Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Maatru Maruthuvam
Maatru Maruthuvam wrapperMaatru Maruthuvam
ஏப்ரல் 2009

இலங்கை திறந்த வெளிப் பல்கலைக் கழகம் – சில உண்மைகள்
அ.உமர் பாரூக் M.Acu., கம்பம். செல்: 92624 12541

மாற்று மருத்துவ உலகில் மிகப் பிரபலமான ஒரு பெயர் இலங்கை திறந்தவெளிப் பல்கலைக்கழகம் (The Open International University for Complementary Medicines - OIUCM) 1980-களில் அக்குபங்சர் மருத்துவத்தைக் கற்றுத்தரும் நிறுவனமாக அறியப்பட்ட, OIUCM, பின்பு மாற்று மருத்துவத்தின் பிற பிரிவுகளிலும் தன் சான்றிதழ்களை வழங்கத் துவங்கியது.

சாதாரண டிப்ளமோ முதல் டாக்டரேட் வரை பட்டங்கள் வழங்குகிற, உலகத்தரத்தோடு கூடிய தோற்றத்தை அளிக்கும் ‘OIUCM’, பற்றி தெளிவ டைய வேண்டியது மாற்று மருத்துவர்களுக்கு அவசியமானதாகும்.

வெளிநாட்டுக் கல்விக்கான இந்தியச் சட்டங்கள் :

இந்தியா அல்லாத பிற நாடுகளின் பல்கலைக் கழகங்கள், கல்வி நிறுவனங்கள் இந்தியாவிற்குள் கல்வி வழங்க, சான்றிதழ் அளிக்க பல கட்டுப்பாடுகள் உள்ளன. இந்திய வெளியுறவுத் துறையில் விண்ணப் பித்து, இந்தியாவில் கல்விப் பயிற்சியளிக்க முதலில் தடையில்லாச்சான்று பெற வேண்டும். அதன் பிறகு கல்வியளிக்க விரும்பும் பல்கலையின் தாய் நாட்டு அங்கீகாரம், ஆணைகளின் நகல்கள் சரிபார்க்கப்பட்டு, அவ்விண்ணப்பம் பரிசீலிக்கப் படும். எது குறித்த கல்வியை நடத்த விரும்புகிறார்களோ அப்பிரிவின் துறை அனுமதி பெறப்படும். மருத்துவக் கல்வி என்றால் மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறையின் அனுமதியும், வெளியுறவுத் துறையின் அங்கீகாரமும் அவசியமாகும்.

ஒரு வெளிநாட்டு நிறுவனத்தின் சட்டப்படி செல்லத்தக்க பயிற்சி இவ்விதிகளின்படியே நடைபெற்று வருகிறது.

இலங்கை திறந்த வெளி பல்கலைக்கழகம் OIUCM இந்த விதிமுறைகளின் படி இந்தியாவிற்குள் நுழையவில்லை. தனிப்பட்ட சில நபர்களின் மூலம் விளம்பரம் செய்து பயிற்சியும் சான்றிதழும் வழங்குகிறது.

ஒரு வெளிநாட்டு நிறுவனத்தின் சான்றிதழ்களை நாம் வைத்திருக்கும்போது சில தெளிவுகள் தேவையிருக்கிறது.

1. சான்றிதழ் வழங்கப்பட்ட இடம் சான்றிதழில் குறிப்பிடப்பட்டிருக்கும். அது வெளிநாடா? உள்நாடா? என்பது பிரதானமான கேள்வியாகும்.

2. வெளிநாடு என்றால் (எ.கா. கொழும்பு) அங்கு நாம் சென்று வந்த ஆவணங்கள் (பாஸ்போர்ட், விசா, மாணவர் அனுமதி) இருக்க வேண்டும். ஆவணங்கள் (தடையில்லாச் சான்று, அங்கீகார எண், அனுமதி எண்) இருக்க வேண்டும்..

இவற்றில் எதுவுமே இல்லாமல் ஒரு சான்றிதழை நாம் வைத்திருந்தால் பேராபத்தாகவே முடியும்.

முதுநிலைக் கல்வியா? இளநிலைக் கல்வியா?

