Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Maatru Maruthuvam
Maatru Maruthuvam wrapperMaatru Maruthuvam
ஏப்ரல் 2009

தலையங்கம்
15,000 பாரம்பரிய சித்த மருத்துவர்களின் அரசு பதிவு நீக்கம்

தமிழக எல்லைக்குட்பட்டு பாரம்பரியமாகப் பேணிக்காக்கப்பட்டு வரும் சித்த மருத்துவத்தையும், சித்த மருத்துவத்தைப் பின்பற்றி வாழ்க்கை அமைத்துக் கொண்டவர்களையும் பாதுகாக்கும் பொருட்டு 1997ல் தமிழக சட்டமன்றத்தில் தமிழ்நாடு சித்தமருத்துவ முறை (வளர்ச்சி மற்றும் மருத்துவர் பதிவு) சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தின்படி 1998ல் பாரம்பரிய சித்த மருத்துவர்கள் பல்லாயிரக்கணக்கானோர் RSMP என்ற பதிவு பெற்றனர்.

11 ஆண்டு கடந்த பின் தற்போது தமிழக சட்டம் மத்திய சட்டத்திற்கு முரணாக உள்ளது எனக் காரணம் காட்டி சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதி சந்துரு அவர்கள் 28-01-2009 அன்று தமிழக சித்த மருத்துவச் சட்டத்தின் 11 பிரிவுகளை நீக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இதன்படி சுமார் 15,000 பாரம்பரிய மருத்துவர்கள் தகுதியிழப்பதோடு, தொழில்செய்யும் உரிமையும் இழப்பார்கள். இதுவரை அரசுபதிவுடன் மக்களுக்கு சித்த மருத்துவ சேவை செய்தவர்கள் இனி ‘போரி மருத்துவர்கள்’ எனும் வினோதமான பழிச்சொல்லுக்கு ஆளாகி பல தொல்லைகள் அனுபவிக்கும் நிலை உருவாகக் கூடும்.

உயர்நீதிமன்ற உத்தரவைப் பொறுத்தளவில் பாரம்பரிய மருத்துவர்கள் சார்பில் அரசோ, சங்கங்களோ இவ்வழக்கில் மிகுந்த அக்கறையுடன் ஈடுபடுத்திக் கொண்டிருந்தால் தீர்ப்பின் திசை மாறியிருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. பிரதிவாதியான மத்திய அரசு வழக்குத் தொடுத்த வாதிக்கு ஆதரவான நிலை மேற்கொண்டது வேதனைக்குரியது. 11 ஆண்டுகள் நடைபெற்று வரும் வழக்கில் பரம்பரை சித்த மருத்துவ சங்கங்கள் தங்களையும், பிரதிவாதியாக இணைத்துக் கொள்ளாதது அதனினும் வேதனைக்குரியது.

சித்த மருத்துவம் என்பது ஆங்கில மருத்துவம் போல ஓர் கல்விப்புல (Faculty) மருத்துவம் அல்ல. பரம்பரையாகவும், அனுபவத் தளத்திலும், குடும்ப அனுபவ அறிவுச் சொத்தாகவும் பாதுகாக்கப்பட்டு வரும் அறிவுமுறை. அதனால் கல்லூரியில் சென்று பயிலவில்லை என்ற காரணத்தைக் கொண்டு அவர்கள் மருத்துவர்கள் இல்லை என்று தீர்ப்பளிக்க இயலாது. மேலும் ஒரு மாற்றுமருத்துவ முறையினை பதிவு இல்லாத நிலையிலேயே 5 முதல் 10 ஆண்டுகள் ஒருவர் தொழிலாகக் கொண்டிருந்தால் அவருக்கு அனுபவ மருத்துவப்பதிவு அளிக்க பல சட்டங்கள் வழிவகை செய்துள்ளன. இந்நிலையில் அரசு கவுன்சிரின் பதிவுரிமையோடு, அங்கீகாரத்தோடு 11 ஆண்டுகளாக தொழில் செய்து வருபவர்கள் பாதுகாக்கப்படவேண்டியது மிகவும் அவசியம்.

