடிப்படை அறவுணர்வும் அற்ற விஞ்ஞானிகள் அணு உலைகளையும் அணு ஆயுதங்களையும் பெருமையாகக் கொண்டாடிக்கொண்டு இருப்பதுடன் இவை மனித முன்னேற்றத்திற்குத் தேவையானவை என்றும் கொடுமதியுடன் கூறிவிடுகின்றனர். மனி வாழ்வுச் சூழலையும், விலங்குகள், தாவரங்களின் உயிர்ச்சூழலையும் நாசமாக்கும் பெருந்திட்டங்களைத் தீட்டி அவை சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்கானவை என்று முழு பொய்யை அரசுகளும் அமைப்புகளும் கூறி வருவதை நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை.

மக்களின் மறுப்பும், எதிர்ப்பும், அச்சம் நிறைந்த புலம்பல்களும் அரசுகளால், நிறுவனங்களால் பயங்கரமான திமிருடன் புறக்கணிக்கப்படுகின்றன. காடுகளில் வாழ்ந்து காட்டை பாதுகாத்து வந்த மக்களுக்கு காடுகளில் எந்த உரிமையும் இல்லை. நிலத்தில் உழைத்து நிலத்தைப் பாதுகாத்த விவசாயத் தொழிலாளர்கள் இன்று கிராமங்களைவிட்டு நாடோடிகளாகப் பிழைப்புத் தேடி அலைகிறார்கள். நாசகார நகரங்கள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. ஆனால் மக்கள்தொகை பெருக்கம் மட்டுமே இந்தியாவின் வறுமைக்குக் காரணம் என்று திரும்பத் திரும்ப கூறப்படுகிறது. அதே சமயம் இந்தியாவின் தேசிய பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் நகர்ப்புற வாழ்க்கையின் ஆடம்பர வசதிகள் பெருகிக்கொண்டே இருப்பது விளம்பரப்படுத்தப்படுகிறது. உண்மையில் எல்லா மனிதரும் அடிப்படை வசதியுடன், மனித உரிமையுடன், சுயமரியாதையுடன், குறைந்தபட்ச சமூக அறத்துடன் வாழ்வதற்கான எந்தத் திட்டமும் வழிமுறையும் இந்தியாவில் தீட்டப்படவே இல்லை. தற்போது உள்ள பொருளாதார, விஞ்ஞான, அரசியல் அடிப்படை நெறிகளால் இவற்றை கற்பனை செய்தும் பார்க்கமுடியாது.

அப்படியெனில் மாற்று அரசியல் - சமூகப் பொருளாதாரத் திட்டங்கள் எப்படி இருக்க முடியும், சூழலரசியல் சார்ந்ததாக, மனித வளத்தை மதிப்பதாக, விவசாயத்தையும் கைத்தொழிலையும் இந்தியச் சமூகப் பொருளாதாரத்தின் அடிப்படைகளாகக் கொண்டதாக இருந்தே ஆகவேண்டும். எந்த காரணத்தைக் கூறியும் பெருந்தொழில்கள், உயர் தொழில்நுட்பம், உலகமயமாதல், பன்னாட்டுத் திட்டங்கள், சந்தைப் பொருளாதாரம் என்பவற்றை ஏற்காதவைகளாக இருந்தாக வேண்டும். இவற்றிற்கு மாற்றான மனித வளம், இயற்கை வளம் என்பதை அடிப்படையாகக் கொண்ட சமூகச் சூழலில்தான் பண்பாடு, அறம், மனித ஒழுக்கம் என்பவை பற்றியெல்லாம் பேசவும், திட்டமிடவும் முடியும் என்ற புரிதல் இந்த மாற்று அரசியலுக்கு இருந்தாகவேண்டும். இந்தப் புரிதல் இல்லாத எந்த அரசியலும் வன்முறை சார்ந்த நாசகாரத் தன்மை உடைய அரசியலே. அவை இந்திய தமிழ்ச் சமூகத்தை மிக விரைவில் பெருங்கேட்டை நோக்கித் தள்ளிவிடும். மக்களின் அறியாமை, அச்ச உணர்வு போன்றவற்றை அடிப்படையாக்கி இந்த வகை அரசியல் தம்மை வளர்த்துக் கொள்கிறது.