பல்கலைக் கழகங்களை ஒழுங்குபடுத்து வதற்காக ஒவ்வொரு நாட்டிலும் பல்கலைக் கழக மானியக் குழுக்கள் (University Grant Commission) அந்நாட்டு அரசாங்கங்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கும். இந்தியாவிலும், இலங்கையிலும் ஒரே மாதிரியான சட்டங்களுடன் UGC அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. உலக அளவில் UGC அமைப்புக்களின் சட்ட திட்டங்கள் ஒரு பொதுத் தன்மையோடு இருக்கும். உதாரணமாக...

1. மேல்நிலைப் பள்ளிக் கல்வி (+2) முடித்த பிறகு இளங்கலைப்பட்டம் படிக்க அனுமதிப்பது.

2. இளநிலைக் கல்வி முடித்தவுடன், முதுநிலை பட்டம் படிக்க அனுமதிப்பது.

3. முதுகலைக்குப் பின்பு டாக்டரேட் பெற அனுமதிப்பது

... போன்றவை பொதுவிதிகள். எல்லா நாடுகளும் இவற்றையே பின்பற்றுகின்றன. (சீனா போன்ற சில நாடுகளில் மட்டும் பள்ளிக் கல்வியோடு இளங்கலைப் பட்டமும் தொடர்ச்சியாக (5+6+3) உள்ளது.)

சரி; இலங்கை சான்றிதழுக்கு வருவோம்.

OIUCM - வழங்குவது முதுகலைப்பட்டம் மற்றும் டாக்டரேட் பட்டங்களாகும். இலங்கை, இந்திய கல்வித் தகுதி விதிகளின்படி முதுகலைப்பட்டங்கள் பெற பள்ளிக்கல்வியும், இளங்கலைப்பட்டமும் (12+3) அவசியமாகும்.

பள்ளிக்கல்வி கூட முடிக்காத பலர் M.D(Acu) / Ph.D (Acu) சான்றிதழ்களைப் பெற்று வைத்திருக் கிறார்கள். இது மாற்றுமருத்துவர்களுக்கு மிகப் பெரிய பின்னடைவை சட்ட ரீதியாக ஏற்படுத்தும்.

இலங்கைப் பல்கலையின் (OIUCM) சிக்கல்கள்:

முறையான ஒரு வெளிநாட்டுப் பல்கலைக் கழகம் நடந்து கொள்ள வேண்டிய வழிமுறைகளைப் பார்த்தோம். இவற்றில் எதையுமே OIUCM இலங்கை OIUCM வழங்கிய பட்டங்களில் பதிவாளரோடு சேர்த்து நான்கைந்து பேர் கூட்டாக கையெழுத்துப் போட்டிருப்பார்கள். சரி; கையெழுத்து கூடுதலாகத் தானே இருக்கிறது. இருந்துவிட்டுப் போகட்டும்.

ஒரே வருடத்தில் வழங்கப்படும் நூற்றுக்கணக்கான பட்டங்களில் உள்ள பதிவாளர் கையெழுத்து ஒரே மாதிரியாக இல்லை. பணி மாறுதல்களில் வேறு வேறு பதிவாளர்கள் வந்திருப்பார்கள் என்றாலும் ஒரு வருடத்தில் 100 பேருக்கு மேலே மாறுவார்களா? அப்படி மாறுவார்கள் என்றால் அது பல்கலைக் கழகமே இல்லை.

தோராயமாக 30,000 பட்டங்கள் OIUCM ஆல் தமிழகத்தில் விற்கப்பட்டிருக்கின்றன. யார், யாருக்கு வழங்கப்பட்டது? எந்த வருடம் - எந்த தேதியில் வழங்கப்பட்டது? என்ன பட்டம் கொடுக்கப்பட்டது? பெற்றவர் தகுதி - முகவலி என்ன? ... போன்ற குறிப்புகள் சாதாரண டுடோரியல் காலேஜ்களில் கூட பராமரிக்கப்படுகிறது. ஆனால், OIUCM -இல் படித்த மாணவர்கள் பற்றிய விபரங்களில் ஒன்று கூட OIUCM இல் இல்லை.

OIUCM - பட்டங்களை சுமந்து திரிகிற மருத்துவர்களை ‘போலி பட்டம்’ பெற்றவர்கள் என்று கூறுவது நியாயம் தானே?

OIUCM - இருக்கிறதா? இல்லையா?