பாரம்பரிய சித்த மருத்துவ அங்கீகாரத்திற்கான போராட்டம் ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கியது. இன்னும் முடியவே இல்லை என்பதையே இப்போதைய, உத்தரவு காட்டுகிறது. சித்த மருத்துவமும் அதன் நடைமுறை அனுபவ முடிவுகளும் ‘அறிவியல் இல்லை’ எனவும் சித்த மருத்துவர்கள் எல்லோரும் ‘போரிகள்’ என்றும் ஆங்கிலேயர் ஆட்சி முத்திரை குத்தியது. அதனால் 1880ல் மருத்துவர்களைப் பதிவுசெய்யும் விதிமுறையை உருவாக்கத் திட்டமிட்டது. இந்திய மருத்துவங்களை இதில் புறக்கணித்திருந்ததால் கடும் எதிர்ப்பு எழுந்து திட்டம் கைவிடப்பட்டது. 1930களில் இந்திய மருத்துவங்கள் அங்கீகரிக்கப்படும் என கொள்கை அடிப்படையில் ஒப்புக்கொள்ளப்பட்டது. சித்த மருத்துவத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு கையாளும் போக்கை காங்கிரஸ் ஆட்சியும் கடைப்பிடித்தது.

‘நமது மருத்துவ நலப் பிரச்சனைகள்’ நூரில் பேரா.அ.மார்க்ஸ் கூறுவதைப் பாருங்கள்; “1947க்குப் பின் உருவான நேரு அமைச்சரவையில் மருத்துவ நல அமைச்சராக இருந்த ராஜ்குமாரி அம்ரித் கவுர் காங்கிரஸ் நியமித்த தேசிய திட்டக்குழுவின் பரிந்துரைகளைப் புறக்கணித்து ஆங்கில மருத்துவ முறைக்கு முக்கியத்துவம் அளித்த போர் குழு அறிக்கை அம்சங்களை மட்டுமே நிறைவேற்றத் தொடங்கினார். பின் நெருக்கடியான சந்தர்ப்பங்களில் இந்திய மருத்துவத்தின் மேன்மைகள் பேசப்பட்டன. 1960களில் காங்கிரஸ் கட்சிக்கு நாடு முழுமையும் நெருக்கடி ஏற்பட்ட போது உள்ளூர் மருத்துவம் பற்றி அதிகம் பேசப்பட்டது. 1970களில் ‘வறுமையே வெளியேறு’ காலகட்டத்தில் கிராமப்புறங்களுக்கு மருத்துவ வசதியை நீட்டுவது பற்றிக் கூச்சரிடப்பட்டது. 1977ல் ஜனதா ஆட்சி வந்தபோது சமூக நலப் பணியாளர்கள் பற்றி அதிகம் பேசப்பட்டது. ஆனால் நடைமுறை என வந்தபோது ஒவ்வொரு முறையும் உள்ளூர் மருத்துவம் புறக்கணிக்கப்பட்டது. இதன் விளைவாக கிராமப்புறம் உட்பட இன்று மேற்கத்திய மருத்துவம் பெரிய அளவில் எல்லா இடங்களிலும் ஊடுருவி உள்ளது.”

இக்காரணங்களால் பெருவாரியான மக்கள் ஆங்கில மருத்துவத்தின் நிரந்தர வாடிக்கையாளர்களாய், அடிமைகளாய் மாறிவிட்டனர். விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள் என்ற நமது வழிமுறை தடம்புரண்டு வாழ்நாளெல்லாம் ஆங்கில மருந்து உண்ணும் நிரந்தர நோயாளிகளாக மக்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

நமது வாழ்க்கைச் சூழல், பண்பாட்டுச் சூழலுக்கு ஏற்ற சித்த மருத்துவத்தை நலவாழ்வுக்கான ஆதாரமாக மீண்டும் மாற்றியமைக்க வேண்டும். ஆங்கில மருத்துவக் கொள்ளையிடலுக்கு இடையூறாக மாற்றுமருத்துவங்கள் இருப்பதால் பல தாக்குதல்களும் சோதனைகளும் தடைகளும் ஏற்படுவது தவிர்க்க முடியாதது.

இப்போதைய உயர்நீதி மன்ற உத்தரவு கண்டு கலங்கிவிடாமல் பாரம்பரிய சித்த மருத்துவர்கள் அணி திரளவேண்டும். ஒன்றுபட்டு வரிமையாக நியாயத்தை முன்வைத்து அரசு மேல்முறையீடு செய்யும் சூழலை உருவாக்க வேண்டும். அரசு பதிவுரிமையை பாதுகாக்கவும், மரபுரிமையை மீட்டெடுக்கவும் தமிழகத்திலுள்ள அனைத்து பாரம்பரிய சித்த மருத்துவ சங்கங்களும் ‘ஒற்றை மனிதனாய்’ உருப்பெற வேண்டும். நியாயமான இம்முயற்சிகளில் இதர மாற்று மருத்துவ சங்கங்களும் தமது தார்மீக ஆதரவு நல்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஒற்றுமையே வெற்றி தரும்!
மிக்க அன்புடன்,
ஆசிரியர்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com