இந்தியச் சமூகங்களின் மிகத் தீவிரமான பிரச்சினைகளான சாதிய ஒடுக்குமுறை, தீண்டாமை, பெண்ணடிமைத்தனம் என்பவற்றின் கொடுமையைப் புரிந்துகொண்டு இனியான மக்கள், இயற்கை மையப் பொருளாதார அரசியலைத் திட்டமிடும் இயக்கங்களும், அமைப்புகளுமே தமிழக - இந்திய அரசியல் மாற்றங்களுக்கு வழிவகுக்க முடியும். இந்த மாற்று அரசியலின் வழிகாட்டிகளாக அறிவுத் தளத்தில் பெரியார், பொருளாதாரம் சமூக அறம் என்பவற்றிற்கு காந்தியார், சமத்துவம் - சமூக நீதி என்பதற்கு அம்பேத்கர் என்ற மூன்று சிந்தனையாளர்கள் நம்முன் இருக்கிறார்கள். இந்த இணக்கம் மிக ஆக்கபூர்வமான பல புரிதல்களுக்கு வழி வகுக்கும். மூவருமே வன்முறையை ஏற்காதவர்கள், அடிப்படை மாற்றங்கள் பற்றி அதிகம் சிந்தித்தவர்கள். இந்தியச் சமூகத்தின் மீது ஆழ்ந்த அக்கறையும், மனித அறங்களின் மீது பற்றும் கொண்டவர்கள். இந்த முப்பெரும் சிந்தனையாளர்களைத் தொடக்கமாகவும் வழிகாட்டிகளாகவும் கொண்ட புதிய மாற்று அரசியல் இங்கு உருவாகவேண்டும். தமிழ்ச் சமூகத்தின் மீது அக்கறையும், உண்மையான சமூகப் பற்றும் கொண்ட எந்த ஒரு மாற்று அரசியல் அமைப்பும் இயக்கமும் பின்வரும் கோரிக்கைகளை மையமாக வைத்துத் தமது கோட்பாடுகளையும் திட்டங்களையும் வகுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

இந்தியப் பொருளாதாரம் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டதாக அறிவித்து, அதற்கேற்ப அனைத்துத் திட்டங்களையும் மாற்றி அமைத்தல் வேண்டும். விவசாயத்திற்கு துணையான சிறுதொழிகளைப் பெருக்கவேண்டும். பெருந்தொழில்களை நீக்கி சிறுதொழில், குடிசைத்தொழில் மற்றும் கைத்தொழில்கள், மரபான கலைத்தொழில்களை பெருக்கி அனைவரும் உழைத்து வாழ்வதற்கான உரிமையை அளித்தல் வேண்டும். நகரங்களை நோக்கி மக்கள் இடம் பெயர்வதைத் தடுத்து கிராமங்களை வாழ்வதற்குத் தகுந்தவையாக்க வேண்டும். தற்போது உள்ள நகரங்களை சிறிது சிறிதாகக் குறைத்து மக்களை கிராமங்களை நோக்கி இடம் பெயர்த்தவேண்டும்.

இந்திய அளவில் காடு மீட்பு என்பதை உடனடியாகத் தொடங்கி இந்திய நிலப்பகுதியை பசுமையானதாக்க செயல்திட்டம் வகுக்க வேண்டும். இந்தியாவின் அனைத்து அணு உலைகளையும் உடனே மூடுவதுடன், புதிய அணு உலை எதுவும் தொடங்குவதும் தடை செய்யப்படவேண்டும். தமிழகத்தில் உள்ள இரண்டு அணு உலைகளையும் உடனடியாக மூடி பாதுகாக்கவேண்டும். இயற்கை அழிவுகள், போர்த்தாக்குதல்கள் இவற்றில் ஏற்படும் பேராபத்து பற்றியும் நீண்டகாலத்திற்கு இவை மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பது பற்றியும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.

பெரிய அணைகள் கட்டுவதை தவிர்த்து சிறு சிறு அளவிலான மரபான நீர் ஆதாரங்களைப் பெருக்கவேண்டும். தமிழகத்தின் சேது சமுத்திரத் திட்டம் சூழல் கேட்டையும், கடற்கரைச் சமூகத்திற்குத் தீங்கையும் விளைவிப்பதால் அது தடை செய்யப்படவேண்டும். சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற விவசாய அழிப்புத் திட்டங்கள் உடனடியாக தடை செய்யப்படவேண்டும். அவற்றிற்கு மாற்றாக சிறப்பு விவசாய, கைத்தொழில் மண்டலங்கள் உருவாக்கப்படவேண்டும். உலக மயமாதல், சந்தைப் பொருளாதாரம், தாராள மயமாதல், பன்னாட்டுத் தொழில்துறை என்பவற்றை நீக்கி இந்திய - மண் சார்ந்த மரபான மாற்றுத் தொழில்த் துறைகளைத் திட்டமிட்டு வளர்க்கவேண்டும்.