மேற்கண்ட பல கேள்விகளுக்கும் நாங்கள் விடைகளைக் கண்டு கொண்டபோது, ஒரு சந்தேகம் பலமாக எழுந்தது. இலங்கையில் இப்படி ஒரு பல்கலைக்கழகம் இருக்கிறதா? இல்லையா? என்பது தான் அது.

மரபுமுறை அக்குபங்சர் கவுன்சில் சார்பாக இருவர் இலங்கை செல்வதாக முடிவெடுத்தோம். நானும் மதுரை வழக்கறிஞர், பாரதி பாண்டியனும் சென்றுவர கவுன்சில் பரிந்துரைத்தது.

துவங்கியது..... தேடும் பயணம்.

“எண் 28, இன்டர்நேசனல் புத்திஸ்ட் சென்டர் ரோடு, கொழும்பு - 6” என்ற முகவலியோடு கொழும்பு நகரம் முழுக்க முழுக்க தேடித் திரிந்தோம். மூன்று நாட்களுக்குப் பிறகு கொழும்பு-6 என்பது புறநகர்ப் பகுதியில் உள்ள ‘வெள்ளவத்த’ என்ற பகுதி என்பது ஒருவழியாகத் தெரிந்தது. கொழும்பிலிருந்து 15-20 கி.மீ.க்கு அப்பால் இருந்த அந்த சிறுபகுதியில் ‘யுனிவர்சிட்டி’யை கண்டுபிடிக்க நிறைய சிரமப்படவேண்டியிருந்தது. இன்டர்நேசனல் புத்திஸ்ட் ரோடு என்ற பெயர் கொண்ட அந்த பத்தடிச் சந்தை பார்த்தபோது விஷயம் விளங்கிவிட்டது.

‘எண்: 28’ இல் நாங்கள் போய் நின்ற போது அது ஒரு வீடு என்பது தெரிந்தது. வீடா? யுனிவர்சிட்டியா? என்று அந்த காம்பவுண்டைச் சுற்றி வந்தபோது “The Open International University for Complementary Medicines” என்று வீட்டின் உள்பக்கச் சுவற்றில் (போர்டு அல்ல) மையில் எழுதப்பட்டிருந்தது. கார் செட்டில் அக்குபங்சர் லோகோ வரையப்பட்டிருந்தது. கடைசியாக, வீட்டில் விசாரித்ததில் அது ஆண்டன் ஜெயசூர்யாவின் வீடு என்பதும், அவ்வீட்டின் முன்னறைதான் ‘யுனிவர்சிட்டி’ OIUCM என்பதும் தவிர வேறு எந்த தகவலும் தர மறுத்துவிட்டார்கள்.

டாக்டர். ஆண்டன் ஜெயசூர்யாவின் (‘நோபல் பரிசு வாங்கினார்’ என்று பரப்பப்பட்ட செய்திக்குள் நாம் போனால் அது ஒரு தனிக்கதை.) மகளும், தற்போதைய ‘யுனிவர்சிட்டி’யின் பொறுப்பாளருமான திருமதி. கீதான்ஜன் அவர்களின் கிளினிக் சென்றால் மேலும் தகவல்கள் பெறலாம் என்றறிந்தோம். பத்து கட்டிடங்கள் கடந்து, அதே சந்தில் கிளினிக்கிற்குச் சென்றோம். அதுதான் ‘யுனிவர்சிட்டி’யின் புதிய கட்டிடம் என்று கூறினார்கள். 30,000 மருத்துவர்களுக்கு பட்டங்கள் கொடுத்த அந்த ‘யுனிவர்சிட்டி’யில் நாங்கள் நுழைந்தபோது அங்கிருந்து மாணவர்கள் - இரண்டுபேர். ஒரு நோயாளிக்கு அக்குபங்சர் சிகிச்சை (16 நீடில்கள் +2 ஸ்டிமுலேட்டர்கள்) கொடுக்கப்பட்டது. ‘அப்பாடா... அக்குபங்சர் இருக்கிறது’ என்று பார்க்கும்போதே -அங்கிருந்த ஆங்கில மருந்துகள் அடங்கிய செல்ஃப் கண்ணில் பட்டது. நாங்கள் வந்த தகவலை டாக்டருக்கு போனில் சொன்ன பின்பு - நான்கு மணி நேரம் காத்திருந்தும் டாக்டர். கீதான்ஜன் வரவேயில்லை... வழக்கமாக கிளினிக்கில் டாக்டர் இருக்க வேண்டிய அந்த நேரம் முடியும் வரைக்கும்.

