Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Anangu
Anangu Logo
செப்டம்பர் - நவம்பர் 2006


பெனுவாத் க்ரூல்த் (Benoite GROULTE) ஓர் அறிமுகம்
நாகரத்தினம் கிருஷ்ணா

'பெண்ணியம் ஒருவரையும் கொன்றதில்லை,
கொல்லவும் கொல்லாது,
ஆணாதிக்கத்திற்கோ அதுதான்
அன்றாடத் தொழில்'
-பெனுவாத் க்ரூல்த்

இருபதாம் நூற்றாண்டிற்கென்று அடையாளப் படுத்தவேண்டிய பெண்ணியப் போராளிகளுள் ஒருவர். முகத்தில் எப்போதும் தயார்நிலையில் இருக்கும் புன்சிரிப்பு, அருவிபோல சலசலத்தபோதும் பேச்சில் தெளிவு, அளந்து தீர்மானமாக வெளிப்படும் சொற்கள், எதிராளியை சிநேக வட்டத்திற்குள் எளிதில் ஈர்க்கும் வசீகரம், பெண்ணியத்தின் அத்தனை கூறுகளையும், அதன் உள்ளீடுகளையும் அறைகூவலுடன் வெளிப்படுத்தும் மனோபாவம் கொண்ட பெண்மணி. ஏனைய பிரெஞ்சு பெண்ணியவாதிகளைப்போலவே இடதுசாரி எண்ணங்கொண்டவர். நாவல்கள் மற்றும் கட்டுரைகள் வடிவத்தில் உள்ள இவரது படைப்புகள் அனைத்துமே பெண்ணியம் சார்ந்தவை.

1920ம் ஆண்டு பாரீஸில் பிறந்தார். தந்தை ஒரு புகழ்பெற்ற அலங்காரக் கலைஞர், தாயார் நிக்கோல் புகழ்பெற்ற ஆடை அலங்கார கலைஞர், போல் புவாரெவினுடைய சகோதரி, ஒரு கம்பீரமானப் பெண்மணி. புகழ்பெற்ற ஓவியர்கள், படைப்பாளிகள் வந்துபோகிற இல்லம். உ.ம். Picasso, Picabia, Jouhandeau, Paul Morand மற்றும் பலர். தாயாரின் வழிகாட்டுதலில், இளமை முதற்கொண்டே இலக்கியங்களில் ஆர்வம், பிரெஞ்சு இலக்கியத்தில் முதுகலை படிப்பு, கூடுதலாக இலத்தீன் மற்றும் கிரேக்க மொழிகளில் ஞானம், ஆங்கிலத்திலும் தேர்ச்சி. ஆரம்பக்காலங்களில் பிரெஞ்சு இலக்கிய பேராசிரியராகப் பணியாற்றியவர், பின்னர் இதழியலில் ஆர்வம் காட்டினார். பெண்கள் தொடர்பான Elle, Marie-Claire, Parent போன்ற சஞ்சிகைகளிலும் பணிபுரிந்திருக்கிறார்.

1978ம் ஆண்டில் குளோது செர்வன் என்பவரோடு சேர்ந்து பெண்களுக்கான F.Magazine என்கிற இதழ் ஒன்றைத் தொடங்கி அதன் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். 1982ம் ஆண்டு முதல் Femina இதழின் ஜுரிகளுள் ஒருவராக இருந்து வருகிறார். 1984 - 1986ம் ஆண்டுகளில், முக்கிய பணிகளிலும், அதிகார மட்டத்திலும் பெண்பால் பெயர்களை உண்டாக்கவென்று, இலக்கண வல்லுனர்கள், மொழியாளர்கள், எழுத்தாளர்களைக் கொண்டு இயங்கிய அரசு ஆலோசனை சபையினைத் தலைமையேற்று நடத்தியவர். மூன்று முறை திருமணமானவர். முதல் கணவர் காச நோயில் 1945ம் ஆண்டு இறந்த பின்னர், இரண்டாவதாக பத்திரிகை செய்தியாளரை மணந்து இரு பெண்களுக்குத் தாயானார். அம் மணவாழ்க்கையும் கசப்பில் முடிய மூன்றாவதாக ஓர் பிரபல எழுத்தாளரை (Paul Guimard) மணக்க நேர்ந்தது. திருமண அனுபவங்கள் ‘பெண்ணியம்' குறித்து பெரிதும் பேசவும் எழுதவும் இவருக்கு உதவின.