பெரும் சுற்றுச்சூழல் கேடுகளைச் செய்யும், தனிமனிதர்களின் உழைப்பாற்றலை அவமதிக்கும் பெருந்தொழில்களை, இயந்திரமயமான உற்பத்திகளை அடுத்த பத்தாண்டுகளில் இல்லாமல் ஆக்குவதற்கான மனிதவள ஆதாரத் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். மாற்று உற்பத்தி முறைகளால் மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படவேண்டும். கிராமங்களின் வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு நகர்ப்பகுதிகள் பெருக்கப்படுவது உடனே நிறுத்தப்படவேண்டும். ஆதிவாசிகள் மற்றும் மண்சார்ந்த மக்களின் உரிமைகள் மிக்கப் பொறுப்புடன் உறுதி செய்யப்படவேண்டும்.

இன, மொழி விடுதலையை உறுதி செய்யும் அரசியல் கோட்பாடுகளை உருவாக்கவேண்டும். அவற்றிற்கான போராட்டங்களைப் புரிந்து தீர்வு காணவேண்டும். இந்த குறிப்பிடப்பட்ட திட்டங்கள் என்பவை உண்மையில் வறுமை நீக்கம், மனித உரிமை பாதுகாப்பு என்பவற்றை நோக்கியவை. இவற்றைத் தொடக்கமாகக் கொண்டே இனிவரும் எல்லா அரசியல் - சமூக மாற்றங்களும் உருவாக முடியும். இன ஒதுக்குதல் அற்ற, மொழி ஒதுக்குதல் அற்ற, மத ஒதுக்குதல் அற்ற பன்மைச் சுதந்திரமுடைய உலக அரசியலுக்கும்கூட இவையே அடிப்படையானவை.

உலகளாவிய அடக்குமுறைகளையும், வல்லரசுகளின் நேரடி மற்றும் மறைமுகப் பயங்கரவாதச் செயல்களையும் எதிர்த்து ஒவ்வொரு தேசிய, இன மற்றும் பிராந்தியச் சமூகங்கள் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள மிகக் கடுமையான போராட்டமும் உழைப்பும் தியாகமும் தேவைப்படும் சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இனியும் மாற்று அரசியல் சமூகத் திட்டமிடல்கள் இன்றி வெற்று கோஷங்களையே அரசியல் என்று நம்பி அறிவும் அறமும் இன்றி வாழ்ந்து கொண்டிருப்பது என்பது அடுத்து வரும் தலைமுறைகளை மட்டுமல்லாது தற்போது உள்ள சமூகத்தையே பலியிடும் கொடுமையான செயலாக முடியும். தமிழத்தில் மக்கள் நலம் சார்ந்து சித்திப்பதாக நம்பும் எந்த அரசியல் கட்சியும் இயக்கமும் இவை குறித்து விவாதத்தை தொடங்கி விளக்கம் பெற்று புதிய செயல் திட்டங்களை உருவாக்கவேண்டும். அவ்வாறு செய்யாத எந்தக் கட்சியும் எதிர்கால நாசத்திற்குத் துணைபோகும் மனித அழிப்பு அரசியலின் கருவிகளாகத்தான் இருக்கமுடியும்.

தற்போது உள்ள மனித வெறுப்பு அரசியலின் மாயைகள், மாறுவேடங்கள், லட்சியவாத பகட்டுகள் அனைத்தையும் புரிந்துகொள்ளவும், மனிதர்கள் மீது அக்கறை கொண்டதாகக் கூறிக்கொள்ளும் நிறுவனங்களைப் பற்றிச் சரியாக அறிந்துகொள்ளவும் இதுவே சரியான தருணம். உண்மையான மனித நேயம் சார்ந்த அரசியல் மற்றும் கோட்பாடுகளை அடையாளம் காணவேண்டியது உடனடித் தேவையாக உள்ளது. இதற்குத் துணை செய்யும் துறைகளாகவே புதிய அறிவியல், தத்துவம், ஊடகம், கலை என்பவை அமையவேண்டும். மற்றவை அனைத்தும் அழிவு சக்திகளே. இது பற்றிய புரிதலற்ற அரசியலும் அழிவு அரசியலே. எதிர்காலம் பற்றிய பேரச்சம் என்பது உலகைச் சூழ்ந்துள்ள இன்றைய நிலையில் நம்பிக்கையை ஊட்டும் புதிய மாற்று அரசியலைத் தொடங்க எவரெல்லாம் முன் வருவார்கள் என்பதை இனிதான் தெரிந்து கொள்ளவேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com