டாக்டர். கீதான்ஜன் - ஒரு அலோபதி மருத்துவர். அரசு மருத்துவமனையில் பணியாற்றுகிறார். அக்குபங்சரும்- யுனிவர்சிட்டியும் அவருடைய பொழுதுபோக்கு அம்சங்கள்.

‘யுனிவர்சிட்டி’ என்ற பெயரை எப்படி அரசு அனுமதித்தது? இது கல்வி கற்பிக்க அங்கீகாரம் பெற்றுள்ளதா? போன்ற பல கேள்விகளோடு கொழும்பு அரசு சார்ந்தவர்கள், அலுவலர்களிடம் தகவல்கள் பெற்றோம்.

அந்தத் தகவல்கள் :

இலங்கையில் எலிமெண்டரி ஸ்கூலுக்கு காலேஜ் என்றும், டுடோரியல் நிறுவனத்தை ‘யுனிவர்சிட்டி’ என்றும் வார்த்தை பயன்பாடுகள் கல்வி தொடர்பான மிகச் சாதாரணமான புழக்கத்தில் அங்கு உள்ளது.

OIUCM- என்பது ஒரு தனியார் அறக்கட்டளை. அங்கு தனிப்பட்ட பயிற்சிகளை வழங்கி வருகிறார்கள். அது ஒரு பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரம் பெற்ற பல்கலைக் கழகமோ, அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரியோ, கவுன்சில் அனுமதி பெற்ற கல்வி நிறுவனமோ அல்ல.

டாக்டர். ஆண்டன் ஜெயசூர்யா - தான் ஒரு அரசு மருத்துவர் என்ற அடிப்படையில், தான் பணிபுரிந்த மருத்துவமனையில் ஒரு சிறு பிரிவில் அக்குபங்சரை ஆங்கில மருத்துவத்துடன் செய்து வந்தார்.

மேற்கண்ட விபரங்கள் OIUCM- ஐ புரிந்து கொள்ள போதுமானது. கடைசியாக இரண்டு விஷயங்கள்

OIUCM- சார்பில் இப்போது ஒரு அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதில் OIUCM- வழங்கிய சான்றிதழ்கள் வெறும் பயிற்சி சான்றிதழ்களே என்றும், அதை வைத்து ‘டாக்டர்’ என்று போடக்கூடாது என்றும், சான்றிதழ் பெற்றவர்கள் மருத்துவபணியில் ஈடுபடலாமா, கூடாதா என்பது அந்தந்த நாட்டு அரசாங்கங் களின் முடிவைப் பொறுத்ததே என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

OIUCM இன் உண்மைகள் தெரிய ஆரம்பித்த பிறகு - இத்தாலியப் பல்கலைக் கழகம், செபோர்கா பல்கலைக் கழகம், நியூ ஏஜ் உலகப் பல்கலைக்கழகம்... போன்ற பெயர்களில் பட்டங்கள் உலா வர ஆரம்பித்திருக்கின்றன.

... இந்திய அரசின் அக்குபங்சர் ஆணை (2003) இன் படி இந்தியாவில் அக்குபங்சர் பட்டங்கள், டிப்ளமோக்கள் நடத்தக்கூடாது. சான்றிதழ் பயிற்சிகள் அதுவும் பகுதி நேரப் பயிற்சிகள் மட்டுமே நடத்தமுடியும். அக்குபங்சர் Practice செய்பவர்கள் (முறையான கல்வி பெற்றவர்கள்) ‘அக்குபங்சரிஸ்ட்’ என்று தான் போட்டுக் கொள்ள வேண்டும். ‘டாக்டர்’ என்ற சொல்லை கண்டிப்பாகப் பயன்படுத்தக்கூடாது.

இது போன்ற சான்றிதழ்களை விரும்பும் மாற்று மருத்துவர்களால் - மாற்று மருத்துவத் திற்குத்தான் தலைகுனிவு என்பதை நாம் உணர வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com