தனது சகோதரி ‘ஃபுளோரா'வுடன் (Flora) இணைந்து முதல் நாவலான ‘இருவர் வாசித்த செய்தித்தாள்' (JOURNALA QUATRE MAINS) 1958ம் ஆண்டில் வெளிவந்தது, தொடர்ந்து சகோதரிகள் இருவரும் கூட்டாக இரண்டு நாவல்களை எழுதினார்கள். பிரெஞ்சு பெண்களின் அவலநிலையைப் பேசுகின்ற ‘வாழ்க்கையின் சில உண்மைகள்' (LAPART DES CHOSES-1972) ‘அவளது விதிப்படி ஆகட்டும்' (AINSI SOIT ELLE-1972) என்ற இருகட்டுரைத் தொகுப்பும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. அதைத் தொடர்ந்து பல நாவல்கள் குறிப்பாக ‘முக்கால்வாசி நேரம்' (LES TROIS QUARTS DU TEMPS), ‘தமனியும் சிரையும்' (LES VAISSEAUX DU COEUR) அவற்றுள் முக்கியமானவை. பிறகு பெண்ணியவாதிகளான ‘பொலின் ரொலான் (Pauline Rolland), ஒலிம்ப் தெ கூழ் (Olympe de Gouge) ஆகியோரது வாழ்க்கை வரலாறுகள், ‘ஒரு விடுதலையின் வரலாறு' (Histoired’une evasion) என்கிற பேரிலே 1997ல் வெளிவந்த அவரது சொந்த வாழ்க்கை மீதான பார்வையும் அவசியம் வாசிக்கப்பட வேண்டியவை.

பெனுவாத் வாழ்க்கையும் எழுத்தும் இன்றைய நாள் வரை பெண்ணினத்தினை முதன்மைப்படுத்த முனைவதல்ல. ஆணுக்கு நிகரென்று அழுந்த உரைப்பது. எந்த ஜீவனையும்போலவே ‘அவள்' முதலில் ‘தனக்கானவள்' என்பதை வலியுறுத்துவது. அவளுடைய வாழ்வியல் நித்தியங்களை நிதரிசனப்படுத்துவது: கட்டுண்ட பெண்கள், சீரழிந்த பெண்கள், முதிர்ச்சியின் பலம், பெண்ணினம் மற்றும் அவள் சார்ந்த கருத்தியல்கள் அதில் பதிவு செய்யப்பட்டன. தற்போது அதற்கான வயதில் - முதுமையை விவாதத்திற்கு உட்படுத்துகிறார், அதன் மேன்மைக்கு வாதிடுகிறார். பெண்கள், பெண்ணியம் என உழைத்துவருகிற இவரது சமீபத்திய படைப்பு, (2006) ‘நட்சத்திர ஸ்பரிசம்' விற்பனையில் சாதனை செய்துவருகிறது. ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 3000 பிரதிகள்.

மரணம் கண்ணியத்துடன் நிகழ வேண்டுமென்பது இந்நாவலில் வெளிப்படுத்தப்படும் அவரது ஆதங்கம். அறுபத்தைந்து வயதில் முதியவர்களாகப் பிறந்து எண்பத்தைந்து வயது வரை முதுமையுடன் வளருகிறோம். அதுமுதல் நட்சத்திர ஸ்பரிஸத்திற்காக நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறோம். அத்தேடலுக்கான நாளை தேர்வு செய்வது நாமாகத்தான் இருக்கவேண்டுமென்பது இவரது பிடிவாதம்.

சிமோன் தெ பொவார் (Simone de Beauvoir) எழுத்தில் இருக்கக்கூடிய மெல்லிய நகையுணர்வு இவரது எழுத்திலும் ஊடாடுகிறது. சிமோன் தெ பொவார்க்கு ‘பெண்ணென்ற ஓர் இரண்டாமினம்' (Deuxieme sex) எப்படியோ, பிரான்சுவாஸ் பத்துய்ரியேவுக்கு (PARTURIER, FRANCOISE) ஆண்களுக்கு ஒரு வெளிப்படையான கடிதம் (Letter ouverte aux hommas) எப்படியோ, அப்படி பெனுவாத் க்ரூல்ட்க்கு ‘அவளது விதிப்படி ஆகட்டும்' (AINSI SOIT ELLE). இன்றுவரை பத்து இலட்சம் பிரதிகள் விற்பனைச் செய்யப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இவரது எழுத்துக்களில் பெண்ணியத்தின் தாக்கங்கள்: காதலர்கள், கணவன் மார்கள், அரசியல் ஆகியவற்றை மையமாக வைத்துச் சொல்லபட்டிருக்கின்றன. சமீபத்தில் இவரைக் குறித்த ஓர் ஆவணப்படத்தினை மற்றோர் பெண்ணிய வாதியும் இயக்குனருமான ஆன் லாஃபான் (Anne Lenfant) ‘அவளுக்கென்று ஓர் அறை' (Une chamber a elle) என்ற பெயரில் தயாரித்திருக்கிறார்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com